வேற்றுமை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை என்றால் என்ன?
           

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும்.

(உ.ம்)                         கபிலன் பாராட்டினார்.
                                     கபிலனைப் பாராட்டினர்.
          
        முதல் சொற்றொடரில் பாராட்டியவர் கபிலன் எனப் பொருள் தருகிறது. இரண்டாவது சொற்றொடரில் ‘ஐ’ எழுத்தைச் சேர்த்த பிறகு பாராட்டப்பட்டவன் கபிலன் எனும் பொருளில் முழுமையாக வேறுபடுகிறது.

இதையே வேற்றுமை என்கிறோம். ‘ஐ’ என்பது இங்கு ‘வேற்றுமை உருபு’ எனப்படுகிறது.

பெயர்ச் சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் இடைச் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன.

வேற்றுமை – வகை பிரித்தல் எனலாம்.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதன் அடிப்படையில் வேற்றுமையை எட்டு வகைப்படுத்துவர். அவை


1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)

2. இரண்டாம் வேற்றுமை

3. மூன்றாம் வேற்றுமை

4. நான்காம் வேற்றுமை

5. ஐந்தாம் வேற்றுமை

6. ஆறாம் வேற்றுமை

7. ஏழாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

1.முதல் வேற்றுமை
           

பெயர்ச்சொல் இயல்பாக வந்து எழுவாயாக நின்று, பயனிலையைக் கொண்டு முடிவது ‘முதல் வேற்றுமை` எனப்படும். இதனை ‘எழுவாய் வேற்றுமை’ எனவும் கூறுவர்.

(உம்) தமிழ்ச் செல்வன் பம்பரம் விளையாடினான்.
தமிழ்ச் செல்வன் தலைவர்.
தமிழ்ச் செல்வன் யார்?
மேற்கண்ட தொடர்களில் தமிழ்ச் செல்வன் என்பது இயல்பான பெயராய் நிற்கிறது பயனிலை கொண்டு முடிகிறது. எனவே இது முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை  எனப்படுகிறது.


முதல் வேற்றுமைக்கு வேற்றுமை உருபு கிடையாது


2. இரண்டாம் வேற்றுமை
           

ஒரு பெயர்ச் சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை ‘செயப்படுபொருள் வேற்றுமை’ என்றும் வழங்குவர்.

(உம்) மாடு பயிரை மேய்ந்தது.
         
   இத்தொடரிலுள்ள பயிர் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபை ஏற்றுச் செயப்படுபொருளாக வேறுபடுகின்றது. இவ்வாறு பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படுபொளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
           

ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் ஆறு வகையினவாக இரண்டாம் வேற்றுமை அமையும்.

உதாரணம்
1.அழகன் சிலையைச் செய்தான் – ஆக்கல்
2.அதியன் பகைவரைக் கொன்றான் – அழித்தல்
3.தேன்மொழி ஊரை அடைந்தாள் – அடைதல்
4.கண்ணன் சினத்தை விடுத்தான் – நீத்தல்
5.எழிலன் காளையைப் போன்றவன் – ஒத்தல்
6.கார்மேகம் செல்வத்தை உடையவன் –  உடைமை.

3.மூன்றாம் வேற்றுமை

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

மரம் வாளால் அறுபட்டது.

ஆசிரியரொடு மாணவன் வந்தான்.

தாயோடு மகளும் வந்தாள்.

தந்தையுடன் மகனும் வந்தான்.
 

           இத்தொடர்களில் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகிய உருபுகள் வந்துள்ளன. இவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.

‘உடன்’ என்பது பேச்சு வழக்கில் பயன்படும் சொல் உருபு ஆகும்.
 
           இவை பெயர்ச் சொல்லின் பொருளைக் கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும், உடனிகழ்ச்சிப் பொருளாகவும் வேறுபடுத்துகின்றன.

கருவிப்பொருள்
           
தமிழால் வாழ்ந்தான்  – வாழ்வதற்குத் தமிழ் கருவியாக இருந்தது என்பதை விளக்குகிறது.           
அறத்தான் வருவதே இன்பம் – வருவதற்கு அறமே கருவி என்பதை இத்தொடர் உணர்த்துகிறது.
          
