மதுரைக்காஞ்சியில் நகரம்

மதுரைக்காஞ்சியில் நகரம்

புற இலக்கியம் கொடை, வீரம், கையறுநிலை, சுட்டி ஒருவர் பெயர் சொன்ன காதல், இனக்குழுத்தலைவர், குறுநில மன்னர், வேந்தர் உள்ளிட்ட பலவற்றையும் செல்கிறது. சீறூர்த் தலைவர், குறுநில மன்னர் அழிவின் மேல் வேந்தர்களின் எழுச்சியும் நகரங்களும் எழுகின்றன. மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் நகரங்களை முன்னிறுத்துபவை.

நகரம்

            வேந்தர்களின் அரண்மனைகள் நகரங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. நகரம் பல்வேறுபட்ட அமைச்சுகள், அறங்கூறவையம், படைகள், சமயக் குழுக்களால் அதிகாரமுடையதாக்கப்படுகிறது. தொழில் வினைஞர், வணிகர், கலைவினைஞர், பாடுதொழில் புரிவோர், புலவர் இரண்டாம் நிலையில் அமைகின்றனர். இனக்குழுக்கள், குறுநில மன்னர்கள் நானில எளியோரின் உழைப்பையும் உணவையும் செழும் நகரம் உறிஞ்சி எடுக்கிறது. இவ்வாறான நகரத்தையும் அதிகாரக் கட்டமைப்பையும், மதுரைக்காஞ்சி காட்டுகிறது.

சீறூர்த் தலைவனது முற்றமும் வேந்தனது அரண்மனையும்

            சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் பெருமை மட்டும் சங்க இலக்கியத்தில் விளக்கப்படவில்லை. எளிய குடிகள், இனக்குழுக்கள், சீறூர்த்தலைவர்களின் வாழ்வும் சித்திரிக்கப்பட்டுள்ளது. “சீறூர்த் தலைவனது முற்றம் கூளம் நிறைந்து துடைக்காதது. முஞ்ஞைக் கீரையும் முசுண்டைக் கொடியும் பம்பி வளர்ந்தது. நிழல் தருவதால் பந்தல் போடாமலேயே பலரும் தூங்கக்கூடியது. வேந்தனது முற்றம் காவல் நிறைந்த பெரிய அரண்மனை. மலைக் கூட்டத்தைக் போன்ற மாடமுடைய வீடு. சோழனது அரண்மனை பிறைச்சந்திரன் போல் சுண்ணாம்பால் செய்யப்பட்ட மாடம். விண்ணைத் தொடும் சுட்ட செங்கல்லால் ஓங்கி வளர்ந்த நீண்ட பெரிய அரண்மனை ஆகும்”. (கா.சுப்பிரமணியன்,1982,58-59).

அரண்மனை உருவாக்கம்

            பேரரசுகள் சிற்றரசுகளை அழித்து மேலெழுவன. பண்ட உற்பத்தியையும் வாணிபத்தையும் பேணுபவை. எளிய குடிகளின் உபரிகளை விரும்புபவை. அதிகாரத்தின் பொருட்டு மேல் கீழ்ப் பிரிவினையை மேற்கொள்பவை. பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பொருத்துபவை. வேந்தன் அரண்மனை என்ற பெருவெளியை உருவாக்குவதற்கான செல்வத்தைக் குடிகளிடமிருந்து பெறுகிறான். கொள்ளையிடப்பட்ட செல்வமும் உதவும்.

அரண்மனை அமைப்பு

            பேரரசைக் கொண்டு அதிகாரம் செலுத்தும் மன்னன் தன் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்கிறான். கோட்டை நெடுஞ்சுவர் முன் அகழி அமைகிறது. வளமுடைய நாட்டினை இழந்து பழம்பகையோடு போர் செய்ய வந்த மன்னர்கள் அகழிக்கே ஆற்றாது தோற்றோடுகின்றனர். ஆழ்ந்த நீர்நிலையைக் கொண்ட அகழியினை அரண்மனை கொண்டுள்ளது. மண்ணுற வாழ்ந்த மணிநீர்க்கிடங்கு (மதுரைக்காஞ்சி-351) அது. அவ்வரண்மனை வானுற ஓங்கிய பல கற்படைகளையும் மதிலையும் பழையதாகிய வலிநிலை பெற்ற தெய்வத்தையுடைய நெடிய நிலையினையும் நெய்யொழுகிக் கருகிய திண்ணிய கதவினையும் முகில் உலாவும் மலை போன்றுயர்ந்த மாடங்களையும் உடையது. வையை யாறு போன்று இடையறாது மக்களும் மாவும் வழங்காநின்ற வாயிலை உடையது. (மதுரைக்.352-356).

