ஆய்வுச்சுருக்கம்
உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுப்பண்பாக அமைவது பசி. பசிக்கான தேவை உணவைப் புசிப்பதில் மட்டுமே நிறைவடையும்.வேறு எதைக்கொண்டும் பசியை நிறைவு செய்ய இயலாது என்பது உலகியல் உண்மை.உலகத்தோற்றம் முதலாக ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலும் இரை தேடிப் பெறுவதே தொடர் பணியாகின்றது.உயிர்களிடம் இயற்கையாகவே அமைந்த இயல்பூக்கத்தின் அடிப்படையில் இம்முயற்சி தன் சார்ந்த உயிர்களுக்கு இரை தேடவும் கற்பித்திருக்கின்றது.சங்கிலித் தொடர் போன்ற இந்த அறமே இன்றும் நாளையும் உயிர்களைக் காக்கின்றது. ஆறறிவு கொண்ட மனித உயிரும் இதற்கு விதிவிலக்கல்ல.உயிரிலும் உடலிலும் பிணிக்கப்பட்ட பசியிலிருந்து விடுதலை பெற ஒவ்வொரு மனிதனும் உணவைத் தேடி அலைந்திருக்கின்றான். அவனது சிந்திக்கின்ற அறிவு உணவுசேகரிப்பையும் சேமிப்பையும் கற்றுத் தந்துள்ளது.இந்த விலக்க முடியாத வாழ்வியல் தேவையானது மனிதகுலப்பெருக்கத்தில் நடத்தை நெறிமுறைகள் உருவாக்கத்திற்கான அடித்தளமாகியிருக்கின்றது.அத்தகைய நெறிமுறைகள் அறமாக நம் முன்னோர்களால் வகுத்தளிக்கப்பட்டதன் காரணம் பசி என்பதை சங்க இலக்கியங்கள் வழி நிறுவுவதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னுரை
பசி உடலின் இயக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடாகும்.உலகின் அனைத்து உயிர்களின் தேவையும் தேடுதலும் பசியைக் கொண்டே அமைகின்றது.மானுடச் சமூகத்தின் அறவியல் சிந்தனைகளைக் கட்டமைக்க பசி என்னும் உணர்வு காரணமாகியிருந்துள்ளதனை பழந்தமிழ் இலக்கியங்கள் வழி அறியலாகின்றது.பசி எனும் உயிர்த்தேவை உலக இயக்கத்திற்கான ஆதாரமாக இருந்துள்ளது. வேட்டைச்சமூக காலத்தில் மானுடத்தின் தேவை உடலையும் உயிரையும் பசியே காரணமாகியுள்ளது. இன்று நாம் பின்பற்றி வாழும் அறங்களும் அது சார்ந்த நடத்தைகளும் பசியால் வடிவமைக்கப்பட்டவை என்ற உண்மையை சங்க இலக்கியங்கள் எடுத்துணர்த்துகின்றன. பகிர்ந்துண்ணும் உயிரினமாகிய மனிதனுக்கும் பசி என்பது பொதுமைப்பண்பாகியுள்ளது. தனிமனிதனுக்கான பசி தன்னைப் போன்று பிற உயிர்களின் பசியை உணரச்செய்து மனிதநேயத்தைக் கட்டமைத்திருக்கின்றது. ஓரறிவு முதலாக ஆறறிவு மனிதன் வரையிலும் அன்பு, தாய்மை, காதல், வீரம், அச்சம், போராடிப்பெறும் குணம் போன்ற நடத்தை வடிவங்கள் அந்தந்த புலனுணர்விற்கு ஏற்பப் புலப்படுகின்றன. இத்தகைய நடத்தை வடிவங்கள் பசி உண்டாகும் போது பல மாற்றங்களை அடைகின்றன. பசியை பிணியாகக் கூறி அப்பிணிக்கான மருந்தாக உணவைக் கூறியுள்ள நம் முன்னோரின் சிந்தனைகளை இன்றைய சமூகம் அறிந்துணரத் தலைப்பட வேண்டும்.உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழுவதற்கும் நம் முன்னோர்களால் அறங்கள் வகுக்கப்பட்டமைக்கும் பசி எனும் உணர்வு காரணியாகியிருந்துள்ளதனைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பசியும் மனித நடத்தை வடிவங்களும்
தனிமனிதனுக்கான பசி எனும் உணர்வு உணவுத்தேடலில் தொடங்கி அடுத்து என்ன என்ற தொடர் சிந்தனையை தோற்றுவித்துள்ளது.அதன் வெளிப்பாடே அடுத்த வேளை உணவுத்தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்ற தேவையின் உருவாக்கமாகும். பசி போராடிப் பெறும் குணத்தை அவனுக்குக் கற்பித்தது.விலங்குகளைப் போல தேவை நிறைவடைந்துடன் உணவை விட்டுச் செல்லாமல் சேகரித்துப் பயன்படுத்தும் ஆற்றலே நாகரீக வளர்ச்சியின் அடித்தளமாக இருந்திருப்பதனைக் காணமுடிகின்றது.