  ‘இச்செயலுக்கு இது கருவியாக இருந்தது’ என்பதை விளக்குவதற்காகப் பெயர்ச் சொற்களுடன் ஆல், ஆன் என்னும் உருபுகள் இணைந்துள்ளன. இதுவே கருவிப் பொருளில் அமைந்த மூன்றாம் வேற்றுமையாகும்.
கருத்தாப் பொருள்
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
           
கல்லணை கட்ட கரிகாலன் கருத்தாவாக இருந்தான் என்பதை கரிகாலன் என்னும் சொல்லோடு ‘ஆல்’ உருபு சேர்ந்து உணர்த்துகிறது. எனவே இது கருத்தாப் பொருள் ஆகும்.

கருத்தாப் பொருள் இருவகைப்படும்.
1. ஏவுதற் கருத்தா
2. இயற்றுதற் கருத்தா
1.ஏவுதற் கருத்தா
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
         
   கல்லணையைக் கரிகாலன் தாமே கட்டவில்லை. உரிய பணியாட்களை ஏவி கல்லணையைக் கட்டி முடித்தான் என்பது இதன் பொருள். எனவே கரிகாலன் என்பது ‘ஏவுதற் கருத்தாட் ஆவார்.

2. இயற்றுதற் கருத்தா
தச்சரால் கட்டில் செய்யப்பட்டது
           
தச்சர் தாமே முயன்று கருவிகளைக் கொண்டு கட்டிலைச் செய்து முடித்துள்ளது விளங்குகிறது எனவே ‘தச்சர்’ இயற்றுதல் கருத்தா ஆவார்.
உடனிகழ்ச்சிப் பொருள்
           
உருபுகள், பெயர்ச்சொல்லின் பொருளை, உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டினால் அது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.

கடிதத்தொடு பணமும் வந்தது.
           
இத்தொடரில் உள்ள ‘ஒடு’ என்னும் உருபு கடிதமும், பணமும் உடன் வந்ததை உணர்த்துகிறது.

தலைவரோடு தொண்டரும் வந்தனர்.
           
இத்தொடரில் உள்ள ‘ஓடு’ என்னும் உருபு இருவரும் இணைந்து வந்தனர் எனப் பொருள் தருகிறது. இவ்வாறு ஒடு, ஓடு என்னும் உருபுகள் பெயர்ச் சொல்லின் பொருளை உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டுவதால் ‘உடனிகழ்ச்சிப் பொருள்’ எனப்படும்.
 
சொல்லுருபு
           
வேற்றுமை உருபுகள் தவிர, சில சொற்களும் வேற்றுமைக்கு உருபுகளாக அமைவதுண்டு. அதுவே ‘சொல்லுருபு’ என அழைக்கப்படுகின்றது.

ஊசி கொண்டு தைத்தான்.
இடி மின்னலுடன் மழை பெய்தது.
           
இத்தொடர்களில் ‘கொண்டு’, ‘உடன்’ என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.


4.நான்காம் வேற்றுமை

தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள்.
           
தாய் என்னும் பெயர்ச்சொல் ‘கு` என்னும் உருபையேற்று, பொருள் வேறுபாட்டை உணர்த்தி வருகிறது. இதுவே நான்காம் வேற்றுமையாகும்.

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’
           

இது கோடற் பொருளை உணர்த்துகிறது. (கொடுப்பதை ஏற்றுக் கொள்வது ‘கோடல்’ ஆகும்)
           
நான்காம் வேற்றுமை உணர்த்தும் கோடற் பொருளானது கொடை, பகை, நேர்ச்சி, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என ஏழு வகைப்படும்.

உதாரணம்
மன்னன் புலவருக்குப் பரிசளித்தான்  – கொடை

புகைத்தல் மனிதனுக்குப் பகை – பகை

பாரிக்கு நண்பர் கபிலர்  – நேர்ச்சி (நட்பு)

கண்ணனுக்கு அணிகலன் கண்ணோட்டம்  – தகுதி

தயிருக்குப் பால் வாங்கினான் – அதுவாதல்

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டனர்  – பொருட்டு

வளவனுக்குத் தங்கை வளர்மதி – முறை

சொல்லுருபுகள்
பணத்திற்காகத் தீயவை செய்யேல்
தலைவர் பொருட்டுச் செயலாளர் பேசினார்.
           
இவற்றில் ஆக. பொருட்டு என்பவை நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்.


5. ஐந்தாம் வேற்றுமை

பண்பாட்டில் சிறந்தது தமிழ்நாடு.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
           
இத்தொடர்களில் பண்பாடு, ஒழுக்கம் என்னும் சொற்களின் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துகின்றன. இது ஐந்தாம் வேற்றுமை ஆகும்.


ஐந்தாம் வேற்றுமை உருபுகள் – ‘இல்’, ‘இன்’


இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது (காரணம்) என்னும் நான்கு பொருளை உணர்த்தி வரும்.