            புதுவருவாயும், கொழுவிய தசையும், உண்டமையாத சோறும், பருகி அமையாத கள்ளும், தின்று தின்று அமையாத தின்பண்டங்களும், நிலம் பொறுக்கவியலாப் பொருட்குவையும், இன்பந்தரும், அழகிய அவ்வரண்மனையிடத்தே ஆடல் மகளிர் இருந்தனர் (210-219).

புறநகர்ப்பகுதி

            பொருளாதாரத்தாலும் சமயத்தாலும் மேம்பட்ட குடிகள் அரசனை அண்டி வாழ்ந்தனர். மீன்சீவும் பாண்சேரி, முல்லையம்புறவு, இலைவேய் குடிசைகள், நனந்தலைத் தேயப்புரவிகளுடைய துறைமுகம், துணங்கையும் குரவையும் ஆடும் மகளிருடைய மணங்கமழ்சேரி, பெரும்பாணர் குடியிருப்புகள் போன்றவை வெண்மணல் திரள், கா, பொழில்சூழ் வையையாற்றை ஒட்டி அமைகின்றன. இலங்குவளை இருசேரிக் கட்குடி கொண்ட குடிப்பாக்கமும் உள்ளது (136-137) அதன் பின்னரே அகழி தொடங்குகிறது.

நகரக் குடியிருப்புகள்

            மதுரைக்காஞ்சியில் காட்டப்படும் நகரம் எளிய மக்கள் வாழும் ஊரிலிருந்து வேறுபட்டது. திருத்தமான ஒழுங்கில் அமைவது. யாறு கிடந்தாற்போன்ற அகல்நெடுந் தெருக்களில் பல்வேறு குழாத்து மக்கள் பேசு மொழிகளின் ஆரவாரம் கேட்கிறது. ஓவு கண்டன்ன இருபெரு அங்காடித் தொருக்களில் கொடிகள் பறக்கின்றன. கட்டுத்தறியைப் பெயர்க்கும் யானை, பறக்கும் புரவிகள், கள்ளுண்மறவர் படைகள் நிலை கொண்டுள்ளன. குளிர் மாட நிழலில் தீம் உணவு, சுண்ணம் – பசும்பாக்கு – வெற்றிலை விற்போர் உளர்.

            உயர்ந்த சிறகுகளை உடைய சீரிய தெருவில் இருக்கும் பொய்யறியா வாய்மொழியால் புகழ்நிறைந்த மாந்தர்கள் மதுரையில் (18-19) வாழ்கின்றனர். சிறகு என்பதற்குத் தெருவில் இருபுறத்துமுள்ள வீடுகளின் வரிசை என்று நச்சினார்க்கினியர் பொருள் உரைக்கிறார்.

            நகர மக்கள் பலவின்சுளை, தேமாவின் கனிகள், இலைக்கறிகள், கற்கண்டு, பெரிய இறைச்சி கலந்த சோறு, நிலத்தின் கீழ் வீழ் கிழங்கு, பாற்சோறு உண்கின்றனர். (527-535). வளப்பம் பொருந்திய பண்டங்களோடு தேவருலகம் போலப் பெரும் பெயர் பெற்ற மதுரை பொலிவுறுகிறது (687-699).          

பெருஞ்செல்வர் இல்லம்

            ஊண் கவலையற்ற செல்வப் பெருங்குடியினர் நகரில் வாழ்கின்றனர். தொய்யில் எழுதப்பட்ட சுணங்கு பிதிர்ந்த இளமுலைப் பெண்டிர் தம்மைக் கோலஞ் செய்து கொண்டு மெத்தென நடந்து தங்காதற் கொழுநரைக் கைதட்டி அழைத்துக் காமநுகர்தலையன்றி வேறொன்றையும் கல்லாத அவ்விளைஞரோடு மகிழ்ந்து புணரும்படி பல்வேறு செப்புகளில் தின்பண்டங்களையும் மலர்களையும் மனைகள் தோறும் ஏந்தி நிற்கின்றனர் (395-406). பெருநிதிக் கிழவரின் பெண்டிர் பூந்தொழில் செய் வளையணிந்து தெருவெல்லாம் மணம் கமழ ஒழுங்குபட்ட மாடத்தே நிலாமுற்றத்தின்கண் நின்றனர்.

