புறநானூற்றில் புலவரும் மன்னரும்

புறநானூற்றில்-புலவரும்-மன்னரும்

புறநானூற்றில் புலவரும் மன்னரும்

            சங்கச் சான்றோர் “எமக்குத் தொழில் கவிதை”யென்று கருதி, பெருமிதவுணர்வோடு மக்களின் நல்வாழ்விற்காகத் தம் எழுத்தாற்றலையும் சொல்லாற்றலையும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து அறிய முடியும்.  புலவர்களை ‘அறிவுத்தொழில் செய்வார்’ என்ற பொருளில் “புலன் உழுது உண்மார்” என்றே குறிப்பிடும் பாடலும் உண்டு.  தாம் மேற்கொண்ட அறிவு வாழ்க்கை (life of the mind)  செயல்வாழ்க்கை (life of  action) என்பதினின்றும் வேறுபட்டது என்பதையும், பின்னதற்குரிய உடல் உழைப்பு தமக்குப் பொருந்துவது அன்று என்பதையும், எனவே மன்னரிடமும் குறுநில வேந்தரிடமும் ஏனைய செல்வரிடமும் சென்று தம் நாவன்மையைக் காட்டிப் பரிசில் பெற்று வாழ்க்கையை நடத்துவதில் தவறில்லையென்பதையும், அதுவே சமுதாயத்திற்குத் தாம் செய்ய வேண்டிய பணியென்பதையும் நன்றாகவே அப்புலவர்கள் உணர்ந்திருந்தார்கள். புறநானூற்றில் புலவரும் மன்னரும்

            இக்கருத்தைச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் தெளிவுபடுத்தும் கபிலர் “போர்க்களத்தும் அரசவையிலும் செயலாற்ற வேண்டிய அரசனின் கைகள் வலியவையாக இருப்பதும் புலாலும் துவையலும் கறியும் சோறும் உண்ணுவதைத்தவிர வேறு வலிய செயல்களைச் செய்யாமையால் புலவர்களின் கைகள் மென்மையானவையாக இருப்பதும் இயற்கை”

                                    சாவநோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்

                                    பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்

                                    வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை

                                    கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது

                                    பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்

                                    மெல்லியபெரும தாமே நல்லவர்க்கு

                                    ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு

                                    இருநிலத்து அன்ன நோன்மைச்

                                    செருமிகு சேஎய்நின் பாடுநர் கையே                   (புறம் 14)

என்பார். கவிதை யாத்தலை, புலமைத் தொழிலை ஒரு வாழ்க்கை முறையாகவே அன்னார் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு இத்தகைய பாடல்கள் சான்றாகும்.

            அறிவுத் தொழிலைச் செவ்வனே செய்வதற்காக இரந்துவாழும் வாழ்வு ஏற்புடையதே என்பது அவர்களது உறுதியான நம்பிக்கை.  மன்னர் வாழ்வினும் புலவர் வாழ்வு எவ்விதத்தினும் குறையுடையதன்று என்று மன்னனிடமே எடுத்துக்கூறும் புலவர் கோவூர்கிழார் ஆவார்.  “ஊர்ஊராகச் சென்று நாவன்மையால் வள்ளல்களைப் பாடிப் பொருளைப் பெற்றுச் சுற்றத்தைக் காத்துத் தமக்கென வைத்துக் கொள்ளாது பலருக்குக் கொடுத்துவாழும் புலவர் வாழ்க்கையால் யாருக்கேனும் தீங்கு உண்டாகக் கூடுமோ? அவர்களின் வாழ்வு பெருஞ்செல்வம் படைத்த அரசர்களின் வாழ்வை ஒத்த செம்மாப்பு உடையது” என்று புலவர் தொழிலின் பெருமையை மன்னனுக்கு எடுத்துக் கூறுகிறார்.

                                    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

                                    நெடிய என்னாது சுரம்பல கடந்து

                                    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

                                    பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

                                    ஓம்பாது உண்டு.  கூம்பாது வீசி,

                                    வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

                                    பிறர்க்குத்தீது அறிந்தன்றோ!  இன்றே திறப்பட

                                    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி

                                    ஆங்கினிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்

                                    மண்ணாள் செல்வம் எய்திய

                                    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே!             (புறம் 47)

            அறிவுத் தொழிலைத் திறம்படச் செய்து பரிசில் வாழ்க்கை வாழ்ந்த புலவர்கள் இரத்தலை இழிதொழிலாகக் கருதினாரல்லர்.  வேறு உடல்தொழில் செய்வதில் நாட்டமற்றவர்களாய், அதனால் தமது காலத்தையும் தமக்கிருந்த பிறவி ஆற்றலையும் விரயமாக்க விரும்பாதவர்களாய், மன்னரிடமிருந்து பெற்ற பெருவளத்தைப் பலரோடு பகிர்ந்துகொள்பவர்களாய்த் தம் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.  இதனால் அவர்கள் தாழ்வுமனப்பான்மை ஏதுமின்றித் தலைக்குனிவிற்கு இடமின்றித் தமக்கெனத் தெரிந்தெடுத்துக் கொண்ட தொழிலைச் செவ்வையாகச் செய்யமுடிந்தது.  வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் குறுநில மன்னனாகிய வெளிமானிடம் பரிசில் கேட்கச் சென்றபோது அவன் இறந்ததைக் கேள்வியுற்று, “என் இறைவன் இறந்தது அறியாது,  அந்தோ இரங்கத்தக்க நான்வந்தேனே!  என்ன ஆவார்களோ என் சுற்றத்தார்!  மழை பெய்யும் இரவில் மரக்கலம் கவிழ்ந்த போதில் கண்ணில்லாத ஊமையன் கடலில் விழுந்து அழுந்தியதைப்போல எல்லை அளந்தறியப் படாத தாங்குதற்கரிய அலைகள் வீசுகின்ற நீரில் மூழ்கி இறந்து படுதலே நன்று; நாம் செய்யத்தக்கதும் அதுவே” (புறம். 238) என்று வருந்திப்பாடியவர்.  அவரே குமணன் அளித்த பரிசிலைப் பெற்ற போது,

