உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள் – முனைவர் நா.சாரதாமணி

உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள் - முனைவர் நா.சாரதாமணி

      நீங்கள் பிறந்துள்ள இந்தத் தேசத்தில் அநேகமான செல்வங்களும் கனிமங்களும் உள்ளன. இது ஒரு தன்னிறைவு பெற்ற சிறப்பான நாடு. அவ்வாறு இருக்கின்றபொழுது ஏன் பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குகின்றது. இந்த நிலையின்மீது கவனம் செலுத்தி மாற்றுபவர் யார்? உங்கள் வீட்டிலுள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியாக இருந்தால் உங்களால் அதனை பார்த்தும் பாராதவாறு இருக்க இயலுமா? பசியைப் போக்கும் பொறுப்பு உங்களது அல்லவா!
  
         இதனைப் போலவே இந்தத் தேசமும். இங்கு ஒருவன் பசிக்காக மற்றவரிடம் கையேந்துகின்றான் என்றால் இந்நாட்டில் உள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும். அவ்வாறு கையேந்தி பிச்சை கேட்பவரின் உழைப்பை ஆக்கத்தை ஆக்கிரமித்தவர் யார்? குழந்தைகள், இளையவயது உடையவர், வயதானவர் என்று வயதில் பாரபட்சமில்லாமல் பிச்சை எடுக்கின்றனர். உறவினர் அல்லாதவர், உடல் ஊனமுற்றவர், நடக்க இயலாத நோயுற்ற முதியவர் என்று இவர்களுக்கு ஆதரவு தந்து உணவு கொடுத்துப் பாதுகாக்க நமது நாட்டில் இடம் இல்லையா? அல்லது நாடு பஞ்சத்தில் உள்ளதா? சிந்தனை செய்யுங்கள்!

       நான் கேட்ட கைபேசியில் செய்தி ஒன்று, ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள். ஏழ்மையான குடும்பம். அந்த ஏழைத்தாய் தான்பட்டினி இருந்து தன்குழந்தைகளை நன்றாக வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். வருடங்கள் சென்றன. பேரன் பேத்திகள் என்று வந்து விட்டனர். இந்த ஏழை தாய்க்கும் வயதாகிவிட்டது. அந்த வயதான தாயாரை யார் பார்த்துக்கொள்வது? என்னால் முடியாது. அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒவ்வொரு மகளும் போட்டிப்போட அந்தத்தாய் வீட்டை விட்டுத் தெருவுக்கு பிச்சை எடுப்பதற்காக வந்துவிட்டாள்.

நல்லதோர் வீணை
      
மனிதப்பிறப்பு என்பது நல்ல அழகான வீணையாகும். இந்தப் பூமியில் எத்தனையோ உயிர்கள் பிறப்பெடுத்துள்ளன.  ஆனால் நாம் மட்டுமே மனிதனாகத் தோற்றம் பெற்றுள்ளோம். இந்த மனித உடலையும் உயிரையும் கொண்டு ஆயிரமாயிரம் ஆக்கங்களை விளைவிக்கலாம் என்று பாரதியார் கூறியுள்ளார்.

“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ”
  
      என்று சிவசக்தியைப் பார்த்துக் கேட்கின்றார் பாரதி. இந்த மனிதப்பிறப்பில் நாம் வாழும் சமூகத்தில் யாசிக்கும் நிலையில் மனிதர்களுக்காகச் செய்வன ஆயிரம் உள்ளன. அவர்களுக்காகப் பொருளைப் பெற்றுத்தருவது போன்ற பல கடமைகள் உள்ளன. அவற்றை எல்லாம் விடுத்து இந்த மனிதப்பிறவியை வீணாக்காதீர்! சிந்தனை செய்யுங்கள்!!
தன்உயிரை தானமாக்கி; வேண்டுதல் வைத்த இளைஞர் (உண்மை நிகழ்வு)
  
   இளைஞர் ஒருவர் நன்றாகப் படித்துத் தனக்கு ஒருவேலை வேண்டும் என்று அயராது பாடுபட்டார். இரவுபகல் பாராமல் படித்தார். ஆனால் அவர் படிப்பை முடித்துத் பத்து வருடங்களாக வேலை இல்லாமல் மன வேதனைக்கு உள்ளனார். பின்னர் தனது முப்பத்திரெண்டாவது வயதில் இறைவனிடம் சென்று வேண்டிக்கொண்டார். எனக்கு அரசாங்க வங்கியில் வேலை ஒன்று கிடைத்து விட்டால் என் உயிரையே உனக்கு தருகின்றேன் என்று வேண்டிக்கொண்டார். பின்னர் தேர்வுகள் எழுதி ஆறு மாதத்தில் அவருக்கு மும்பையில் ஒரு வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் (உதவி மேலாளர்) பதவி கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞர் மும்பை சென்று வேலையில் சேர்ந்துவிட்டார். சேர்ந்து பதினைந்து நாட்கள் சென்றன. இறைவனுக்கு கொடுத்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால், ஓடிவரும் ரயிலின் முன்னே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் நாகர்கோவிலைச் சார்ந்தவர். இந்தச் செய்தியை வீடியோவாகப் பார்த்தவுடன் மனம் மிகவும் சங்கடப்பட்டது.
        