அறங்கூறவையத்தாரும் பிறரும்

            குடிகளைக் காக்கும் இறைவன் வேந்தன். வேந்தனின் அதிகாரத்தைக் குலைக்கும் செயல்கள் அறமற்றவை. அறமற்றவை தண்டிக்கப்பட வேண்டும். துலாக்கோலை ஒத்த நடுவுநிலை உடைய அறங்கூறவையத்தார் ஒரு தெருவில் வாழ்கின்றனர். காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள் வாழும் தெரு, அறம் பிறழா வணிகர் உறையும் தெரு, ஒழுக்கத்தால் மேலாகிய நாற்பெருங்குழு வாழும் தெருக்கள் உள்ளன. ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு மக்கள் திண்ட நால்வேறு தெருக்கள் உள்ளன என்ற குறிப்புகளைக் காண இயலுகிறது. சத்திரியர், வணிகர், சூத்திரர் என்ற வருணப் பிரிவினையை நினைவூட்டும் ‘நால்வேறு தெரு’ என்ற தொடர் அமைகிறது. ஆயின் தீண்டாமை இல்லை. காலொடு கால் பொருந்துமாறு மக்கள் திரண்டுள்ளனர்.

சமயம்சார் குடிகள்

            வேந்தன் தன் அதிகாரத்தை மேம்படுத்த சமய மேலோரை அரவணைக்கிறான். மதுரைக்காஞ்சியின் இறுதியில் ‘வளப்பமுடைய மதுரையிடத்தே பல யாகங்களைச் செய்த உன் முன்னோராகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று வேள்வி செய்வாயாக’ (758-765) என்று பாடப்படுகிறான். வைதீகச் சார்புடைய வேள்வியை மேற்கொள்ள உரிமையுடன் புலவர் கேட்கிறார். மழுவான் நெடியோனை முதல்வனாக மாயோன் முருகன் போன்றோரைக் கொண்ட கோயில், புறங்காக்கும் பௌத்தப்பள்ளி, வேதம் பாடும் குன்று குயின்றன்ன அந்தணர்பள்ளி, செம்பாற் செய்தாலொத்த சுவர்களையுடைய அமண் பள்ளி ஆகியவை உள்ளன.

வரைவின் மகளிர் மனை

            நிலவுடைமையின் தோற்றத்தோடு பரத்தமையும் தோன்றுகிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆண்மையப் பாலியல் உணர்வுக்குரியவர்களாக வரைவின் மகளிர் அமைகின்றனர். பாதிப்புறும் அம்மகளிரே குற்றச்சாட்டுக்கும் ஆளாகின்றனர். ‘வெண்மலர் கொண்டையிற் முடித்துத் தொடிகள் விளங்கும்படி கைகளை வீசி நடந்து தெருவெல்லாம் மணம் கமழ மிகுநலம் எய்துகின்றனர்’. வரைவின் மகளிர் தம்மைக் கண்டோரை வருத்தி அவர் பொருளைக் கவர்கின்ற தன்மையுடையோர் யாழுடன் பொருந்திய மத்தள இசையில் மகிழ்ந்து கூத்தாடி – குவிந்த மணலில் ஆடி மணம் நாறுகின்ற தம்மில்லங்களில் விளையாடுகின்றனர். மதுரைக்காஞ்சியில் நானிலப்பகுதியில் பரத்தையர்களைக் காண இயலுவதில்லை. கொழுங்குடிச் செல்வர் வாழும் நகரத்தில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.

கண்படை கொண்ட கடிநகர் மதுரை

            நகரத்தில் இரவுகள் தூங்காது விழித்திருக்கின்றன. வணிகம் அல்லும் பகலும் நிகழ்கிறது. ‘வளிதரு வங்கத்தில் வந்த மரக்கலங்களிற் கொணர்ந்த பல்வேறு பண்டங்கள் இறங்குகின்ற பட்டினத்தில் ஒல்லென்ற ஓசை முழங்குகிறது (536-544). நெடிய கடையை அடைத்து மாதர் துயில்கின்றனர். பாகும் பருப்பும் கலந்த மாவினை விற்கும் வணிகர் தூங்கி விழுகின்றனர். கடல் போன்ற பாயலில் துயில் கொள்ளும் ஏனைய மாந்தர் இனிதே உறங்க நள்ளிரவில் துயிலாக் கண்ணையுடைய வலிய புலியைப்போல அஞ்சாத கோட்பாடுடைய ஊர்க்காப்பாளர் களவு நூலறிந்தோரால் புகழும் ஆண்மையுடையோராய் மழை நீரோடும் நள்ளிருளில் தெருக்களில் உலவுகின்றனர். தெய்வங்கள் செயலற்ற இருட்போதிலும் அஞ்சுதல் இன்றிச் செல்கின்றனர் மறவர்.

நகரில் குவியும் உபரிச் செல்வம்

            செழும் நகர அரண்மனையில் வாழும் மன்னனுக்கு அணுக்கமாக அறங்கூறும் அவையத்தார், காவிதி மாக்களாகிய அமைச்சர், பெருங்குடிச் செல்வர், படையணியினர், வணிகர் உறைகின்றனர். வேளாண் உற்பத்தியிலோ தொழிலிலோ ஈடுபடா இவர்கள் வறுமை வாய்ப்படவில்லை. புல்லும் வளரா இவ்வீதிகளுக்கு ஐவகை நிலங்களிலிருந்து கூலமும் நெல்லும் பிறவும் வந்தடைகின்றன.

