பெருங்கதையில் முகத்தூது

பெருங்கதையில் முகத்தூது

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

கொங்குவேளிர் அவர்களின் பெருங்காப்பியமான பெருங்கதையிலிருந்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. தலைவன் தலைவியருக்குள் நடக்கும் உள்ளுணர்வு போராட்டத்தை வெளிக்காட்டவும் தூது இலக்கியத்தின் ஒருபகுதியாகவும் இக்காப்பியமானது அமைகின்றது. இவ்வாய்வில் தலைவன் தன்னுடைய மனைவியின் வாயிலாகவே வேறொரு பெண்ணுக்குத் தூது அனுப்புகிறான்.  மனைவியும் இவற்றை அறியாமலேயே அவர்களுக்குள் நடக்கும் காதல் நாடகத்திற்கு துணை செய்கிறாள். இறுதியில் நடந்ததை எண்ணி மனம் வெதும்புகிறாள்.  தூது என்கிற பெயரில் ஒரு பெண்ணுக்கு தெரியாமலே அவளுடைய முகத்தில் காதல் கடிதம் வரையப்படுவதும் அப்பெண்ணின் மனம் படும்துன்பங்களுக்கு ஒரு உந்துதலையும் வாசவதத்தையின் கோபங்கள் அனைத்தும் இவ்வாய்வு முன்வைக்க முயல்கிறது.

பெருங்கதையில் முகத்தூது

திறவுச்சொற்கள்

1.பெருங்கதை                5.கொங்குவேளிர்

2.முகத்தூது                  6.தூது

3.மானனீகை                 7.பந்தடித்தல்

4.உதயணன்                  8.வாசவதத்தை

முன்னுரை

ஒரு காலத்தில் மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த சைகை மொழியினைப் பயன்படுத்தியிருப்பான். கண் சிமிட்டுவதாலும் கை அசைவுகளாலும் தலை ஆட்டுவதாலுமே மனதில் தோன்றிய கருத்தை இவ்வகையான செயல்பாடுகளின் மூலம் எதிரில் நிற்பவற்கு தெரிவித்திருக்க வேண்டும். அதுவே கண்ணுக்குத் தெரியாமல் குறிப்பிட்ட தூரத்தில் ஒருவர் இருக்கின்றார் எனில் ஆய்… ஓய்… என்று வேகமாகக் கத்தியும் சீழ்க்கை (விசில்) ஒலி எழுப்பியும் தான்இருக்கும் இடத்தை அறிவித்திருப்பார்கள். தமிழ்மொழிக்கு ஒலிதான் மொழியின் முதல்படியாய் இருக்கக்கூடும். இப்படியாகக் கொஞ்சகொஞ்சமாய் வளர்ந்த மொழியானது பல நூற்றாண்டுகளுக்கு மேல் பேச்சுமொழியாக உருவெடுத்துள்ளது எனலாம். அதன் பிறகே எழுத்துமொழியும் தோன்றியிருக்கும். எவ்வளவுதான் பேசினாலும் காதல் என்று வந்துவிட்டால் அவ்விடத்தில் எழுத்துமொழிதான் தேவைப்படுகிறது. மனதில் தோன்றிய கருத்தை நேரில் சொல்லமுடியாததையும் எழுத்து வடிவில் கடிதம் மூலமாகச் சொல்லமுடியும்.  சங்ககாலம் முதல் இக்காலம் வரை அவ்வாறு எழுதிய கடிதங்கள் ஏராளம். பெருங்கதையில் தலைவியின் முகத்தைக்  காகிதமாக வைத்து வண்ணம் தீட்டி காதல் மடல் எழுதுவதும் தலைவியே தன்னுடைய கணவனுக்காகக் (அவள் அறியாமல்) காதல்தூது செல்வதும் வியப்பிற்குரியதே.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் காப்பியத்தைச் சாமர்த்தியமாகவும் மிக நேர்த்தியாகவும் கதையை நகர்த்தி செல்கின்றார். காப்பியத் தலைவனாகிய உதயணனை நலம் குன்றாத வகையில் காட்டியுள்ளார். யானையை அடக்குதல், யாழ் கற்றுக்கொடுத்தல், காதல் கொள்ளுதல், பகைவர்களைப் போரிலே வென்று வெற்றியைச் சூடுதல் போன்றவை மூலம் உதயணனின் இரண்டு பக்க முகங்களைக் காட்டியுள்ளார். ஒருபக்கம் வீரனாகவும், மறுபக்கம் மன்மதனாகவும் உதயணன் இருந்துள்ளார். மானனீகை அழகுள்ளவளாகவும் அறிவு செறிந்துள்ளவளாகவும் படைக்கப்பட்டுள்ளாள். தான் கவர்ந்து வரப்பட்டவள் என்பதை நன்கு உணர்ந்துதான் உதயணனைின் காதலை வேண்டாம் என்று மறுத்துரைக்கிறாள். ஆனாலும் மன்னன் அல்லவா உதயணன். ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உதயணனின் காதலே வென்று விடுகிறது. இங்கு வாசவதத்தை மற்றும் பதுமாபதியின் உள்ளமும் மானனீகையின் காதல்நிலையுமாகிய இப்பெண்களின் மனப்போராட்டமே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம் பெறுகிறது.

