மழைக்காடும் மனிதமும் | சி.மேரி ஜீவிதா

மழைக்காடும் மனிதமும் சி.மேரி ஜீவிதா
ஆய்வுச்சுருக்கம்
  சமூகத்தில் ஒரு சிக்கல் முதிர்ந்து உச்சம் பெறும்போது அதனைக் களையும் வண்ணம் உருவெடுத்ததே இலக்கியங்கள்.இவ்விலக்கியங்கள் காலத்தின் தேவைக்கேற்பத் தன்னளவில் செயலாற்ற வேண்டிய கட்டாயத்துடன் தோற்றம் பெறுகின்றன. நவீனக் காலத்தில் சூழல் பாதுகாப்பின் அவசியம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.சூழல் என்பது உயிரியப் பன்மயம் என்பதை மறந்து விட்டது மனிதக் குலம்.உயிர்ம மண்டலத்தில் பல்லுயிர் ஓம்பல் நிலைத்து நிற்கும் போது தான் அவை நற்சூழலை நீடித்த முறையில் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சி அறாது பார்த்து வரும்.
இயற்கையைப் பயன்படுத்தி அனைத்துத் தலைமுறைகளும் மகிழ்ந்து வாழ முடியும் என்ற பகுத்தறிவு மனிதரிடையே இல்லாமல் போய்விட்டது. தனது வாழ்நாளுக்கான மகிழ்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு இயற்கையை சுய லாபத்திற்காக மனிதன் அழித்து வருகிறான். 
 இயற்கை வளங்களில் ஒன்றாகவும் இயற்கையையே பாதுகாக்கும் காரணிகளில் ஒன்றாகவும் விளங்கும் மழைக்காடுகள் தொடர்ந்து அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.மனித இனத்தின் சுயநலம், பேராசை, வியாபார நோக்கம், அரசியல், ஆடம்பரம்,அறியாமை போன்றவையே இதற்குக் காரணங்களாக அமைகின்றன.  உயிர்ச்செறிவு மிக்க மழைக்காடுகளின் அழிவுக்கான காரணங்களையும் விளைவுகளையும் ஆராய்ந்து அதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் இவ்வாய்வின் வழி பெற முடிகின்றது.

முன்னுரை
  இலக்கியங்களே தொடக்கம் முதல் இன்று வரை மனிதக் குலத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகின்றன. மனிதச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பும் ஆழமும் விரிந்து கொண்டே வருவதால் பல்வேறு துறை சார்ந்த இலக்கியங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சூழலியல்சார் சிந்தனைகள் படைப்புகளாக நவீனக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இயற்கையானது தன்னகத்தே நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு போன்ற ஐந்து காரணிகளை உள்ளடக்கியது. இவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவையும் கூட.இவற்றை பேணி பாதுகாக்காவிடில் பல்வேறு விபரீதங்களைச் சந்திக்கக்கூடும். இன்றளவிலும் அதை நம்மால் உணர முடிகின்றது. இயற்கையின் வளங்களில் ஒன்றான மழைக்காடுகள் வெகு நாட்களாக அழிக்கப்பட்டு வருவதைச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள், “மழைக்காடுகளின் மரணம்”என்ற தனது படைப்பில் விளக்கியுள்ளார். அவரது கூற்றை சூழலியல்  நோக்கில் ஆராயும் பாங்கினைக் கட்டுரையில் காண்போம்.