            யானைகளையும் மறைக்கும் ஓங்கிய கதிர்களையுடைய கழனிகளில் (247) முற்றிய நெல்லை அறுக்கும் ஓசை மருத நிலத்தில் கேட்கிறது. கற்றரையில் வரகின் கரிய கதிர்கள், தோரை நெல், நெடுங்கால் ஐயவி, இஞ்சி, மஞ்சள், மிளகு குவிக்கப்பட்டுள்ளன (286-290), நெய்தல் நில ஒளியுடைய முத்துக்கள், தீம்புளி, வெள்ளுப்பு, உணங்கல் பிறர் நுகர்வுக்காகக் காத்திருக்கின்றன. உழைப்பினால் செல்வம் சேர்வதில்லை. உழைப்பவர் உயிர்வாழ மட்டுமே இயலும். உழைப்பவரிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் செழுங்குடி வசம் வருகின்றன. போரினாலும் கொள்ளையினாலும் அச்சுறுத்தலினாலும் அரண்மனை செல்வத்தைப் பெறும்.

            மதுரைக்காஞ்சியில் பாண்டியனின் போர்த்திறம் உற்சாகத்துடன் பாடப்படுகிறது. பகைவர் நிலத்தில் காவலுடைய பொழில்களை வெட்டி அழித்து வளங்குன்றா மருதநில வயல்களை நெருப்புண்ணச் செய்து நாடெல்லாம் காடாகவும் பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்கவும் ஊரெல்லாம் பாழாகவும் சான்றோர் அம்பலங்களில் பேய் மகளிர் குடியேறும்படியாகவும் வேந்தர் செயல்புரிகின்றனர். மாளிகைக் குதிர்கள், பகைவர் நாடு கெட்டுப் பாழாகின. பாண்டியனின் நன்னெறியைக் கேளாக் குடிகளின் (152-176) வாழ்வு அழிக்கப்பட்ட கொடுஞ்சித்திரத்தை மதுரைக்காஞ்சி தருகிறது.

மன்னர்களின் அழிவு

            குட்ட நாட்டு மன்னன், முதுவெள்ளிமலை வாழும் மன்னன் ஆகியோரைப் பாண்டிய நெடுஞ்செழியன் வெல்கிறான். தலையாலங்கானத்துப் போரில் இருபெருவேந்தரோடு வேளிர் சாய்கின்றனர். அழும்பில், மோகூர், சாலியூர் போன்ற இடங்களில் போர்த்தொழில் செய்கிறான் பாண்டியன்.

            கொழுவிய இறைச்சியையுடைய கொழுப்புடைய சோற்றினை உண்பாரும், புலால் கமழும் விற்படையுடையாரும் ஆரவாரத்தையுடைய சேரிகளையுடையாரும், தென்றிசைக் குறுநில மன்னருமாகிய பரதவர் என்ற யானைகளை அச்சுறுத்தி அடிமைப்படுத்துகிறான் (139-144). அவன் உழவு, வாணிகம் செய்யும் குடிகளும் நான்கு நிலங்களில் வாழ்வோரும் பழைமை கூறி ஏவலைக் கேட்கும்படி செய்பவன் (119-124). கள்ளுண்போர் உறையும் கொற்கையைக் கைக்கொள்ளுகிறான்.

துறைமுகப்பட்டினத்தை வெல்லுதல்

            பொருட்கள் வரவும் போகவும் துறைமுக வாணிபத்தை மேம்படுத்துகிறான். பொன்மலி விழுப்பண்டம் ஏற்றிக் கொணர்ந்து நன்றாக இறக்குதலைச் செய்யும் முகில் சூழ்ந்த மலைபோல் தோன்றும் பெரிய மரக்கலங்கள் நிற்கும் துறைமுகத்தோடு ஆழ்ந்த கடலாகிய அகழியினையும் கொண்ட நெல்லூரை வெல்கிறான் (75-88). கடலற்ற மதுரை மன்னனின் எல்லை கடற்கரைப்பட்டினம் வரை விரிகிறது.

            தலைநகரம் கொண்ட பேரரசுகள் செல்வத்தில் திளைப்பதற்கான வழிகளும் மாற்றாரை அச்சுறுத்தும் முறைகளும் மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளன. எளிய குடிகளின் குருதிப் பிசுபிசுப்பில் நகரம் பொலிகிறது. அத்தகைய முட்டாச் சிறப்பின் பட்டினத்தைப் புலவர் போற்றியுரைக்கின்றனர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.காசிமாரியப்பன்

தமிழ் இணைப் பேராசிரியர்,

பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 023.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here