பெரியாரின் பெண்ணுரிமைப் பணி | மு. ஆயிஷாம்மா

பெரியாரின் பெண்ணுரிமைப் பணி - மு. ஆயிஷாம்மா
குடும்பத்தில் புரட்சி
                   
ஈ. வே. ராமசாமியின் தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கு ஒரு பெண் இருந்தது.  அப்பெண் அம்மாய் அம்மாளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள்.  மாப்பிள்ளைக்கு வயது பன்னிரெண்டு.  இத்திருமணம் 1909 ஆம் ஆண்டு நடைபெற்றது.  திருமணமான முப்பதாம் நாள், மாப்பிள்ளையைக் காலரா நோய் தாக்கிற்று.  அதனால் அவர் மாண்டார்.  ஒன்பது வயதுப் பெண் விதவையானாள்.
  அவ்விதவைக் குழந்தை அலறி அழுதது.
       
மாமா, நான் திருமணம் வேண்டுமென்று கேட்டேனா? என்னை ஏன் இக்கதிக்குத் தள்ளிவிட்டீர்கள் என்று புலம்பியது.  ஈ. வே. ராமசாமியின் நெஞ்சை நெகிழ்வித்தது. புரட்சி எண்ணம் மின்னிற்று. வெளியில் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தார்.

        அந்த விதவைக் குழந்தை, பூப்படைந்தது.  அப்பெண்ணைத் திருமணஞ் செய்துகொள்ள, ஓர் இளைஞனை ஏற்பாடு செய்தார்.  யாருக்கும் தெரியாமல், தன் மைத்துனர், அப்பெண், நம்பிக்கையுள்ள ஓர் அம்மையார் ஆகிய மூவரையும் சிதம்பரத்திற்கு அனுப்பிவைத்தார்.  திருமணஞ் செய்துகொள்ள இசைந்த இளைஞனை அச்சகத்திற்குப் பொருள்கள் வாங்கும் சாக்கில், சென்னைக்கு அனுப்பி வைத்தார்.  அவர் சென்னையிலிருந்து சிதம்பரம் போய்ச் சேரவேண்டுமென்பது ஏற்பாடு.  ஈ. வே. ராமசாமியோ, அப்போது, ஈரோட்டிலேயே தங்கிவிட்டார்.  எனவே, யாரும் எவ்வித அய்யமும் கொள்ளவில்லை.
 
       முன்னேற்பாட்டின்படி, சிதம்பரத்தில் இருந்த, ஈ. வே. ராமசாமியின் நண்பர் இல்லத்தில் திருமணம் நடந்தது.  அந்த நண்பர், அங்கு, காவல் துறை ஆய்வாளராக இருந்தார்.  எனவே, பல பெரிய மனிதர்கள், அத்திருமணத்திற்கு வந்தார்கள்.
  மணமக்கள், ஈரோட்டுக்கு வந்தபோது, அவர்களை வரவேற்க ஈ. வே. ராமசாமி, புகைவண்டி நிலையத்திற்குச் சென்றார்.  ஊரில் இச்செய்தி, காட்டுத் தீப்போல் பரவிற்று.
       
ஈ. வே. ராமசாமியின் தந்தை, ‘பெரிய அவமானம்’ வந்துவிட்டதாக எண்ணி, தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.  ஈ. வே. ராவின் தாயார், சின்னத்தாய் அம்மாளோ, தூக்கில் தொங்கவே போய்விட்டார்கள்.  இந்நிலையில் உறவினர்கள் கூடினார்கள். மூன்று வீட்டாரையும், ஆறு ஆண்டுகளுக்குச் சாதியிலிருந்து தள்ளி வைப்பதாக ஒருமனதாக முடிவு எடுத்தார்கள்.  உறவினர்கள் ஈ. வே. ராமசாமியின் குடும்பத்தோடு தொடர்பினை விலக்கிக் கொண்டார்கள்.
       
தொடர்பு மீண்டும் வந்ததா? வந்தது.  எப்போது? ஈ. வே. ராமசாமி, ஈரோடு நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பேர்தல் முடிவு தெரிந்ததும் பல்வேறு சாதியாரும் ஈ. வே. ராமசாமியார் வீட்டிற்குச் சீர்வரிசைகளோடு வந்து பாராட்டினர்.
       
