மனிதர்களின் மனம் அளந்தறிய முடியாத ஆழம் கொண்டதாகவும், அவிழ்க்க முடியாத சிக்கல் நிறைந்த வலையாகவும் அமைகிறது. மனத்தினை அடக்கி கட்டுக்குள் வாழ்வதென்பது சமகாலத்தில் ஏட்டளவில் வாசிக்கும் ஒன்றாகவே உள்ளது. பெரும்பாலும் மனம் நிறைக்க கூடாத எதிர்மறை எண்ணங்களைச் சேமிக்கும் மாசுக்கிடங்காகவே உள்ளது. எதிர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் போதை போன்ற அசுர சக்திகள் அளவுகடந்து வளர்ந்துள்ளதையும் அறிய முடிகிறது. எனவே சமகால மனிதர்களை மனரீதியாக வளப்படுத்துதல் என்பது மிகப்பெரிய சாதனையாகவே உள்ளது. கொரானா போன்ற பெரு ஊழிக்குப் பிறகு இச்சிக்கல் மேலும் தீவிரமடைந்து சராசரிகளை மிகவும் அச்சுறுத்துகிறது.
இயல்பான வாழ்வு என்பது அருகிவரும் தற்காலச் சூழலில் மனித மனங்களை இயல்புக்கு மடைமாற்றம் செய்ய உளவியல் வல்லுநர்கள் பெரிதும் உழைக்க வேண்டியுள்ளது. ஆலோசனைகளும் நூல்களும் சிகிச்சை முறைகளும் பெரிதும் அவசியமாகிறது. அவ்வகையில் “மனநலம் – பிறழ்வு நிலை உளவியல் வகைகள்” என்னும் தலைப்பில் முனைவர் த. கண்ணன் அவர்கள் எழுதியுள்ள நூல் பிறழ்வுநிலையின் தன்மையை அறிய மிக அவசியமான ஒன்றாக உள்ளது. சென்னை சுடர் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டுள்ள இந்நூல் 231 பக்கங்களை உடையது. பிறழ்வு நிலை உளவியலின் முக்கிய வகையான மனச்சிதைவு, பாலியல் கோளாறுகள் மற்றும் ஆளுமைக் கோளாறுகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலும் முதல் இயலில் பிறழ்வு நிலை உளவியல் குறித்த அடிப்படைக் கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
பிறழ்வு நிலை உளவியல்
முதல் இயலாக அமைந்துள்ள பிறழ்வு நிலை உளவியலின் கூறுகளுக்கான விளக்கங்கள், உளவியலின் முன்னோடிகள் கூறிய கருத்துகள் ஆகியவற்றை விளக்கி, அப்பிறழ்வு நிலை உளவியல் என்றால் என்ன என்பதனைப் பல்வேறு வல்லுநர்களின் கருத்துக்களைக் கொண்டு விளக்கியுள்ளார். இயல்பான மனிதர்கள் என்பவர்கள் யார்? பிறழ்வு நிலை மனிதர்கள் யார்? என்பதை பல்வேறு அறிஞர்களின் ஆய்வறிக்கை அல்லது கருத்துக்களை மூலமாகக் கொண்டு நிறுவியுள்ளமை மிகச் சிறப்பான ஒன்றாகும். மேலும் பிறழ்வு நிலைக்கான வரைபடங்கள் மற்றும் வகைகள் ஆகியவை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பிறழ்வு நிலைக்கு பண்டைய காலச் சிகிச்சை முறைகள் ஐரோப்பிய மேலை நாடுகளில் மருத்துவ முறை ஆகியவற்றையும் ஆராய்ந்து கூறியுள்ளார்.
பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கூறியுள்ள பிறழ்வு நிலை குறித்த கருத்துகளையும் மிகச்சிறந்த அறிவியல் அறிஞரான ஹெலன் கூறிய கருத்துக்களையும் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். இடைக்கால ஐரோப்பிய நாடுகளில் பிறழ்வுநிலை நபர்களைப் பேய் பிடித்தவர்கள் என்று கூறி அணுகியது முதல் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் இவ்வியலில் நிறுவியுள்ளார். பிரெஞ்சு மருத்துவர் பினல் பிறழ்வுநிலை உளவியலில் ஏற்படுத்திய மாற்றங்களையும் பெஞ்சமின் ரஷ் மற்றும் டிக்ஸ் ஆகியோர் கூறிய மருத்துவச் சிக்கல்களும் அதற்கான வழிமுறைகளையும் விளக்கியுள்ளார். மேலும் கிராப்ளினின் விளக்கங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
சிக்மன் பிராய்ட் விளகிய உளவியல் மற்றும் கனவுப் பகுப்பாய்வுகளை அறிமுகப்படுத்தி, அவற்றிலிருந்து மாறுபட்ட அல்லது வளர்ந்த உளவியல் கூறுகளையும் எடுத்துரைத்துள்ளார். மேலும் மனிதர்களின் நடத்தை முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு பாவ்லோ மற்றும் ஸ்கின்னரின் நடத்தை முறைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்கியுள்ளார். பெக் தியரி கொண்டும் உளவியலில் அசைவுகளை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் பிறழ்வுநிலை உளவியலின் வகைகளை அமெரிக்க உள மருத்துவ கழகம் வெளியிட்டுள்ள கையேட்டின் அடிப்படையில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
மனச்சிதைவு (Schizophrenia)
இன்றைய சூழலில் மனச்சிதைவு நோய்க்கு உட்படாதவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் எனலாம். அதற்கு மனச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? அதனுடைய பின்புலம் என்ன என்பவனவற்றை ஆராயும் வகையில் மனச்சிதைவு என்ற இயல் அமைக்கப்பட்டுள்ளது. மனச்சிதைகளுக்கான விளக்கங்கள், அதனுடைய வரலாறு ஆகியவற்றையும் அறிஞர்களின் கருத்துக்களோடு மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். யூஜன் புளூலர் என்ற அறிஞரின் கருத்து மிக விரைவாக ஆராயப்பட்டுள்ளது. மனச்சிதைவுகளுக்கான நேர்மறை அறிகுறிகள் எதிர்மறை அறிகுறிகள் என்று பிரித்து நேர்மறை அறிகுறிகளில்
1.பிறழ் நம்பிக்கை
2.புலன்களின் பேதலிப்பு
3.பேச்சில் தெளிவும் கோர்வையும் இல்லாமை
4.மாறுபட்ட நடத்தை
5.உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமை
போன்ற கூறுகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். மேலும் எதிர்மறை அறிகுறிகளில்
1.இயல்பாக வெளிப்படுத்தப்படும் உணர்வில் குறைபாடு
2.சமூக பங்கேற்பில் பின்னடைவு
3.பேச்சில் முரண்பாடு
4.உறவுகளில் ஆவல் குறைவு
போன்ற கூறுகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். பிறழ்வு நம்பிக்கை என்ற பகுதியில் ஒரு மனிதனுக்கு எவ்வாறு பிறழ்வு ஏற்படுகிறது என்பது குறித்த உளவியலாளர்கள் கண்டறிந்த பரிசோதனை முறைகளைக் கொண்டு விளக்குகிறார். அப்பிறழ்வு நம்பிக்கையின் வகைகள் ஆன
🎯 நம்ப முடியாத பிறழ் நம்பிக்கை
🎯 மிகைப்படுத்தப்பட்ட தவறான மனப்பான்மை
போன்றவற்றையும், மருத்தவர்கள் எடுத்தியம்பிய சான்றாதாரங்களோடு விளக்கியுள்ளார். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையக்கூடிய இன்னல்கள் சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றையும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். புலன்களின் பேதலிப்பில் பிறழ்வு நிலையில் இருப்பவர்கள் அடையும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ளார். மனச்சிதைவின் முக்கிய வகையான புலன்களின் பேதலிப்பு ஏற்படுவதால் மனிதர்கள் பல்வேறு வகையில் தன்னுடைய நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு நடத்தைகளை மாற்றிக் கொள்வதால் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான விளைவுகள் குடும்பம், தனிநபர் வாழ்வு மற்றும் சமூக வாழ்வு ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்று விளக்கியுள்ளார். மேலும் பிறழ்வு நிலைகளிலிருந்து மருத்துவர்கள் கண்டறிந்த முடிவுகளையும் (மருத்துவர்களின் நோயாளிக் குறிப்புகளைக் கொண்டு – (casestudy) கொண்டு மிகத் தெளிவாக எழுதி உள்ளார். மனச்சிதைவு நோய் எவ்வாறு ஏற்படுகிறது அவற்றிற்கான சிகிச்சை முறைகள் என்ன மனச்சிதைவை எவ்வாறு தவிர்க்கலாம் அல்லது எவ்வாறு குறைக்கலாம் என்பதை பல்வேறு உளமருத்துவர்களின் அறிவுரைகளைக் கொண்டு மிக நேர்த்தியாக எல்லாச் சூழலில் வாழும் மனிதர்களுக்கும் பொருந்தும் வண்ணம் எடுத்து இயம்பி உள்ளார்.
