மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

45.மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

விளிம்புநிலை மக்கள் என்பதற்குச், சாதி, செய்யும் தொழில், அரசியல் அதிகாரம், பாலியல்நிலை, சமூக மேட்டிமை, பொருளியல் நிலை, பண்பாட்டு ஆளுமை ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் அல்லது சமூகக் கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் மக்கள் என வரையறை செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.(2002:50), மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

இந்தியச்சூழலில் பெண்கள், தலித்துகள், மலைவாழ் மக்கள், விவசாயக்கூலிகள், நாடோடி மக்கள், கல்வி கற்கவியலாத மக்கள், மகளிர் எனக் குறிப்பிடலாம். மேட்டிமைக் குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் சமூக வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும் குறைந்த அளவு உணவு, குறைந்த அளவு உடை, குறைந்த அளவு கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினராக இவர்கள் உள்ளனர் எனலாம்.

விளிம்புநிலை ஆய்வின் அடிப்படையில் மணிமேகலையை அணுகுவது என்பது இன்றைய காலத்தின் தேவையாகும். மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் சாமானிய மக்களின் பதிவுகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ள தன்மையினை ஆராய்வதன் மூலம் புதிய பொருண்மைத் தளத்தில் மணிமேகலையை அறிந்து கொள்ளத் துணைபுரியும். மணிமேகலையில் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினைக் கீழ்க்கண்ட உட்தலைப்புகளில் காணலாம்.

கணிகையர் / பரத்தையர்:

            மணிமேகலை துறவு என்று பதிகத்தில் அழைக்கப்படும் சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் பல விளிம்புநிலை மாந்தர்களைப் பதிவு செய்துள்ளது.

            பெண்களும் மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகியோர் கணிகையர் குலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சமூக பழிப்புக்கு உள்ளானவர்கள்; மாதவி கோவலன் இறந்தவுடன் துறவு கொள்கிறாள்; மணிமேகலையும் கணிகையர் குலத்தொழிலைத் தொடரத் தம்மால் முடிந்தவரை போராடினாள்.

            மணிமேகலை, பிக்குணிக் கோலம் பூண்டு, பிச்சை ஏற்றதனைக் கேட்டுச் சித்திராபதி சீற்றம் கொண்டாள். கூத்தியர் மடந்தையாகிய நாடகக் கணிகையர்களிடம் வஞ்சினம் கூறும்போது,

“கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி,

மாதவி மாதவர் பள்ளியள் அடைந்தது,

நகுதக்கன்றே!” (7-9)

என்று கூறிக் காதலன் இறப்புக்கு பத்தினிப் பெண்கள் தீ புகுந்து மாள்வர்; ஆனால், மாதவியின் துறவுக்கோலம் அனைவரின் நகைப்பிற்க உரியது என்கிறாள். கணிகையர் குலத்துப் பெண்கள் பத்தினிப் பெண்கள் அல்லர்; பலரின் கைப்பொருளைப் பெற்று வாழும் வாழ்வுடையவர்கள் என்பதை,

“பத்தினிப் பெண்டிர் அல்லேம்;

பலர்தம் கைத்துண் வாழ்க்கை கடவியமன்றே!” (14-15)

என்கிறாள். மேலும், கணிகையர் தம் குலவொழுக்கம் குறித்து,

“பாண்மகண் பட்டுழிப் படூஉம் பான்மையில்

யாழினம் போலும் இயல்பினம்; அன்றியும்,

நறுந் தாதுண்டு நயனில் காலை

வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்;

வினையொழி காலைத்திருவின்செல்வி

அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்;

தாபதக் கோலம் தாங்கினம் என்பது

யாவரும் நகூஉம் இயல்பினதற்றே?” (16-24)

என்று கூறுகிறாள். பாண் மகன் இறந்து போனவிடத்துத், தான் பிறனொருவன் கைப்படும் யாழினத்தைப் போன்ற இயல்புடையவர்கள்; மணமுள்ள பூந்தாதினை உண்டு, வறிதான் மலரினைக் கைவிடும் வண்டினம் போன்றவர்கள் கணிகையர்கள் என்கிறாள். உதயகுமரனுக்காக, மணிமேகலையைக் கைப்பற்றிக் கொண்டு வருவேன் என்றும் அவள் தம் கையிலே இருக்கும் பிச்சைப் பாத்திரத்தினைப் (அமுதசுரபி) பிச்சை எடுத்துண்ணும் பிற மக்களின் கையில் தந்துவிட்டு மணிமேகலையைப் பொற்தேரில் அழைத்து வருவேன்; அவ்வாறு செய்யாது போனால், தலையிலே சுட்ட செங்கற்களைச் சுமந்து நாடக அரங்கினைச் சுற்றிவருவேன்; அதுதவிர, பழி சுமக்கும் குலமரபு கெட்டவள் ஆவேன்; அரங்கக் கூத்தியரின் வீட்டினுள் நுழையவே மாட்டேன் என்று வஞ்சினம் கூறினாள். (31-35) மேலும், மணிமேகலை குலமகள் அல்லள் என்பதைச் சித்திராபதி உதயகுமரனிடம் வற்புறுத்துகிறாள். இதனை,

“கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்

பெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லாள்;” (100-101) என வருகிறது.

