முல்லைக்கலியில் தொழில்கள்

இனியவை கற்றல்

முன்னுரை

            தொழில் என்பது ஒருவருடைய வாழ்வதாரத்திற்கும், பொருளாதார நிறைவுக்கும் வருமானம் ஈட்டக் கூடிய செயல் என்றும், ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றக் காரணிகளுள் மிகவும் இன்றியமையாத ஒன்று என்றும் கூறுவர். தொழிலே மனித மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. ஒருவர் செய்யும் தொழிலைக் கொண்டே அவர் சமூகத்தின் நிலை அறுதியிடப்படுகின்றது.

            சங்ககாலத்தில் பெரும்பாலும் இயற்கைச் சார்ந்த தொழில்களையே செய்து வந்தனர். இயற்கையோடு வாழ்ந்த சங்க மனிதன் அதற்கேற்றாற் போன்ற நிலப்பகுப்பையும், தொழிலையும் கையாண்டான். அதுமட்டுமல்லாது அன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபம் சிறப்புற்றிருந்ததைச் சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சங்ககாலத்தில் அனைத்தும் பண்டமாற்றுத் தொழில்களாகவே இருந்தன. ஒவ்வொரு நிலப்பகுதி மக்களும் தங்கள் பகுதியில் கிடைக்கும் மற்றும் விளைவிக்கும் பொருட்களை மற்ற நிலத்தில் கொடுத்து அங்குத் தங்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பின் பெற்றுக்கொண்டான்.

“தனிமனிதத் தேவைதான் அவன் வாழும் சமுதாயத் தேவையாகின்றது. இந்த அடிப்படையில் அரும்பி மலர்ந்து பயன் தருவதே ஒவ்வொரு தொழிலுமாகும்.”1

என்ற கருத்து தொழிலின் தன்மையைப் பதிவு செய்துள்ளது. உழவுத் தொழில், நெசவுத்தொழில், வணிகம், போர்த்தொழில், குயவுத்தொழில், தச்சுத் தொழில், கொல்லர் தொழில், மீன்பிடி தொழில், மீன் விற்றல், உப்பு விளைவித்தல், வேட்டையிடுதல், காவல், சிற்பம், கட்டிடம், கோயில் தொழில், ஆடுமாடு மேய்த்தல் போன்ற பல தொழில்கள் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்தன. அதனால் சமுதாயமும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருந்தது. அவ்வகையில் முல்லை நிலமக்களின் தொழில்கள் குறித்து இப்பகுதி விளக்குகின்றது.

மேய்ச்சல் தொழில்

            காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலமாகும். தலைவனுக்காகத் தலைவியும், தலைவிக்காகத் தலைவனும் காத்திருத்தலை உரிப்பொருளாக கொண்ட  இந்நிலமக்களின் முதன்மையான தொழில் மேய்ச்சல் ஆகும். கால்நடை வளர்ப்பில் சிறந்த முல்லை நிலமக்கள் அதன் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வாழ்க்கையை நடத்தினர். மேய்ச்சலுக்கென்று நிலங்களை உருவாக்கிக் கொண்டனர். தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு அருகிலேயே மேய்ச்சல் நிலங்களைத் தேர்ந்தெடுத்தனர் முல்லைநில ஆயர்கள். இவர்களை இடையர்கள், கோவலர்கள் என்ற சொற்களாலும் அழைத்தனர். ஆடு, மாடுகளை மேய்த்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தினர் முல்லை நில மக்கள்.

“சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

வறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய

கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர் தாயர் என்போள்”2

என்ற முல்லைப்பாட்டு அடிகள் கோவலர் ஆநிரைகளை மேய்த்து விட்டுத் திரும்பும் காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

            முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடை மேய்ச்சலுக்குச் செல்லும் போது, பால் கறந்த கலங்களை வைக்கப் பயன்படும் உரியினையும், சிறிய கத்தி மற்றும் சூட்டுக் கோல்களுடன் கூடிய சுருங்கிய பையையும், கொன்றைக் காயால் உருவாக்கிய இனிய இசையைத் தரும் நிழலினையும் கொண்டு சென்றதை,

“கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்

இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி

ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்

வழூஉச் சொற் கோவலர் தத்தம் இனநிரை

பொழுதொடு தோன்றிய கார்நனை வியன் புலத்தார்”3

என்ற அடிகளானது பதிவு செய்துள்ளன. மேய்ச்சலுக்குச் செல்லும் போது சூட்டுக் கோல், ஞெழிகோல் கொண்டு சென்றதற்குக் காரணம் குளிரை விரட்டத் தீ மூட்டுவதற்கும், சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி சுட்டுத் தின்பதற்கும் ஆகும். கழு கொண்டு சென்றதற்குக் காரணம் வேட்டையாடுதலாகும். உறி கொண்டு சென்றதற்குக் காரணம் கொண்டு செல்லும் பொருட்களைப் பாதுகாக்க வேண்டியும், காட்டில் கிடைக்கும் சிறுசிறு பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வரவும் ஆகும். குழலோசை இனிமை கருதியும், ஆக்கள் திசைமாறி செல்லாமலிருக்கவும், பிறவிலங்குகளிடமிருந்து ஆக்களைக் காக்கவும் பொருட்டு மேய்ச்சலில் பயன்படுத்துகின்றனர்.