தூது – விளக்கம்

     தன்னுடைய மனக்கருத்தைப் பிறருக்கு அறிவுறுத்த வேண்டி எழுத்து மூலமாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ அனுப்பப்படுவது தூது இலக்கியம் எனப்படும். இத்தூதானது அகத்தூது மற்றும் புறத்தூது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அகத்தூதில் தலைவன் தலைவியின் காதல் சார்ந்த செயல்பாடுகளும் புறத்தூதில் போர்ச்செய்திகள் அடங்கிய செயல்பாடுகளும் இடம்பெறும். ‘‘தூது விடுதலைப் பொருளாகக் கொண்ட செய்யுட்கள் பல சங்க இலக்கியத்தில் காமம் மிக்க கழிபடர் கிளவி என்ற துறையில் வருகின்றன’’1 என்கிறார் மது.ச.விமலானந்தம். காதல் அதிகமாதலின் காரணமாக தலைவனும் தலைவியும் உயிருள்ளவைகளையோ அல்லது உயிரற்றப் பொருட்களையோ தூதாக விடுகிறார்கள். தூது இலக்கியங்கள் கலிவெண்பாவில் இயற்றப்பெறும். தூது விடப்படும் பொருட்களையே தலைப்பாகவும் கொண்டிருக்கும். தூது இலக்கியத்திற்கு சந்து இலக்கியம் வாயில் இலக்கியம் என்ற பெயரும் உண்டு.

தூது செல்வோர்க்கான வாயில்கள்

     அகத்தூதில் தலைவன் தலைவியற்கு யாரெல்லாம் தூது செல்லக்கூடியவர்கள் எனத் தொல்காப்பியர்,

                ‘‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

              பாணன் பாடினி இளையர் விருந்தினர்

              கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

              யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப’’ (தொல்.பொருள்.கற்பு.52)

     மேற்கண்ட பன்னிருவரும் அகத்தூதுக்குரியவர்களாகச் சுட்டுகின்றார். இவர்களில் வாயிலாகத் தங்களுடைய மனக்கருத்தைக் காதல் கொண்டவர்ககுத் தெரியப்படுத்துகிறார்கள். மேலும், புறத்தூதாக,

                ‘‘இயம்புகின்ற காலத்து எகினமயில் கிள்ளை

              பயம்பேறு மேகம்பூவை பாங்கி – நயந்தகுயில்

              பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே

              தூதுரைத்து வாங்கும் தொடை’’2

இவ்வாறாகப் புறத்தூதுக்குரியப் பொருட்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இலக்கியங்களில் தூதுக்கள்

  • இராமாணத்தில் இராமன் சீதையிடம் அனுமனைத் தூதாக அனுப்புகிறார்.
  • இராமன் இவணனிடம் அங்கதனைத் தூதாக அனுப்பி வைக்கின்றார்.
  • சிலம்பில் மாதவி கோவலனிடம் தன்னுடைய தோழி வயந்தமாலையைத் தூதாக அனுப்புகிறாள்.
  • அதியமான் தொண்டைமானிடம் ஔவையாரைத் தூதாக அனுப்புகிறார்.
  • பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனைத் தூதாக அனுப்புகிறார்கள்.
  • முருகன் சூரபதுமனிடம் வீரவாகுத்தேவரை தூதாக அனுப்பகிறார்.
  • பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலை தூதாக அனுப்புகிறார்.
  • சீவகசிந்தாமணியில் குணமாலை சீவகனுக்கு கிளியைத் தூது விடுகிறாள்.
  • பெரியபுராணத்தில் சுந்தரர் பரவையாருக்கு இறைவனைத் துது அனுப்புகிறார்.
  • நளவெண்பாவில் நளன் தமயந்திக்கு அன்னப்பறவையைத் தூதாக அனுப்புகிறாள்.
  • தேம்பாவணியில் சூசையப்பருக்கு விண்ணவர் தூது வருகின்றார்.

இவைபோன்று இலக்கியங்களில் தூதுச்செய்திகள் இன்னும் காணக்கிடக்கின்றன. தூதுக்கென்றே தனி இலக்கியங்களும் உள்ளன. முதல் தூது இலக்கியம் நெஞ்சுவிடு தூது ஆகும். ஆனால் மதுரை சொக்கலிங்கர் மேல் தமிழைத் தூதாக விடப்படும் தமிழ்விடு தூதே சிறந்த தூது இலக்கியமாகக் கருதப்படுகிறது. சைவ வைணவ இலக்கியங்களில் கூட தூதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. காப்பியங்களிலும் தூதுக்களினால் பெயர் பெற்றவர்களைக் (கண்ணன், அனுமன்) கண்டிருக்கின்றோம். கொங்கு வேளிரின் பெருங்கதையிலும் தூது நடைபெறுவதற்குரிய காரணங்களும் அதனால் ஏற்படக்கூடிய சினமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கதையும் – ஆசிரியரும்