பாலியல் கோளாறுகள்
மனிதர்களின் எல்லா பிறழ்வு நிலைக்கும் அடிப்படையாக அமைவது பாலியல் கோளாறுகளே ஆகும் என்ற கருத்து மிக முக்கியமானதாகும். மனிதர்கள் பாலியலில் எவ்வாறு சிக்குண்டு மனச்சிதைவை அடைகின்றனர் என்பவற்றை மிகத் தெளிவாக இவ்வியலில் எடுத்து இயங்குகிறார். பாலியல் கோளாறுகளின் பல்வேறு வகைகளையும் அவற்றிற்கு அறிஞர்கள் கூறும் கருத்துக்களையும் இப்பிறழ்வில் சிக்குண்டுள்ள மனிதர்களை மீட்கும் நிலைகளையும் விளக்கியுள்ளார். மேலும் பாலியல் கோளாறுகளில் அகப்பட்டுள்ள மனிதர்கள் தன்னுடைய நடத்தைகளை எவ்வாறு மாற்றிக் கொள்வர் என்றும் அதனால் அடையும் இன்னல்கள் குறித்தும் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். பாலியல் கோளாறில் உச்சமான sadism குறித்தும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
பாலியலில் பிறழ்வு ஏற்படுவதற்கான காரணம் அவர்கள் ஏன் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார். மேலும் இப்பிறழ்வுக்குள் உட்பட கூடியவர்கள் தன்னுடைய நடத்தையில் எவ்வாறாக அமைத்துக் கொள்கிறார்கள் ஏன் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை உதாரணங்களுடனும் மேலைநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விளக்கியுள்ளார். மேலும் பாலியலில் தவறான போக்குகள் குறித்தும் அவற்றிலிருந்து குழந்தைகள் மற்ற பெண்கள் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் மிக சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். பாலியலில் பிறழ்வு ஏற்படுத்துவதற்கான உடலியல் குறைபாடுகள் என்னென்ன அவற்றை ஈடு செய்வதற்காக அவர்கள் எவ்வகையில் இயல்பை மீறுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் உடலில் கூறுகளை சரி செய்வதற்கு மனரீதியாக அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.
ஆளுமைக் கோளாறு
ஆளுமை என்றால் என்ன அச்சொல்லின் உடைய வேர்ச்சொல் அவற்றின் விளக்கம் ஆளுமை பற்றிய அறிஞர்கள் கருத்து ஆளுமையினுடைய காரணிகள் ஆளுமைக் கோளாறு எவ்வாறு ஏற்படுகிறது என்ற அடிப்படை கருத்துகளை கூறியுள்ளார்.
ஆளுமைக் கோளாறில் வகைகளான,
🎯வித்தியாசமாக காணப்படும் ஆளுமைக் கோளாறு
🎯விபரீதமாக தென்படும் ஆளுமைக் கோளாறுகள்
🎯வினோதமாக அச்சம் தரக்கூடியதாகவும் செயல்பாடுகள் அமைந்த ஆளுமைக் கோளாறுகள்
போன்றவற்றை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சந்தேகத்தினால் பல்வேறு ஆளுமைக் கோளாறுகள் ஏற்படுகிறது என்பதை கிராப்ளின் என்ற அறிவியல் அறிஞரின் துணையோடு மிகச் சிறப்பான மேலைநாட்டு உதாரணங்களையும் கொண்டு விளக்கியுள்ளார். மனிதர்கள் மனிதர்களிடமிருந்து தன்னை ஒடுக்கி கொள்வதால் ஏற்படக்கூடிய ஆளுமைக் கோளாறுகளையும், மனிதன் தனிமைப்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய ஆளுமை கோளாறுகளையும் அவ்வாறு ஆளுமையில் பாதிப்பு அடைந்த மனிதர்கள் செயல்படக்கூடிய நடத்தைகளின் மாற்றங்களையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். ஆளுமைக் கோளாறு அடைந்தவர்களுடைய மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்து கூறி, அவர்களை குறித்த படைப்புகள் எவ்வாறு வெளிவந்துள்ளன என்பதனையும் விளக்கியுள்ளார். விபரீதமாக தென்படும் ஆளுமை கோளாறில்,
🎯நாடகத் தன்மை உள்ள ஆளுமைக் கோளாறு
🎯மிகைப்படுத்தும் தன்மை உள்ள ஆளுமைக் கோளாறு
🎯சமூக விரோத ஆளுமைக் கோளாறு
🎯தடுமாற்றம் நிறைந்த ஆளுமைக் கோளாறு