தலையின் இழிந்த மயிர் – நீங்கல்
கடலின் விரிந்த புகழுடையர் ஒப்பு
பழனியின் கிழக்கு மதுரை – எல்லை
வீணை வாசிப்பதில் வல்லவன் – ஏது.
சொல்லுருபுகள்
அன்பு ஊரிலிருந்து வந்தான்
வெண்ணிலா மேகத்தினின்று வெளிப்பட்டது.
மன்னனைவிடக் கற்றோரே சிறப்புடையர்.
தமிழைக் காட்டிலும் இனிமையான மொழியுண்டோ!
 
           இத்தொடர்களிலுள்ள இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பவை ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்


6. ஆறாம் வேற்றுமை

மன்னது கை

எனாது கை        – அரிதாக வரும்

என கை

            இத்தொடர்களில் வரும் அது, ஆது, அ என்னும் உருபுகள் பெயர்ச்சொல்லைச் சேர்ந்து நின்று பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன. இது ஆறாம் வேற்றுமையாகும்.
          
  இது கிழமைப் பொருளில் வரும் – (கிழமை -உரிமை)


ஆறாம் வேற்றுமை உருபுகள் – அது, ஆது, அ


சொல்லுருபுகள்
நண்பருடைய இல்லம்.
ஆசிரியருடைய இருக்கை.
           
இத்தொடர்களிலுள்ள உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய செல்லுருபாகும்.


7. ஏழாம் வேற்றுமை

கிளையின்கண் அமர்ந்துள்ள பறவை.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
பிறரிடம் பகை கொள்ளாதே.
தலைமேலுள்ள சுமை.
வீட்டில் சோலை உள்ளது.
           
மேற்கண்ட தொடர்களில் கிளை, பெட்டி, மாணவர்கள், தலை வீடு போன்ற பெயர்ச்சொற்களுடன் கண், உள், இடம், மேல், இல் என்னும் உருபுகள் சேர்ந்து பொருள் வேறுபாட்டைத் தருகின்றன. இதுவே ஏழாம் வேற்றுமை ஆகும்.
           

ஏழாம் வேற்றுமை உருபுகள்: இல், சண், இடம், உள், மேல் இந்த ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்தும்.
          

  ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ ஒப்புப் பொருளிலும் ஏதுப் பொருளிலும் வரும். ஏழாம் வேற்றுமையில் இடப் பொருளில் மட்டும் வரும். ‘இல்’ உருபை இட முடிவைக் கொண்டு வேற்றுமைப் பொருளை அறிய வேண்டும்.

(எ.கா.) பணம் பெட்டியில் இருக்கிறது – ஏழாம் வேற்றுமை.
  
          பணத்தைப் பெட்டியிலிருந்து எடுத்தான் – நீங்கல் பொருள் – ஐந்தாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை
          

  பெயர்ச்சொல் விளித்தல் பொருளில் வேறுபட்டு வருவது எட்டாம் வேற்றுமை ஆகும் இதனை ‘விளி வேற்றுமை’ என்றும் அழைப்பர்.(விளித்தல் – அழைத்தல்)
                                      கண்ணா வா!
           
இத்தொடரில் ‘கண்ணன்’ என்ற சொல்லின் இறுதி எழுத்து கெட்டு அயல் (முந்தைய) எழுத்து நீண்டு, அழைத்தல் பொருளைத் தருகிறது. எனவே இது எட்டாம் வேற்றுமை ஆகும்.

படர்க்கையில் உள்ள பொருளை முன்னிலைப் பொருளாக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது.


எட்டாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.

வேற்றுமை உருபுகளின் வகைகள்
   

                                                                  உருபுகள்                                      வேற்றுமை

குமரன் பாடினான்                    உருபு இல்லை              முதல் வேற்றுமை (எழுவாய்)

குமரனைக் கண்டேன்                             ஐ                        இரண்டாம் வேற்றுமை

குமரனால் முடியும்                                   ஆல்                  மூன்றாம் வேற்றுமை

குமரனுக்குக் கொடு                                கு                       நான்காம் வேற்றுமை

குமரனின் நல்லவன்                                இன்                 ஐந்தாம் வேற்றுமை

குமரனது புத்தகம்                                    அது                  ஆறாம் வேற்றுமை
குமரன்
கண் உள்ளது                                             கண்                   ஏழாம் வேற்றுமை

குமரா! வா!                                 தனி உருபு இல்லை    எட்டாம் வேற்றுமை

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here