     பெருங்கதை, மாக்கதை, உதயணன் கதை என்று வேறுபெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. பெருங்கதையானது முதலில் பிருகத்கதை என்கிற காப்பியத்தைக் குணாட்டியார் என்பவரால் பைசாசி மொழியில் இயற்றப்பட்டது. இந்த நூலில் இருந்தோ அல்லது அதன்வழி ஒன்றிலிருந்தோ பெருங்கதையின் கதைப்பொருளை எடுத்திருக்கலாம். இந்நூலில் உதயணனின் வரலாற்றையும் அவனுடைய மகன் நரவாணதத்தனின் வரலாற்றையும் குறிப்பிடுகிறது. பெருங்காப்பியங்கள் சிறுங்காப்பியங்களிடையே பெருங்கதையும் காப்பியமாகவே போற்றப்படுகிறது. இந்நூலின் சிறப்பினால் மகாபாரதம் கம்பஇராமாயணம் போன்ற இதிகாசங்களுடன் ஒரேநிலையில் வைத்து  எண்ணப்படுகிறது.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் ஆவார். இவருடைய இயற்பெயர் யாதென்று தெரியவில்லை. இவர் வாழ்ந்த நாட்டின் பகுதியையும் வம்சாவளி பெயரான வேளிர் என்பதையும் இணைத்துக் கொங்குவேளிர் என அழைக்கப்படுகிறார். பகையரசனை வெல்லும் போது அந்த நாட்டிற்கு ஒரு தலைமை வீரனை அரசர் நியமிக்கின்றார். அவ்வீரனுக்குத் தனிப்பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். ‘‘கொங்கு மண்டலத்தை ஆண்ட கொங்கு மன்னன் தான்வென்ற குறும்பு நாட்டின் பகுதிக்கு நியமிக்கப்பட்ட தலைவனை வேளிர் என்று அழைக்கப்பட்டான்’’3 என்று பொன்னுத்தாய் குறிப்பிடுகிறார்.

பெருங்கதையின் காலம் கி.பி 750 என்றும் இதே காலம் கொங்கு வேளிரின் காலமாகவும் ஆசிரியர் கருதுகிறார்கள். ‘‘இளமைக் காலத்திலிருந்தே கொங்கு வேளிர் கல்வித்திறம் மிக்கவராகத் திகழ்ந்தார். தமிழ்மொழி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவராக இருந்தார் எனப் பெருங்கதையை ஆய்வு செய்தவர்கள் குறிப்பிடுகின்றனர்’’4 என்று இராமச்சந்திரன் செட்டியார் குறிப்பிடுகிறார்.  பண்டையத் தமிழகம் மூன்று வேந்தர்களால் ஆளப்பட்டது.  அம்மன்னர்களுக்குள் சண்டைகள் நடைபெறும்போது வேளிர்கள் அவர்களுடன் ஒன்றாகவோ தனியாகவோ சேர்ந்து போரிட்டனர். ‘‘வேளிர்கள் வீரம், ஆற்றல் மிக்கவர்களாக விளங்கியதுடன் பலர் பெரு வள்ளல்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களுள் சங்க காலத்தில் வாழ்ந்த கடை எழு வள்ளல்களான பாரி, ஆய், எழினி, பொதினி, காரி, ஓரி, பேகன், மலையன் ஆகிய வேளிர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்’’ 5 என்கிறார் ரா.விஜயலட்சுமி.  

இவற்றில் பெருங்கதையின் மொழிநடை, யாப்பு போன்றவற்றின் அமைப்பைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். மேலும் கொங்குவேளிர் வடமொழியில் சிறந்திருந்த சமணப் பெரியோர்களோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆதாலால்தான் மொழிபெயர்ப்பு நூலாக இருப்பினும் பெருங்கதையில் வடமொழிப் பெயர்களையே வைத்துள்ளமையைக் காணமுடியும்.

உஞ்சைக்காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்று ஐந்து காண்டங்கள் இடம் பெற்றுள்ளன.  பெருங்கதையில் பெரும்பான பாடல்கள் கிடைக்கவில்லை.  முப்பத்தைந்து அடி எல்லையாகக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள். மேலும் காண்டத்தில் கதையின் போக்கு நிறைவு பெறாமல் இருப்பதால் ஆறாவது காண்டமாகத் துறவு பற்றி இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப்பெருங்கதைக் காப்பியமானது நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. சமண சமயக் கோட்பாட்டை வலியுறுத்தி பெருங்கதை செல்வதால் சமண சமயத்தைச் சார்ந்து நின்றது எனலாம்.

பெருங்கதையில் முகத்தூது

     பெருங்கதையில் வத்தவகாண்டத்தில் பந்தடி கண்டது காதையும் முகவெழுத்துக்காதையும் இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்படுகிறது. தூது இலக்கியங்களில் நாம் நிறைய செய்திகளைக் கண்டும் கேட்டிருப்போம். இப்பகுதியில் தலைவன் தன்னுடைய மனைவியின் முகத்திலேயே யவண மொழியில் காதல் கடிதம் எழுதி தன்னுடைய காதலை வளர்க்கிறான். இக்காதலை மனைவி முதலில் வெறுத்தும் பிற்பாடு ஏற்றுக்கொண்டதன் பின்னணியும் மாறுபாடும் பெண்கள் குறித்த நிலையும் இக்கட்டுரையில் சொல்லப்படுகின்றன.

