நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்பெறும் குறுந்தொகை சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்றது என்று குறுந்தொகை உரையாசிரியர்கள் கருதுகின்றனர். இந்நூலில் முதல், கரு, உரிப்பொருள்கள் அகநானூற்றைப்போல விரிவாகக் காணப்படவும் இல்லை. திருக்குறளைப்போல அறவே நீக்கப்படவும் இல்லை. விரிவும் சுருக்கமும் இன்றி அகன் ஐந்திணை ஒழுக்கங்களையும், இயற்கைச் சூழல்களையும் பண்டைக்காலச் சிறப்புகளையும் வேறு பல அரிய பொருள்களையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் இக்குறுந்தொகை உணர்த்துகிறது.
இந்நூலுக்கு 1915இல் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் குறுந்தொகை மூலமும் புத்துரையும் என்ற பெயரில் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பே குறுந்தொகை மூலமும் உரையுமாக அமைந்த முதற்பதிப்பாகும். குறுந்தொகைக்குப் பல உரைகள் வந்துள்ளன. அவற்றில் சில.
1.தி.சௌ. அரங்கனாரின் குறுந்தொகை மூலமும் புத்துரையும் -1915
2.இராமரத்தினத்தின் குறுந்தொகை உரை -1930
3.உ.வே.சா அவர்களின் குறுந்தொகை உரை -1937
4.இரா.இராகவையங்காரின் குறுந்தொகை உரை -1947
5.பொ.வே. சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரை -1955
6.சாமி. சிதம்பரனாரின் குறுந்தொகைப் பெருஞ்செல்வம் -1983
7.மு. சண்முகம்பிள்ளையின் குறுந்தொகை மூலமும் உரையும் -1985
மேற்கண்ட குறுந்தொகைப்பதிப்புகள் சிறப்புப் பெற்றவை. இவற்றுள் உ.வே.சாவின் குறுந்தொகை உரை அறிஞர்கள் பலரால் போற்றப்பெறுகிறது. பழுத்த அனுபவத்தின் பயனாக உ.வே.சா தம் 82ஆம் அகவையில் குறுந்தொகைக்கு உரையெழுதிப் பதிப்பித்தார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடியியல் துறைத்தலைவராக இருந்த மு.சண்முகம்பிள்ளையின் குறுந்தொகையுரை அப்பல்கலைக்கழகத்தால் 1985இல் வெளியிடப்பெற்றது. பாடலின் தலைப்பில் திணையையும் கூற்றையும் சுட்டும் முறையில் இது அமைந்துள்ளது. இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள சொல்லடைவும் பொருளடைவும் சங்க இலக்கியச் சொற்பொருளாய்வுக்குப் பயன்படும் என்று இவர் தெரிவிக்கிறார்.
இவருடைய கருத்துப்படி திணை தோறும் பாடல்கள்
1.குறிஞ்சித்திணைப் பாடல்கள் -146
2.முல்லைத்திணைப்பாடல்கள் – 44
3.மருதத்திணைப்பாடல்கள் – 50
4.நெய்தல்திணைப்பாடல்கள் – 71
5.பாலைத்திணைப்பாடல்கள் – 90 ————
401
மேற்கண்ட குறுந்தொகைப் பதிப்புகள் அறிஞர்களால் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு சிறப்புடன் அமைந்தாலும் உ.வே.சா வின் பதிப்பு முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
பாலைத்திணை
பாலைத்திணையைப்பற்றி பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம்
“அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்தியப் பண்பே”1
என்று கூறுகிறது. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்,என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்கிறார் தொல்காப்பியர். பாலை நிலம் என்று தனியாக ஒரு நிலம் இல்லாததால் அதனை நீக்கினார் என்று உணரமுடிகிறது. மேலும்
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”2
என்ற அடிகளில் பாலை நிலத்தின் சிறுபொழுது நண்பகல், பெரும்பொழுது இளவேனில், முதுவேனில் என்று அறியமுடிகிறது. பின்பனிக்காலமும் பாலை நிலத்தின் பெரும்பொழுது என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.இதனை,
“பின்பனி தானும் உரித்தென மொழிப என்ப”3
என்ற அடி உணர்த்துகிறது. பாலை என்னும் அகத்திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணையைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.இதனை
“வாகை தானே பாலையது புறனே”4
என்ற நூற்பா உணர்த்துகிறது. பாலைநிலம் பற்றி தொல்காப்பியர் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி இருந்தாலும் இளங்கோவடிகளே பாலை நில இலக்கணத்தைத் தெளிவாக உணர்த்துகிறார்.
குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் நல்ல தன்மைகளை இழந்து, பாலை நிலமாக மாறும் என்று பாலைநிலத்தின் இயல்பை சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையால் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”5
என்ற அடிகள் விளக்குகின்றன. குறுந்தொகையில் 90 பாடல்கள் பாலைத்திணைப் பாடல்களாகும். அவை.
7,11,12,15,16,20,22,27,28,30,
37,39,41,43,44,48,56,59,63,67,
71,77,79,84,104,124,130,131,135,137,
140,144,147,149,151,154,168,174,180,189,
192,207,209,211,213,215,216,218,224,229,
232,235,237,250,253,254,255,256,260,
262,266,267,273,274,277,278,281,282,283,
285,307,329,331,338,343,347,348,350,352,
356,363,369,378,380,383,388.390,395.396,398
பாலை நிலத்தில் வெம்மை மிகுதியினால் நீர்நிலைகள் வற்றி உலர்ந்தும், மரம் முதலியன தீய்ந்தும் உலர்ந்தும் பொலிவிழந்து காணப்படும். நிழலும் நீருமின்றி வெம்மையும் தனிமையும் உடையதாய் இருத்தலின் பாலை நிலம் இன்னா வைப்பு என்று கூறப்படும்.இதனை
“இன்னா வைப்பிற் சுரன்”6
என்று குறுந்தொகை உணர்த்துகிறது. நீரில்லாத வழியும், உலர்ந்த சுனையும், அறுசுனையும் பாலை நிலத்தின் நிலையைப் புலப்படுத்துகின்றன. நிழல் அடங்கி அற்றுப்போன சிறிதும் நீரில்லாத கடத்தற்கரிய பாலைநிலம் என்பதை
“நிழல் ஆன்று அவிந்த நீரில் ஆரிடை”7
என்று அறியமுடிகிறது. இத்தகைய பாலை நிலத்தும் மிக அருமையாகச் சில இடங்களில் மட்டும் சிறிதளவு நீர் சிறுபள்ளங்களில் தங்கியிருக்கும். அந்நீரும் மிகவும் கலங்கியும் மிக்க வெம்மையுற்றும் இருக்கும். இதனை
“அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் கலுழி”8
என்ற குறுந்தொகை அடிகள் உணர்த்துகின்றன.பள்ளத்தின் அருகிலுள்ள செடியின் மலர்கள் விழுந்து அழுகிப்போன சிறிதளவு நீரை
“குளவி மொய்த்த அழுகல் சின்னீர்”9
என்றும் அறிய முடிகிறது. இத்தகைய கொடிய பாலைநிலத்தில் வழிப்போவாரது பசியை நீக்க அறத்தைச் செய்யும் நெல்லி மரத்தின் அழகிய பசிய காய்கள் உதிர்ந்து கிடப்பதை,
“சுரந்தலைப் பட்ட நெல்லிஅம் பசுங்காய்”10
என்று குறுந்தொகை உணர்த்துகிது. பாலைநிலத்தில் வாழ்ந்தவர் எயினர் எனப்பட்டனர். அவர் தம் தொழில் ஆறலைத்து உண்ணலாகும். இவர்கள் வாழ்ந்த ஊர்கள் பறந்தலை, குறும்பு எனப்பெயர் பெற்றன. இவர்களுடைய தொழில் வழிப்பறி செய்வதும், பகைவருடைய கால்நடைகளைக் கவர்வதும் ஊர்களுக்குச் சென்று கொள்ளையடித்து வருவதுமாகும்.
இவர்தம் பறை சூறைகோட்பறையும், நிரைகோட் பறையுமாகும். இந்நிலத்துக்குரிய யாழ் பாலையாழ் ஆகும். பண் பஞ்சுரம் என்பதாகும். மரா, குரா, பாதிரி மலர்கள் இங்குச் சிறந்தவை. இருப்பை, ஓமை, உழிஞை, நெமை, பாலை, யா என்னும் மரங்கள் இங்குச் சிறந்தவை. இம்மக்கள் கொற்றவையை வழிபட்டனர்.