சூழலியல் விளக்கம்
  ஓர் உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள காரணிகளுடன் நெருங்கியத் தொடர்புடையது. இந்தக் கூட்டமைப்பு தொடர்பைச் சுற்றுச்சூழல் என்று பொதுவாகக் கூற முடியும். சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியலைச் சூழலியல் (Ecology) என்று குறிப்பிடலாம். Ecology என்ற வார்த்தை Oikos என்ற கிரேக்கப் பதத்திலிருந்து தோன்றியது.Oikos என்றால் வீடு என்றும் logos என்பது அதைப்பற்றி அறிவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது. 1868 இல் சூழலியல் என்ற வார்த்தையை முதலில்  ஹென்ஸ் ரெய்ட்டன் என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் (1866-1870) இல் எர்னெஸ்ட் ஹெக்கேல்  என்பவரே சூழலியலுக்கான இலக்கணத்தை வகுத்தவர் ஆவார். அவரது கூற்றுப்படி,
 
“சூழலியல் என்பது ஒர் உயிரினத்திற்கும் அதனைச் சூழ்ந்துள்ள  உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கும் இடையிலான உறவு முறையாகும்” என்று கூறுகிறார்.
 ( சுற்றுச்சூழல் கல்வி,ப.எ.1 )
தமிழ் இலக்கியங்களில் சூழலியல்
சங்க இலக்கியங்கள் பலவும் ஆதி சமூகத்தினர் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டதை எடுத்துரைக்கின்றன. நம்முடைய மூதாதையர்கள் இயற்கையை எப்போதும் தங்களது அக வாழ்க்கைக்குப் புறமாகப் பார்த்ததில்லை . சூழல் சார்ந்த தெளிவான அறிவுடன் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்திருந்தனர்.

தொல்காப்பியம்
தமிழின் தலைசிறந்த இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம். இதனைத் தமிழ் உலகிற்கு அளித்த தொல்காப்பியர் ஐந்திரம் படைத்தவராக விளங்கியவர். ஐந்திரம் என்பது நிலம், நீர்,வளி, விசும்பு, நெருப்பு ஆகியவற்றை பற்றிய ஆழ்ந்த அறிவுடைமையாகும்.இதனாலேயே,

“நிலம் தீ நீர் வளி விசும்பாடைந்தும் கலந்த மயக்கம் உலகம்”    (தொல்.பொரு.635)
என்று கூறியுள்ளார். உலகம் தோன்றிய முறையை ஐம்பூதங்களின் இயல்பான சேர்க்கை என்று கூறியுள்ளார்.
தொல்காப்பியர் இன்றைய சூழலியல் பார்வையை அன்றே திணைக் கோட்பாட்டில் விளக்கிச் சென்றுள்ளார்.பொருள் அதிகாரத்தில் திணையியல் கோட்பாட்டை நிலத்தின் அடிப்படையில் வகுத்தளித்துள்ளார். திணை என்பதை வாழும் இடம்,புரியும் ஒழுகலாறு என்ற நோக்கில் ஐவகை திணையாகவும்,நால்வகை நிலமாகவும் வகுத்துள்ளார்.முதல், கரு, உரி என்ற மூன்று பொருட்களாக அந்நிலத்துக்கும் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பை விளக்கியுள்ளார். அவரது கருத்து இன்றைய சூழலியல் கருத்தோடு ஒத்திசைவாக அமைந்துள்ளது.

புறநானூறு
தொல்காப்பியரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஐம்பூதங்கள் சேர்ந்ததே இயற்கை என்னும் கருத்தை புறநானூறும் எடுத்துரைக்கின்றது.
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வழித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் 
என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை”   ( புறம்.பா.எ.2-5 )
திருக்குறள்
உலகப் பொதுமறை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளிலும் சூழலியல் சார்ந்த சிந்தனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய  தரண் ”  (திரு.பொரு.742)
என்பது வள்ளுவரின் குறள். இதில் நிலம், நீர், மழை, அடர்ந்த நிழல் உடைய காடு இவை நான்கும் அமைந்தது அரண் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.இவை உலக உயிர்களுக்குப் பாதுகாப்பாக விளங்குவதைச் சுட்டியும் காட்டுகின்றார்.
இதுபோன்று நம் இலக்கியங்கள் பலவும் இயற்கையின் தன்மையையும் சிறப்பினையும்  எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