உதயணனின் போர்

     வத்தவ காண்டத்தில் உதயணனை மன்மதனாகவும் மிகச்சிறந்த வீரனாகவும் கொங்குவேளிர் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஒவ்வவொரு கதை நிகழ்வும் படிக்கும் மனதில் ஊன்றி நிற்பவயே. வருணனைகளும் எடுத்துக் கையாளும் விதமும் மிகநன்று. வத்தவ நாட்டின் மன்னன் உதயணன் ஆவான். உதயணனின் நன்பனும் அமைச்சனும் யூகி என்பவன் ஆவான். உதயணன் உஞ்சை நாட்டு மன்னன் பிரச்சோதனன் – பதுமகாரிகை மகளான வாசவதத்தையை யாழ் மீட்டு கற்றுக் கொடுத்துத் திருமணம் செய்து கொள்கின்றான். இரண்டாவதாக மகத மன்னனின் தங்கையான  பதுமாபதியை மாணகன் என்ற அந்தணர் பெயரைக் கொண்டு திருமணம் செய்து கொள்கின்றான்.

     பாஞ்சால நாட்டின் மன்னன் ஆருணி ஆவான். ஆருணி மன்னனுக்கும் உதயணனுக்கும் வெகு காலமாகவே பகை இருந்து வந்தது.  ஒற்றனாகிய வருடக்காரனின் யோசனையாலும் வகுத்துக் கொடுத்த திட்டத்தாலும் ஆருணி மன்னனைப் போரிலே உதயணன் தோற்கடிக்கிறான். ஆருணியைத் தோற்கடித்தது மட்டும் இல்லாமல் அவனுடைய அந்தப்புரத்திலிருந்து அரிய கலைத்திறனும் ஆடல் பாடல் வல்லமையும் கூத்துத் திறமையும் உள்ள ஆயிரத்தெட்டுப் பெண்களை வத்தவ நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வருகின்றான்.

 ‘‘அருமை சான்ற வாருணி யரசன்

ஆயிரத் தெண்ம ரரங்கியன் மகளிர்

ஆடலும் பாடலு நாடொன்று நவின்ற

நன்நுதன் மகளிரை மின்னோர் மின்னிடை’’ (பெருங்கதை.வத்தவ.12:3-8)

இந்தப் பெண்களில் மிகச்சிறந்த அழகியும், கலைத்திறனும் பெற்றவளுமான மானனீகையும் உடனிருந்தாள். இவ்பெண்கள் அனைவரும் மிக்க அழகுடனும் திறமையுடனும் வீற்றிருந்தார்கள். மேலும், இப்பெண்கள் ஆருணி மன்னனால் பகை மன்னர்களைத் தோற்கடித்து அவனுடைய திறன்மிக்க மகள்களைக் கவர்ந்து வந்து தன்னுடைய அந்தப்புரத்தில் வைத்திருந்தாகத் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பந்தாட்டம் நிகழ்தல்

     போருக்குப் பின் ஒருநாள் உதயணனின் மனைவிமார்கள் வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும் நிலாமுற்றத்தில் பெண்களிடையே பந்தடிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தோழிமார்கள் இரண்டு அணியாகப் பிரிந்து நின்றார்கள். ஆனாலும் ஆட்கள் குறையவே, மன்னன் தேவியர் இருவருக்கும் கூட்டி வந்த ஆயிரெத்தெட்டுப் பெண்களையும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்தான். இப்போது பந்தாட்டம் நடைபெறுவதற்கான ஆட்களை இரண்டு பெண்களும் பிரித்துக் கொண்டார்கள். அவர்களுள் மானனீகையும் ஒருத்தி ஆவாள்.

‘‘வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்

கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை

கொடுத்த காலை……’’ (பெருங்கதை.வத்தவ.12:9-11)

இவ்வாறாகப் பந்தாட்டத்தில் பங்கு பெறும் பெண்கள் அனைவரும் நெட்டியும் பஞ்சும், பட்டு நூலும் சேர்த்து உருட்டிக் கட்டிக்கொண்டனர். முடியை நன்றாகப் பின்னி அவற்றின் மேல் நூலாலும் கயிற்றாலும் மெல்லியதாய்ச் சுற்றி பாம்புத்தோல் போலவும் மயில் தொகையின் கண் போலவும் சுற்றிக்கொண்டனர். இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை  போன்ற பெண்களுக்குப் பிறகு மானனீகை பந்தடிக்க வருகிறாள். அப்பெண்களின் வர்ணனைப் பற்றி,

‘‘பீலியும் மயிரும் வாலிதின் வலந்து

நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்

கோலமாகக் கொண்டனர் பிடித்துப்

பாம்பின் றேலும் பீலிக் கண்ணும்

பூம்புன னுரையும் புரையக் குத்தி’’ (பெருங்கதை.வத்தவ.12:44-48)