பாலை நிலத்தில் ஈந்தின் இலையால் வேய்ந்த குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையில் முடங்கிக் கிடந்தாள். எயிற்றியர் உளி போன்ற வாயினையுடைய கடப்பாரைகளால் கரம்பை நிலத்தைக் கிளறிப் புல்லரிசியைச் சேகரித்தனர். அவர்தம் குடிசைகளின் முன்புறத்தில் விளா மரங்கள் இருந்தன. அங்கு நிலத்தில் உரல் தோண்டப்பட்டிருந்தது. எயிற்றியர் அந்நிலவுரலில் தாம் சேர்த்துக்கொண்டு வந்த புல்லரிசியைச் சொரிந்து, குறிய உலக்கையால் குற்றினர்.
சிறிய அளவு நீரைக்கொண்ட கிணற்றிலிருந்து உவர்நீரை முகந்து உலை வைத்தனர். புல்லரிசிச் சோற்றைச் சமைத்தனர். அச்சோற்றை உப்புக்கண்டத்தோடு உண்டனர். தம்மை நாடி வந்த விருந்தினருக்குத் தேக்கிலையில் அவற்றைப் படைத்தனர்.இதனை,
“…………………………… நெடுங்கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்
………………….
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்
பைதீர் கரும்பொடு பதம்மிகப் பெறுகுவீர்”11
என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை உணர்த்துகிறது.
எயினரின் வறுமை தெளிவாகக் கூறப்படுகின்றது. எந்தத் தானியமும் இல்லாதநிலையில் புல்லரிசி எடுக்கப்பெறுகிறது. தண்ணீர் மிகக் குறைந்துள்ள கிணற்றில் உவரிநீர் எடுக்கப்பட்டு விளிம்பு உடைந்த பானையே பயன்படுத்தப்பெறுகிறது. இவ்வளவு வறுமையில் இருந்தாலும் விருந்தினருக்குத் தேக்கிலையில் வைத்து உணவைத்தருவர் என்பது அவர்களின் சிறந்த விருந்தோம்பலை உணர்த்துகிறது.
பாலை நிலத்தில் ஆறலைக்கள்வர் மறைந்து நின்று வழிப்போக்கரைத் துன்புறுத்தலும், கொலை புரிதலும், கொலை கண்டு மகிழ்தலும் வழக்கம். இதனால் தமிழ் மன்னர் எயினருள் தக்கவரைப் போர்வீரராக்கி நாடு காவல் பணியில் அமர்த்தினர். பாலை நில வழிகளில் குடிமக்களுக்குத் தீங்கு நேராமல் பார்ப்பதே அவரின் தலையாய கடமை. பாண்டி நாட்டுப் பாலை வழிகளில் காவல் செய்தவர் இளைஞர். வில்லேந்திய கையினர். குழையால் வேய்ந்த குடில்களில் வாழ்ந்தனர். தழை விரவின கண்ணியினை அணிந்தனர். கடிய சொற்களை உடையவர். வலிமை மிகுந்தவர் என்று மதுரைக்காஞ்சி உணர்த்துகிறது.இதனை,
“இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி
உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப”12
என்ற அடிகள் உணர்த்துகின்றன. ஆறலை கள்வர் பாலை நிலவழியே செல்லும் பாணரையோ கூத்தரையோ தாக்க முனைதலும் வழக்கம். அப்பொழுது அவர்கள் பாலை யாழை இசைத்து உருக்கமாகப் பாடுவார்கள். யாழோசையும் மிடற்றோசையும் வன்னெஞ்சராகிய ஆறலைக் கள்வர் மனத்தையும் கவரும். அவர்கள் தங்கள் கொலைக்கருவிகளையும் நெகிழ விட்டுத் தங்களை மறந்து நிற்பார்கள் என்று பொருநராற்றுப்படை உணர்த்துகிறது.இதனை,
“ஆறலை கள்வர் படைவிட வருளின்
மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை”13
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
பாலை நிலம்
வறண்ட முல்லை, குறிஞ்சி நிலங்களே பாலை நிலம் என உணர்த்தப்பட்டது. கடுமையான வெப்பக்காற்று அடித்தலால் வாகை நெற்றுக்கள் ஒலிக்கின்றன. இது போன்ற மூங்கில் நிறைந்த பாலை நிலத்தில் வாகை நெற்றுக்கள் ஒலிக்கின்றன. அவ்வொலி ஆரியக்கூத்து ஆடும்போது ஏற்படும் ஒலிபோல உள்ளது என்று குறுந்தொகை உணர்த்துவதை,
“ஆரியர் கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம்”14
என்ற அடிகள் உணர்த்துகின்றன. வாகை மரத்தின் கிளையில் விளைந்த நெற்றின் குலை ஆடும் கூத்தியர் அடிக்க ஒலியுண்டாக்கும் பறை போல கேட்பார் வியக்கும் வண்ணம் ஒலியுண்டாக்கும். இதனை,
“………………………. குறுங்கால் உழிஞ்சில்
தாறுசினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக்கோற் பறையின் ஐயென ஒலிக்கும்”15
என்ற அடிகள் உணர்த்துகின்றன. கடுமையான வெப்பக்காற்று அடித்தலால் வாகை நெற்றுக்கள் ஒலிப்பதை,
“வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்”16
என்ற அடிகள் உணர்த்துகின்றன. மேற்கண்ட பாடல்களில் இருந்து பாலை நிலத்தில் வாகை மரத்தின் நெற்றுக்கள் ஒலிப்பதைக் கண்டு வழியில் செல்வோர் அச்சமடைவர் என்றும், உழிஞ்சில் என்று வாகை மரம் அழைக்கப்பட்டதையும் உணர முடிகிறது.
