பொருள்கோள் வகைகள்

பொருள்கோள் வகைகள்
ஒரு செய்யுளில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் நேராகவும், மாற்றியும் பொருள்கொள்ளும் முறைமையைப் பொருள்கோள் என்று வழங்குவர்.

பொருள்கோள் எட்டு வகைப்படும். அவையாவன

1.ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
3.நிரல்நிறைப் பொருள்கோள்
4.பூட்டுவிற் பொருள்கோள்
5. தாப்பிசைப் பொருள்கோள்
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

ஒரு செய்யுளில், பொருளானது ஓடுகின்ற ஆற்று நீரோட்டம் போல சொற்கள் முன்பின்னாக மாறாமல், நேராகப் பொருள் கொள்ளும் வகையில் அமைவது ஆற்றுநீர்ப்பொருள்கோள் எனப்படும்.

(எ.கா)
           
சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த
நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”  ( சீவகசிந்தாமணி )
நெற்பயிர் கருவுற்ற, பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, கீழ்மக்கள் செல்வம் சேர்ந்தவுடன் பணிவின்றி தலைநிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.

‘சொல்’ என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்று காய்த்தவே என்னும் பயனிலையைக் கொண்டு முடியும்வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆகும்.

நூற்பா,
மற்றையது நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற்று ஒழுஇமஃது யாற்றுப் புனலே“  (நன்னூல்.412)
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் அமைந்துள்ள சொற்களை ஓர் அடிக்குள்ளே மொழிமாற்றிப் பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“சுரையாழ அம்மி மிதப்ப – வரையனைய
யானைக்கு நீந்து முயற்சி நிலையென்ப
கானக நாடன் சுனை ”
கானக நாடன் சுனையில் சுரை ஆழும், அம்மி மிதக்கும், யானை நீந்தும், முயல் நிலையாக நிற்கும் எனச் சொற்கள் நகைப்பிற்கு இடமான பொருளைத் தருகின்றன. எனவே செய்யுளில் உள்ள சொற்களை
சுரை மிதப்ப அம்மி அழ
யானைக்கு நிலை முயற்சி நீத்து“
என ஓரடிக்குள் இடம் மாற்றி வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.
 இவ்வாறு செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ற வகையில் ஓரடிக்குள் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு ‘மொழிமாற்றுப் பொருள்கோள்’ என்று பெயராகும்.

நூற்பா,
“ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை         
மாற்றியோர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே“   (நன்னூல்.413)
3.நிரல்நிறைப் பொருள்கோள்

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது“   (திருக்குறள்)
கணவனும் மனைவியுமாக இணைந்து அன்பு செய்வதே இல்வாழ்க்கையின் பண்பாகும். இருவரும் செய்யும் அறமே இல்வாழ்க்கையின் பயனாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து. இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாவது, அன்பும் அறனும் உடையதாய் இருப்பதே ஆகும் என இரு அடிகளிலும் சொற்கள் நிரல்நிறையாக வந்துள்ளதால் இது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும். நிரல்நிறைப் பொருள்கோள் இரு வகைப்படும்.

(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(அ)  முறை நிரல்நிறைப் பொருள்கோள்
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

(எ.கா)  “கொடி குவளை கொட்டை நுசுப்பு உண் கண்மேனி,”
இவ்வடியில் கொடி, குவளை, கொட்டை என்ற எழுவாய்ப் பெயர்ச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய பயனிலைகளாக நுகப்பு, கண், மேனி என்று வரிசைப்படுத்தி கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என்று பொருள் கொள்ள வேண்டும்.

இச்செய்யுளில் முறை பிறழாமல் வரிசை முறையில் சொற்கள் அமைந்து வருவது ‘முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
(ஆ)  எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்  
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

(எ.கா)

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்“ (திருக்குறள்)
இக்குறளில் ஓர் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, பயனிலைகளாக கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளனர். அதைக் சுற்றார் மக்கள் என்றும் கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகச் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

நூற்பா,

“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறுநிரல் நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும், பொருள்கோள் நிரனிறை நெறியே“  (நன்னூல்.414)
4. பூட்டுவிற் பொருள்கோள்
வில்லின் இருமுனைகளையும் நாணால் இணைத்தல் போல ஒரு செய்யுளின் இறுதிச் சொல்லை முதற் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் ‘பூட்டுவிற் பொருள்கோள் ஆகும். இதனை “விற்பூட்டுப் பொருள்கோள்’ என்றும் வழங்குவர்.

(எ.கா)
“திறந்திடுமுன் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் – உறந்தையர் கோன்
தண்ணார மார்பன் தமிழர் பெருமானைச்
கண்ணாரக் காணக் கதவு“
இச்செய்யுளில் ‘கதவு’ என்ற இறுதிச் சொல்லைத் ‘திறந்திடுமின்’ என்ற முதல் சொல்லோடு இணைத்துப் பொருள்கொள்ள வேண்டும். இவ்வாறு வில்லில் நாண் பூட்டுவது போலச்செய்யுளின் இறுதிச்சொல்லை முதல் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் விற்பூட்டுப் பொருள்கோள் அல்லது பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.