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” (புறம்-18-21)
என்று உணவையும் நீரையும் தேடி அலைந்த மனிதன் இயற்கையை உற்று நோக்கினான் .தேடுதல் மிக்க அறிவு நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது.உணவு உற்பத்தியும் சேமித்தலும் அன்றாடத் தேவையாக மாற்றம் பெறத்துவங்கின.மனிதக் கூட்டம் பெருகிய பின் மலை, காடு, விளைநிலம், கடல், மணற்பாங்கான பாலை நிலம் என்ற ஐவகை நிலங்களில் பரவி தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளனர். குறிஞ்சிப்பகுதியில் வாழும் மக்கள் தினை, தேன், மலைநெல் முதலானவற்றையும், முல்லை நிலத்தில் வரகு,சாமை,முதிரை போன்றவற்றையும், மருதநில வயல்களில் செந்நெல்லரிசி, வெண்ணெல்லரிசி,போன்ற அரிசிவகைகளையும் கடல்புறவாழ் மக்கள் மீன், உணக்கல், உப்பு முதலானவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகின்றது. மேலும் ஒருவனின் பசி உணர்வு உடலை இயக்குவதற்கான மருந்தாக உணவைக் காண வைத்துள்ளது. உணவின் மீது பெருமதிப்பை உண்டாக்கியுள்ளது.
“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றைவேந்தனில் ஔவையும் ,“உணவே மருந்து மருந்தே உணவு” என்று திருமூலரும் பசிக்கான மருந்தாகவே உணவைக் கண்டுள்ளனர்.பசித்தவர்க்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே சிறப்பாகும்.
“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது”(குறள்-227)
என்று கூறுகிறது தமிழ்மறையாகிய திருக்குறள் .பசி என்பது பொது நோய்.இது அனைத்துயிர்களையும் பற்றியிருப்பது.உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.
“பெரும்பசி” (திரிகடுகம் பாடல் 60)
“வயிற்றுத்தீ”(புறம் 74)
“யானைத் தீ”
என்று மணிமேகலையிலும் தீராப்பசி தொடர்பான நோய்களாகக் கூறப்படுகின்றன. இயல்பாக மனிதனுக்கு எழும் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது நோயாக மாறுகின்றது.தணியாத பசி தீ போல வயிற்றில் எரிந்து துன்பப்படுத்தியிருக்கும் போது,மூளை சரியாக சிந்திக்காது.இதற்குத் தீர்வு உணவு மட்டுமே என்பது இயற்கை.
“பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின்”(புற-173)
என்று உணவு தருபவரை தேடிச் சென்று பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பை இப்பாடல் உணர்த்துகிறது. மேலும், உணவு தன்னிறைவு அடையாத காலத்தையும் அடையாளப்படுத்துகிறது.