பாலை நிலச்சூழல் மேற்கண்ட பாடலின் மூலம் உணரப்படுகிறது. வெப்பமான நிலம், நீரற்ற சுனை மூங்கில் நெல்லும் பொரியுமளவுக்கு வெப்பமான பாறை வழிச்செல்வோர் யாரும் இல்லததால் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கள்வர்களும் இறந்தனர் என்பதால் அங்கிருந்த வெப்பத்தின் மிகுதி புலப்படுகிறது.
பாலை நில வெம்மை மட்டும் கொடுமையானது அல்ல. வழியும் துன்பத்தைத் தரக்கூடியது. ஞாயிறு சுடும். பக்க மலைகளிலுள்ள கல்லொழுங்கு பட்ட பாதைகளில் பதித்து வைத்தது போன்ற கூர்மையான நுனியுடைய பருக்கைக்கற்கள் தீட்டப்பட்டது போன்று கூர்முனையைத் தோற்றுவித்து வழிச்செல்வாரின் விரல் நுனிகளைச் சிதைக்கும் தன்மையுடையவை. இதனை
“………………..கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர
பரல்முரம்பு ஆகிய பயமில் கானம்”17
என்ற அடிகள் உணர்த்துகின்றன. இது போன்ற மலை வழிகளில் புலியானது தனக்குரிய உணவைத் திணித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கல் முழைஞ்சுகளில் வழிச்செல்லும் மக்கள் தங்குவர். அங்கு மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்கும் என்று குறுந்தொகை உணர்த்துகிறது.இதனை,
“ஒலிகழை நிவந்த ஓங்கு மலைச்சாரல்
புலிபுகா உறுத்த புலவுநாறு கல்லளை
ஆறுசெல் மாக்கள் சேக்கும்
கோடுயர் பிறங்கல் மலை”18
என்ற அடிகள் உணர்த்துகின்றன. இவ்வழிகளில் விலங்குகள் உண்ண உணவில்லாமல் வருந்தும். மரங்களின் பட்டை உலர்ந்து இருக்கும். அப்பட்டையை யானை போன்ற விலங்குகள் உண்ணும். பாலை நிலத்தில் வளர்ந்துள்ள யா மரங்களின் முழு அடிமரத்தின் பொரிந்த அரைப்பட்டை உருவும்படித் தம் கொம்பினால் குத்தி வலிமை பொருந்திய பெரிய கைகளால் யானை அதனை வளைக்கும்.