                                    நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்

                                    பன்மாண்கற்பின் நின் கிளை முதலோர்க்கும்

                                    கடும்பின் கடும்பசி தீர யாழநின்

                                    நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்

                                    இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

                                    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

                                    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!

                                    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

                                    திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.             (புறம். 163)

என்று தமது மனைவிக்கு அறிவுரை கூறுவார்.  வறுமையின் கொடுமையை உணர்ந்த புலவர் இரந்துபெற்ற பொருளைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில் கவிஞர்கள் வள்ளல்களுக்கு இளைத்தவர் அல்லர் என்பதை வலியுறுத்துவது நோக்கற்பாலது.

            இப்பெருஞ்சித்திரனாரே இளவெளிமான் என்பான் தமது தகுதிக்கேற்ற பரிசில் தராதபோது “புலி களிற்றை வீழ்த்த முயன்று அது தப்பிவிட்டால் எலியை நோக்கிப் பாயாது.  நெஞ்சமே கலங்காதே!”  என்று தமக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அப்பரிசினை ஏற்க மறுத்தார்.  அதற்கும் மேலாக, குமணன் தமக்களித்த யானை ஒன்றை இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டிவிட்டு,

                                    இரவலர் புரவலை நீயும் அல்லை;

                                    புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;

                                    இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு

                                    ஈவோர் உண்மையும் காண்இனி; நின்ஊர்க்

                                    கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த

                                    நெடுநல் யானைஎம் பரிசில்

                                    கடுமான் தோன்றல் செல்வல் யானே                   (புறம் 162)

என்று அவனிடம் சொல்லிச் செல்கிறார்.  புலவர்கள் தன்மானம் மிக்கார் என்பதற்கு இதனினும் உயர்ந்த சான்றைத் தேடிச்செல்ல வேண்டியதில்லை.  பெருஞ்சித்திரனார் இத்தகையர் என்பதை நாம் நம்புதற்கு இன்னொரு புறப்படாலும் ஏதுவாகிறது.

            அவ்வையாரின் பாராட்டைப் பெற்ற வள்ளலாகிய அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசில் பெறச் சென்ற பெருஞ்சித்திரனாரை அவன் நேரில் கண்டு பேசாது அனுப்பிவைத்த பரிசிலை அவர் ஏற்காது, “நான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்” என்று தம் நிலையைத் தெளிவுபடுத்துகிறார்.

                                    குன்றும் மலையும் பலபின் ஒழிய

                                    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென

                                    நின்ற என்நயந்து அருளி ஈதுகொண்டு

                                    ஈங்கனம் செல்க தான் என என்னை

                                    யாங்கு அறிந்தனனோ தாங்கரும் காவலன்

                                    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

                                    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்

                                    தினையனைத் தாயினும் இனிதவர்

                                    துணையள வறிந்து நல்கினர் விடினே.               (புறம் 208)

            சங்க காலத்தில் அரசர்க்கும் புலவர்க்கும் இருந்த உறவு பொதுவாகப் புரவலர்க்கும் இரவலர்க்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வான உறவு அன்று.  மன்னர்களை அளவு கடந்து புகழ்ந்து பரிசில்களை அள்ளிச் செல்லும் நோக்குடன் புலவர்கள் செயல்பட்டார்கள் என்று கருதுவது தவறு.  தம்தனி வாழ்வில் அறமல்லாச் செயல்களை அரசர்கள் செய்தபொழுது அவர்களை இடித்துரைக்கப் புலவர்கள் தயங்கவில்லை.  வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து அவளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பரத்தை ஒருத்தியோடு வாழத் தொடங்கியதை அறிந்த புலவர்கள் நால்வர் அவனைக் கடுமையாகச் சாடி அறவுரை கூறத்தயங்கவில்லை.  பேகனை,

                                    உடாஅபோரா ஆகுதல் அறிந்தும்

                                    படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

                                    கடாஅ யானைக் கலிமான் பேகன்

                                    எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன

                                    மறுமை நோக்கின்றோ அன்றே

                                    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே.           (புறம் 141)

என்றும்

                                    வரையா மரபின் மாரி போலக்

                                    கடாஅ யானைக் கழற்கால் பேகன்

                                    கொடைமடம் படுதல் அல்லது

                                    படைமடம் படான்பிறர் படைமயக்குறினே        (புறம் 142)

என்றும் பாராட்டிப் பேசும் பரணர் கண்ணகியின் துயரை,

                                    முகைபுரை விரலில் கண்ணீர் துடையா

                                    யாம்அவன் கிளைஞ ரேம்அல்லேம்; கேள்இனி;