            பரத்தையரின் இயல்புகள் இவை இவை என்பதைச் சித்திராபதியின் கூற்றில் வரும் அடிகள்:

“நாடவர் காண, நல்லரங்கு ஏறி,

ஆடலும், பாடலும் அழகும் காட்டிச்

கருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணைதூவச்

செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்

கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்

பண்டோர் மொழியிற் பயன்பல வாங்கி

வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்

பன்மயிற் பிணித்துப் படிற்றுரை அடக்குதல்

கோன்முறை யன்றோ குமரற்கு?” (103-110)

என்பதிலிருந்து பூவில் தேன் உண்ணும் வண்டினம் போன்றவர்கள் பரத்தையர்கள் என்பதைப் பெறலாம்.

            இங்கு கணிகையர் குலத்திலிருந்து மீளும் மேனிலையாக்க முயற்சியில் மாதவியும் மணிமேகலையும் ஈடுபடுகின்றனர். ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவள் சித்திராபதி; இவளும் கணிகையர் குலப் பெண்தான் என்பது முரண்.

            இவ்வாறு, குலப் பெண்களாக மதிக்கப்படாத விளிம்புநிலைக் கணிகையர் குலப்பெண்களின் சமூக மதிப்பினை மணிமேகலை, உதயகுமரன் அம்பலம் புக்க காதையில் பதிவு செய்துள்ளது.

            “கற்புத்தானிலன்; நற்றவை உணர்விலள்;

             வருணக்காப்பிலள்; பொருள் விலையாட்டி என்று”

மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை (86-87)யில் உதயகுமரன் மணிமேகலையை இழிவாகப் பேசுகிறான். அதாவது, சுதமதியிடம், மணிமேகலை கற்பு என்பதும் இல்லாதவள்; நல்ல தவவுணர்வும் இல்லாதவள்; சாதிமுறையை ஒட்டிய பாதுகாப்பு (வருணக்காப்பு) இல்லாதவள்; பொருளுக்குத் தன் இன்பத்தை விலைப்படுத்துபவள் என்று இகழ்கிறான். குறிப்பாக, அந்தணர், அரசர், வணிகர், வெளாளர் எனும் நால் வருணப்பிரிவில் கணிகையர் குலம் வருவதில்லை. எனவே, அக்குலத்தில் பிறந்த மணிமேகலைக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்பதை அறியலாம்.

உதயகுமரனின் கூற்றிலிருந்து கணிகையர்குலம் அக்காலத்தில் சமூகத்தின் விளிம்புநிலையிலும் பாதுகாப்பு அற்றதாகவும் விளங்கியுள்ளதை மணிமேகலை பதிவு செய்துள்ளது.

கல்லா இளைஞன்

            கல்லா இளைஞன் குறித்த செய்தி சிறைவிடு காதையில் (43-57) இடம் பெற்றுள்ளது. காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலையை அறிந்த உதயகுமரன் நள்ளிரவில் ஊரம்பலத்திற்கு வருகிறான். ஆனால் அவ்விடத்தில் மறைந்து காத்திருந்த விஞ்சையன் காஞ்சனன், ‘ஈங்கிவன் வந்தனன் இவள்பால்’ என்று கருதி வாளால் வெட்டி வீழ்த்துகிறான். தன் மகனின் இறப்புக்கு மணிமேகலைதான் காரணம் என்று தவறாகப் புரிந்து கொண்ட இராசமாதேவி (உதயகுமரனின் தாய்) அவளைப் பழிவாங்கத் துடிக்கிறாள். பித்த மருந்து கொடுத்தும் அவளைப் பட்டியினிட்டும் பொய்ந்நோய் காட்டியும் புழுக்கறையில் அடைக்கிறாள். ஆனால், இவற்றையெல்லாம் தன்னுடைய மந்திர சக்தியால் முறியடித்து விடுகிறாள் மணிமேகலை.

            ஆனால், அரசி, கல்லாத ஒருவனை அனுப்பி மணிமேகலையைப் பாலியல் வன்கொடுமை நிகழ்த்த அனுப்புகிறாள். இதுகுறித்த பதிவுகள் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

“கல்லா இளைஞன் ஒருவனைக்கூஉய்

வல்லாங்குச்செய்து மணிமேகலைதன்

இணைவளர் இளமுலை ஏந்தெழிலாகத்துப்

புணர்குறிசெய்து, பொருந்தினள் என்னும்

பான்மைக் கட்டுரையலர்க்குரை என்றே

காணம் பலவும் கைந்நிறை கொடுப்ப-

ஆங்கவன் சென்றவ் வாயிழையிருந்த

பாங்கில் ஒருசிறைப்பாடு சென்றணைதலும்;

தேவிவஞ்சம் இது வெனத்தெளிந்து

நாவியல் மந்திரம் நடுங்காதோதி

ஆண்மைக்கோலத் தாயிழையிருப்பக்

காணம் பெற்றோன் கடுந்துயரெய்தி

அரசருரிமையில் ஆடவர் அணுகார்

நிரயக் கொடுமைகள் நினைப்பறியேன் என்று

அகநகர் கைவிட்டு, ஆங்கவன்போயபின்-” என்று வருகிறது.