தேவையும் தூண்டுதலும்
உணவு வகைகளைப் பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை பசித்துன்பத்தின் வழியாகப் பெற்ற அனுபவமே உருவாக்கியது.இதனை எட்டுத்தொகை நூல்களில் பாடப்பட்டுள்ள தினைப்புனம் காக்கும் பாடல்கள் பதிவு செய்கின்றன.
“சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளென” (அகம்)
“நறுகோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி” (குறிஞ்சி-38)
“தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும் கிளிகடி மரபின” (குறிஞ்சி-43-44)
என்ற பாடல்களில் காணமுடிகின்றது. விளைந்த நெல் தானியவகைகளை பருவங்காலங்களுக்கேற்ப சேமித்து வைத்துக் கொண்டனர்.வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உருவெடுத்தமையால் அதற்குத் துணையாக பல தொழில்கள் காலப்போக்கில் தோன்றின.தானியங்களைச் சேமிப்பதற்கான பானைகள் கிடங்குகள் மரப்பொருட்கள் கண்டறியப்பட்டன. கணிப்பும் கவனமும்
தன் பசியை உணர்ந்ததன் விளைவு தன்னைப்போல் பிறரின் பசியையும் உணர்த்தியது.அது பகிர்ந்துண்ணும் பண்பை மானுடகுலத்தில் பொதுமைப்படுத்தியுள்ளது. இதனை சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.
“படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்”(புற-188)
“உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும்”(புற-95)
“சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி ஆறு போலப் பரந்தொழுகி”(பட்-45-46)
என்ற பட்டினப்பாலைப் பாடலில் அனைத்து மக்களும் பசியாறும் வண்ணம் சோறு வடிக்கப்பட்டதைக் கூறுகின்றது. உணவு உற்பத்தியும் பகிரலும் பொதுவுடைமைச் சமூகத்தைக் கட்டமைத்தன. உணவைத் தேடி காடு மேடுகளில் திரிந்த மனிதன் தனக்கான நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொள்வதற்கு வேளாண்மை காரணமாகியுள்ளது.நிலையாக வாழத் தொடங்கிய பின் பகிர்ந்துண்ணும் சிந்தை விருந்தோம்பல் பண்பாடாகவும் கொடைத்தன்மையாகவும் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.இதற்கு ஆற்றுப்படைநூல்கள் சான்று பகர்கின்றன.
“ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றிப் பல்நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்” (பெரும்-341-345)
என்ற பாடலில் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் தான் வயிறார உண்ட உணவைக் குறித்து பரிசில் பெற விழைகின்ற பாணனுக்குக் கூறுவதால் நெடுநாள் நிறைவடையாத உணவின் ஏக்கமும் அதைப் புரிதலோடு உணர்ந்து கொண்ட மன்னனின் கொடைத் தன்மையும் வெளிப்பட்டமைக்குப் பசி என்னும் தனிமனித உணர்வு காரணமாகியிருப்பதனை உணரமுடிகின்றது.
மேலும் கொடைத்தன்மையில் முதன்மையானதாக நாடி வருவோருக்கு மனமும் வயிறும் நிறைய உணவளித்துப் பசியைப் போக்குதல் என்பது தலைமைப்பண்பின் அடையாளமாகியுள்ளது. பசியைப் போக்குவதன் மூலமே புலமையும் கலையும் நிலைத்து வாழும் என்ற உண்மையை உணர்ந்திருந்தனர்.
பகிர்தலும் புரிதலும்
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்ற புலவர் மோசிகீரனார் நீண்ட தூரம் நடந்த களைப்பின் மிகுதியால் முரசுக்கட்டிலில் படுத்துறங்கினார்.அரசனுக்கான கட்டிலில் அரசனைத் தவிர வேறு யாரும் அமர்வது தண்டனைக்குரியது.இருப்பினும் அரசனின் புரிதல் மோசிகீரனாரை தண்டிக்காமல் அவரது உறக்கத்தைக் கலைத்து விடாமல் கவரி எடுத்து விசிரிவிடச் செய்துள்ளது.கண் விழித்து பார்த்து அதிர்ந்தெழுந்த மோசிகீரனார்
“அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுது அறிதல்” (புறம்-50-8-10)
என்ற அடிகளில் நற்றமிழ் முழுதறிந்த தன்மையுடையவன் இரும்பொறை என்று விதந்து கூறியிருப்பதன் மூலம் வறுமையுற்றோரிடம் வளமையாக இருந்த புலமையை மதிப்பளித்துப் பேணுவது என்பது காலம் கடந்தும் தமிழர் மரபை அழியாமல் நிலைபெற்றிருக்கச் செய்வதற்கான அறமாகக் காணலாம்.