                                    எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்

                                    வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்

                                    ஒல்லென ஒலிக்கும் தேரொடு

                                    முல்லை வேலி நல்லூ ரானே                                     (புறம் 144)

என்று படம்பிடித்துக்காட்டி “அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடியது” என்று கண்டிப்பார்.  இன்னொரு பாடலில் “நாங்கள் உன்னிடம் பசித்து வரவில்லை; எமக்குப் பரிசில் வேண்டும் சுற்றமும் இல்லை; நீ உன் மனைவியைச் சேர்ந்து அவள் துன்பத்தைப் போக்கு; இஃது யாம் இரந்த பரிசில்” (புறம் 145) என்பார்.  செறுத்த செய்யுள் செய்க் கபிலனோ,

                                    “நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்

                                    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று

                                    நின்னும் நின் மலையும் பாட இன்னாது

                                    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

                                    முலையகம் நனைப்ப விம்மிக்

                                    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே”     (புறம்  143)

என்று ஓர் அவலக்காட்சியை ஓவியப்படுத்தி, “யார்கொல் அளியள் தானே” என்று மறைமுகமாக, ஆனால் அவன் உள்ளத்தில் தைக்குமாறு ஒரு வினாவை எழுப்புகிறார்.

            அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமான் பேகன் அளித்த பெரும்பரிசிலைப் புறக்கணித்து

                                    அன்னவாக் நின் அருங்கல வெறுக்கை

                                    அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப்பேக         (புறம் 146)

என்று சினத்தொடுபேசி, “நீ என்னை நயந்து பரிசில் நல்குவையாயின் உன்னால் ஒதுக்கப்பட்ட மனைவியை நீ உடன்சேர வேண்டும் என்பதே நான் வேண்டும் பரிசில்” என்பார்.

            பெருங்குன்றூர்க் கிழாரும் இத்தகைய வேண்டுகோளையே முன்வைப்பார்: “ஆவியர்கோவே! நாங்கள் கல்முழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்தோம்.  கார்காலத்து வானிலிருந்து விழும் மழைத் துளிகளின் ஓசையை ஒருபெண் தனித்திருந்துகேட்டுத் துயர்தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.  அப்பெண்ணின் நெய்துறந்த கரிய கூந்தலை மணிபோல் மாசில்லாமல் கழுவிப் புதுமலர் அணியச் செய்வதற்கு இன்றே நீ செல்வாயானால் அஃதே நீ எமக்களிக்கும் பரிசில்” (புறம் 147).

            நான்கு பெரும் புலவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரே விதமான கருத்தைத் தெரிவித்திருப்பதால் இது வரலாற்று நிகழ்ச்சியென்பதில் ஐயமிருக்க வழியில்லை.  பேகனையும் கண்ணகியையும் இணைத்து வைக்கப் புலவர்கள் மேற்கொண்ட முயற்சி முற்றும் கற்பனையானது என்று கருதுவது அறிவீனமாகும்.  இப்பாடல்களைப் பெருந்திணையில் குறுங்கலித் துறையைச் சார்ந்தவையென்று திணை, துறை வகுத்தோர் இலக்கண வரம்பைத் தளர்த்தி, பெருந்திணை, குறுங்கலி ஆகியவற்றின் பாடுபொருளை விரிவு செய்துள்ளமை வரலாற்று நிகழ்ச்சியொன்றுபற்றிப்பேசும் அருமையான பாடல்களைத் தினை, துறை இலக்கணத்துள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே என்பது தெளிவாகிறது.

            பெருந்திணையென்பது பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுவது. ஒருவனால் துறக்கப்பட்ட மனைவியை அவனோடு சேர்த்து வைக்கும் நோக்குடன் நீ அவளிடம் அருள்காட்ட வேண்டும் என்று புலவர் வேண்டுதலே குறுங்கலியெனும் துறையென்று இப்பாடல்களை வைத்துக் கொண்டு அத்தகைய துறையைச் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.

            சங்கச்சான்றோர் எழுத்துத்தொழிலைச் சமுதாய நலனுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தினர். தமது அறிவு, மன, ஆன்ம வளர்ச்சிக்காகவோ, தாம்பெறும் முருகியல் இன்பத்திற்காகவோ என்று மட்டுமல்லாமல் தம்மைச் சூழ்ந்திருந்த மாந்தர் நல்வாழ்வுபெறத் தம்மால் இயன்றதையெல்லாம் செய்யும் நோக்குடன் தம் கவிதையாற்றலைக் கையாண்டனர். கிரேக்கப் பழங்கவிஞர்களோடு புறநானூற்றுப் புலவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பின்னவர் சிறப்பு தெளிவாகும். பிண்டார் (Pindas), சாஃபோ (Sappho) போன்ற கிரேக்கத் தன்னுணர்ச்சிப் பாடல்களில் வல்லுநர்கள் சமுதாய மேம்பாட்டில், மனிதஇன முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் அல்லர். “Social Consciousness was unknown to  the ancient Greek poets” என்று இன்றைய கிரேக்கக் கல்வியாளர்கள் அக்கவிஞர்களின் குறையைச் சுட்டிக்காட்டுவார்கள். பேரறிவு பெற்ற கவிஞர்கள் தம் கவிதைகள் மூலம் சமுதாயப்புரட்சிக்கு வித்திடவும் சட்டமியற்றவும் வருவதுரைக்கவும் வல்லவர்கள் என்று ஷெல்லி கூறுவார். புறநானூற்றுப் புலவர் பலர் இத்தகையோரே. தமிழ்வேந்தர் பலர் கல்வியின் இறையாண்மையினை நன்குணர்ந்து கற்றோர் கூறும் அறநெறியைக் காதுகொடுத்துக் கேட்டுத் தமது அரசுமுறையினை நடத்தி வந்தனர்; அன்னாரை நன்னெறியில் செலுத்த அறம் உரைக்கும் நல்லவைகளும் இருந்தன. பாண்டியன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் “அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும்” என்பதை ஏற்றுக்கொள்கிறான். புலமைத்தொழிலுக்கு அடிப்படையான கல்வியின் சிறப்பை அம்மன்னன்,