ஆசிரியர் கூறுகின்றார். மானனீகை இருபத்தியொரு பந்துகளை எடுக்கிறாள். தான் நடுவில் நின்று பந்தகளைத் தன்னைச் சுற்றிலும் வட்டமாக வைக்கிறாள். பின்னர் பந்தை வானத்தை நோக்கி அடிக்கிறாள். மீண்டும் வந்த பந்தை நிலத்தில்அடிக்கிறாள். பந்து மேலே எழும்பும் போது தானும் மேலே எழுகிறாள். பந்தடிப்பதற்கு ஏற்ப அவளது கைகளும் கால்களும் உடலும் புருவமும் கண்களும் அசைகின்றன. அவள் இருபத்தியொரு பந்துகளை எடுக்கிறாள். மானனீகை பந்தடிக்கும் போது பாடல் மகளிர் நூல்களிற் கூறப்பட்ட வண்ணம் தாளம் தவறாது கைகளால் தாளம் இடுகின்றனர். அவளுடைய செயல் திறனைக் கண்டு ஏனைய பந்தாடும் மகளிர்கள் பாராட்டுகின்றார்கள். உதயணனின் மனைவிமார்கள் மானனீகையைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். பந்துகள் சுழலும் வேகத்தில் அவளும் சேர்ந்து சுழலுவதால் அவள் இருக்குமிடம் அறியாத தோழிமார்கள் இது என்ன மாயமோ என்று வியக்கிறார்கள். ஆசிரியர் கொங்குவேளிர் இந்நிகழ்ச்சியை,

     ‘‘சுழன்றன தாமங் குழன்றது கூந்தல்

     அழன்றது மேனி யவிழ்ந்தது மேகலை

     எழுந்தது குறுவிய ரிழிந்தது புருவம்

     ஓடின தடங்கண் கூடின புருவம்

     அங்கையி னேற்றம் புறங்கையி னோட்டியும்

     தங்குற வளைத்துத் தான் புரிந் தடித்தும்’’ (பெருங்கதை.4:12:225-230)

கூந்தல் சுருள்கிறது. உடல் வெதும்புகிறது. மேகலை அவிழ்கிறது. வியர்வையினால் சந்தனம் வழிகிறது. அகன்ற கண்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. உள்ளங்கையால் பந்தை ஏற்று புறங்கையால் பந்தை தட்டியும் உடம்பை வளைத்து ஆடுகிறாள் என வர்ணனை செய்கின்றார் ஆசிரியர். இம்மாதிரியான பந்தாடுதல் முறையானது சீவகசிந்தாமணியில் விமலையாரும், குற்றாலக்குறவஞ்சியில் வசந்தவல்லியும் பந்தாடுகிறார்கள். பெண்கள் மட்டுமே கூடி பந்தாடுகின்ற இவ்வேளையில் வயந்தகன் உதவியால் உதயணன் பெண் வேடமிட்டு அக்கூட்டத்தினுள்ளே மானனீகையின் அழகைப் பருகிய வண்ணம் அமர்ந்திருக்கிறான்.

உதயணனின் காதல்

     மானனீகையின் பந்தடிக்கும் திறனைப் பார்த்து வியந்த வாசவதத்தை, இவளை உதயணன் கண்டால் உடனே காதல் கொண்டு விடுவான் என்று அஞ்சுகிறாள். அதனால் உதயணன் மானனீகையைப் பாரக்காதவாறு செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்கிறாள். ஆனாலும் பந்தடிக்கும் இடத்தில் மாறுவேடத்தில் இருந்த உதயணனின் மனமானது மானனீகையிடம் சென்று விடுகிறது. மானனீகையைப் பார்ப்பதற்காகத் தன்னுடைய தேவியரிடம் பந்தடித்த அனைத்து மகளிரையும் பார்க்க வேண்டும் எனக் கூறுகிறான்.  ஆனால் வாசவதத்தை மானனீகையைத் தவிர்த்து மற்ற பெண்களை அழைத்து வந்து காட்டுகிறாள். மானனீகை வராமல் இருப்பதைப் பார்த்த மன்னன் வருத்தப்படுகிறான். காதலின் மிகுதியால் எப்படியாவது மானனீகையைப் பார்த்து விட வேண்டும் என எண்ணுகிறான். இதனை,

‘‘ஒன்றிய வியல்போ டொன்றுக் கொன்றவை

ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்

வேலென விலங்குஞ் சேலென மிளிரும்

மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்

குழைமே லெறியுங் குமிழ்மேன் மறியும்

மலருங் குவியும் கடைசெல வளரும்

சுழலு நிற்குஞ் சொல்வன பொலும்

கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்

மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்’’ (பெருங்கதை.வத்தவ.12:270-279)

என்கிறார் ஆசிரியர். அதனால் தன்னுடைய மனைவி வாசவதத்தையிடம் ஆருணி மன்னன் சேமித்து வைத்த பொருட்களெல்லாம் இருக்குமிடம்  மானனீகைக்கு மட்டும்தான் தெரியும் என்று பொய் கூறுகிறான். அதனை உண்மை என நம்பிய வாசவதத்தை மானனீகையை அழைத்து வரும்படிச் செய்கிறாள்.