ஈ. வே. ராமசாமியின் உறவினர் இரண்டொருவர், ‘நம்ம சாதிக்காரர் நகராட்சித் தலைவராக உள்ளார்.  யார் யாரோ பாராட்டி விட்டு வரும்போது, நாம் மட்டும் சும்மாவிருக்கலாமா? ‘என்று எண்ணி, ஈ. வே. ராமசாமியைப் பாராட்ட வந்தார்கள்.  அவர்களுக்கு, ஈ.வே.ரா. வீட்டில் காப்பி கொடுத்தார்கள்.  அதை மறுக்காமல், உறவினர்கள் அருந்தினார்கள்.  அடுத்துப் பல உறவினர்களும் வந்து பாராட்டிவிட்டு, காப்பி அருந்திச் சென்றார்கள்.  இப்படித்தான் உறவினர் விலக்கம் ஒழிந்தது.
 
       பழமைப் பாறையாகிவிட்ட நம் சமுதாயத்தில், இச்சிறு மாற்றத்திற்காக எத்தனை தொல்லைகளைத் தாங்க வேண்டியிருந்தது பாருங்கள்.  அத்தகைய தியாகத்திற்குத் துணியாவிட்டால் சமுதாய மாற்றம் பெயரளவோடு நிற்குமென்பதை இளைஞர்களுக்கு நினைவூட்டல் என் கடமையாகிறது.
 
       விதவைகள் படும் துயரத்தைத் துடைக்கப் பாடுபட்ட பெரியார், தன் உறவினராகிய விதவைப் பெண்ணுக்குத் திருமணஞ்செய்து வைத்ததை மேலே கண்டோம்.  குழந்தை மணத்தை எதிர்த்து, பெரியாரின் தன்மான இயக்கம், தொடக்க காலம் முதல் குரல் எழுப்பியது, குழந்தை மணம் சட்த்தின் மூலம் தடை செய்யப்படும்வரை ஒவ்வொரு மாநாட்டிலும் குழந்தை மணத்தை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது.

பெண்ணுரிமைக் கோரிக்கை
       
எடுத்துக்காட்டாக, செங்கற்பட்டு, முதல் சுயமரியாதை மாநாட்டில், ‘16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கே மணம் செய்விக்கப்பட வேண்டுமென்றும் பெண் விதவைகளுக்கு மறுமண உரிமை தேவையென்றும், பெண்களுக்கு மணவிலக்கு உரிமை வேண்டுமென்றும்’ செய்யப்பட்ட முடிவு அக் காலகட்டத்தில் புரட்சிகரமானது ஆகும்.
       
பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக, சொத்துரிமைகளும் வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்றும், பெண்களும் ஆண்களைப்போலவே, எந்தத் தொழிலையும் நடத்திவருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும் வாய்ப்பும் கொடுக்கப்படவேண்டுமென்றும், ‘பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதிகமாக தொடக்கக் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும்’ முடிவு செய்யப்பட்டது.
   
    10-5-1930 இல் ஈரோடு சுயமரியாதைப் பொது மாநாட்டில் ஆண்களைப் போன்று, பெண்களுக்கும் சொத்து உரிமை, வாரிசு உரிமை ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாகத் தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக அவர்களை அதிகமாக நியமிக்கவேண்டும்மென்றும் முடிவு செய்யப்பட்டது.
  
       பொது மாநாட்டை ஒட்டி நடந்த மாதர் மாநாட்டிலும், சொத்தில் உரிமைப் பாத்தியம், குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம், தத்து எடுத்துக்கொள்ளல், இவைகளில் ஆண் பெண் இரு பாலாருக்கும் முழுச் சம உரிமை இருக்கவேண்டுமென்றும் முடிவு எடுத்தார்கள்.
       
ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திரு. எம். ஆர். ஜெயக்கர் திரு. ஈ. வே. ராமசாமியார் சட்டசபைகளைப்பற்றியோ அரசாங்கத்தைப்பற்றியோ கவலை கொள்ளாதவர்.  அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தம் பிறவியின் பயன் என்று கருதி இருப்பவர். அவர் உங்கள் (சுயமரியாதை) இயக்கத்தில் இருக்கின்றார்.
       