                                    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

                                    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

                                    பிறப்போ ரன்ன உடன் வயிற்று உள்ளும்

                                    சிறப்பின் பாலான் தாயும்மனம் திரியும்;

                                    ஒருகுடிப்பிறந்த பல்லோர் உள்ளும்

                                    மூத்தோன் வருக என்னாது அவருள்

                                    அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும்

                                    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

                                    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

                                    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. (புறம். 183)

என்று விளக்கக் காணலாம்.

            வேந்தர்க்குக்கடன் இதுவென அறிவுறுத்தும் மோசிகீரனார், “மாந்தர்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று; மலர்தலை உலகம் மன்னனையே உயிராகவுடையது; அதனால்தான் உயிர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு மன்னனின் கடமையும் ஆகும்” (புறம் 186) என்று கூறுவார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய வெள்ளைக்குடி நாகனார், “போரிட்டு நீ பெறும் வெற்றி உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மாரிப்பொய்ப்பின்னும் வாரிகுன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் இவ்வுலகம் அரசரையே பழிக்கும். ஆதனை நன்கு அறிந்து உழவுத்தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பர்களை நீ பாதுகாப்பாயானால் பகைவர்களும் நின் அடிபுறம் தருகுவர்” (புறம் 35) என்று பாடாண்திணையில் செவியறிவுறூஉ எனும் துறையில் தம் பாடலை அமைத்துக் கொள்வார். மன்னர்க்குப் புலவர் அறிவுரையை இடித்துக் கூறவே இத்துறை வழி செய்திருக்கக் காணலாம்.

            பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியிடம் ஓர் அரசன் வரியை எவ்வாறு திரட்டவேண்டும் என்பதையும் எடுத்துச்சொல்வார். “அறிவுடையவேந்தன் இறைகொள்ளும் நெறிஅறிந்து அவ்வாறே இறைபெறுவானாயின் அவனது நாடு அவன் ஆட்சி நடத்துவதற்குப் பெரும்பொருளை ஈட்டிக் கொடுத்துத் தானும் தழைக்கும். அதைவிடுத்து அரசன் அறிவால் குறைந்தவனாகி நாள்தோறும் தரம் அறியாது, நன்மையை எடுத்துக்கூறாது, அவன் விரும்புவதையே தாமும் விரும்பும் ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி அன்புகெடக் கொள்ளும் இறையானது யானை புக்க புலம்போல அவனுக்கும் பயன்படாது அவனது நாட்டையும் கெடுக்கும்” (புறம் 184) என்று அவர் கூறும் அறிவுரை இன்றைக்கும் பொருந்தும் நல்லரையாகும்.

            முடியுடைவேந்தர் மூவரில் ஒருவராயினும் அவரிடம் அச்சமின்றிப் பேசும் புலவர்களையும் புறநானூற்றில் காண்கிறோம். வெண்ணிப் பறந்தலையில் நடந்த பெரும்போரில் சோழன் கரிகால்பெருவளத்தான் வென்றான்; தோற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் விழுப்புண் பட்டதாலே புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்நீத்தான். சோழனது வெற்றியினும் சேரனது மானவுணர்வு உயரியது என்பதை வெண்ணிக்குயத்தியார் எனும் பெண்பாற்புலவர் சோழனிடமே கூறுகின்றார்.

                                    களிஇயல் யானைக் கரிகால் வளவ

                                    சென்றமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

                                    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே

                                    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

                                    மிகப் புகழ் உலக மெய்திப்

                                    புறப்புண் நாணி வடக்கிருந்தோனே. (புறம் 66)

            கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் “தேரும் படையும் களிறும் உடையார் என்பதாலே நாங்கள் பேரரசருடைய செல்வத்தை மதித்தல் செய்யோம். சிறிய ஊரையுடைய மன்னராயினும் எம்மிடத்தே முறையோடு நடந்துகொள்ளும் பண்புடையராயின் அவர்களையே நாங்கள் போற்றுவோம். யாம் பெரிதும் துன்புற்றாலும் சிறிதும் அறிவற்றவருடைய செல்வம் பயன்படாமையின் அதனை எண்ணோம். நல்ல அறிவினை உடையவர்களது வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக்கருதுவோம்.” (புறம் 197) என்றுரைப்பார்.