பசி இந்த அறத்தைக் கொன்றுவிடும் என்பதாலேயே மன்னர்கள் பாணர்களையும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றியுள்ளனர்.பசியால் புலமை அழிந்து விடாது என்பதற்கும் அவர்தம் பாடல்களே சான்றாகும். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனை வாழ்த்திப் பாடிய நல்லூர் நத்தத்தனாரின் உயிர்த் தேவையாகிய உணவுத்தேவையை முதலில் நல்லியக்கோடன் நிறைவு செய்திருக்கிறான். பிறகு வாழ்வியல் தேவைக்கான பொன்னும் பொருளும் வழங்கியிருக்கிறான். சிறுபாணாற்றுப்படையில் புலவர்களின் வறுமையைக் கூறுமிடத்து அண்மையில் குட்டிகளை ஈன்ற நாய் அவைகளுக்குப் பாலூட்ட முடியாத வறுமுலை நாய் என்பதனால் அவ்வீட்டில் நிலவிய வறுமையை உணர வைத்தார் ஆசிரியர்.
இதனை ஐம்பொறிகளும் தளர்தற்குக் காரணமாகிய “ஒல்குபசி”(சிறுபாண்-135) என்றும் “அழிபசி வருத்தம்” (சிறுபாண்-140)என்று பசி அனைத்து அறங்களையும் அழித்துவிடக்கூடியது என்று உண்மையைப் பாடலாகப் பாடியிருக்கிறார். மேலும்,ஒருவர் இறந்த பிறகும் அவ்வுயிர் பசியால் வாடக் கூடாது என்பதும் அவ்வுயிருக்குப் படையலாய் உணவு படைத்தலையும் ,அது இறந்த உயிரின் பசியை நிறைவு பெறச் செய்யும் என்பது இன்று வரை சமூகத்தில் நிகழ்ந்து வரும் நம்பிக்கையாகும்.அன்று களச்சாவு அடைந்த வீரர்களுக்கு நடுகல் வழிபாட்டில் கள் படைத்து இறந்த வீரனுடைய தாகத்தைத் தணிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை புறநானூற்றில் காணலாம்.
“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாட்பலி ஊட்டி”(புற-329-1-2)
என்று பாடியிருப்பது பசியின் தொடர்நிலையையும்,இறப்பிற்குப் பின்னும் உணவளிக்க வேண்டிய மரபை உருவாக்கியிருப்பது என்பது சகமனிதனுக்குப் பகிர்ந்துண்ணும் நெறியைக் கைவிடாதிருக்க வேண்டும் என்ற நற்சிந்தனையின் அடிப்படையாகக் காணலாம்.