‘உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களும், முகமதியர்களும் சேர்ந்திருப்பது சிறப்பாகும், மதத் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார்.
       விருதுநகர் மாநாட்டிலும் இதே சம உரிமை கோரி, பொது மாநாடு முடிவுசெய்தது.  விருதுநகரிலும் பெண்கள் சுயமரியாதை மாநாடு நடந்தது.  மாதர்களும் பெண்களுக்கு ஆண்களைப்போல் சொத்துரிமையில் சமத்துவமளிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
      
இம்மாதர் மாநாட்டில், ‘வர்ணம் அல்லது சாதி ஆஸ்டல்கள் இருந்து வரும் வழக்கத்தை ஆட்சேபிப்பதுடன் அத்தகையவைகள் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கிராண்டு முதலானவைகள் கொடுப்பதை மறுக்க வேண்டுமென்று கல்வி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளுகிறது’ என்று முடிவு செய்ததை நினைவில் கொள்வோமாக.
       ‘ஆண்களும், பெண்களும் சாதி பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி கணவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை அளிக்கப்படவேண்டுமென்றும், அதற்கேற்றவாறு திருமணச் சடங்குகள் திருத்தப்பட வேண்டுமென்றும், திருமணச் சடங்குகள் சொற்பப் பணச் செலவில் நடத்தப் பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டன.’

தேவதாசி முறை
       
இவற்றோடு நின்றதா பெண்களுக்கு இழைத்த அநீதி? இல்லை.  விலைமாதர், சமதர்ம நாடுகளுக்கு அப்பால் காணும் கொடுமை| நெடுங்காலமாக இருந்து வரும் கொடுமை.  எந்த நாட்டிலும் இக்கொடுமை சமயத்தோடு தொடர்புபடுத்தப் படவில்லை.  எந்த நாட்டுக் கடவுள்களும் தங்களுக்குப் பணிபுரிய என்று, பெண்கள் அணியைத் தேடவில்லை.  இந்தியாவிலும் பிற சமயங்களில் இல்லாத அநீதி, கேவலம், அநாகரீகம், இந்து சமயத்தின்பேரால், இந்து வாழ்க்கை முளையின் இன்றியமையாத பகுதியாக.  இருந்து வந்தது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஒழுக்கத்தில் நாட்டமுடையவர்கள் காறி உமிழ்ந்து, போராடி ஒழித்திருக்க வேண்டிய இந்து ‘பேடன்ட்’ முறைக்குப் பெயர், பொட்டுக் கட்டுதல்.  அப்படியென்றால்?
       
புத்தி தெரியாப் பருவத்தே, சிறுமி ஒருத்தியை உள்;ர் அல்லது பக்கத்து ஊர்க் கோயிலுக்கு அடியாளாகப், பொட்டுக் கட்டி விடுவது.  சாமிக்குப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட அவள், பின்னர் யாரையும் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது.  கோயில் பணிவிடைகளில் ஈடுபடவேண்டும்.  இசை, நாட்டியம் முதலியவைகளைக் கற்று, கோயில் திருவிழாக் காலங்களில் பாடியும் ஆடியும் ஆண்டவன் தொண்டைச் செய்யவேண்டும்.  அதனால் சாமி மகிழ்ந்ததாக, மானுடன் எவனுக்கும் தகவல் இல்லை.
       
ஆனால் ஆசாமிகள் மகிழ்ந்ததாகக் கேள்வி.  பாடியவள் வீட்டுக்கு, ஆடியவள் வீட்டுக்குப் போவதில், பெரும் பண்ணையாருக்கும் சின்னப் பண்ணையாருக்கும் போட்டி மூண்டது தெரியும்.  துணிக் கடைக்காரர்களுக்கும் நகைக் கடைக்காரர்களுக்கும் போட்டி பெருகியதை அறிவோம்.  இப்போட்டிகள், அவர்களுக்குள் தீராத பகையானதோடு நிற்காமல், உள்ளாட்சி அரசியல் சண்டைகளுக்கும் குழப்பங்களுக்கும் கவிழ்ப்புகளுக்கும் காரணமாயிருந்தது ஏராளம்.
      