            கல்வியற்ற இளைஞன் ஒருவனுக்குப் பொற்காசுகள் பலவற்றை அவன் கைநிறையும் அளவிற்குக் கொடுத்து, மணிமேகலையை வல்லாங்கு செய்யுமாறு அனுப்புகிறாள் இராசமாதேவி. பாலியல் வன்கொடுமையை செய்தமைக்கான குறிகளை உண்டாக்கி ‘அவள் என்னோடு கூடியிருந்தாள்’ என்ற மொழியை அனைவரிடமும் அலர் உரைக்க வேண்டுமென அவனிடம் ஏவுகிறாள். அவ்வாறே, கல்விகற்காத அவனும் அதற்கிசைந்து மணிமேகலை இருந்த பக்கத்தில் செல்கிறான். இதனை நன்குணர்ந்த மணிமேகலை மந்திரத்தின் உதவியால் ஆணுருக் கொண்டாள். அவ்விடம் பொன் பெற்று வந்த கல்லா இளைஞன் பெண் இல்லாது ஆடவன் இருப்பதைக் கண்டு கடுந்துயர் அடைந்தான். அரசனின் உரிமை மகளிர் இருக்கும் அந்தப்புறத்தில் ஆடவர் எவரும் நெருங்க மாட்டார்களே? நரகத்தைப் போன்ற கொடுந்தன்மையிலான அரசியின் நினைப்பினை, யான் அறிந்திலேனே? என்று கலங்கினான். பின்பு, அந்த அகநகரை விட்டு வெளியேறி எங்கோ ஓடிப்போய் விட்டான். எனும் இப்பதிவில் கல்வி கற்காத இளைஞன் ஒருவன் பொன்னுக்காக எச்செயலையும் செய்வான் எனும் கருத்தினை உணர்த்துகிறது.

            பெரும்பாலும் உழைக்கும் விளிம்பு நிலை மக்கள்தாம் கல்வி கற்காத மக்களாக, சமூகத்தில் இருந்துள்ளனர். நால் வருணப் பாகுபாட்டில் இடம் பெறாத இம்மக்கள் கல்வியறிவினைப் பெறவில்லை. இம்மக்களின் பிரதிநிதியாகக் கல்லா இளைஞனைக் கருதலாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசி, பொருள் கொடுத்து இத்தகைய கொடுஞ்செயலைச் செய்யப் பணிக்கப்படுவதையும் அதற்கு அடிபணியும் விளிம்பு நிலை கல்லா மாந்தரையும் மணிமேகலை பதிவு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

            சமூகத்தில் உடல் ஊனமுற்றோருக்கு அனுதாபம் உண்டு. ஆனால், சமூக மதிப்பு என்பது முழுவதும் கிட்டுவதில்லை. இம்மக்களை விளிம்பு நிலையினராகக் கொள்ளலாம். இம்மக்கள் குறித்த பதிவுகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது.

“கூனும், குறளும், ஊமும், செவிடும்,

மாவும், மருளும், மன்னுயிர்பெறாஅ;”

என்று அறவணர்த் தொழுத காதை (96-97)யில் வருகிறது. இங்கு, புத்தரின் அருள் அறத்தினைக் கேட்டவர்கள் பழுதுள்ள பிறவிகளை ஒருபோதும் அடைய மாட்டார்கள் என்று அறவண அடிகளின் கூற்றாக வருகிறது.

            மேலும், தென் மதுரையில் ஆபுத்திரன் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு வீடுகள்தோறும் எடுத்த பிச்சை உணவினைக் “கண்ணற்றவரே! கால்முடம்பட்டவரே! ஆதரிப்பார் இல்லாதவரே! நோயால் துன்புற்றவரே! யாவரும் வாருங்கள்!” என்று கூவியழைத்து, அவர்களுக்கு முதலில் ஊட்டுவான். எஞ்சியிருக்கும் உணவினைத் தான் உண்பான். என்று வரும் பாடல் அடிகள்:

“ஐயக் கடிஞை கையின்ஏந்தி

மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்

காணார், கேளார், கான்முடப்பட்டோர்

பேணுநர் இல்லோர், பிணிநடுக்கு உற்றோர்;

யாவரும் வருக”  என்று இசைத்துடன் ஊட்டி,

உண்டொழிமிச்சிலுண்டு, ஓடதலை மடுத்தக்

கண்படை கொள்ளும் காவலன்தானென்

(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை: 109-115)

இங்கு ஆபுத்திரனால் பாதுகாக்கப்படும் இம்மக்கள் எளிமையானவர்கள்; உணவின்றித் தவிப்பவர்கள்; சமூகத்தில் கவனிப்பாரற்று வறுமையில் உழல்பவர்கள்; இத்தகைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வு குறித்த தன்மையினை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.

            கச்சி மாநகர் புக்க காதையில் மணிமேகலை பசிப்பிணி மருந்தாகிய அமுதசுரபி கொண்டு, எல்லா உயிரும் வருக! என அழைத்துப் பசிப்பிணியைப் போக்குகிறாள்.

“காணார், கேளார், கால்முடமானோர்

பேணா மாக்கள், பேசார், பிணித்தோர்;

படிவ நோன்பியர், பசிநோயுற்றோர்,

மடி நல் கூர்ந்த மாக்கள் யாவரும்” (222-225)

பசிப்பிணி நீங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, வறுமை மக்களின் பதிவாக மணிமேகலை விளங்குகிறது.