அறங்களை அழித்து விடக்கூடிய பசி
பிற்காலத்தில் எழுந்த ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை பசியைப் போக்குதலை அறமாகப் பாடியது.நிறைவடையாத பசி தனிமனித வாழ்வில் எத்தகைய இழிவுகளைத் தேடித்தரும் என்பதை,
“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
புண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது” (மணிமேகலை-11-9)
என்று சீத்தலைச்சாத்தனார் பாடியிருப்பதன் மூலம் மானுடத் தன்மையை சீர்குலைக்கும் பசியையும் அதற்கான தீர்வு மனிதர்களிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். உணவுத்தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை மலரச் செய்ய சகமனிதர்கள் முன்வர வேண்டும் என்று அவர் பாடியிருப்பதன் பொருண்மை புலனாகின்றது. நல்வழி நூலில் ஔவை உணவு கிடைக்காத பசி எத்தகைய இழிவை நோக்கி மனிதர்களை வீழச் செய்யும் என்பதனை,
“மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்” (நல்வழி-26)
இவ்வடிகளில் இயம்பியுள்ளதன் வழியாக அறியமுடிகின்றது. இதனாலேயே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர். பாரதியார் ”தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”என்று பாடினார்.மனிதப்பண்புகளையும் நல்லறங்களையும் வீழ்த்தி,மனிதனை விலங்கினும் கீழாக மாற்றிடும் ஆற்றல் கொண்டது பசி.பசியை ஒழிக்க முடியாது.ஆனால் பசிக்கான தீர்வைப் படைக்க மனிதனால் இயலும் என்பதையே நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.
பகுத்துண்டு பல்லுயிர் காத்தல் மானுடக் கடமை
காலந்தோறும் உயிர்களைப் பிணித்திருந்ததனால் பசிப்பிணி என்று இலக்கியங்கள் கூறுகின்றன.“உள் நின்று உடற்றும் பசி”(திருக்குறள்-2-13) என்று வள்ளுவம் உரைக்கின்றது.இத்துன்பம் தரும் பசியிலிருந்து விடுபட அனைத்து மக்களுக்கும் உணவு என்ற சமூகநிறைவை அடைய வள்ளுவர் பகுத்துண்ணும் சங்க காலமரபை வழிமொழிந்து அறமாகப் பாடியிருக்கின்றார். இதனை,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (திருக்குறள்-322)
என்று எல்லா உயாகளும் வாழ வேண்டும் என்ற வள்ளுவரின் சமநிலைக் கொள்கை தெள்ளிதின் புலனாகின்றது. இதன்வழி ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டிய கடமை மனிதனுக்கானது என்பதையே “பல்லுயிர் ஓம்புதல்”என்ற சொற்களால் வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார்.
கூட்டுணவும் பெருஞ்சோற்று நிலையும்
மனிதர்கள் குழுவினமாக வாழ்ந்த காலத்தில் ஒருவர் பசியை மற்றவர் புரிந்து கொண்டு பகிர்ந்து உண்ணுதல் என்பது கற்பிக்கப்பட்டதாக இருந்திருக்க முடியாது. பசியை இயல்பூக்கமாகவே அறிஞர்கள் சுட்டுகின்றனர். “மனிதனுக்குப் பதினான்கு வகையான இயல்பூக்கங்கள் உண்டென்றும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்ளக்கிளர்ச்சிகளோடு இணைந்துள்ளன என்றும் மக்டூகல் கூறினார். (எ-டு) பசி உண்டானதும் உடலின் தேவையை அறிகின்றோம்.பிறகு உணவு உண்ண வேண்டுமென்ற உணர்ச்சி உண்டாகின்றது.பசியைப் போக்கிக் கொள்ள உணவுப் பொருளை எடுத்து உண்ணுகின்றோம்.இயல்பூக்கம் இவ்வாறு செயல்படுங்கால் அறிவு, உணர்ச்சி,முயற்சி என்ற முக்கூறுகள் காணப்பெறுகின்றன.இந்த மூன்று கூறுகளுள் உணர்ச்சிக்கூறே முக்கியமானது” என்று மக்டூகல் உரைத்திருப்பதாக பேரா.கி.நாகராஜன் தனது நூலில்(பக் 159) குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஆயுமிடத்து,மக்டூகல் கூறியுள்ள உணர்ச்சிக்கூற்றின் அடிப்படையில் தன் பசியைப் போல மாற்றான் பசியையும் உணர்ந்து கொள்ளுதல் மனிதநேய அறத்தின்பாற்பட்டதாகும்.இப்படி பசிக்குச் சோறிடுதல் என்பது சமூகக் கடமையாக மட்டுமே அக்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு சங்கப்பாடல்களில் பயிலப்பட்ட “கூட்டுணவு” என்ற சொல்லே சான்றாகும்.
