மதிப்பீட்டு முறைத் திறனாய்வு | What is the Evaluation method performance

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு

      திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் இலக்கியத்தைப் பற்றிய முழு மதிப்பீட்டு நிலையை (Evaluation) அடியொற்றி அமைவது மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஓர் இலக்கியத்தை பகுத்தும், தொகுத்தும், விளக்கியும், ஆய்தற்கும் உளவியல் தன்மையையோ, சமுதாய உண்மையையோ, அளவிட்டுரைப்பதற்கும், அதனின் உண்மை நிலையை மதிப்பீடு செய்வதற்கும் இத்திறனாய்வு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

       அவற்றோடு மட்டுமல்லாமல், ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய உண்மையை ஆழமாகவும், திறம்படவும் ஆராய்வதற்கு மதிப்பீட்டு முறை இன்றியமையாதது ஆகிறது, மதிப்பீட்டு முறையில் இலக்கியத்தின் தரம், தகுதி. சிறப்பு, சீர்மை, பண்பு பற்றியக் கூறுகளும், இலக்கியத்தின் மதிப்பும் (Literary Value) விழுமிய நிலையில் மதிப்பீட்டுரைக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீட்டு சிலமுறையில் சில வகையான அளவுகோல்கள் மற்றும் வரையறைகள் காணப்படுகின்றன. அவை ‘சமுதாய மதிப்பு’ என்ற நிலையில் அமைந்துள்ளது. 

     இத்திறனாய்வு முறையானது திறனாய்வுக் கோட்பாட்டிற்கு ஒரு தூண்போல விளங்குகிறது என்கிறார் ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் (Principles of Literary Criticism) அவர்கள். அவரின் கூற்றுப்படி நோக்குகையில்,

1. மதிப்பு பற்றிய கணக்கீடு

2. தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடு

       இவை இரண்டும் மதிப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இரு தூண்களாக விளங்குகின்றன. சிறந்த இலக்கியம் எது என்பதற்கும், அல்லாத இலக்கியம் எது என்பதையும் கண்டறிய இவைப் பெரிதும் துணை செய்கின்றன.

      ‘சுடர்த்தொடீஇ கேளாய்’ – எனத் தொடங்கும் குறிஞ்சிக்கலி பாட்டில், ‘நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்’ – என்று தலைவி தான் காதலுற்ற தலைவனின் இயல்பினைத் தோழியிடம் சொல்லுமிடத்து,

1. தலைவியின் உளப்பாங்கு

2. தாயின் பரிவு

3. சமுதாய ஒழுக்கம்

       ஆகியவை இப்பாடலில் ஆழமாகவும், உண்மையாகவும், சொல்லப்பட்டிருப்பதற்கு காரணம், உள்ளடக்கம் பற்றி எழுந்த முதல்நிலை மதிப்பீட்டின் அடித்தளமான நிகழ்வே ஆகும். மதிப்பீட்டு முறைத் திறனாய்வில்

1. கதை

2. கதை சொல்கிற பாணி

3. நாடகப் பாங்கு

4.நடையியல் கூறுகள்

5.மெல்லிய உணர்வுகள்

         என இவை இலக்கிய முறையில் கவனம் சார்ந்தவையாக உள்ளன.

          திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here