     மானனீகையிடம், நீதானே ஆருணி மன்னனுக்குத் திருமந்திர ஓலை எழுதுதலும், வழக்குரை அறையைக் காத்தலும், அம்மன்னனின் தேவியர்களுக்கு ஒப்பனை செய்யும் வேலையை செய்து வந்தாய் என்று கேள்விபட்டேன். அவளும் நான் ஒப்பனை செய்யும் வண்ணமகள்தான் என்று கூறுகிறாள். அதனால் மானனீகையை வாசவதத்தைக்கு வண்ணமகளாக நியமிக்கின்றான் உதயணன்.

முகம் வழியாகத் தூது

     பெருங்கதையின் மூன்றாவது காதல் இங்குதான் நடைபெறுகிறது. உதயணன் மானனீகை இவருக்கும் மட்டுமே தெரிந்த யவன மொழி இக்காதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வண்ணமகளாகச் செயல்பட்டிருக்கும் மானனீகை வாசவதத்தையின் முகத்தில் சந்தனமும் குங்குமமும் குழைத்து அழகாய் வண்ணம் தீட்டினாள். வாசவதத்தையின் முகத்தை மானனீகைதான் அழகாக மாற்றியிருக்கக் கூடும் என்பதை உதயணன் அறிகிறான். அதனால் மானனீகை செய்த ஒப்பனை இயற்கை அழகிற்கேற்ப அமையவில்லை எனக் கூறி அழிக்கிறான். பூந்துகளையும் சந்தனத்தையும் குழைத்து வாசவதத்தையின் முகத்தில் தானே ஒப்பனை செய்கின்றான்.  வாசவதத்தையின் நெற்றியின் மேல் தனக்கும் மானனீகைக்கும் மட்டும் தெரிந்த யவன மொழியில் காதல் மடல் எழுதுகிறான்.  ‘‘ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் ஈர்த்து ஒருநிலைப்படுத்துவதாகும். உள்ளத்துக்கு உணர்ச்சி ஊட்டுவதாகும். இத்தகைய சிறப்புடையமையாற்றான் இது நுண் கலைகளுள் ஒன்று என்று அறிஞரால் பாராட்டப்படுகிறது’’6 என்கிறார் இராசமாணிக்கனார்.

உதயணனின் காதல் மடல்

     சிறந்த புகழுடைய உதயணன் எழுதும் ஓலை இது. ‘‘நுண்ணிடையும் இன்மொழியும் சிவந்த வாயும் கொண்ட மானனீகையே! மேல் மாடத்தில் நீ பந்தடித்து விளையாடியபோது உன் வேல் போன்ற கண்கள் என் நெஞ்சைக் கிழித்தன.  நெருப்புப் போன்ற அந்தப் புண்ணுடன் உயிர் வாழ என்னால் முடியவில்லை. அப்புண்ணிற்கு மருந்து கொம்புத்தேன் போன்ற உன் குவிந்த மார்பகங்களே. நீ பந்தடித்தபோது என் மனம் பறையடித்தது. என் எண்ணமும் நிலைமையும் சொல்வதற்கரியன. காமமாகியப் பெருங்கடலிலே நான் அழுந்தாபடி ஆழ்ந்த நீரில் அகப்பட்டோர்க்குத் தெப்பம் போல நீ உதவி செய்து என்னை உய்யக் கொள்வாயாக! நான் நினைப்பவற்றையெல்லாம் எழுதுவதற்கு இந்த ஏடு (வாசவதத்தையின் நெற்றி) போதவில்லை’’7 என்று உதயணன் மடல் எழுதினான் என்கிறார் விஜயலட்சுமி. பெருங்கதையில்,

‘‘பற்றிய யவன பாடையி லெழுத்தவள்

     பூந்தா தோடு சாந்துறக் கூட்டி

     ஒடியா விழுச்சீ ருதயண னேலை

     மான னீகை காண்க சேணுயர்

     பந்துவிளை யாட்டினுட் பாவைதன் முகத்துச

     கொந்தழற் புண்ணொடு நொந்துயிர் வாழ்தல்

     ஆற்றே னவ்வழ லவிக்குமா மருந்து

கோற்றேன் கிளவிதன் குவிமுலை யாகும்’’ (பெருங்கதை.4:13:59-73)

என்று ஆசிரியர் பெருங்கதையில் கூறுவதாக அமைகின்றது. வாசவதத்தையிடம் நான் செய்த ஒப்பனை மிகவும் அழகாக உள்ளது என்கிறான் உதயணன்.

மானனீகையின் மறு மடல்

     தன்னுடைய மனைவி வாசவதத்தையின் முகத்தில் மானனீகைக்கு தூது அனுப்புகிறான் உதயணன். வாசவதத்தையின் முகத்தைப் பார்த்து உதயணனின் காதல் தூதை மானனீகைப் புரிந்து கொள்கிறாள். ‘‘அரசர் எழுதிய திருமுகம் மிக அழகுடையது என்று இரண்டு பொருள்படக் கூறுகிறாள். திருமுகம் (1.அழகிய முகம்   2. கடிதம்)’’8 என்கிறார் விஜயலட்சுமி. மானனீகையும் வாசவதத்தையின் நெற்றியில் ஒப்பனை செய்வது போல் யவன மொழியில் உதயணனுக்குப் பதில் எழுதுகிறாள்.