இரைதேடி வாடிய நடையையும் சிறிய கைகளையும் உடைய தன்னுடைய பெரிய சுற்றத்தின் மிகுந்த பசியை ஆண்யானை நீக்கும். இதனை,
“பொத்துஇல் காழ அத்த யாஅத்துப்
பொரிஅரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை”19
என்ற அடிகள் உணர்த்துகின்றன. யானைகளுக்கு உண்ண பசுமையான புற்கள் இல்லாததால் யா மரத்தின் பொரிந்த பட்டையை யானைகள் உண்ணும் வறண்ட பகுதியை இப்பாடல் உணர்த்துகிறது. யா என்பது பாலை நிலத்தில் உள்ள மர வகைகளில் ஒன்று. இம்மரத்தை,
“யா மரக்கிளவியும் பிடாவும் தளாவும்
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே”20
என்கிறார் தொல்காப்பியர். யா, பிடா, தளா என்ற என்ற மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிகுந்து வரும். யானைகளே நீரில்லாமல் வருந்தும்போது அங்குள்ள மக்கள் எவ்வாறு நீர் வேட்கையைத் தீர்த்துக்கொள்வர் என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை நீக்குகிறார் உருத்திரன் என்னும் குறுந்தொகைப்புலவர். பாலைநில மக்கள் உகாய் மரங்களின் மீது அமர்ந்து, அம்புகளை வில்லுடன் பிடித்திருப்பர். அவர்களுக்கு நீர்வேட்கை ஏற்பட்டால் உகாய் மரத்தின் பட்டையை மென்று அவ்வேட்கையைத் தணித்துக்கொள்வர்.இதனை,
“புறவுப் புறத்தன்ன புன்கால் உகாத்து
………………………………………………………
விடுகணை வில்லொடு பற்றி கோடிவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும்”21
என்ற அடிகள் உணர்த்துகின்றன. உகாய் மரத்தின் பட்டைக்கு நீர் வேட்கையைத் தணிக்கும் ஆற்றல் உண்டு என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. இம்மரத்தை
“புல் அரை உகாஅய்” 22
என்று குறுந்தொகை உணர்த்துகிறது. இதைப் போன்று வழிச்செல்வோருக்காகக் காத்திருக்கும் மறவர் அவர்களைக் கொல்வர். இறந்து பட்ட உடல்கள் நாற்றமடிக்கும். அவற்றை உண்பதற்காகப் பருந்துகள் காத்திருக்கும். இதனை,
“கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடைப் பருந்து பார்த்திருக்கும்”23
என்ற அடிகள் உணர்த்துகின்றன. இறந்து போன உடல்கள் ஆங்காங்கே குவியல் குவியலாகத் தோன்றும். அக்குவியலின் நிழலில் யானைகள் தங்கும் என்று குறுந்தொகை உணர்த்துகிறது.
இறந்து பட்டோரின் குவியல் (பதுக்கை)நிழலில் யானை தங்கும் என்பது குவியலின் பரப்பை உணர்த்துகிறது. அவ்வழியில் செல்வோரை கள்வர்கள் கொன்று குவிப்பர் என்று அறியலாம்.
வணிகர்கள் கோடைக்காலத்தில் வணிகத்திற்காகச் செல்லும்போது இது போன்ற துன்பங்களைச் சந்தித்தனர் என அறியமுடிகிறது. காட்டுத்தீயால் விலங்குகள் வருந்துவதையும் அறியமுடிகிறது.
நிலமானது நீரின்றி வற்றிப் போனது. நெடிய சுனைகளும் வற்றிப்போயின. குன்றில் இருந்த மரக்கிளைகள் பற்றி எரிந்தன. கோடை நீடிய அகன்ற காட்டிடத்து ஞாயிற்றின் வெம்மை மிக்க கதிர்கள் சுடுதலால் மூங்கில்கள் வெப்பம் பொறுக்காது வெடித்துச் சிதறின. இதனை,
“நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்ப
குன்றுகோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை”24
என்ற அடிகள் உணர்த்துகின்றன. மேற்கண்டவற்றிலிருந்து பாலை நிலத்தின் தன்மையும், அங்குள்ள வெப்பமும் புலப்படுத்தப்பெறுகின்றது. ஞாயிற்றின் வெப்பம் பொறுக்காமல் வெடித்துச் சிதறின என்பதால் தீ எரிக்கும் அளவிற்கு ஞாயிற்றின் வெப்பம் இருந்தது என்பதை உணரலாம்.
தொகுப்புரை
சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்றது குறுந்தொகை. இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன. இந்நூலில் உள்ள 165 செய்யுள்களே பிற நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை.
இந்நூலை முதலில் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைக் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர். ஆண்டு 1915. இராமரத்தினம் ,உ.வே.சா, ரா.இராகவையங்கார், பொ.வே.சோமசுந்தரனார், மு.சண்முகம்பிள்ளை போன்றோரின் குறுந்தொகைப் பதிப்புகள் போற்றத்தக்கன.
உ.வே.சா குறுந்தொகை உரை என்ற பெயரில் 1937இல் இதனைப் பதிப்பித்தார். இதில் நூலாராய்ச்சி என்னும் பகுதி குறிக்கத்தக்கது. மு.சண்முகம்பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்பில் தொடரடைவும், சொல்லடைவும் ஆய்வாளர்களுக்குப் பயன் தரக்கூடியவை. குறுந்தொகையில் பாலைத்திணைப் பாடல்கள் 90 உள்ளன.
