முன்னுரை
செம்மொழி என்று போற்றப்படும் பெருமைக்குரியது உயர் தனிச்செம்மொழியான நம் கன்னித் தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரைநூல், பதினெண் மேற்கணக்கு நூல்கள் (18), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (18) சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் ஆகிய 41 நூல்களும் செவ்வியல் இலக்கியங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் சமூகவியல் வெளிப்பாடுகள் எனும் தலைப்பின் கீழ் சங்ககால ஒளவையாரின் படைப்பாளுமையையும் அவரது பாடல்களில் காணப்படும் சமூகவியல் வெளிப்பாடுகளையும் கண்டுகாட்ட விழைகிறது இக்கட்டுரை.
படைப்பாளுமை
படைப்பாற்றல் என்பது மனிதர்கள் எல்லோரிடத்திலும் காணப்படுகின்ற பொதுமைப்பண்பு அல்ல. அது ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படுகின்ற ஒரு தனிப்பண்பு. அதிலும் இலக்கியப் படைப்பாற்றல் என்பது கற்றுத்துறைபோகிய சான்றோருள்ளும் மிகமிகச் சிலரிடம் மட்டுமே காணப்படுகின்ற பெருமைக்குரிய ஆளுமைப்பண்பாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் பாடல்கள் பாடியுள்ளோர் 40 பெண்பாற்புலவர்களே. அவர்களுள் ஈடும் இணையும் அற்றவராக முதன்மையானவராகக் கருதப்படுபவர் பாட்டுக்கு அரசியாகிய நம் ஒளவைப் பெருமாட்டியார்.
சங்ககால ஒளவையார்
கடைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒளவையார் பாணர் மரபினைச் சார்ந்தவர். நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு. அருணாசலம் ஆறு ஒளையார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். டாக்டர் மு.வ தம் இலக்கிய வரலாற்றில் பல ஒளவையார்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறார். எனினும் சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையாரும் இடைக்காலமாகிய சோழர் காலத்தில் நீதிநூல்களைப் பாடிய ஒளவையாருமே மன்னரும் மக்களும் மதித்துப்போற்றும் புலமையும் சான்றாண்மையும் மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் தமிழண்ணல். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைப்பாடிப் பெரும் புகழ் பெற்றவர் இடைக்காலமாகிய சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரே எனினும் காலந்தோறும் ஒளவையின் புகழ் விளங்கத் தொடங்கிவைத்தவர் சங்ககால ஒளவையாரே ஆவார். சங்க காலத்தில் புகழ் பெற்ற பெண்பாற் புலவராக இவர் திகழ்ந்தமையால் பிற்காலத்தில் தமிழகத்தில் சிறப்புடைய பெண்பாற்புலவர் பலர் ஒளவை என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.
ஓளவையின் படைப்புகள்
ஓளவையார் பாடியவையாகச் சங்க இலக்கியத்தில் 59 பாடல்கள் உள்ளன. இவற்றில் 26 அகப்பாடல்கள், 33 புறப்பாடல்கள். 26 அகப்பாடல்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும் நற்றிணையில் 7 பாடல்களும் அகநானூற்றில் 4 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. புறப்பாடல்கள் 33 இல் 22 பாடல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியவை. 3 பாடல்கள் அவர்மகன் பொகுட்டெழினியைப் பற்றியவை.
ஒருபாடல் நாஞ்சில் வள்ளுவனைப் பற்றியது. ஒரு பாடல் மூவேந்தர்களைப் பற்றியது. மீதி ஆறு பாடல்களும் பொதுவியல் திணையில் அமைந்த பாடல்களாகும்.
சீற்றத்தில் மலர்ந்த சிறந்த கவிதை
ஒளவை அதியமானைக் காணச் செல்கிறார். அதியமான் ஒளவைக்கு உடனே பரிசில் தராமல் காலம் தாழ்த்துகிறான். இதனால் ஒளவைக்குக் கோபம் வருகிறது. சினமுற்ற ஒளவையார் வாயில் காப்போனை விளித்துப் பாடிய பாடல் அழகான பாட்டுச்சித்திரமாய் விளங்குகிறது. ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்: ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு: சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்றெல்லாம் சுட்டப்படுகின்ற சினத்திலும் அழகான, ஆழமான பொருள்நிறைந்த கவிதையை ஒளவை பாடியிருப்பது அவரது புலமைத்திறனுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.
“வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
………………………………………
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செல்லினும் அத்திசைச்சோறே! (புறம் – 306)
என்கிறார் ஒளவையார்
வாயிற்காவலனே தமது அறிவாலும், புலமைத்திறத்தாலும் வள்ளல்களின் செவிகளில் சிறந்த வாய்மொழிகளை விதைத்துத் தாம் நினைத்த பரிசினை நினைத்தவாறே அறுவடை செய்கின்ற புலவர்கள் பசியால் இறந்தனர் என்று சொல்லும்படியான வறுமையான உலகம் அல்ல இது. அறிவும், புகழும் உடையோர் எத்திசைக்குச் சென்றாலும் அவர்களுக்கு உணவும் கிடைக்கும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நான் இப்பொழுதே என் இசைக்கருவிகளையும், முட்டுக்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறேன். விறகுவெட்டி கோடரியைத் தோளில் போட்டுக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் சென்றால் அவனுக்கு மரத்துக்கா பஞ்சம்? எனப்பாடியுள்ளார். இதில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவரது வாழ்க்கை முறை புலப்படுகிறது. பரிசில் பெற வந்திருக்கிறோமே? இப்படிப்பாடினால் இனி இவனிடமோ இவனைப்போன்ற வள்ளல்களிடமோ பரிசில் கிடைக்குமோ? கிடைக்காதோ என அஞ்சாது துணிந்து பாடிய இவரது அஞ்சாமை நம்மை வியக்கவைக்கிறது. சினமுற்றபோதும் சிறந்த பாட்டியற்றும் திறமும் சினத்தைச் சாதுர்யமாக வெளிப்படுத்திய விதமும் இவரது படைப்பாளுமைக்குச் சான்றாக அமைகிறது.
உவமைத் திறமெனும் புலமைத்திறம்
நுட்பமான உவமைகளால் தான் சொல்லவந்த கருத்துக்களை விளக்குவதில் ஒளவை தன்னிகரற்றவராக விளங்கினார் என்பதை அவரது பாடல்களில் காணப்படும் உவமைகளின் மூலம் அறியலாம். அதியமான் பரிசில் தராது காலம் தாழ்த்தியது தன்னை அவனருகே மேலும் சில நாள் தங்க வைக்கத்தான் என்பதை உணர்ந்து கொண்ட ஒளவையார்
“ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
………………………………………..
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டாதாயினும் களிறுதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யாகாதே! (புறம். 101) எனப் பாடியுள்ளார்.
அதியமான் பரிசில் தரும் காலம் நீட்டினும் நீட்டாதாயினும் பரிசில் தருவது உறுதி என்பதைக் களிறு தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத்ததுவது பொய்யாகாதே எனும் உவமையால் விளக்குகிறார். அதாவது யானைக்குக் கவள உணவை உருட்டிப் பாகன் போடும் போது யானை ஆவென வாயைத் திறந்து ஒரு பருக்கை சிந்தாமல் சிதறாமல் ஏற்றுக்கொள்ளும். அதுபோல பரிசிலும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாகக் கிடைக்கும் என நுட்பமான உவமையால் விளக்குவது ஒளவையின் படைப்பாளுமைத்திறன் அன்றி வேறில்லை.
“யாழொடும் கொள்ள பொழுதொடும் புணரா
பொருளறிவாரா வாயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான்அஞ்சி நீ அருளன் மாறே” (புறம் – 92) என்ற பாடலில்
குழந்தைகளின் மழலைப் பேச்சு யாழிசையை ஒத்தனவா? காலத்தொடு பொருந்தியனவா? பொருள் விளங்குவனவா? ஆயினும் தந்தை தன் பிள்ளைகளின் மீதுகொண்ட அன்பினாலும் பாசத்தினாலும் அவை போற்றப்படுகின்றன. அதுபோல என் பாடல்களும் நீ மதிப்பதனால்தான் மதிப்பினைப் பெறுகின்றன என உவமைகூறி தனக்கும் அஞ்சிக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவினைப்போன்ற நெருக்கமும் பாசமும் உண்மையும் உடையது என்பதை உவமையால் விளக்கும்திறன் பாராட்டுதற்குரியது.