‘‘மறுமொழி கொடுக்கு நினைவின ளாகி

     நெறிமயிர்க் கருகே யறிவரி தாக

     எழுதிய திருமுகம் பழுதுபட லின்றிக்

     பொருந்திய பல்லுரை யுயர்ந்தோர்க் காகும்

     சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்

பேணு செய்தல் பெண்பிறந் தோருக்

புறஞ்சொலு மன்றி யறந்தலை நீங்கும்’’ (பெருங்கதை.4:13:108-121)

என்பதாகப் பெருமகனின் அருள் என் மேல் உண்டென்பதை அறிகிறேன். ஆனால் அத்தகைய உயர் மொழி வாசகம் என் போன்ற பணிமகளிர்க்குப் பொருந்தாது. வாசவதத்தைப் போன்ற அரச மகளிர்க்கே பொருந்தும். மேலும் காவல் உள்ள இடத்திலிருந்து கொண்டு மறைவாக நாம் செய்யும் செயல்களை யாரும் காணமாட்டார் என்று எண்ணிச் செயல்படுவது என்போன்ற பெண்களுக்குத் தகுதியல்லவே. பெருமானாகிய தாங்கள் என்மேல் வைத்த திருவருளை முற்றிலும் மறந்து விடுதல் நல்லது எனப் பதில் மடலில் உதயணனின் காதலை மறுத்து எழுதுகின்றாள். பெண்களுக்குக் கற்பொழுக்கம் என்பது நாணத்தின் ஒருபகுதியாகவே கருதப்பட்டது. நாணமிழந்தவள் கற்பு நெறியில் சிறக்கமாட்டாள் என்பது மானனீகை நன்கு அறிந்திருந்தாள். அதனால்தான் உதயணனின் விருப்பத்தை அறிந்த மானனீகை அச்சமும் நாணமும் கொண்டவளாகக் காணப்பட்டாள்.  தன்னைப் பற்றியும் உதயணனின் காதல் பற்றியும் பயமும் கொண்டாள். அதுவும் தான் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்வது மிகப் பிழையாகும் என்று கருதினாள். இதேபோல் வாசசதத்தையின் முகத்தில் உதயணனும் மானனீகையும் திரும்பதிரும்ப காதல் கடிதம் எழுதி தூது அனுப்புகிறார்கள்.

குச்சரக்குடிகை

     மானனீகையிடம் உள்ள அளவற்ற காதலால் உதயணன் மீண்டும் மீண்டும் தன்னுடையக் காதலை வற்புறுத்துகிறான். அதனால் மானனீகை குச்சக்குடிகையில் அவனை இரவில் பார்க்க இசைகிறாள். உதயணன் மேல் வாசவதத்தை சந்தேகம் கொள்கிறாள். அதனால் காஞ்சனமாலையை உதயணனைப்பின் தொடரும்படி செய்கிறாள். குச்சரக்குடிகையில்  மன்னனும் மானனீகையும் காதல் வசப்பட்டுக் கூடியும் ஊடியும் நீண்ட நேரம் பொழுதைக் கழிக்கின்றனர். தாமிருவரும் வாசவதத்தை நெற்றியில் எழுதிய செய்திகளை மீண்டும் மீண்டும் கூறி மகிழ்கின்றனர். இறுதியில் மன்னன் மானனீகைக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக அளிக்கிறான். இதனை ஆசிரியர்,

‘‘திருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து

     விருப்பொடு தழுவி நடுக்கந் தீரக்

     கூடிய வேட்கையி னெருவர்க் கொருவர்

     ஊடியுங் கூடியு நீடுவிளை யாடியும்

     இருந்த பின்றை யிருவரு முறைமுறை

திருந்திய முகத்துப் பொருந்திய காதலொ

டெழுதிய வாசக மெல்லா முரைத்து

குறியெனக் கூறிச் சிறுவிரன் மொதிரம்

கொடுத்தன னருளிக் கோயிலு ணீங்க’’ (பெருங்கதை.4:13:182-291)

     காஞ்சனமாலையிடமிருந்து தெரிந்து கொண்ட வாசவதத்தை மிகவும் சினம் கொள்கிறாள். மன்னனிடமும் கனவில் கண்டதாக மானனீகையின் காதலைப் பற்றிக் கூறுகிறாள். மன்னன் கற்பனையால் வந்த கனவுதான் என்று சமாதானம் செய்கிறான். அன்று மாலையில் மானனீகையை சிறையில் அடைத்து விட்டு குச்சரக்குடிகைக்கு வாசவதத்தைச் செல்கிறாள். வாசவதத்தையை மானனீகை என்றெண்ணி கொஞ்சிப் பேசுகிறான் உதயணன். தனக்கு முன்னால் இருப்பது மானனீகை அல்ல வாசவதத்தைதான் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறான்.

     இவைப்போன்ற காட்சிகள் மற்றும் யவனமொழியில் எழுதப்படும் தூதுச் செய்திகள் என அனைத்தும் சிறந்த நாடகத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.