எனப் பல்வேறு வகையான ஆளுமைக் கோளாறுகளை மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க அவர்களின் நோயாளிகள் பற்றிய குறிப்புகளோடு நமக்கு விளக்கியுள்ளார். சமூக விரோத ஆளுமைக் கோளாறுகளில் ஒருவன் ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்டால் சமூகத்தில் எவ்வகையான விளைவுகள் ஏற்படுகின்றன, அதனால் இயல்பு வாழ்க்கை எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பவற்றை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் அளுமைக் கோளாறில் புதிய பல்வேறு வகையான பிறழ்வுகள் உள்ளன. அவை,
🎯விலகி இருக்கும் தன்மை
🎯துல்லியமான மற்றும் கட்டாய ஆளுமைக் கோளாறு
போன்றவற்றையும் விலக்கியுள்ளார். மேலும் ஆளுமைக் கோளாறு ஏற்பட்டால் சமூகம் எவ்வாறு எல்லாம் சீரழியும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். சமகாலத்தில் ஏற்பட்டுள்ள மனிதர்களின் மன மாற்றங்கள் பல்வேறு தொடர்புகளில் அடிப்படையில் அமைகின்றன. இப்பிறழ்வுகள் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை நமக்கு அடையாளம் காட்ட முற்படும் இந்த நூல் வாசிப்பில் சற்று ஏறக்குறைய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாகவே அமைகிறது. மனிதர்கள் எவ்வகையில் எல்லாம் பிறழ்வு நிலையை அடைகிறார்கள், அவ்வாறு அடையும் மனிதர்கள் தன்னுடைய நடத்தைகளை எவ்வாறு மாற்றிக் கொள்கிறார்கள் அவ்வாறு அவர்கள் மாற்றிக்கொள்வதால் நம் சமூகக் கட்டமைப்பு எவ்வாறு சிதைகிறது, உறவுகள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன மரபுகள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன என்பவற்றையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கும் இந்த நூல் சமகால மக்களின் வாழ்வை சரிப்படுத்தும் அல்லது வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆகச்சிறந்த அருந்துணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
இந்நூலின் சிறப்பு கருதி மத்திய அரசின் மொழிகள் நிறுவனம் மைசூர் இதன் மென்படியினை பதிவேற்றம் செய்து சிறப்பித்துள்ளது. “மனநலம் – பிறழ்வு நிலை உளவியல் வகைகள்” என்ற இணைப்பில் இந்நூலினை காண முடியும். மேலும் இந்நூல் குறித்து பல்வேறு வலைதளங்களிலும் கருத்தரங்கத்திலும் உரையாடல்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நூல் திறனாய்வின் ஆசிரியர்
முனைவர் வீ. பூமிநாதன்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் – 635601.




இயல்பான வாழ்வு என்பது அருகிவரும் தற்காலச் சூழலில் மனித மனங்களை இயல்புக்கு மடைமாற்றம் செய்ய உளவியல் வல்லுநர்கள் பெரிதும் உழைக்க வேண்டியுள்ளது. ஆலோசனைகளும் நூல்களும் சிகிச்சை முறைகளும் பெரிதும் அவசியமாகிறது. அவ்வகையில் “மனநலம் – பிறழ்வு நிலை உளவியல் வகைகள்” என்னும் தலைப்பில் முனைவர் த. கண்ணன் அவர்கள் எழுதியுள்ள நூல் பிறழ்வுநிலையின் தன்மையை அறிய மிக அவசியமான ஒன்றாக உள்ளது. சென்னை சுடர் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டுள்ள இந்நூல் 231 பக்கங்களை உடையது. பிறழ்வு நிலை உளவியலின் முக்கிய வகையான மனச்சிதைவு, பாலியல் கோளாறுகள் மற்றும் ஆளுமைக் கோளாறுகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலும் முதல் இயலில் பிறழ்வு நிலை உளவியல் குறித்த அடிப்படைக் கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
நூல் திறனாய்வின் ஆசிரியர்