தேவர்க்கு அடியார்களாகப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட பரிதாபத்திற்குரியவரிகள் யார்? ஆயிரம் சாதிகள் கொண்ட நம் சமுதாயத்தில், சாதிக்கு ஐந்து பேர்களையோ பத்துக் கன்னிகளையோ, இப்படிக் காணிக்கை ஆக்கிவிட்டார்களா? இல்லை.  இந்த அவமானத்திற்கு, இழிவிற்கு, கொடுமைக்கு, உட்பட வேண்டிய சாதி, தனியாக ஒன்று இருந்தது.  நாட்டிலுள்ள கயவர்களுக்கெல்லாம் போக்கிடமாக வேண்டிய மாதர்கள், தனிச்சாதியைச் சேர்ந்தவர்கள்.  இம்முறைப்படி, ஒவ்வோர் கோயிலுக்கும் சில பல பொட்டுக் கட்டிய, அதாவது, பொது மகளிர் இருந்தார்கள்.  இந்த இழிவைப்பற்றி எந்த ஒழுக்கசீலனும் பொங்கி எழவில்லை.  எந்த மகானும் ‘வேண்டுதல் வேண்டாமை இலாத நிர்மலனோடு இந்த அசிங்கத்தை இணைக்காதே’ என்று அருளுரை வழங்கவில்ல.  போராட்டம் நடத்தவில்லை.  ஏன்? நம் ஆண்கள் யோக்கியதை அவ்வளவு கெட்டுக்கிடந்தது போலும்! இப்போதைக்கில்லாவிட்டால், எப்போதைக்காகிலும் பயன்படாதா என்று எண்ணினார்களோ என்னவோ? சமய முத்திரையோடு புனிதத் தன்மைஎன்னும் வெண்குடையின்கீழ், பட்டிமாட்டு ஆண்களின் கொழுப்பிற்காக நாடு தழுவிய தேவதாசி முறை கொடிகட்டிப் பறந்தது.
       
மேற்கூறிய தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் செய்ய வேண்டுமென்ளு, திருமதி. டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு மசோதா ஒன்றை அனுப்பி வைத்தார்.  அம் மசோதாபற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு மாகாண அரசு பலரைக் கேட்டது.  ஈ. வே. ராமசாமியையும் கேட்டது.
       
ஈ. வே. ரா. விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.  அதில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு 1868 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.  1906, 1907 ஆம் ஆண்டுகளில் பல மாகாண அரசுகளும் இக்கொடுமையை ஒழிக்க முடிவெடுத்துக் காட்டியதைக் கோடிட்டுக் காட்டினார்.  1912 ஆம் ஆண்டு இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மாணிக்ஜி தாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியோர் இத்தகைய மசோதாவைக் கொண்டுவந்ததை நினைவுபடுத்தினார்.  இதைப் பொதுமக்கள் ஆதரித்ததால், இந்திய அரசே 1913 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மசோதா கொண்டுவந்ததைக் குறிப்பிட்டுக் காட்டிய ஈ.வே.ரா. அதற்குப் பொதுவாக ஆதரவு இருந்தபோதிலும் சில சில்லறை விஷயங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளால் தடைப்பட்டது என்று நினைவூட்டினார்.  மீண்டும் 1922 ஆம் ஆண்டு டாக்டர் கோர் கொண்டு வந்த மசோதா 1924 ஆம் ஆண்டு சட்டமாக்கப் பட்ட வரலாற்றை நினைவுபடுத்தினார்.
       
தேவதாசி ஒழிப்பு முயற்சியின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டிவிட்டு, ‘இந்த நாள்பட்டகொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபமோ எதிர் அபிப்பிராயமோ இருக்க முடியாது.  தேவதாசி என்ற ஒரு வகுப்பு இருப்பது இந்து சமூகத்திற்கே இழிவானதும் அல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியாகும்.  ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு பெண்ணுலகத்திற்கே ஏற்பட்டதாகுமாகையால், இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ்தையும் கவுரவத்ததையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாய் இருக்கின்றது.  அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ சமூகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும் பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும்.  சிறு குழந்தைகளில் இருந்து துராச்சார வழிகளில் பயிற்றுவிப்பது ஜன சமூக விதிகளையே மீறியதாகம்’ என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைத் தெரிவித்து, பொட்டுக் கட்டுவதைத் தடுக்கம் சட்டத்திற்கு நாடறிய ஆதரவு கொடுத்தார்கள்.
       