பேடிகள்:

            பாலியல் அடிப்படையில் சமூகத்தின் ஓரத்தில் இருப்பவர்கள் அலிகள், பேடிகள் ஆவர். மணிமேகலையில் பேடி குறித்த இரு பதிவுகள் உள்ளன.

1. மணிமேகலை சுதமதியுடன் மலர் கொய்ய உவ வனம் செல்லும் வழியில் வாணன் என்னும் அசுரனது ‘சோ’ என்னும் நகரில் நின்று, உலகை அளந்த திருமாலின் மகனாகிய காமன் என்பவன் முன்னர் ஆடிய பேடிக் கோலத்தினைக் கொண்டு விளங்குகின்ற பேடு என்னும் கூத்து நிகழ்த்தப்படுகிறது. அதனைக் கண்டு தெருவில் உள்ள மக்கள் இன்புற்றனர்.

            இப்பேடிக் கோலம் குறித்த வருணனை மலர் வனம் புக்க காதையில் (116-122) காணப்படுகிறது. அழகிய கூந்தல், பவளவாய், செவ்வரி பரந்த கண்கள், கருங்கொடி புரவம், பிறைநுதல், காந்தள் செங்கை, இளங்கொங்கைகள், நுண்ணிடை, வட்டுடை, தொய்யில் வரிக்கோலம் எனச் சித்தரிக்கிறது.

“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி,

நீணிலம் அளந்தான் மகன் முன் ஆடிய

பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்” (123-125)

என மன்மதன் ஆடிய பேடிக்கூத்து பற்றி வருகிறது.

2. உவ வனத்திற்குச் செல்லும் வழியில் தெருவில் உள்ள மக்கள் மணிமேகலையைச் சூழ்ந்து கொள்கின்றனர். இக்காட்சி, விராடநகரத்தே ‘பிருகந்நளை’ என்னும் பெயருடன் பேடியாயிருந்த அருச்சுணனைக் காண்பதற்காகத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் போல் மணிமேகலையைக் காண்கின்றனர்.

“விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்

மணிமேகலைதனை வந்துபுறஞ் சுற்றி” (146-147)

இங்கு உவமையாக பேடிமக்கள் இடம் பெற்றுள்ளனர்.

களிமகன்

            கள்ளுண்ட களிமகன் குறித்த பதிவு இங்கு குறிப்பிடத்தக்கது.

            பிச்சைப் பாத்திர உறியினை நுழைகோல் பிரம்பால் சுமந்தும், நாணமும், உடையும் இன்றிக் காணாத நுண்ணுயிக்கு வருந்தியும், குளிக்காத யானையைப் போன்று தெருவில் வந்து கொண்டிருந்த சமணத்துறவியிடம், “எம்முடைய அடிகளாரே! என் பேச்சினைக் கேளுங்கள்: அழுக்கு உடையதான இவ்வுடலில் புகுந்திருக்கும் உயிர் புழுக்கமான அறையில் அடைபட்டிருப்பதைப் போல் உள்ளம் வருந்தாதா? இம்மை, மறுமை, முக்தி தருபவனான பெருமான் உரைத்தது என்ன? தென்னையின் பாளையில் விளைகின்ற தேறலில் (கள்) கொலை என்பதும் உண்டா? உண்மைத் தவம் உடையவரே! அக்கள்ளினை உண்டு தெளிவடைந்து, இந்த யோகநெறியில் அடைகின்ற பயனை அறிந்தால் எம்மையும் கையசைத்து ஏற்றுக்கொள்வீராக!” என்று சூளுரைத்து, இக்கள்ளினை ‘உண்பீராக!’ என்றான் அக்களிமகன்.

            இதனை உணர்த்தும் பாடல் அடிகள் இவை:

“வந்தீர் அடிகள்! நும் மலரடி தொழுதேன்;

எந்தம் அடிகள்! எம்முரை கேண்மோ;

அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர்

புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது,

இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும்

தன்வயின் தரூஉம்; என் தலைமகன் உரைத்தது?

கொலையும் உண்டோ, கொழுமடற்றெங்கின்

விளைபூந் தேறலின்? மெய்த்தவத் தீரே!

உண்டு, தெளிந்திவ் யோகத்து உறுபயன்

கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்ம என

உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று,

உண்மென இரக்குமோர் களிமகன்” (மலர்வனம் புக்க காதை: 92-103)

            இக்களிமன் சமணத் துறவியைக் கிண்டல் செய்து பகடி செய்யும் போக்கில் கலகம் உடையது எனலாம். இவ்விளிம்பு நிலை மாந்தரின் கேள்விகள் யதார்த்தமானவை; சமணசமயத்தினைக் கிண்டல் செய்பவை; இத்தொனியில் கேலி மிளிர்கிறது.

பித்தன்:

            பொதுவாக, இன்றைய சூழலில், மனநிலை பிறழ்ந்தவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் அனுதாபத்துடன் அணுகுவதில்லை. அவ்வாறு, அணுகும் போக்கு மிகவும் குறைவு எனலாம். அம்மக்களைப் பெரும்பான்மைச் சமூகம் இழிவாகத்தான் பார்க்கிறது. பேடிகள், களிமகன் ஆகியோர் இருக்கும் புகார் நகரத் தெருவில் பித்தன் ஒருவன் உள்ளதையும் மணிமேகலை காப்பியம் எடுத்தியம்புகிறது.