மழைக்காடுகள்
காடுகள் பல்வேறு வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக மழைக்காடுகள் விளங்குகின்றன. இக்காடுகள் ஓர் உயிர்மப் புதையல் என்று சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் கூறுகிறார். அழிந்துவரும் மழைக்காடுகள் பற்றி அவர் கூறுகையில், அமேசான் மற்றும் போர்னியோ மழைக்காடுகள் பற்றிச் சுட்டிக்காட்டி விளக்குகிறார்.
இக்காடுகள் அதன் அமைவு முறையால் பல்லுயிர் வாழக்கூடிய இடமாகவும் சுற்றுச்சூழலை வளமுடன் பாதுகாக்கக்கூடிய மிகச்சிறந்த காரணியாகவும் இருக்கின்றன. அதனைக் கீழ்க்காணும் பட்டியல் மூலமாக அறிய இயலும்.
மழைக்காடும் மனிதமும்
(மழைக்காடுகளின் மரணம்.ப.எ.10,22)
மழைக்காட்டின் அமைவு முறை
மழைக்காட்டின் மரங்கள் 200 அடி உயரம் வளரக்கூடியவை. உயரடுக்கு,கவிகை அடுக்கு, தாளடுக்கு, தரை அடுக்கு என்னும் நான்கு அடுக்குகளை உடையது.உயர்ந்த மரம், அதற்கடுத்தார் போல் குட்டை மரங்கள், அதற்கடுத்தார் போல் புதர் செடிகள், அடுத்ததாக செடி இனங்கள், தரையை மூடி இருக்கும் மூடாக்கு பயிர்கள் ,பின்னர் தரைக்குள் உள்ள கிழங்கு வகைகள், நீண்ட  கொடி இனங்கள் என்று  இங்கே வளர்கின்றன.இந்த அமைவு முறையால் சூரிய ஒளி ஊடுருவாத படி எப்போதும் நிழல் பரவி குளிர்ச்சியான சூழலையும் கொண்டு விளங்குகின்றன. இவ்வாறு வளிமண்டலம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இக்காடுகளில் எப்போதும் லேசான தூரலோ மழையோ பெய்து கொண்டே  இருக்கும். ஆகவே தான் இக்காடுகள் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.இத்தகைய மழைக்காடுகளை  நம் இலக்கியங்கள் அணிநிழற்காடு என்று குறிப்பிடுகின்றன.    (திரு.பொரு.742)
  இதனை,
“காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கத மென்றிசையில் திசை போயதுண்டே”
    என்று  தென்னை (தெங்கு)பாக்கு (கமுகு) பலா (வருக்கை) மா, வாழை என்ற ஒரு வகையான அடுக்கு முறையைக் கூறி,சீவக சிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தை  திருத்தக்கத்தேவர் பாடியுள்ளார்.
  (திணையியல் கோட்பாடு.ப.எ. 40-42 )
மழைக்காட்டின் பயன்கள்
      மழைக்காட்டின் அமைவு முறையால் மரங்களிலும் புதர்களிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. மேலும் நீர் நில வாழ்விகளும் அதிகப்படியான நுண்ணுயிர்களும் வாழ்கின்றன. இங்குள்ள மரங்களின் அடர்த்தியால் மழை பெய்யும் போது மொத்தமாகத் தரையில் விழாமல் துளித்துளியாக இறங்குவதால் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுகின்றது.மேலும் மரத்தில் உள்ள இலைகள் மற்றும் உயிரினங்களின் கழிவுகள்  கலந்து  தரைப்பரப்பில் சத்துள்ள உரமாக உருவாகின்றன. இதனால் அங்குள்ள மண், வளமானதாக உருவாகின்றது. ஆனால் இத்தகைய உரம் உருவாகி மண் வளம் பெறப் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகின்றது. மேலும் தரைப்பரப்பு முழுவதும் மரங்களின் வேர்களாலும் செடிகளும் போர்த்தப்பட்டு இருப்பதினால் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இத்தகைய மண்ணரிப்பில்லா இடத்தில் விழும் மழைநீரானது நிறமற்று காணப்படும்.இதையே வள்ளுவர் மணி நீர் என்று குறிப்பிடுகிறார்.        (திரு.742)
மழைக்காட்டின் மரணம்
காடழிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவை, பெரு வணிக நிறுவனங்களே ஆகும். இந்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உலக நாடுகளுக்கிடையே வியாபார அரசியல் நடைபெற்று வருகின்றது. இதில்  நிதி நிறுவனங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இவர்களது சூழ்ச்சி வலையில் அறிந்தும் அறியாமலும் விழுந்த ஏழை நாடுகள் சுற்றுச்சூழலின் வில்லன்களாகப் பார்க்கப்படுகின்றனர். வருமானத்திற்காக மழைக்காடுகளை அழிப்பதால் ஏழை நாடுகளுக்கு இப்பெயர்.ஆனால் வெட்டப்பட்ட மரங்களை  இறக்குமதி செய்யும் வளர்ந்த நாடுகளுக்கோ இப்பெயர் பொருந்துவது இல்லை.