ஒரு மேலாளர்  பதவி வகிக்கும்  தகுதியுடைய ஒருவர் இவ்வாறு செய்து கொள்வது சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ள இயலாது. மனிதர்களுக்கு தகுந்தவேலை கிடைக்கவில்லை என்றால் மனவேதனை இருக்கலாம். ஆனால் மனஅழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்னவோ! ஒரு இளைஞர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அதற்கு காரணங்களாகப் பலவற்றைக் கூறலாம். அவரை வளர்த்த பெற்றோர்கள், கல்வியைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், முரணாகப் பேசும் உறவினர்கள், சமுதாயம் இவற்றையெல்லாம் கூறலாம். இவை அந்த இளைஞர்களுக்கு வாழ்வில் சவால்களைத் தன்னம்பிக்கையை தரவில்லையா? அல்லது முன்னேறவிடாமல் இளைஞர்களைத் தடுக்கும் சக்தி ஏதேனும் செயல்படுகிறதா? மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு நம் சமுதாயத்தில் இடமில்லையா? யோசியுங்கள்!

தந்தையை தெருவில் விட்ட அவலம்
       
தான்மேலே ஏறி வருவதற்கு காரணமாக இருந்த ஏணியை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டதைப் போன்ற பல நிகழ்வுகள் சமுதாயத்தில் நடந்து கொண்டிரக்கின்றன. ஒரு குடும்பத்தில் தாய்தந்தைக்கு ஒரு பெண்குழந்தை. அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கி வெளிநாட்டில் சென்று பணிபுரியும் அளவிற்கு வளர்த்துவிட்டனர். அங்கு சென்றதும் அவள் தானேதிருமணம் செய்துகொண்டாள். ஆண்டுகள் பல கடந்தன. பெற்றோருக்கு இளமைமாறி முதுமையும் வந்தது. அவளின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பணத்தை மட்டும் அனுப்பி வைத்தாள் அந்த அருமை மகள். இறுதிக்கடன்களை முடித்தார் தந்தை. மேலும் பலஆண்டுகள் அவளிடமிருந்து பணமும் போன்கால்கள் மட்டுமே வந்தன. இவ்வாறு சிலவருடங்கள் சென்றன. அந்தத் தந்தையும் தள்ளாட தொடங்கிவிட்டார். அவரால் தனக்கான உணவைத் தானேசெய்து கொள்ள இயலவில்லை. மற்றவரின் உதவி தேவைப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் மகள் குடும்பத்துடன் தன் சொந்தஊருக்கு வந்தாள். தந்தையின் சொந்தத்திற்காக அவள் வரவில்லை. அந்த அழகான வீட்டை விற்றுப்போக வந்தாள். தன் தந்தையைத் தன்னுடன் வந்துவிடுமாறும் இந்த வீட்டை விற்று விடலாம் என்றும் வாதாடினாள். தந்தை மறுப்பு கூறவே, அவரின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாள், இந்த வீடு என் தாத்தாவின் சொத்து. எனக்கே உரிமை என்றாள். இந்த அவலமான நிலை ஏற்பட வளர்ப்பு காரணமா? அல்லது சமுதாயம் காரணமா? சிந்தியுங்கள்!

குழந்தைகளின் ஏழ்மை நிலை
        
ஆதரவற்ற குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்கும் அவலநிலை வேறு நாடுகளில் உள்ளதோ இல்லையோ? நம் நாட்டில் பல இடங்களில் உள்ளன. ஒருமுறை காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து அம்மா பசிக்கிறது ஏதேனும் கொடுங்கள் என்று கையை நீட்டினான். உடனே நான் டிக்கெட் எடுப்பதற்காக வைத்திருந்த சில்லரைகளில் ஒன்றை பார்த்துக் கொண்டே, “தம்பி நீ படிக்கச் செல்ல வில்லையா?” என்றேன். என் அருகில் இருந்த தோழி, “அவனுக்கு பணம் தரவேண்டாம்” என்று கூற, அவன் என்கையைப் பிடித்துக்கொண்டு அழுதான். “என் கையில் மிகக்குறைந்த சில்லறைகளே உள்ளன. இவ்வாறு சென்றால் என்னை அடிப்பார்கள்” என்று கூறி என்கையில் இருந்த ஒரு நாணயத்தைப் பெற்றுக்கொண்டு மின்னலாக ஓடிவிட்டான்.