            இப்பித்தன் குறித்த மணிமேகலையின் சித்தரிப்பு குறிப்பிடத்தகுந்தது. செவ்வலரி மாலை சூடிய கொண்டை, கழுத்தில் எருக்கம் பூமாலை, கந்தல் துணியும் சுள்ளியும் சேர்த்துக் கட்டிய ஆடை, வெண் பலிசாந்து பூசிய உடல் என்று பித்தனின் உருவத்தினைக் குறிப்பிடுகிறது. அத்துடன், தம் எதிரில் உள்ள பலரோடும் பண்பற்ற மொழிகளைத் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கூறுகின்றான்; அவ்விடத்தில் திடீரென்று அழுகின்றான்; பின் சுற்றிச் சுழல்கின்றான்; கீழே விழுகின்றான்; எழுந்து பிதற்றுகின்றான்; உரக்கக் கூவுகின்றான்; தொழுகின்றான்; எழுகின்றான்; அதன்பின் ஓடுகின்றான்; பின்னர், அமைதியுற்று ஒருபக்கம் ஒதுங்கி நெடுநேரம் நிற்கின்றான்; உடனே, தன் நிழலிடம் பகைத்துக் கொள்கின்றான் என்று பித்தனின் செயல்களை மணிமேகலை மிகத் தெளிவாகக் கூறுகிறது.

            இதனை,

“கணவிர மாலையில் கட்டிய திரணையன்,

குவிமுகிழ் எருக்கிற் கோத்த மாலையன்

சிதவற் றுணியோடு, சேணோங்கு நெடுஞ்சினைத்

தகர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன்

வெண்பலி சாந்தம் மெய்ம்முழு துறீஇப்

பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு

அழூஉம், விழூஉம், அரற்றும், கூஉம்

தொழூஉம், எழூஉம் சுழலலும் சுழலும்

ஓடலும் ஓடும், ஒருசிறை ஒதுங்கி,

நீடலும் நீடும் நிழலொடும் மறலும்,

மையலுற்ற மகன்பின்; வருந்திக்

கையறு துன்பம் கண்டுநிற் குநரும்” (மலர்வனம் புக்ககாதை:104-115)

            இங்கு மனம் பிறழ்ந்த ஒருவனின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி வெளிப்படுத்தும் சாத்தனாரின் திறன் நுட்பமானது. மிகுதியான துன்பத்தில் உழலும் அப்பித்தனைக் கண்ட புகார் நகர மக்கள் வருத்தம் கொள்கின்றனர் என்பதாக வரும் சாத்தனாரின் சித்தரிப்பிலிருந்து மணிமேகலை காலசமூகத்தில் மனிதாபிமானம், இரக்கம் முதலான நற்குணங்கள் இருந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

            இவ்வாறு, சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் எளிய இம்மக்களின் பதிவுகள் விளிம்புநிலை ஆய்வுக்கு வலுசேர்க்கிறது எனலாம்.

சூதாடிகள்:

            காமுகர்கள், பரத்தர்கள், வீட்டிலிருந்து வெளியேறித்திரியும் நாடோடிகள், சூதாடிகள், வம்பு பேசும் மக்கள், தாயம் ஆடுபவர்கள், வழிப் போக்கர்கள் ஆகியோர்களைச் சமூகம் சற்றுப் புறம் தள்ளியே விளிம்புநிலையில் வைத்திருக்கிறது. இம்மக்கள் குறித்து, பாத்திர மரபு கூறிய காதையில் மணிமேகலை பேசுகிறது. தென்மதுரையில் அம்பலப்பீடிகையில் இருந்த ஆபுத்திரன் சிந்தாதேவியின் அருளால் அமுதசுரபி பாத்திரம் பெறுகிறான். அதன்மூலம், பசிப்பிணி போக்கும் அறச்செயலைச் செய்து வருகிறான். அதனைப் பாராட்டி வரம் தர வந்த இந்திரன், ஆபுத்திரனின் மறுப்புரையால் சினம் கொண்டு பாண்டிய நாட்டின் பன்னிரண்டு ஆண்டுகால பஞ்சத்தினைப் பெருமழை பெய்விக்கச் செய்து போக்குகிறான். இதனால், அந்நாட்டில் பசிப்பிணி தீர்ந்தது. அம்பலப்பீடிகையில் உணவு கொள்வோர் எவருமின்றி வெறிச்சோடியது. அப்பீடிகையில் பசித்திருப்போர் எவருமில்லை. அதனால், சமூக இழிவுக்கு உள்ளாகும் ஓரத்துமக்கள் வசிக்கும் இடமாக அப்பீடிகை மாறுகிறது.

            இதனை,

“பசிப்புயிர் அறியாப் பன்மைத் தாகலின்,

ஆரூயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை

ஊணொலி அரவம் ஒடுங்கியதாகி;

விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும்

நடவை மாக்களும் நகையொடு வைகி;

வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்

முட்டா வாழ்க்கை முறைமையதாக” (58-64)

என்று மணிமேகலை பதிவு செய்துள்ளது.