            இப்பாடல்களைப் பார்க்கும்போது அறிஞர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்காகப் போராடிய ஆங்கிலக்கவிஞர் மில்டனின் கூற்றகளும் அருஞ்செயல்களும் நம் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க இயலாது. மக்களாட்சிக்காகப் போராடிய இப்பெரும்புலவர் அவருடைய கருத்துக்களுக்கு எதிராக முடியரசை ஆதரித்துக் கட்டுரைகள் வெளிவந்தபோது, கண்பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும் கொடியவனாகிய இரண்டாம் சார்லசு மன்னனைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருந்தும், “எனது முடிவு உறுதியானது, மாற்றிக்கௌ;ள முடியாதது. என் கண்பார்வையை முற்றுமாக இழக்கவேண்டும்; அல்லது என் கடமையைச் செய்யாது நழுவவேண்டும்; ஆனால் கிரேக்க மருத்துவத் தெய்வமான எஸ்குலாபியசே நீ படிப்பதையும் எழுதுவதையும் விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்தாலும் கூட, நான் அதைக் கேட்கப் போவதில்லை” என்று கூறி அக்கட்டுரைகள் எழுப்பிய வினாக்களுக்குத் தக்க விடைகள் தாங்கிய கட்டுரையை எழுதினார். எழுத்தாளனின் உரிமைகளுக்காகப் போராடும் அரியோ பஜிடிகா எனும் நீண்ட கட்டுரையில், “நூல்களை அரசு தணிக்கை செய்தல் கூடாது; எனக்கு அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், என் கருத்துக்களைச் சொல்லவும், என் மனச்சாட்சியின்படி விடுதலையுணர்வோடு கலந்துரையாடவும் உரிமைகள் தரப்படல் வேண்டும்” என்று எழுதினார். அக்கட்டுரையின் தொடக்கத்தில் கிரேக்கத் துன்பியல் நாடக ஆசிரியரான யூரிபிடீசின் கீழ்க்கண்ட கூற்றை அவர் மேற்கோளாகத் தருவதும் குறிப்பிற்குரியது:

விடுதலையோடு பிறந்த மாந்தர் அச்சமின்றி விடுதலையுணர்வோடு பேசவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறவும் பெறுகின்ற உரிமைதான் உண்மையான உரிமையாகும். யார் அவ்வுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளமுடியுமோ, பயன்படுத்திக் கொள்கிறானோ அவன் பாராட்டுக்குரியவன். ஓர் ஆட்சியில் இதைவிட நேர்மையான உரிமை வேறு எதுவாக இருக்கமுடியும்?

            இங்கிலாந்தில் முடியரசு வீழ்ந்தபின், ஆலிவர் கிராம்வெல் என்பார் மக்கள்தலைவராகப் பதவியேற்றபோது, மில்டன் அவரைப் பாராட்டிப்பேசுவதையே தொழிலாகக் கொள்ளாது அவன் எதனைச் செய்யவேண்டும், எதனைத் தவிர்க்கவேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கத் தயங்கவில்லை.

நீ இதுகாறும் மக்களுடைய உரிமையின் காவலனாகவும் அவ்வுரிமையின் புரவலனாகவும் செயல்பட்டு வந்திருக்கிறாய். நேர்மை, அறவுணர்வு, நற்பண்பு ஆகியவற்றில் உன்னை விஞ்சியவர்கள் யாருமில்லை. ஆயினும் நீ போற்றிக்காத்த உரிமைக்கு எதிராக அதனை அழிப்பதற்கு முயல்வாயானால், உனது நடத்தை உரிமைக்கு எதிராக மட்டுமல்லாமல் நேர்மை, அறவுணர்வு, நற்பண்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் செயல்படுவதாக அமையும்… எதிர்காலச் சந்ததியினர் உனது இயல்புபற்றி இழிவான எண்ணங்கொண்டு உன்னை மறப்பர்.

            கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய மில்டன் இக்காலக் கவிஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர். அவருடைய பேச்சும் எழுத்தும் செயலும் புறநானூற்றுக் கவிஞர்பலர் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நாம் எண்ணிப்பார்க்கத் துணை செய்யும்.

            கவிஞரின் கடமைகளும் உரிமைகளும் பற்றி ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி கூறும் கருத்துக்களும் இங்கு எண்ணிப் பார்க்கப்படவேண்டியவை:

புலவர் ஒவ்வொருவம் ஒரு குறுகிய கால எல்லைக்குள் தம் வாழ்வை முடித்துக் கொள்பவராயினும் நீண்ட, நெடுங்கால மாந்தர்வாழ்வின் வரலாற்றிலும் பங்கு பெறுவோராவர்; நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தம் பங்களிப்பைச் செய்தோராவர்; கவிதையெழுதுதல் மட்டும் அவர்களது தொழில் அன்று; கவிதையின் மூலம் சமுதாயப் புரட்சிகளுக்கு வித்திட்டு, வருவது உணர்ந்து, அதற்கேற்ப எதிர்காலச் சந்ததியினரின் அரசியல், சமுதாய வாழ்வை நெறிப்படுத்தும் சட்டங்கள் இயற்றவும் வழி செய்வோராவர்.

கவிஞர்கள் எவ்வாறு ஒப்புரவொழுகலையும், பிறர்நலம் பேணலையும் மாந்த இனம் முழுமையும் கடைத்தேற நன்னெறி காட்டலையும் செய்ய இயலுகிறது என்பதையும் ஆராய்ந்துரைப்பர் ஷெல்லி.