தொழிற்சாலைகள்
அமேசான் காட்டின் ஒரு பகுதியில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் சில ஆயிரம் மைல்கள் அழிக்கப்பட்டன. பின் அந்த ஆலைகள் இயங்குவதற்கு மின்சாரம் தயாரிக்க மரக்கரி எடுப்பதற்காக தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டன.
 
காகித ஆலை
காகித ஆலை அமைக்கவும் மேற்ச்சுட்டியவாறு   அமேசான் காடுகள் அழிக்கப்பட்டன. சுமார் 5600 சதுர மைல்கள் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன.இதுபோன்று பல மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆடம்பர நுகர்வு கலாச்சாரம்
கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் எஃகு போன்ற பொருட்களை தயாரிக்கும் ஆலைகள் இயங்குவதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. பணக்காரர்கள் சொகுசுப் பயணம் செல்ல தொடர்ந்து மரங்கள் இவ்வாறு வெட்டப்படுகின்றன.பியானோவின் தாளக்கட்டைகள் செய்ய ‘ஜெலுத்தோங் ‘என்ற மரம் வெட்டப்படுகின்றது. பியானோ இசைக்கப்படும் போது அதன் இன்னிசையில் நாம் மெய் மறக்கலாம். ஆனால் அதன் பின்புறம் உள்ள பல உயிரினச்  சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை மனிதர் அறியாதது போல் செயல்படுகின்றனர்.

கனிம வளங்கள்
நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் கனிமங்களால் ஆனது. உலோகக் கனிமங்கள், உலோகம் அல்லாத கனிமங்கள் இவற்றால் தயாரிக்கப்படும் பொருள்களுக்காகவும் அதன் பயன்பாட்டிற்காகவும் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

மேய்ச்சல் நிலங்கள்/ பண்ணை அமைப்பு
உணவு உற்பத்தி செய்யும் மேய்ச்சல் நிலங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அதிக லாபம் அடைவது வணிக நிறுவனங்களே. மேய்ச்சல் நிலங்களுக்காக அழிக்கப்பட்ட காட்டின் பரப்பும் கால்நடைகளின் மேய்ச்சலால் வளம் இழந்த காட்டின் பரப்பும்  தரிசாக மாற்றப்படுகிறது.