செய்தொழில் / வருணம் / சாதிப்பிரிவுகள்

            செய்தொழில் அடிப்படையில் வாழ்ந்திருந்த விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினை கச்சி மாநகர் புக்க காதை வெளிப்படுத்துகிறது. வஞ்சிநகரில் தன்பாட்டன் மாசாத்துவானைக் காணச் சென்ற மணிமேகலை, பலதொழில் செய்யும் மக்கள் வாழும் தெருக்களைக் கடந்து செல்வதாகக் காட்டப்படுகிறது.

“பன்மீன் விலைஞர், வெள்ளுப்பு பகருநர்,

கண்ணொடை யாட்டியர், காழியர், கூவியர்,

மைந்நிண விலைஞர், பாசவர், வாசவர்,

என்னுநர் மறுகும்; இருங்கோ வேட்களும்,

செம்பு செய்ஞ்ஞரும்; கஞ்ச காரரும்

பைம்பொன் செய்ஞ்ஞரும், பொன்செய் கொல்லரும்,

மரங்கொல் தச்சரும், மண்ணீட் டாளரும்,

வரந்தர வெழுதிய ஓவிய மாக்களும்

தோலின் துன்னரும், துன்னவினைஞரும்,

மாலைக் காரரும், காலக் கணிதரும்,

நலந்தரு பண்ணனும் திறனும் வாய்ப்ப;

நிலங்கலங் கண்டம் நிகழக் காட்டும்

பரணர் என்றிவர் பல்வகை மறுகும்;

விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு

இலங்குமணி வினைஞர் இரீஇய பறுகும்;

வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின்

கூத்தியல்பு அறிந்த கூத்தியர் மறுகும்;” (31-47)

என்று தொழில் அடிப்படையில் மக்கள் இடம் பெற்றுளளனர்.

            அதாவது, மீன் விற்கும் பரதவர், உப்பு விற்போர், கள் விற்கும் வலைச்சியர், பிட்டு விற்போர், அப்பம் விற்போர், ஆட்டிறைச்சி விற்போர், குயவர், தட்டார், கொல்லர், தச்சர், தோல் வேலை செய்யும் செம்மார், பாணர், ஆடல் மகளிரான கணிகையர் ஆகியோர் வசிக்கும் இடங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. காலப்போக்கில் இத்தொழிற் பிரிவுகள் சாதியப் பிரிவுகளாக மாற்றம் பெற்றன. உடல் உழைப்பு, கல்வியறிவின்மை காரணமாக இவர்கள் சமூகப் படிநிலையில் விளிம்பில் இருந்துள்ளனர், என்பதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது எனலாம். நால் வருணப்பாகுபாடு மணிமேகலையில் இடம் பெற்றுள்ளதை ‘வருணக்காப்பிலள்’ என்று உதயகுமரன் கூற்றாக வருவதை முன்னர் கண்டோம்.

            மேலும், சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் இவ் வருணப்பாகுபாடு இடம் பெற்றுள்ளது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டச் சுடுகாடுகள் / கோட்டங்கள் புகார் நகரில் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன. அவை, அவரவர் சமூக தகுதிக்கேற்ப சிறிதும் பெரிதுமாக சுட்டச் செங்கற்களால் கட்டப்பட்ட அச்சமாதிக் கோயில்கள் குன்றுகள் போல் இருந்தன எனும் பதிவில் இறப்பிலும் கூட வருணம் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ள தன்மையினை மணிமேகலை தவறாமல் பதிவு செய்துள்ளது.

இப்பதிவு பின்வருமாறு

“காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்

அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும்,

ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்,

நால்வேறு வருணப் பால்வேறு காட்டி,

இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த

குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்;” (53-59)

இதில், அவரவர்க்கு உரிய நால் வேறு வகைப்பட்ட வருண பேதங்களைப் பகுத்துக் காட்டிய வண்ணம் இறந்தோரைச் சார்ந்த அன்புடையவர்களால் கட்டிய சமாதிகள் என்பதிலிருந்து மணிமேகலை காலத்தில் வருணாசிரம நெறி தவறாது இருந்திருப்பதை அறியலாம். அக்காலத்தில் சுடுகாட்டுப் பெருந்தெய்வமாக துர்க்கை விளங்கியிருப்பதையும் உணர்த்துகிறது.

வேட்டுவன்

            கொலைக்கு அஞ்சக்கூடியவர்களாகக் காட்டில் வாழும் வேடர்கள் இருந்துள்ளனர் என்பதை மணிமேகலை கூறுகிறது.