இன்னொரு சிறுவன் அவ்வாறுதான் சில புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அழுதான். அவன் முகத்தில் அவ்வளவு பயம் கலந்த கவலை ரேகைகள். பின்னர்தான் தோழி கூறினார், இந்தக் குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாதவர். அவர்களைச் சில சமூகவிரோதிகள் பிடித்துக்கொண்டு மிரட்டி ஊனம் செய்து இவ்வாறு பிச்சை எடுக்க விடுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு மக்கள்தரும் சில்லரைகளைத் தலைவன் என்ற ஒருவன் எடுத்துக் கொள்வான்.  எனவே எப்போதுமே இந்தக் குழந்தைகள் பசியுடன் இருப்பார்கள். பிளாட்பாரத்தில் கொசுக்கடியில் உறங்குவார்கள். இதுதான் இவர்களின் வாழ்க்கை என்று கூறினார்.

ஒரு குழந்தை கையேந்துவது பெற்றோரிடமே!
        
ஒரு குழந்தை கை ஏந்துவது தன் பெற்றோரிடமும் கடவுளிடமும் தானே! தவிர கண்ணில் பார்த்தவரிடமெல்லாம் சென்று கையேந்துவது எவ்வகையில் நியாயம். எவனோ ஒருவன் வங்கியில் செலுத்தும் பணத்தைக் கடனாகப்பெற்றுப் பல கோடிகளை உல்லாசமாகச் செலவழித்துவிட்டு தான்பெரிய மனிதன் என்று கூறிக்கொண்டே நாடுகளைச் சுற்றும் மனிதர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். ஒருவேளை உணவுகூட உண்ணாமல் உயிர்வாழும் குழந்தைகளும் நம் நாட்டில்தான் வாழ்கின்றார்கள். என்ன ஒரு அவலநிலை பாருங்கள்! மனிதர்களின் மனதில் சுயநலம் பெருகிவிட்டது  தனது குடும்பம், குழந்தை என்ற சுயநலம். அவர்கள் எல்லா சுகங்களும் பெற்று நன்றாக வாழ்ந்தால் போதும் என்று அந்தச் சுயநலமே இதற்கு காரணம்.

சுயநலம் சாதிப்பது என்ன?
     
சமுதாயத்தில் சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலம் என்ன? அவர்களின் மனதில் இந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை ஊட்டி மீட்டெடுப்பவர் யார்? பசியுடன் பிச்சை எடுக்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு வீட்டில் சென்று மனதில் ஒருசலனமும் இல்லாமல் வயிறுநிறைய உணவை உண்டுவிட்டு நிம்மதியாக உறங்குகிறோமே! இதைவிட சுயநலத்திற்கு  உதாரணம் வேறு உண்டா? இந்நிலையைச் சிறிதாவது மாற்ற முயற்சி எடுத்து இருப்போமா? யோசனையாவது செய்து இருப்போமா? குழந்தைகள் என்பவர்கள் அடுத்து நம்நாட்டை காக்கபோகும் முதுகெலும்புகள். அவர்களை இந்த நிலையில் வைத்திருக்கும் நாம் எதை சாதிப்பதற்காகச் சுயநலத்துடன் வாழ்கிறோம்? வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். எதற்காக  என் வாழ்க்கையில் முன்னேற்றம் வரவேண்டும். சமுதாயத்தில் இந்த அவலத்தை நீக்கவேண்டும் என்ற ஒரு தர்மமான குறிக்கோள் இருக்க வேண்டாமா? யோசியுங்கள்!

மனித வாழ்க்கை என்பது யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உயர்ந்தவன்  தாழ்ந்த நிலைக்கு வந்து விடுவான். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவலாம். எப்போதுமே உங்களின் வேலை, வீடு என்று தங்களின் நலன் கருதியே செயல்படாதீர்கள். உங்களைச் சுற்றி எவ்வளவு துயரங்கள் பசி பட்டினிகள் நிறைந்துள்ளன என்பதை சிறிது பார்வையைப் பரவவிடுங்கள். முடிந்தவரை தேசம் பசிப்பிணி இல்லாத நாடாக மாறவேண்டும் என்று யோசனை செய்து முயலுங்கள். அவ்வாறு முயன்றால் இந்த உலக ஆற்றல்கள் எல்லாம் துணையாக நிற்கும் என்பதை நம்புங்கள்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்

முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

Leave a Reply