வேளாண்மை
சோயா உற்பத்தி மற்றும் கொழுத்த வாழைப்பழங்களுக்காகவும் இக்காடுகள் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்பட்ட காட்டின் நிலப்பரப்பு அதிக உரச்செறிவு மிக்கதாக இருக்கும். இந்நிலத்தில் பயிரிடப்படும் பொருட்கள் அதிக சத்துள்ளதாகவும் அதிக விளைச்சலையும் கொடுக்கும். ஆனால் நாளடைவில் நிலத்தின் வளம் குறைந்து விடும். பின் அந்நிலங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு  விளைநிலங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை,
”வேளாண்மைக்காகக் காடுகளை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் போதுமான நிலங்கள் வெளியே உள்ளன” என்று கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த டேனியல் பிரிண்டிஸ் கூறியுள்ளார். இதிலிருந்து வேளாண்மை செய்ய வேண்டிய இடத்தை விட்டுவிட்டு காட்டை அழிப்பது மூடத்தனம் என்பது தெளிவாகிறது. (மழைக்காடுகளின் மரணம்.ப.எ.24 )
காட்டுத்தீ
காட்டுத்தீயினால் மழைக்காடுகள் அழிவது சொற்ப அளவில்  மட்டுமே. ஆனால் வியாபார அரசியலால் அழிவது தான் அதிகம். இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயினால் விபரீதம் ஏற்படுவதைவிட நன்மைகளும் உண்டு. எவ்வாறெனில் காட்டில் உள்ள விதைகளில் சில வெப்பம் படும்போது மட்டுமே  விதை வெளிப்பட்டு முளைப்பு ஏற்படும்.மேலும் காட்டுத் தீயினால் எரியும் தாவரங்கள் சொற்ப அளவில் மட்டுமே உண்டு. அவையும் சாம்பல் உரமாக மக்கிப் பிற தாவரங்களுக்கு உரமாக மாறுகின்றது. செயற்கையாக ஏற்படுத்தப்படும் காட்டுத் தீக்குப் பின்னால் அப்பகுதியை பாதுகாப்பற்றது என அறிவித்து அதைக் கையகப்படுத்தும் வியாபார அரசியல் ஒளிந்துள்ளது.அநியாயமாகப் பல காட்டுவாழ் உயிரினங்கள் தீயில் கருகி மடிகின்றன. மேலும் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் பழங்குடிகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதரமும் முடக்கப்பட்டு தினக்கூலிகளாக மாற்றப்படுகின்றனர்.

காடழிப்பின் விளைவுகள்
மழைக்காட்டில் வெட்டுமர நிறுவனங்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின் எஞ்சிய துண்டுக் காடுகள் “பாதுகாக்கப்பட்ட கான் பகுதி” என்று அழைக்கப்படுகின்றன.ஆனால் இவற்றால் எந்த பயனும் இல்லை. காடு சுருக்கமடைவதால் உயிரினங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே முடக்கப்படும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் விலங்குகளின் வலசைப் பாதைகள் மாற்றம் பெறுகின்றன.மேலும் மகரந்தச் சேர்க்கை, விதைப்பரவல், உணவு சுழற்சித் தடை போன்றவை நடைபெறுகின்றது. மேலும் ஓடைகள், ஆறுகள் மாசுபடுகின்றன அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. 
வெட்டப்பட்ட காட்டிற்குள் நேரடியாக வெயில் தாக்குவதால்  தாவரங்கள் அழிவைச் சந்திக்கின்றன.ஒரு பெரிய மரத்தினை வெட்டி அது கீழே விழும் போது அதைச் சுற்றியுள்ள பல மரங்களும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் மரங்களை நம்பி வாழ்கின்ற உயிரினங்கள் வாழ்விடத்தை இழக்கின்றன. இவ்வாறு  ஒரு சங்கிலித் தொடர்பு போன்று பல உயிர்களுக்கான அழிவு ஒரு மரத்தை வெட்டும்போது நிகழ்கின்றது.
இதுபோன்று செய்துவிட்டு மறு காடுவளர்ப்பு என்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் பசப்புவது வியாபார அரசியலின் உச்சகட்ட தந்திரம் என்றே கூறலாம்.  இவ்வாறு ஒட்டுமொத்த உயிர் மண்டலத்திற்கும் எதிரான செயலைச் செய்வதினால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. பருவநிலை மாற்றத்தால் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு மரத்தை வெட்டி அதன் தலைமுறையை அழிப்பது  நாம் ஒவ்வொருவரும் நமது தலைமுறையை அழிக்க இப்போதே ஆயுதம் தயார் செய்து வைக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