            சூல் முதிர்ந்த மானை வேட்டையாடிய வேட்டுவனின் அம்பு அம்மானின் வயிற்றில் இருந்த இளையமானின் வயிற்றினைக் கிழித்துக் கொண்டு சென்றது. வீழ்த்த அப்பெண்மானின் அழுகுரலைக் கண்டு மனமயக்கம் அடைந்த அவ்வேடன், அதுபடும் துயரம் பொறாது அவ்விடத்திலேயே தன் இன்னுயிரைத் துறந்தான். இச்செய்தி,

“சூல்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்

கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப,

மான்மாறி விழுந்தது கண்டு மனமயங்கிப்

பயிர்க்குரல் கேட்டதன் பான்மையனாகி;

உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்க்கண்டு,

ஓட்டி யெய்தோன் ஓரூயிர் துறந்ததும்; (113-118)

எனச் சிறைவிடு காதையில் இடம் பெற்றுள்ளது. வேடர்கள் விளிம்புநிலையினர். இம்மக்கள் கொலைக்கு அஞ்சுபவர்களாகக் காட்டியிருப்பது நோக்கத்தக்கது. கள், பொய், களவு, காமம், கொலை ஆகிய பஞசசீலக் கொள்கைகளை விளக்கும் நோக்கில் மணிமேகலை இவ்வாறு கூறுவது போல் அமைந்திருந்தாலும் பழிக்கு அஞ்சும் நன்னிலை மாந்தராகப் படைத்திருப்பது சிறப்பானது.

ஆபுத்திரன்:

            மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் கதை மாந்தரை விளிம்பு நிலைப் பாத்திரமாகக் கருத இடமாண்டு. பிறப்பின் அடிப்படையில், இவன் தீண்டத்த காதவன் என்பதாக “புல்லோம் பன்மின், புலைமகன் இவனென” ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில் (91) வரும் பாடல் அடிகள் கூறுகிறது. இவன் இழிமகன்; அதனால் அவனைத் தீண்டாது போவீராக! என்று கூறும் ஓர் அந்தணனின் கூற்றில் இவ்வாறு இடம் பெறுகிறது.

            சாலி எனும் பார்ப்பனத்தி (அவள் கணவன் அபஞ்சிகன் எனும் பெயர் கொண்ட காசி அந்தணருக்குத் தெரியாமல்) அந்தணர் அல்லாத இன்னொருவருடன் ஏற்பட்ட தவறான ஒழுக்கத்தினால் கருவுறுகிறாள். அக்காலச் சமூக நியதியான வருணாசிரம் நெறிக்கு மாறாக பிறப்பவன் ஆபுத்திரன். கணவனை இழந்து, வன்முறைக்குப் பயந்து, தன் பாவம் போக்கக் காசியிலிருந்து குமரிக்கு வந்தவள் சாலி. வரும் வழியில் பாண்டிய நாட்டில் கொற்கை நகர் அருகில் ஆயர்களின் இருப்பிடத்தில் குழந்தை பெற்றெடுக்கிறாள்; சமூகத்திற்குப் பயந்து ஒரு தோட்டத்தில் விட்டுச் செல்கிறாள்; பசு ஒன்று, அச்சிசுவினை ஏழு நாட்கள் பால் ஊட்டி பாதுகாத்தது. இளம்பூதி எனும் அந்தணன் இக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.

            ஆனால், வேள்விச் சாலையில் பலி கொடுக்க வைத்திருந்த பசுவினைக் காப்பாற்றும் நோக்கில் கடத்திச் செல்கிறான். வழிமறித்த அந்தணர்கள் அச்சிறுவனை,

“ஆகொண்டு இந்த ஆரிடைகட கழிய,

நீசமகன் அல்லாய்; நிகழ்ந்ததை உரையாய்;

புலைச்சிறு மகனே; போக்கப்படுதி” யென்று;

அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப”, (42-45)

என்று கூறி கோலால் அடிக்கின்றனர். அச் சிறுவனால் காப்பாற்றப்பட்ட அப்பசு, அடித்த அந்தணனின் குடல் சரியுமாறு வயிற்றில் குத்தி தாக்கி விட்டுக் காட்டிற்குச் சென்று விடுகிறது.

            பழமையான மறைகளை ஓதும் அந்தணர்களே! பசுவின் மீது நுமக்கு ஏனிந்த பகைமை? என்று கேட்டான் ஆபுத்திரன். அதற்கு, திருமால் மகனான பிரம்மன் படைத்த நான்மறைகளை ஓதியறியாத நீ ஆ மகனே; எம் பார்ப்பனன் மகன் ஆக மாட்டாய்? என்று அச்சிறுவனை இகழ்ந்தனர். மேலும், வளர்ப்புத் தந்தையான இளம்பூதி, அச்சிறுவனைச் சாதிப் பிரதிஸ்டம் செய்கிறான். அவன் இழிபிறப்பு குறித்து அந்தணர்கள் இகழ்ந்தனர்;; பிச்சைப் பாத்திரத்தில் கல்லிட்டும் யாகப் பசுவினைக் கவர்ந்த கள்வன் எனவும் அவ் அந்தணக் கிராமத்தை விட்டு அச்சிறுவனை வெளியேற்றினர். ஆனால், ஆபுத்திரன் அதைப்பற்றிக் கவலை கொள்ளாது, நீங்கள் அருமறை முதல்வர் என போற்றுகின்ற அகத்தியரும் வசிட்டரும் (அந்தணர்கள்) தேவதாசியான திலோத்தமையின் மைந்தர்கள். இது பொய்யுரை ஆகுமா? என்று சிரித்த வண்ணம் எதிர்க்கேள்வி கேட்கிறான். இங்கு, ஆபத்திரனின் வாதத்திறம் குறிப்பிடத்தக்கது.