நூற்பா,

“எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்
பொருள்நோக் குடையது பூட்டுவில் ஆகும்“        (நன்னூல்.415)
5. தாப்பிசைப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் நடுவில் நின்ற ஒரு சொல் ஊஞ்சல் கயிறு போன்று முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளும் முறையில் அமைவது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும். (தாம்பு இசை – ஊஞ்சற்கயிறு)

(எ.கா)

“ உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு“ (திருக்குறள்)
ஊன் உண்ணாமையால் உயிர்க்கு இறுதியான நன்னிலை உண்டாகும். ஊன் உண்பானாகின் நரகம் அவனை வெளியே விட வாய் திறவாது. இக்குறட்பாவில் நடுவில் உள்ள ‘ஊன்’ என்ற சொல் முன்னால் சென்று ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றும் ‘ஊன் உண்ண அண்ணாதல் செய்யாது அளறு’ என்று பின்னால் சென்றும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது தாப்பிசைப் பொருள்கோள்’ ஆயிற்று.

நூற்பா,
“இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை “  (நன்னூல்.416)
6. அனைமறிபாப்புப் பொருள்கோள்
பாம்பு புற்றில் நுழையும்போது, தானே மடங்கி தலை மேலாகவும், வால் கீழாகவும் நிலை மாறுவது போல செய்யுளில் இறுதிச்சொல் அல்லது இறுதியடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ எனப்படும்.
அனை – புற்று, மறி – மடங்குதல், பாப்பு – பாம்பு:

(எ.கா)
 
“காண்பார் கண்ணாரக் கடவுளை எப்போதும்
பூண்பார் புனிதத் தவம்“
இப்பாடலில் இறுதியிலுள்ள புனிதத் தவம் என்ற சொல் கீழ்மேலாக புனிதத் தவம் பூண்பார் எப்போதும் கடவுளைக் கண்ணாரக் காண்பார் என இயைந்து பொருள் கொள்ள வரும். இதற்கு ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ என்று பெயர்.

நூற்பா,

செய்யுள் இறுதி மொழியிடை முதலிலும்
எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே  (நன்னூல்.417)
7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று. கூட்டிப்பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

(எ.கா)
“தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங் கூந்தல்
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்”
இச்செய்யுள் அமைந்த நிலையிலேயே பொருள் கொண்டால் தேங்காய் போன்ற பைங்கூந்தல் என்றும் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி என்றும் அஞ்சனத் தன்ன பசலை என்றும் அமைந்து பொருள் மாறுபடும்.

எனவே இச்செய்யுளை வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் உடையவரின் மாமேனி மேல் தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட வெண்மையான கோழிமுட்டை உடைத்தன்ன பசலை தணிவாமே’ எனச் சொற்களைத் தக்கவாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். எனவே இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

நூற்பா,
 
“யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே“   (நன்னூல்.418)
குறிப்பு:
மொழிமாற்றுப் பொருள்கோளில் ஓரடிக்குள்ளேயே சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். ஆனால் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பல அடிகளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ப மாற்றிப் பொருள் கொள்ளலாம்.
8.அடிமறி மாற்றுப் பொருள்கோள்
இது இருவகைப்படும்.

(அ).ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று

(ஆ).பொருளிசை மாறா அடிமறிமாற்று
(அ) ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்று
ஒரு செய்யுளின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டிப் பொருள் காண்பது ‘ஏற்புழிக் கூட்டும் அடிமறி மாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்“
இச்செய்யுள் அடிகள் அமைந்துள்ள முறையில் பொருள் கொண்டால் பொருத்தமின்றி பொருட்சிதைவு ஏற்படும். எனவே,

“கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
விடுக்கும் வினையுலந்தக் கால்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் உடையார்”
எனப் பொருளுக்கேற்றவாறு எடுத்துப் பொருள் கூட்டினால் பொருள் விளங்கும். செல்வம் பிறருக்குக் கொடுத்துத் தாமும் துய்த்தாலும் வளருங்காலத்தே வளரும். நல்வினை முடிந்துவிட்டால் நம்மை விட்டு நீங்கும். வலிந்து பற்றினாலும் நிற்காது போய்விடும். இவ்வியல்புகளை அறியாதவர் நடுக்கம் கொண்டு தம்மைச்  சார்ந்தவரின் துன்பத்தைப் போக்காதவராய் இருக்கின்றார்கள்.
(ஆ) பொருளிசை மாறா அடிமறி மாற்று

ஒரு செய்யுளின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் இசையும் மாறாமல் இருப்பது பொருளிசை மாறா அடிமறி மாற்றுப் பொருள்கோள் ஆகும்.

(எ.கா)

“சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே”
இப்பாடலின் எந்த அடியை எங்கு மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருள் உணர்வு குன்றாது.  ஓசையும் நயமும் சிதையாது. இவ்வாறு ஒரு பாடலின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் வேறுபடாமல் இருப்பதை அடிமறிமாற்றுப் பொருள்கோள் என்பர்.

நூற்பா,
 
“ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்பீ றிடைமுதல் ஆக்கினும் பொருளிசை
மாட்சியு மாறா அடியவும் அடிமறி “ (நன்னூல்.419)

 

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here