அன்பே அறக்கருத்துக்களின் அடிப்படையாகும். அவ்வன்பானது நம்மை நம்மிலிருந்து வெளிக் கொணர்வது; நமக்குச் சொந்தமில்லாத கருத்து, செயல், மாந்தன் ஆகியவற்றில் வாழும் அழகுக் கூறுகளோடு நம்மை ஒருங்கிணைத்துக்கொள்ளும் இயல்பாகும். ஒரு மனிதன் மீவுயர் மனிதனாக வாழவேண்டுமானால் ஆழமாகவும் விரிவாகவும் கற்பனைசெய்யும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அவன்தன்னை மற்றொருவனுடைய, வேறு பலருடைய, இடத்தில் வைத்துப்பார்க்கும் மனநிலை உடையவனாதல் வேண்டும். மாந்த இனத்தின் துன்பங்கள், இன்பங்கள் யாவும் அவனுடையதாதல் வேண்டும். நல்லறம் செய்யத் தூண்டும் கருவி கற்பனையேயாகும். கவிதையானது காரணத்தில் செயல்பட்டுக் காரியம் நடைபெற வழிவகுக்கின்றது; தன்னைப் பிறர் நிலையில் எண்ணிப்பார்க்கும் கற்பனையின்மூலம் பிறர்நலம் பேணும் செயல்களில் ஈடுபடுத்துகிறது.

            புறநானூற்றுக் கவிஞர்கள் இத்தகைய கற்பனை வளத்தைப் பெற்றிருந்ததால்தான் சமுதாய நலனில் அக்கறைகாட்டியதோடு மன்னர்களும் பிற புரவலர்களும் அதில் ஆர்வம் கொள்ளத் தூண்டுகின்ற கவிதைகளைப் படைப்பதில் வல்லவர்களாகவும் இருந்தார்கள். அதனையே தமது கடமையாகவும் தொழிலாகவும் கொண்டு செயல்பட்டார்கள்.

            வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாய் விளங்கிய பாரி முடியுடை மன்னரின் வஞ்சத்தால் கொலையுண்டபின் அவனது மகளிர் இருவர்க்கும் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பைக் கபிலர் ஏற்றுக் கொள்கிறார். நாடும் செல்வமும் தந்தையும் ஒருங்கே இழந்த அப்பெண்டிரை மணக்க எக்குறுநில மன்னரும் முன்வராத நிலையில் மனமுடைந்த அப்புலவர்பெருமான் அன்னாரின் பகைமையைத் தேடிக்கொள்ளவும் தயங்காது ஊர்ஊராக அம்மங்கையரை அழைத்துச் செல்கிறார். பாரி மகளிரை ஏற்றுக்கொள்ளாத இருங்கோவேளைக் கபிலர் கடுமையாகச் சாடும் கவிதையும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

உன்மூதாதை, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்,” புகழ்ந்த செய்யுள்

கழாத்தலையாரை இகழ்ந்ததால் உங்களுடைய புகழ்வாய்ந்த மூதூர் அழிந்தது என்பதை நினைவில் கொள்வாயாக (புறம் 202).

விச்சிக்கோவிடம் பாரிமகளிரை அழைத்துச் சென்று

                                    இவரே பூத்;தலை யறாஅப் புனைகொடி முல்லை

                                    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்

                                    கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

                                    பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர்;

                                    யானே பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே

                                    வரிசையில் வணக்கும் வாள்மேம்படுநன்

                                    நினக்குயான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்

                                    அடங்கா மன்னரை அடக்கும்

                                    மடங்கா விளையுள் நாடுகிழ வோயே (புறம் 200)

என்று கபிலர் அவனிடம் வேண்டும் பாடலும் இருப்பதால் இது வரலாற்று நிகழ்ச்சியெனக் கொள்வதில் தடையேதுமில்லை.

            பிசிராந்தையும் கோப்பெருஞ்சோழனும், அவ்வையும் அதியமானும், புலவரும் புரவலருமாக அல்லாமல் கெழுதகைநட்புக் கொண்டவர்களாகவே இருந்தார்களென்பதைக் காட்டும் பாடல்களும் வரலாற்று உண்மைகொண்டவையே. பிசிராந்தையார் அன்னச்சோலை விளித்து, “நீ உறந்தைசென்று கோப்பெருஞ்சோழனைக் கண்டு ‘நான் பிசிராந்தையின் அடியுறை’ என்று கூறினால் அவன்  நின் இன்புறுபேடை அணியத் தன் நன்புறு நன்கலம் நல்குவன்” (புறம் 67) என்று சொல்லும்போது அவர்களுக்குள்ளிருக்கும் நட்பைச் சிறப்பித்துக் கூறுகிறார். வடக்கிருந்த சோழன் அவனருகில் இருந்த சான்றோரிடம் பிசிராந்தையார் நிகழ்ந்தது அறிந்தால் உடன் வருவார் என்பதை,

                                    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

                                    பிசிரோன் என்ப, என் உயிர் ஓம் புநனே;

                                    செல்வக் காலை நிற்பினும்

                                    அல்லற் காலை நில்லன் மன்னே (புறம் 215)

என்று அவர்தம் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறான். அவர் உறுதியாக வருவார் என்பதால், அவருக்கு இடம் ஒதுக்கி வைக்குமாறு நண்பர்களிடம் வேண்டுகிறான்:

                                    இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,

                                    புகழ்கெட வரூஉம் பொய்வேண்டலனே,

                                    புன்பெயர் கிளக்கும் காலை ‘என்பெயர்

                                    பேதைச் சோழன்’ என்னும் சிறந்த

                                    காதற் கிழமையும் உடையவன்; அதன்தலை

                                    இன்னதோர் காலை நில்லலன்,

                                    இன்னேவருகுவன், ஒழிக்க, அவற்கு இடமே! (புறம் 216)

பிசிராந்தையார் வந்ததுகண்டு பொத்தியார் வியந்து பாடுகிறார்:

                        ‘வருவன்’ என்ற கோனது பெருமையும்

                                    அது பழுதின்றி வந்தவன் அறிவும்

                        வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே. (புறம் 217)

            வடக்கிருந்த பிசிராந்தையைக்கண்டு கண்ணகனார் பாடுவதும் இந்நட்பின் வரலாற்று உண்மைக்குச் சான்றாகிறது:

                                   சான்றோர்

                                    சான்றோர் பாலர் ஆகுப;

                                    சாலார் சாலார் பாலர் ஆகுபவே. (புறம் 218)

            அதியமான் நெடுமான் அஞ்சியின் போர்;த்திறனையும் வள்ளன்மையையும் பல பாடல்களில் அரிய உவமைகள் கொண்டு பாராட்டும் அவ்வை அவன் பொருட்டுத் தூது செல்லும் பணியையும் மேற்கொள்கிறார். தன் படைக்கருவிகளைப் பெருமிதத்தோடு காண்பித்த தொண்டைமானிடம்

                                    இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

                                    கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து

                                    கடியுடைய வியன் நகரவ்வே; அவ்வே

                                    பகைவர்க்குத்திக் கோடுநுதி சிதைந்து

                                    கொல்துறைக் குற்றில மாதோ என்றும்

                                    உண்டாயின் பதம் கொடுத்து

                                    இல்லாயின் உடன் உண்ணும்

                                    இல்லோர் ஒக்கல் தலைவன்

                                    அண்ணல் எம் கோன் வைந்நுதி வேலே (புறம் 95)

என்று அம்மன்னனுக்கு அறிவுகொளுத்தும் வண்ணம் அதியன் பல போர்க்களங்களைக் கண்டவன், அவனை வெல்வது எளிதன்று என்று மறைமுகமாகத் தெரிவிக்கக் காணலாம்.

            அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களில் ஐம்பத்தொன்பது பாடல்களைப் பாடியுள்ள அவ்வையார் எனும் பெரும்பெயர்க்குரிய கவிஞர், தன்னைப்புரக்கும் குறுநில மன்னனுக்கு உதவ,

                                                      இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

                                                                     உறுதி பயப்பதாம் தூது

என்னும் குறட்பாவிற்கு இணங்க இன்னொரு மன்னனிடம் தூது சென்றுள்ளதை அறிவிக்கும்பாடல் சங்ககாலப் புலவர்கள் எழுத்துத்தொழில் திறனை மக்கள் நலனுக்கு ஒல்லும் வசையெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டும்.

            தவறு செய்த மன்னர்களைத் தட்டிக்கேட்கும் உள்ளவுரம் கொண்ட கோவூர் கிழார் பரிசில்நாட்டமே தலைநோக்காய்க் கொண்ட வாணிகப்புலவர் அல்லர் என்பதையும் மக்கள்நலன் கருதி மன்னர்க்கு அறவுரைகூறி நல்வழிப்படுத்திய பெருந்தகையாளர் என்பதையும் நிறுவும் பாடல்கள் பல புறநானூற்றில் உண்டு.

            சோழன் நலங்கிள்ளியின் நாட்டுவளத்தையும் கொடைச்சிறப்பையும் வெற்றிகளையும் பாடிய கோவூர்கிழார் உறையூரை நலங்கிள்ளி முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போர்மேற்கொள்ளாமல் தன் அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டிருந்ததைக் கண்டித்து, “உன்நாட்டில் முற்றுகை காரணமாக, யானைகள் குளங்களில் படியாமல் உள்ளன; உணவுக் கவளங்களை உண்ணாமல் பெருமூச்சு விட்டுக் கலங்கி இடிஇடிப்பதுபோல் பிளிறுகின்றன; குழவிகள் பாலில்லாமல் அலறுகின்றன; மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிகின்றார்கள்; மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது; இச்சூழலில் நீ இங்கு இனிது இருத்தல் இன்னாதது. அறவழியில் நடப்பவனானால் நாட்டை நலங்கிள்ளிக்கு அளித்துப்போரை நிறுத்து; மறவழியில் நடப்பவனானால் கோட்டைக் கதவுகளைத் திறந்து போருக்குச் செல். நீ இவ்வாறு நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தகவுடைத்து” (புறம் 44) என்று அஞ்சாமல் அறம் கூறுவார்.