“வலி கூட்டுணவின் வாள்குடிப் பிறந்த” (பெரும்-137)
என்றும்,
“நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ,
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் அரும் சுரம்”(பெரும்-115-117)
என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.இப்பாடல்கள் பசுமையான புதர்களில் மறைந்திருக்கும் முயல்களை வளையில் மாட்டச் செய்து பிறகு அனைவரும் கூடியிருந்து உண்பர் என்று உரைத்திருப்பதன் வாயிலாகக் கூடியுண்ணும் தன்மையில் புரிதலையும் பகிர்தலையும் பசி என்னும் தனிமனித உணர்ச்சியானது கட்டமைத்திருக்கின்றது.இக்கூட்டுண்ணுதல் இனக்குழுவின் பண்பாட்டு எச்சம் என்பதை,அனைவரும் கூடியுண்ணும் பெருஞ்சோறு என்று,
“பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன்” (புற.235-4)
“வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்” ( புற-261-3)
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் வஞ்சித் திணையில் “பெருஞ்சோற்றுநிலை”எனும் துறையாகப் பாடியுள்ளார்.
“பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை” (தொல்-1013-9)
என்ற தொல்காப்பிய அடிகளிலும், “பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும் கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே” (பதிற்-30-43-44)என்று பதிற்றுப்பத்திலும்,வேந்தன் தன் படைஞருக்கு உணவு கொடுத்த செய்தியைக் காணமுடிகின்றது.மேலும்,சேரமன்னன் உதியன் சேரலாதன் இருபெரும் படைகளுக்கும் சோறிட்டமையால் “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”(புற-2-16)என்று பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று இன்றளவும் வரலாற்றில் அம்மன்னன் அழைக்கப்படக் காரணம் பசியை உணரும் தலைமைப்பண்பே ஆகும்.தனியொரு மனிதனை மக்கள் தமது தலைவனாக ஏற்பதற்கு அடிப்படைக் காரணம் பகையிலிருந்து மட்டுமல்லாது பசியிலிருந்தும் தம்மைக் காக்க வேண்டும் என்பதேயாகும்.இதனை வள்ளுவர் வழிநின்று அறியலாம்.
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” (திருக்குறள்-381)
இக்குறட்பாவில் நாடாளும் மன்னன் மாமன்னனாகத் திகழ வேண்டுமெனில் மக்களின் உணவுத் தேவையையும் தன்னிறைவு அடையச் செய்ய வேண்டுமென வள்ளுவர் உரைக்கின்றார்.ஆக,பெருஞ்சோறு எனும் சொல் பழந்தமிழரின் மனவலிமைக்கும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பிற்கும் சான்றாக அமைவதைக் காணலாம்.இல்லாமைச் சூழலிலும் மக்களாயினும் தலைவனாயினும் தம்மை நாடி வந்தவரின் பசியைப் போக்கியுள்ளனர். “இல்லாமை உருவான போது சீறூர் தலைவர் கடன்பெறல்,பொருட்களைப் பணயம் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.வேந்துவிடு தொழிலில் ஈடுபடல் என்பது மூன்றாவது செயல்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேந்துவிடு தொழில் பரிசுப்பொருட்களையும் நெல் போன்ற உணவுப் பொருட்களையும் சீறூர் மன்னர் பெறக் காரணமானது .இத்தொழில் வழி பெற்றவை சீறூர் மன்னர் சமுதாயப் பொதுத் துய்ப்புக்கு உரியவையாகக் கொள்ளப்பட்டுப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.”என்று பெ.மாதையன் தனது நூலில் (ப.174) குறிப்பிட்டுள்ளார். வளமையான நால்வகை நிலத்தில் வாழ்ந்த மக்களைக்காட்டிலும் வறண்ட பாலை நிலத்தில் வாழும் எயினர்கள் ஒன்றாகக் கூடி உணவு சேகரித்ததையும் பாடல்களில் காணமுடிகின்றது.