            ஆயர் ஆக்களை (ஆநிரைகளை) ஊருக்கு அடுத்துள்ள மேய்ச்சல் நிலங்களில் மேயவிடுவர். காலையில் சென்று  மாலையில் வீடுதிரும்பும் ஆயர்கள் பசுக்கள் மேயும் இடத்திற்கே பால் கறக்கும் கலங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை,

“கலந்தொடுயாஞ் செல்வும் நாடிப் புலந்தும்”4

என்ற அடியானது பதிவு செய்துள்ளது. ஆநிரைகளை மேய்க்கும் போது அவற்றைப் பாதுகாக்கும் விதமாகவும் அவற்றிற்குத் தேவையான தழைகளை மரங்களிலிருந்து ஒடித்துத் தரவும் கோல்களை ஆயர்கள் பயன்படுத்தினர். இதனை,

“மேயும் நிரைமுன்னர்க் கோல் ஊன்றி நின்றாய்”5

என்ற அடியானது வெளிப்படுத்தியுள்ளனர்.

            ஆயர்கள் தம் மனைக்கு அருகிலேயே பிறர் செல்வதற்கு அரிய இடத்தில் பயிர்த் தொழில் செய்தனர். பயிர்த் தொழில் செய்த இடத்திற்கு ஆநிரைகளைக் கன்றுடன் ஓட்டிச் சென்று மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளனர். இதனை,

“பாங்கரும் பாட்டங்கால் கன்றோடு செல்வேம் எம்”6

என்ற அடியானது விளக்கியுள்ளது. இதன்வழி ஆயர்களின் மேய்ச்சல் சிறப்பினை அறிய முடிகின்றது.

பால், மோர், தயிர் முதலிய பொருட்களை விற்றல்

            கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சலை முதன்மையான தொழிலாகக் கொண்ட முல்லை நில ஆயர்கள் அதன் மூலம் கிடைக்கும் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் போன்றவற்றை வேற்றூர் சென்று விற்றுத் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்று வந்தனர். சங்ககாலத்தில் பண்ட மாற்று முறையே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

            பசுவிலிருந்து கறக்கும் பாலை நொதிக்கச் செய்வதன் மூலம் தயிரும் தயிரைக் கடைந்து வெண்ணெயும், தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு எஞ்சிய நீர்மப் பொருள் மோராகவும், வெண்ணெயை உருக்கும் போது நெய்யும் கிடைக்கிறது. பாலில் இவ்வளவு பொருட்கள் இருப்பதை அன்றே அறிந்த தமிழன் இதை அத்துணையையும் தன்னுடைய வாழ்வில் பயன்படுத்தியுள்ளான். அதனை முல்லைக் கலி தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆயமகள் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த செய்தியை,

“பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்”7

என்ற அடியானது பதிவு செய்துள்ளது.

            ஆயர் மகள் பாலிலிருந்து மோர் தயாரித்து அருகிலிருந்த ஊர்களுக்குச் சென்று விற்ற செய்தியை,

“……………..அளைமாறி யாம் வரும்

செல்வம் எம்கேள்வன் தருமோ?”8

என்ற அடியும்,

“அகலாங்கண் அளைமாறி, அலமந்து பெயருங்கால்”9

என்ற அடியும்

“அளைமாறிப் பெயர் தருவாய்! அறிதியோ”10

என்ற அடியும், பதிவு செய்துள்ளன. மேலும், பேரூர் மற்றும் சிற்றூரின் கண் தலையில் மோர்ப் பானையுடன் சென்று சத்தம் போட்டு அழைத்து ஆயமகள் மோர் விற்றதை,

“தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள்

பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்

மோரோடு வந்தார்………………………….”11

என்ற அடிகளானது வெளிப்படுத்தியுள்ளன. மேற்குறிப்பிட்ட பாடல்களின் வழி அளை என்ற பதத்திற்கு மோர் என்ற பொருளைப் பெற முடிகின்றது.

“அளைவிலை உணவின் கிளைஉடன் அருந்தி

நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமைநல் ஆன் கருநாகு பெறூஉம்”12

என்ற பெரும்பாணாற்றுப் படைகள் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கின்றது. இவ்வடிகள் பண்டமாற்றாக விற்ற மோருக்குப் பெற்ற நெல்லைக் கொண்டு வந்து சோறாக்கிக் தன்னுடைய சுற்றத்தார்களை உண்பிக்கச் செய்வாள். பின்பு வெண்ணெய் உருக்கிப் பெற்ற நெய்க்குப் பண்ட மாற்றாகப் பொன் கட்டிகளைப் பெறவிரும்பாமல், பால் தரும் எருமை நல்ல பசுக்கள் கரிய எருமைக் கன்றுகள் பெறுவாள் என்று பதிவு செய்துள்ளன. ஆயர்கள் பொன் பொருட்களை விரும்பாமல் ஆநிரைகளையே விரும்பியதை அறிய முடிகிறது.