            தென்மதுரையில் தான் பிச்சை எடுத்துப் பிறர் பசிப்பிணி போக்கும் பண்பாளளானாக விளங்குகிறான் ஆபுத்திரன். இதனால் சிந்தாதேவியின் அருளால் அமுதசுரபி பாத்திரம் பெறுகிறான். அப்பாத்திரம் கொண்டு பசிப்பிணி இல்லாது செய்கிறான்; அதனால், பழுமரத்து ஈண்டிய பறவைக்கூட்டம் போன்று அம்பலப் பீடிகை இருந்தது. வரம் தர வந்த இந்திரனிடம்,

“வெள்ளை மகன்போல் விலாவெற நக்கீங்கு,

எள்ளினன், போமென் றெடுத்துரை செய்வோன்;”

(பாத்திர மரபு கூறிய காதை: 36-37)

என விலா வெடிக்கும்படி சிரித்து ‘உம் வரம் தேவையில்லை’ என்கிறான். மேலும்,

“வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்

திருந்துமுகம் காட்டுமென் தெய்வக்கடிஞை,

உண்டி கொல்லோ, பேணுநர் கொல்லோ,

யாவையீங் களிப்பன்; தேவர்கோன்? என்றலும் (44-48)

       என உணவு, உடை, பெண்கள், பாதுகாவலர் ஆகிய இவற்றையாத் தாங்கள் எனக்குத் தருவது என்று இந்திரனை ஏளனம் செய்கிறான் ஆபுத்திரன்.

            அமுதசுரபியின் பயன்பாடு அனைவருக்கும் இல்லாத நிலை ஏற்படும்பொழுது மணிபல்லவத் தீவில் தன் உயிர் துறக்கிறான். நல்லோரிடம் அது சேர்க எனக் கூறி கோமுகிப் பொய்கையில் இடுகிறான். தன்னலம் கருதாது பொதுநலம் கருதியவனாக ஆபுத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் அவன் மறு பிறவியில் புண்ணியரசனாகப் (அரசனாக) பிறக்கிறான்.

            இவ்வாறு, ஆபுத்திரன் எனும் விளிம்புநிலைப் பாத்திரம் வருணாசிரம நெறியை எதிர்க்கும் பாத்திரமாக மணிமேகலை படைத்துள்ளது.

நாகர் / மலைவாழ் மக்கள்:

            ஆதிரை பிச்சையிட்ட காதையில் கூறப்படும் நாகர் மலையில் வாழும் நக்க சாரணர்கள் மலை வாழ் விளிம்பு மக்களாகக் கொள்ளலாம்.

            இம்மக்கள் அச்சம் தரும் தோற்றத்தை உடையவர்கள்; நர ஊண் உண்பவர்கள் என்பதை,

“பரிபுலம் பின்னிவன்;

தானே தமியன் வந்தனன்; அளியன்;

ஊனுடை இவ்வுடம்புண” (57-59) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

            இனக்குழு மக்கள் தலைவனான குருமகனின் வசிப்பிடம் இவ்வாறு சுட்டப்படுகிறது,

“கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்,

வெள்ளென் புணங்கலும், விரவிய இருக்கையில்

எண்குதன் பிணவோடி ருந்தது போலப்

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்” (66-69)

அதாவது கள்பானைகளும் மிகுதியான முடை நாற்றமும் காய்ந்த எலும்புத் துண்டுகளும் கலந்து விளங்கிய இடமாக அவ் வசிப்பிடம் இருந்தது. அதுவும் கரடி தன் மனைவியுடன் இருந்ததைப் போன்று குருமகன் தன் மனைவியுடன் இருந்தான் என்று வருகிறது. இவர்கள், கள், புலால் உண்பவர்கள் என்பதை,

“பெண்டிரும் உண்டியும் இன்றெனின், மாக்கட்கு

உண்டோ ஞாலத் துறுபயன்?” (80-81)

எனக் குருமகன் சாதுவனிடம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

“அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி,

மூத்துவிளி மாவொழித்து எவ்வுயிர் மாட்டும்

தீத்திறம் ஒழிக!” (115-117)

என்ற சாதுவனின் அறக் கருத்துக்களை நாகர் மக்கள் கேட்டு அதனைப் பின்பற்றுவதாகவும் கூறினர்.

            அத்துடன், அகில், சந்தன மரங்கள், மரக்கலம் கவிழ்வதால் பெற்ற மெல்லிய ஆடைகள், பொருட்குவியல் ஆகியவற்றைப் பரிசாக சாதுவனுக்குத் தருகின்றனர் என்பதிலிருந்து இம்மக்கள் விருந்து போற்றுபவர்கள் எனலாம்.

            இவ்வாறு, மணிமேகலை பல்வேறு விதமான விளிம்பு நிலை மாந்தர்களைப் பதிவு செய்துள்ளது. மேற்சொன்னவர்களுள் கலகத்தன்மை கொண்ட ஆபுத்திரனும் உண்டி கொடுக்கும் மணிமேகலையும் பாராட்டத்தகுந்தவர்கள் எனலாம்.

பயன்பட்ட நூல்கள்:

1.          சிவசுப்ரமணியன், ஆ., அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 2002.

2.          புலியூர்க் கேசிகன், மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2011.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் மா.வெங்கடேசன்

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசு கலைக் கல்லூரி (ஆடவர்)

கிருட்டினகிரி – 635001.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here