பாலைத்திணையை ஐந்திணைகளுள் நடுவில் வைத்துத் தொல்காப்பியம் கூறுகிறது. பாலை நிலம் இன்னா வைப்பு என்று கூறப்படும். பாலை நில இலக்கணத்தை சிலம்பு கூறுகிறது. பாலை நிலத்தில் சிறிதளவு நீர் மட்டுமே இருக்கும்.சிறிதளவு நீரை மக்கள் முறையாகப் பகுத்து உண்டனர். பாலை நிலத்தில் செல்வோர் நீர் வேட்கையால் நெல்லிக்காய்களை உண்பர். தலைவன் விடலை, காளை என்றும், தலைவி எயிற்றி என்றும் ஊர் பறந்தலை, குறும்பு என்றும் பெயர் பெற்றன. தெய்வம் கொற்றவை ஆகும். பாலை, இருப்பை, ஓமை முதலியவை மரங்கள். தொழில் ஆறலைத்தல்.
எறும்புப்புற்றில் இருந்து புல்லரிசியை எடுத்து உணவு சமைத்து தேக்கிலையில் வைத்து வழிச்செல்வோருக்கு அளிக்கும் கொடை உள்ளம் கொண்டவர்கள். தயிருடன் கூட்டிய கூழ், உடும்பின் இறைச்சி போன்றவையும் இவர்களால் விருந்தினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எயின வீரர்கள் நாடுகாக்கும் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வீரர்கள் தழை விரவிய கண்ணியினை அணிந்தவர். வலிமை உடையவர். ஆறலைக்கள்வர் இரங்கும்படி யாழை, இசைத்துப் பாடலைப் பாடுவர் பாணர், பொருநர் போன்றோர்.
பாலை நிலத்தில் வாகை நெற்றுக்கள் ஏற்படுத்தும் ஒலி வழிச்செல்வோரை அஞ்ச வைக்கும். உழிஞ்சில் என்றும் வாகை மரம் அழைக்கப்பட்டது. ஞாயிறு சுடும் மலைகளின் பாதைகளில் உள்ள பருக்கைக்கற்களும் கால்களுக்குத் துன்பத்தைத் தரும்.மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ஒலி கேட்போரை அச்சமடையச் செய்யும். விலங்குகள் புற்கள் இல்லாததால் மரங்களின் பட்டையை உரித்து உண்ணும்.
ஆறலைக் கள்வர்கள் நீர்வேட்கை ஏற்பட்டால் உகாய் மரத்தின் பட்டையை மென்று நீர்வேட்கையைத் தணித்துக் கொள்வர். கள்வர்கள் கொன்ற வழிப்போக்கர்களின் உடல்கள் நாற்றமடித்துக் கிடக்கும். அவ்வுடல்களை உண்பதற்காக பருந்துகள் காத்திருக்கும். அக்குவியல்களின் நிழலில் யானை தங்கும்.
மூங்கில் மரங்களால் ஏற்பட்ட தீயைக்கண்டு அஞ்சிய வணிகர்கள் வழியைத் தவறவிட்டு அலறுவர். தீயைக்கண்டு விலங்குகளும் அஞ்சி ஓடும். எனவே பாலை நிலம் வாழ்வதற்கும், வழிச்செல்வதற்கும் கடுமையான நிலம் என்பதை உணர முடிகிறது.
சான்றாதாரங்கள்
1.தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா – 3
2. மேலது அகத்திணையியல் நூற்பா- 9
3. மேலது அகத்திணையியல் நூற்பா- 10
4. மேலது புறத்திணையியல் நூற்பா- 18
5. சிலப்பதிகாரம் காதை 11 அடி – 64
6. குறுந்தொகை பா- 314
7. மேலது பா – 356
8.மேலது பா- 356
9.மேலது பா- 57
10. மேலது பா- 209
11. பெரும்பாணாற்றுப்படை- 93
12.மதுரைக்காஞ்சி- 310
13.பொருநராற்றுப்படை- 21
14.குறுந்தொகை பா- 7
15.அகநானூறு பா- 151
16.குறுந்தொகை பா – 39
17. அகநானூறு பா- 5
18. குறுந்தொகை பா- 253
19.மேலது பா- 255
20.தொல் எழுத்து நூ – 229
21.குறுந்தொகை பா- 274
22.மேலது பா- 363
23.மேலது பா- 283
24. அகநானூறு பா- 295
ம. அபிஷேக்
(22MTA1001)
முதுகலை இரண்டாம் ஆண்டு
தமிழ்இலக்கியம்
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
காளிப்பட்டி, நாமக்கல் 637 501