வேளாண்மை (அ) உழவு

            முல்லைநில ஆயர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் மூலம்  கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மட்டும் தொழில் நிகழ்த்தவில்லை. உழவுத் தொழிலையும் செய்துள்ளனர். மனிதன் உயிர்வாழ இன்றியமையாதவைகளில் ஒன்று உணவு. இவ்வுணவானது வேளாண்மையின் மூலமே பெறப்படுகிறது. உழவுத்தொழிலே ஒரு நாட்டின் முதுகெலும்பாகும். உழவின்றி உயிரில்லை. ஒரு நாட்டில் உழவுத் தொழில் மேம்பட்டிருந்தால் செல்வம் மிகுந்த நாடு என்றும், உழவுத் தொழில் செழிப்பில்லையென்றால் செல்வ வளம் குறைந்த நாடு என்றும் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டே கூறுவர். அத்தகைய உழவுத் தொழிலைச் செய்யும் விவசாயியைக் கடவுளாக மதித்துப் போற்ற வேண்டும். தற்போது விவசாயம் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

            வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல்லானது, கொடை, ஈகை என்ற பொருளைத் தருகின்றது. நிலம் தரும் கொடையாதலால் இப்பெர் ஏற்பட்டிருக்கலாம்.

“வேளாண் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்னும் பொருளது என்பர். வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் கொண்டதாகும். வேளாண்மையைக் குறிக்கின்ற Sgriculture என்னும் ஆங்கிலச் சொல் Sgricultural என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. யபநச என்பது நிலம் என்றும் உரடவரசய என்பது பண்படுத்தல் என்றும் பொருள் தரும். எனவே நிலத்தைப் பண்படுத்தும் செயல்பாடு ‘யபசiஉரடவரசய’ (யபசiஉரடவரசந) என்று அழைக்கப்படலாயிற்று. மேலும் ‘உரடவரசய’ என்னும் சொல்லே பண்பாடு என்னும் செம்மைப் பொருளை ஏற்றது”13

என்ற கருத்தானது நிலத்தைத் திருத்தி செம்மைப்படுத்தி உழும் நிலையே வேளாண்மை எனப்பட்டது என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”14

என்ற குறள் உழவர்களின் சிறப்பினை எடுத்துரைக்கிறது.

            முல்லை நில உழவு முறை மற்ற நில உழவு முறையிலிருந்து வேறுபட்டது. இம்முல்லை நிலம் வித்தி வான் நோக்கும் புன்புலமாகும். அதனால், மழை பெய்ததும் ஈரம் காய்வதற்கு முன்னால் மிகவும் விரைந்து செயலாற்ற வேண்டியவர்களாக இவர்களின் உழவு முறை காணப்பட்டது. கார்காலத்தில் மழை பெய்தவுடன் அடிமண் மேலே வருமாறு ஒன்றாக உழுது வரகு, தினை, எள், அவரை முதலிய பயிர்களைக் கொல்லை உழவர்களாகிய முல்லை நில ஆயர்கள் பயிரிட்டனர். இவர்கள் நிரந்தரமான ஓர் இடத்திலேயே உழவை மேற்கொண்டனர். ஆயர்கள் தம் மனைக்கு அருகிலேயே பிறர் செல்வதற்கு அரிய இடத்தில் பயிர் தொழிலை மேற்கொண்டதை,

“பாங்கரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்யாம்”15

என்ற அடியானது பதிவு செய்துள்ளது. முல்லை நில மக்கள் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்தமையால், விளை நிலத்தை வீட்டின் அருகிலேயே உருவாக்கிக் கொண்டதை அறிய முடிகிறது.

முடிவுரை

          காடும் காடு சார்ந்த பகுதியை நிலமாகக் கொண்ட முல்லை நில ஆயர்கள் மேய்ச்சல் தொழிலில் சிறப்புற்று விளங்கினர். மேய்ச்சல்  நிலங்களை உழவு செய்யும் இடத்துக்கு அருகிலேயே அமைத்துக் கொண்டனர்.

          கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைத்த பால், தயிர், நெய், மோர், வெண்ணெய் போன்ற பொருட்களை விற்று வாழ்வாதாரங்களையும், பொருளாதாரங்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

          வீட்டின் அருகிலேயே நிலங்களை உருவாக்கி உழவு செய்தனர் என்பதை இயல்வழி அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.          வி.சி.சசிவல்லி, பண்டைத் தமிழரின் தொழில்கள், ப.316

2.          முல்லைப். 12-16

3.          கலி. 106:1-5

4.          மேலது, 116:16

5.          மேலது, 108:11

6.          மேலது, 116:1

7.          மேலது, 106:37

8.          மேலது, 106:44

9.          மேலது, 108:5

10.        மேலது, 108:26

11.        மேலது, 109:5-7

12.        பெரும்பாண். 163-165

13.        www.wikipedia.com

14.        குறள். 1033

15.        கலி. 116:1

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி சி.முத்துலட்சுமி

ஆய்வில் நிறைஞர் பட்டஆய்வாளர் (பகுதிநேரம்),

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி,நாமக்கல் – 637501.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here