மேலும், கோயில்களில் கடவுள்கள் பெயரால், பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும் சமய சமூக முக்கிய ஸ்தாபனங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம், நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வருகின்றது.  அன்றியும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது.  ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, குடிமக்களின் ஒழுக்கத்தையோ நலத்தையோ கோரின அரசாங்கமாவது ஒன்றிருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒரு கணநேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காது என்றே சொல்வோம்’ என்று சாடினார்.
       
திருமதி டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் கொண்டுவந்த மசோதா, வைதிகர்களின் சலசலப்பைப் பொருட்படுத்தாது, சட்டமாக்கப்பட்டது.  அது செயல் முறைக்கும் வந்தது.  அதன் விளைவாக, இந்த அவமானம் ஒழிந்ததோடு, அநீதிக்கு ஆளான அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,இழிவிலிருந்து விடுபட்டு, கல்வி கற்று, மற்ற சமூகங்களைப்போன்ற நிலைக்கும் மதிப்பிற்கும் வளர்ந்து வந்துவிட்டார்கள்.

ஆண் பெண் ஏற்றத்தாழ்வு
       
சாதி ஏற்றத்தாழ்வை விட ஆழமாகவும் அகலமாகவும் பரவியிருப்பது ஆண் பெண் ஏற்றத்தாழ்வாகும்.  இருவகை ஏற்றத்தாழ்வும் விரைந்து ஒழிக்கப்படவேண்டும்.  சாதி ஏற்றத்தாழ்வை ஒழிப்பது காட்டாற்றில் எதிர்நீச்சல் போடுவதுபோலாகும்.  ஆண் பெண் சமத்துவத்தை அடைவது, நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பாகும்.  எனவே, இதுபற்றிப் பெரியாரின் கருத்துகளைப் படிப்போம், சிந்திப்போம், கற்றபடி நிற்போமாக.
       
பெரியார், பெண்ணின் பெருமைபற்றி ‘பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கைகொண்டவர்கள்.  இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல், மற்றப்படி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன்.  அவர்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பயன் என்ன? எங்கே கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைவது.  அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் பெண் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெயருக்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.  ஓர் ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள்?’ என்று கேட்டு, நமது சிந்தனையைத் தூண்டிவிட்டார்.
       
‘கற்பு என்பதைச் சுகாதாரத்தையும் சரீரத்தையும் பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன்.  என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை.  கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை’ என்பதிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.
        ‘பெண்களுக்குத்தான் கற்பு, ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கிற தத்துவமே தனியுடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது’ என்று சுட்டிக் காட்டினார்.

பெண் விடுதலை
       
பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலை. ஆதலால், ‘ஒரு பிறவிக்கு ஒரு நீதி’ என்கிற கற்புமுறை ஒழிக்கப்படவேண்டும்.  ஆண்கள் திருந்த வேண்டின் இத்தகைய அதிர்ச்சி மருத்துவம் தேவை.
        பெண்கள் விடுதலைபற்றிப் பெரியார் ஒளிவு மறைவின்றிப் பேசியும் எழுதியும் வந்தார்.  ‘பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவம் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.  எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத வர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால், இதன் உண்மை விளங்கும்.  அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது, என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’ என்று பெரியார் முழங்கினார்.  இது கசப்பாயிருப்பினும் உண்மைதானே.  உரிமை, பரிசுப் பொருள் அல்லவே!
       
ஆண்கள் பெண்களை நடத்தும் முறைபற்றி ‘பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.  ஆண்கள் பெண்களைப் பிறவிமுதல் சாகும்வரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள்’ என்று பெரியார் படம் பிடித்துக்காட்டி ‘தனி உரிமை உலகில், பெண்கள் உரிமை வேண்டுமென்பவர்கள், பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும்.  தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்கவைக்க வேண்டும்.  வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
        மேலும் அவர் கூறுவதாவது: ‘இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றப்படி மிருகம், பட்சி, பூச்சி முதலியவைகளில் வேறு எந்த உயிராவது, “ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்” என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா?
       
இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.  ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே எதனால்? துணியாலும் நகையாலும் தானே!
       