கானகத்தின் மீட்பு
இவ்வுலகம் பன்மயத்தன்மை கொண்டது. அதுபோல ஒரு காடு நெடுங்காலம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் அங்குள்ள மரங்கள், செடிகள், கொடிகள், உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் வாழ வேண்டும் இல்லையென்றால் அதன் நிலை மாறி காடே அழிந்து விடும்.இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். இதனை வலியுறுத்தும் விதமாக வள்ளுவர்,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”    (குறள் 322)
என்று கூறியுள்ளார்.உயிரியப் பன்மயத்தில் பல்லுயிர் ஓம்பி, இயைந்து வாழ்வதே சிறப்பான வாழ்வாகும்.
காடுகளை அழித்து வருமானம் ஈட்டுவதை விட காடுபடு பொருட்கள் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். இதனை,

“சிறு பொருள்களான பழங்கள் கொட்டைகள் நார் பஞ்சு மூலிகை வாசனை பொருட்கள் நச்சுப் பொருட்கள் மூங்கில் பிரம்பு என்னை ரப்பர் தேன் அரக்கு பிசின் இறந்த விலங்குகளின் தந்தம் மற்றும் தோல்” போன்ற 18 வகையான பொருட்களில் இருந்து அதிக வருமானம் ஈட்ட முடியும் என்கின்றனர் வல்லுநர்கள் .(மழைக்காடுகளின் மரணம்.ப.எ.9 )
முடிவுரை
இவ்வுலகம் தொடர்ந்து இயங்கக்கூடிய ஒரு இயங்கு தளம். இதில் அனைத்து உயிரினங்களும் அதற்கான பங்கினை ஆற்றி வருகின்றன.  இதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.  ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும்இருக்கின்றன.
ஆறறிவு படைத்ததால் மற்ற உயிரினங்களில் இருந்து மேலானவன் என்ற நிலையை மனிதன் அடைகிறான். ஆனால் அறிவியல், வளர்ச்சி என்ற எந்திரத்தனமான ஆற்றலினால் அறமற்ற அறிவு  நிலையை அடைந்து விட்டான். இயற்கை விதிகளை மறந்து விட்டு செயற்கைத் தன்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். இந்நிலையில் இருந்து மீண்டு அனைத்து உயிரினங்களையும் மதித்து போற்றுகின்ற மாண்புடன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வானாயின் நிகழ்காலமும் எதிர்காலமும் சிறப்பானதாய் அமையும்.

துணைநூல் பட்டியல்
முதன்மை நூல்
1.நக்கீரன்    –  மழைக்காடுகளின் மரணம்
                            
முதல் பதிப்பு – டிச. 2021
                            
வெளியீடு  – காடோடி பதிப்பகம்
                            
நன்னிலம் – 610105
, திருவாரூர் மாவட்டம்

துணைமை நூல்கள்
1 .  சுற்றுச்சூழல் கல்வி
      டாக்.சுசிலா அப்பாத்துரை
     முதல் பதிப்பு –  அக்.2005
     பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட் இராயப்பேட்டை
     சென்னை –  14

2.  திணையியல் கோட்பாடு
     பாமயன்
    முதற்பதிப்பு – நவ. 2012
    வெளியீடு  – தடாகம்
    திருவான்மியூர்
    சென்னை – 41

3. திருக்குறள்
    மாணிக்கவாசகன்,ஞா
    உமா பதிப்பகம், 58
    ஐயப்ப செட்டி தெரு
   மண்ணடி
   சென்னை- 600001 

4.தொல்காப்பியம் (தெளிவுரை )
    புலியூர் கேசிகன்
5. புறநானூறு ( மூலமும் உரையும் )
    புலியூர் கேசிகன்


 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சி.மேரி ஜீவிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
டாக்.என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,   
காளப்பட்டிகோயம்புத்தூர் – 48.
 

Leave a Reply