வாசவதத்தையின் கோபம்

     அடுத்தநாள் காலையில் மானனீகையைத் தூணில் கட்டி அவளுடைய மயிரைக் குறைக்க எண்ணுகிறாள் வாசவதத்தை. இதை அறிந்த வயந்தகன் என்பவன் கத்தரிகளை ஆய்வு செய்வது போல் நடித்து கொஞ்ச நேரம் காலம் நீட்டிக்கிறான். அங்கு ஒரு மௌன சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பதுமாபதி அங்கு வந்து கணவன் தவறு செய்தால் பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று உரைக்கின்றாள். ஆனாலும் வாசவதத்தை யார் பேச்சையும் கேட்காமல் பிடிவாதமாகவே இருக்கிறாள். அதன்பிறகு,

‘‘தனக்குந் தங்கை  யியற்பது மாபதி

     இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்

     பயந்த நாளொடு பட்டதை யுணர்த்தாள்

     தன்பெயர் கரந்து மான னீகையென

     அன்புடைய மடந்தை தங்கையை நாடி

எய்திய துயர்தீர்த் தியான் வரு காறும்’’ (பெருங்கதை.4:14:126-133)

     அச்சூழலில்தான் கோசல மன்னன் உதயணனுக்கு எழுதிய கடிதத்தை வாசவதத்தைக்கு அனுப்புகிறான். அக்கடிதத்தில், மானனீகை வாசவதத்தையின் தங்கை முறையாவாள் என்றும், ஆருணி மன்னன் அவனை போரில் கவர்ந்து சென்றதாகவும், அவளைத்தான் பிற்பாடு உதயணன் கவர்ந்து வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. மேலும் கோசல நாட்டு மன்னனுக்கும் தன்னுடைய சிற்றன்னையாகிய வசுந்தரியின் மகளே மானனீகை ஆவாள் என்பதையும் வாசவதத்தை அறிகிறாள். கோபம் தணிகிறது. மன்னன் உதயணனுக்கும் மானனீகைக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. வாசவதத்தையும் பதுமாபதியும் மானனீகையைக் கொடுக்க நான்கு மறைகளும் ஓதி மணச்சடங்குகள் நிகழ்த்த பலபேர் முன்னிலையில் தீ வலம் வந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது.

முடிவுரை

     மேற்கண்ட பந்தடி கண்டது, முகவெழுத்துக்காதை ஆகிய இரு காதைகளிலும் பெண்களைக் காமப்பொருளாகவும் அடிமை பெண்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆணாதிகத்தால் போர்மேற் செல்லும் மன்னர்கள் அங்கு அழகாய் இருக்கும் பெண்களை வற்புறுத்தி அழைத்து வருவதும் அவர்களை உடல் சார்ந்து துன்பப்படுத்துதலும் நடைபெற்று வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. கணவன் செய்யும் அனைத்திற்கும் பெண்கள் துணையாக இருக்க வேண்டும் என்று பதுமாபதியின் வாயிலாக அறிய முடிகிறது. அக்காலத்தில் போரின் காரணமாக ஆண்கள் அதிக அளவு உயிர் விட்டிருக்கலாம். அதனால் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால் ஒருஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் வந்திருக்கக்கூடும் என் நம்பப்படுகிறது. உதணயனுக்கு மானனீகை மூன்றாவது மனைவி. மேலும் மன்னனுக்கு நான்காவதாக விரிசிகை என்னும் முனிவரின் மகளையும் திருமணம் செய்து கொள்கின்றான். இராமாயணத்தில் அயோத்தி அரசன் தசரதனுக்கு அறுபதாயிரத்து மூன்று மனைவிகள் உள்ளனராம். சீவகசிந்தாமணியில் சீவகனுக்கு எட்டு மனைவிமார்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறாக அரசர்களின் வாழ்க்கையில் திருமண நிகழ்வுகள் இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழரின் பண்பாடாக இருப்பதைக் காணலாம்.

சான்றெண் விளக்கம்

1.தமிழ் இலக்கிய வரலாறு, மது.ச.விமலானந்தம், அபிராமி பதிப்பகம், சென்னை, ப.147

2.தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன், கலையக வெளியீடு, ப.236

3.பெருங்கதையில் பெண்மை, இரா.பொன்னுத்தாய், முனைவர் பட்ட ஆய்வேடு, ப.75

4.கொங்கு நாட்டு வரலாறு, இராமச்சந்திரன் செட்டியார், ப.102

5.கொங்குவேளிர், ரா.விஜயலட்சுமி, சாகித்திய அகாதெமி, ப.13

6.தமிழகக் கலைகள், மா.இராசமாணிக்கனார், பாரிநிலையம், சென்னை, ப.27

7. கொங்குவேளிர், ரா.விஜயலட்சுமி, சாகித்திய அகாதெமி, ப.86

8.மேலது.ப.86

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்,

எழுத்தாளர், முதன்மை ஆசிரியர் (இனியவை கற்றல் )

www.iniyavaikatral.in

www.kelviyumpathilum.com

www.puthagasalai.com

youtube : iniyavaikatral (இனியவை கற்றல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here