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை.  நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் ஆனவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களின் யோக்கியதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளைப் பற்றியுமே சொல்லுகிறேன்.
        திராவிடப் பேரறிஞர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நகைக் கடைகள், துணிக்கடைகள், ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கம் அழகிய பொம்மைகள் உருவங்கள் போலல்லாமல் – நாட்டு மனித சமுதாயத்திற்குப் பெண்கள் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? இவர்களே இப்படி இருந்தால் –  மற்றப் பாமர மக்கள், தங்கப்பெட்டியின் உள்ளே, வெல்வெட் மெத்தைபோட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்!
       
‘நம் பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை தமக்கையர் பிறந்தார்கள்.  இவர்கள் தகப்பன்மார்கள்தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள்.  அப்படி இருக்க, இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகம்? இதைப் பயன்படுத்தாதது நாட்டுக்கு, சமூகத்திற்கு நட்டமா இல்லையா?
  ‘நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டுக் குறைந்த வட்டியாவது வாங்கி, குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க, அந்த வட்டியில் ஓர் ஆளைவைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால், அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையை ஆட்கள் மூலம் வளர்க்க வேண்டும்.  சமையல் ஆட்கள் மூலம் செய்விக்க வேண்டும்.  பெண்கள் ஆண்களைப் போல் உயர்வேலை பார்க்க வேண்டும்.  பொம்மைகளாக நகை மாட்டும் ஸ்டாண்டுகளாகக் கூடாது என்கிறேன்.
        ‘ஆண்கள் பார்க்கம் எல்லா வேலைகளையும் தொண்டுகளையும் பெண்கள் பார்த்துச் செய்யமுடியம் என்பேன் ஆனால் நகைப்பித்து, துணி அலங்காரப் பித்து, அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பித்து ஒழியவேண்டும்.’ இப்படிப் பெரியார் பெண்கள் விடுதலைக்கு வழி காட்டினார்.
       
ஒருவருக்கோ ஒரு கூட்டத்துக்கோ விடுதலை கொடுக்கிறோம் என்றால் அவரையோ அக்கூட்டத்தையோ அதற்குத் தகுதியாக்குதல் முதற்கடமையாகிறது.  பாரதிதாசன் கேட்டது போல், ‘கண் திறக்காத போது, விடுதலை வாழ்வின் கதவு திறந்தால் பயன் ஏது?’
        களைய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டிய பெரியார், வளர்க்கவேண்டியவற்றைக் கோடிட்டுக்காட்டத் தவறவில்லை.  இதோ பெரியார் உரை:
        
‘ஒன்று, இரண்டு, மூன்று கூட எண்ணத் தெரியாத நிலையில் உள்ள பெண்களைக் கட்டிக்கொண்டு, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்றால் எப்படி முடியும் என்று யோசித்துப் பாருங்கள்’

முடிவுரை
      
தனி உரிமை உலகில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும்.  தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்கவேண்டும்.  வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழல் கற்றுக்கொடுக்கவேண்டும் தாய் தகப்பன்மார்கள் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக்கொடுப்பது என்று இல்லாமல் அதுவாகவே பெண்ணாகவே பார்த்து, தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு – ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும்.  சுருக்கமாகச் சொன்னால், கன்னிதானம், கலியாணம் – தாரா முகூர்த்தம் என்கிற வார்த்தைகளே மறைந்து அகராதியில் கூட இல்லாமல் ஒழியவேண்டும்.  அன்றுதான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க இலாயக்குள்ளவர்கள் ஆவார்கள்.’ இப்படிப் பெரியார் கூறும்போது பலருக்குக் குமட்டும்| முகம் சுழிக்கும்.  இருப்பினும் சிந்தித்துப் பாருங்கள்.  இவ்வாறு பெரியார் உண்மை தத்துவத்தை சமுதாய மக்களுக்கு எடுத்துரைத்தார்.

சான்றெண் விளக்கம்

1.பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள், ப.சு.கௌதமன் பாரதி புத்தகாலயம்.

2.பெண் விடுதலை,   பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.

3.தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

4.திராவிடர் கழக வரலாறு, கி. வீரமணி, பெரியார் சுய மரியாதை பிரச்சால நிறுவன வெளியீடு

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு. ஆயிஷாம்மா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை
மு.சா.ச. வக்பு வாரியக் கல்லூரி 
மதுரை-20
மின்னஞ்சல்:  maaisamma@gmail.com
 

Leave a Reply