நன்றியில் மலர்ந்த நயமிகு கவிதைகள்
நன்றி மறவா நெஞ்சினராகிய ஒளவையார் அதியமான், பெருஞ்சேரல் இரும்பொறையுடன் கடும்போர் செய்தபோது அவனது வலிமையைப் பாராட்டி அவனை ஊக்கமூட்டியப் பாடல்கள் அவரது நன்றி உணர்வைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
போரிலே அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபோது அவர் பாடிய
“சிறியகட்பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட்பெறினே
யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
…………………………………………….
…………………………………………….
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப் பாடுநரும் இல்லை என்ற பாடலில் பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை (புறம் – 235) எனப்புனைவியல் ஏதுமின்றி தன் மனநிலையை ஒளிப்படமாக்கியிருப்பது அவரது படைப்பாளுமைத் திறனை வெளிப்படுத்துகிறது.
ஒளவையின் புறப்பாடல்கள் பல இருப்பினும் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நடக்க இருந்த போரை நிறுத்திய பாடல் சிறந்ததொரு பாடலாகும். தொண்டைமானைப் புகழ்வது போல இகழ்ந்து, அதியமான் போரில் வல்லவன் என்பதை நிறுவியவர் ஒளவையார்.
“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி” (புறம். 95) என்ற அடிகளால் இதனை உயரலாம். வெறும் பாடல்கள் இயற்றுவதோடு தம்முடைய கடமை முடிந்து விட்டதென எண்ணாமல், செயல்கள் மூலமும் தமக்குள்ள நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார் ஒளவையார்.
ஓளவை புறப்பாடல் புலவர் எனப்போற்றப்பட்டாலும் அவர் அகப்பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அறத்தொடுநிற்றலை அழியாக்கவியாக்கியவர்
அறத்தொடு நிற்றல் குறித்துப் பலர் பல பாடல்கள் பாடியுள்ளபோதும் ஒளவைபாடிய
“அகவன் மகளே! அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே! பாடுபாட்டே
இன்னும் பாடுக பாட்டே
அவர் நல்நெடுங்குன்றம் பாடிய பாட்டே” (குறுந்-23)
என கட்டுவிச்சியை அழைத்துப்பாடிய பாடல் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் என்றும் போற்றும்படி அமைந்துள்ளது.
வரைவிட ஆற்றாத தலைவியின் நிலையை
“முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஒரேன் யானும் ஒர்பெற்றி மேலிட்டு
ஆஅ! ஒல்எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந் – 28)
என சொற்சித்திரமாக்கியுள்ளார்.
அகப்பாடல்களில் புறச்செய்திகள்
அகப்பாடல்களைப் பாடிய ஒளவையார் அவற்றில் சில புறச்செய்திகளையும் கூறுகிறார்.
“வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போல” (குறுந்.80)
“………… நெடுந்தேர் அஞ்சி
கொன்முனை யிரவூர் போல” (குறுந்.91)
என்பன அவற்றில் சில. ஒளவையின் பரத்தைக் கூற்றுப் பாடல்களும் இங்குக் குறிக்கத்தக்கன.
முடிவுரை:
உவமைத்திறத்தாலும் சொல்வீச்சாலும் நடைநயத்தாலும் கருத்துச்செறிவாலும் ஒளவையின் பாடல்கள் காலத்தை வென்று வாழும் தகுதியைப் பெற்றுள்ளன. கவிதைகள் பாடுவதோடு நின்றுவிடாமல் தன்னுடைய செயலாலும் ஆளுமையை வெளிப்படுத்தியவர் ஒளவையார் என்று உணர முடிகிறது.
ஒளவையின் பாடல்களில் இருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் ஆய்வு செய்யலாம்.
1. ஒளவையின் அகப்பாடல்களில் பரத்தை.
2. ஒளவையின் அகப்பாடல்களில் புறச்செய்திகள்.
3. ஒளவையின் புறப்பாடல்களில் அதியமான்.
4. ஒளவையின் பாடல்களில் உவமைகள்.
5. ஒளவையின் பாடல்களில் போர்ச்செய்திகள். என்பன அவற்றில் சில.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த.மஞ்சுளாதேவி
தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலைக் கல்லூரி,
முசிறி.