தொகுப்புரை
பசி என்பது மானுட அறம் கட்டமைத்தலுக்கான காரணியாகியுள்ளது. உயிர்களின் உந்து சக்தியாக உலக இயக்கத்திற்குக் காரணமாகவும் பசி விளங்குகிறது. உயிர்களுள் மனிதப் பெருக்கமும் உணவுத்தேவை அதிகரிப்பும் மனிதக்கூட்டத்தை தன்னிறைவு பெற இயலாத வண்ணம் போராடிக்கொண்டே இருக்கச் செய்கிறது.இன்றளவும் உலகில் உணவின் தேவையும் தேடுதலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. உணவைத் தேடி பசியைப் போக்கிக் கொள்ள எத்தகைய போராட்டங்களை எதிர் கொண்டனர் என்பதற்குப் புலவர்களின் வாழ்வியலே சான்று.
வறுமையும் பசித்துன்பமும் தம்மை அணுகிய போதும் தம் புலமையைக் காத்து அறம் பாடிய புலவர்களின் தன்மான உணர்ச்சிக்கும் இப்பசியே வித்திட்டுள்ளது. பொறுமையும், சகிப்புத்தன்மையும், தன்னம்பிக்கையும், துணிவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிதலும், பகிர்தலும் ஆகிய அனைத்தும் நம் முன்னோர்கள் சங்கப்பாடல்களின் வழியே நமக்குக் கற்பித்துள்ள வாழ்வியல் அறங்களாகும்.வேட்டைச்சமூகம் முதலாக பசியும் உணவுத் தேடலும் பிணிக்கப்பட்டுள்ள மனிதன் சார்ந்து வாழும் பண்பினால் இப் பரந்த நிலவுலகை அழியாமல் நிலைபெறச் செய்கின்றான் என்பதற்குப் பாடல்களே சான்று.
மூவாயிரம் ஆண்டுகாலப் பழமையான இலக்கியங்கள் மனித குலம் தழைப்பதற்கான அறத்தை காலங்கள் கடந்தும் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன. சமூக்கட்டமைப்பிற்கும் அறச்சிந்தனைகளின் தோற்றத்திற்கும் பசி எனும் உணர்வு தலையாய காரணியாகியுள்ளது என்பதே மேற்கண்ட ஆய்வின் வழி கண்டறிந்த மெய்மையாகும்.
முதன்மை நூல்கள்
1.எட்டுத்தொகை,கு.வெ.பாலசுப்பிரமணியன்,அ.மா.பரிமணம்(ப.ஆ),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2007
2.பத்துப்பாட்டு,கு.வெ.பாலசுப்பிரமணியன்,அ.மா.பரிமணம்(ப.ஆ),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2007
துணைமை நூல்கள்
1.தொல்காப்பியம்,தமிழண்ணல்(உ.ஆ), செல்லப்பா பதிப்பகம்,மதுரை,ஆறாம் பதிப்பு 2021
2.திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ், கரு.பேச்சிமுத்து, (தொ.ஆ), அகரூர் கல்வி அறக்கட்டளை வெளியீடு, திருச்சி, ஐந்தாம் பதிப்பு, 2012
3.சிலப்பதிகாரம் மூலமும் உரையும், ந.மு.வேங்கடசாமி நாட்டார், (உ.ஆ), ராமையா பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு,2011
4.மணிகேலை மூலமும் உரையும், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ), சாரதா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2009
5.கல்வி உளவியல், பேரா.கி.நாகராஜன், ஸ்ரீராம் பதிப்பகம், சென்னை,2022
6. சங்ககாலம் உணவும் சமுதாய மாற்றமும், பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2019
7.ஔவை, இன்குலாப், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், மூன்றாம் பதிப்பு, 2006
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஆ.சாஜிதா பேகம்,
இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
காங்கேயம் வணிகவியல் கல்லூரி,
EBET அறிவுப்பூங்கா,நத்தக்காடையூர்,
காங்கேயம், திருப்பூர் மாவட்டம்.
மிகச்சிறப்பு