            நெடுங்கிள்ளியை இவ்வாறு சாடியவர் சோழமன்னர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் போர்புரிவது எவ்வளவு அறிவீனம் என்பதை இருவர்க்கும் எடுத்துச் சொல்கிறார்: “இருவருடைய மாலைகளும் ஆத்திப்பூக்களால் தொடுக்கப்பட்டவை. யார்தோற்றாலும் தோற்பது சோழனின் குடியே. இருவரும் ஒருபோரில் வெற்றி பெறுவதென்பது இயலாதது. இப்போரானது நும்மோர்அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகையை ஊட்டுவதாகும்.” (புறம் 45)

            இளந்தத்தன் என்னும் புலவர் உறையூருக்குச் சென்றபோது அவரை வெளிநாட்டிலிருந்து வந்த ஒற்றன் என்று தவறாகக் கருதி நெடுங்கிள்ளி கொலை செய்யமுனைந்தபோது கோவூர்க்கிழார் அரசனுக்கு உண்மையை எடுத்துக்கூறிப் புலவரைக் காப்பாற்றினார். “வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீமை கருதாத வாழ்க்கையாகும். தம்மோடு மாறுபட்டவர்களைத் தம்புலமையால் வென்று தலைநிமிர்ந்து நடக்கும் புலவர்கள் மண்ணாள் செல்வம் எய்திய மன்னரை ஒத்த பெருமிதம் உடையவர்கள்” (புறம் 47) என்று புலவர் தொழிலின் சிறப்பையும் கூறினார்.

            குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அவனது பகைவனான மலையமானின் சிறுவர்களை யானையின் காலின் கீழிட்டுக் கொல்ல முயன்றபோது அவனுக்கு அறிவுரை கூறிய பெருமையும் கோவூர்கிழார்க்கு உண்டு. “நீ புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலன் உழுது உண்பவர்களாகிய புலவர்களை ஆதரித்த மலையமானின் மக்கள். தம்மைக் கொல்லவரும் களிற்றினைக் கண்டு அஞ்சி அழுகிறார்கள். இவர்களைத் துன்புறுத்தாதே. நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன். நீ உன் விருப்பப்படி செயல்படு” என்று அவனது அறியாமையை இடித்துக் கூறுகிறார் தமது பாடலில் (புறம் 46).

            போரில் வெற்றிகண்ட மன்னர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் யாவரும் மண்ணாள்வோரின் போர்வெறியைத் தூண்டி அவர்களை ஊக்கினார்கள் என்று கருதுவது தவறாகும். போரினால் நாடும்மக்களும் அடையும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி மறைமுகமாக மன்னரைத் தெருட்டிய பாடல்கள் பலவும் புறுநானூற்றில் உண்டு. இவற்றுள் பரணர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

            சோழன் உருவப் பஃறோர் இளஞ்சேட் சென்னியின் நாற்படை வலிமையைப் பாராட்டிப்பாடும் பரணர் இறுதியில், “நீ இத்தகைய பேராற்றல் கொண்டவனாக இருப்பதால் உன் பகைவர்களுடைய நாட்டு மக்கள் தாயில்லாத குழவிகள் போல ஓயாது கூவி வருந்துகின்றனர்” (புறம் 4) என்பார். சோழன் பெருவிறற்கிள்ளியும் சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதனும் நிகழ்த்திய போரில் இருவரும் மாண்டனர்; இருவர் படைகளும் அழிந்தன. இதனைப் பாடுபொருளாக்கும் பரணர், “பல யானைகள் அம்பால் தாக்கப்பட்டுப் போர்த் தொழிலின்றி இறந்தன; புரவிகள் எல்லாம் மறத்தகை மைந்தரொடு மாண்டன; தேர்வீரர் யாவரும் தோல் கண்மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர்; முரசுகள் தாங்குவோர் இன்மையின் தரையில் கிடந்தன; மார்பில் நெடுவேல் பாய்ந்ததால் இருவேந்தரும் இறந்தனர்; பெருவளமுடைய நாட்டின்நிலை யாதாகுமோ?” (புறம் 63) என்று அவலச்சுவை ஓங்கி நிற்கும் பாடலை எழுதியுள்ளார். இது போரில் வென்ற மன்னனைப் பரிசில் பெறும் நோக்குடன் பாராட்டிப்பாடப் பட்டதன்று என்பது நாம் நினைவில் கொள்ளவேண்டிய கருத்தாகும்.

            பரணரின் மகட்பாற் காஞ்சிப்பாடல்கள் போரினால் வரும் பேரழிவைச் சுட்டிக்காட்டி அவலஉணர்வை மிகுவிப்பன. “வேட்டவேந்தனும் பெருஞ்சினத்தினன்;; இவள் தந்தையும் எளிதில் பணியாதவன்; இப்பெண்ணால் இவ்வருங்கடிமூதூர் பெரும்பேதுற்றது; முற்றுமாக அழியப்போகிறது” (புறம் 336). “இப்பெண்ணைத்தர அவள்தந்தை மறுப்பதால் மென்புனல் வைப்பின் இத்தண்பணை ஊர், களிறு பொரக் கலங்கிய தண்கயம்போலப் பெருங்கவின் இழப்பது கொல்லோ!” (புறம் 341). “முசிறியன்ன விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும் தகுதியற்றோர்க்கு இவள் தந்தை மணம் செய்து கொடுக்க மாட்டான். இந்த நெடுநல்ஊர் போரில் அழியப்போவதையெண்ணி மதில்மேல் சாய்த்து வைக்கப்பட்ட ஏணியும் வருந்துகின்றதோ?” (புறம் 343). “இவளை இவள் தாய் ஈனாதிருப்பாளாயின், எம்பெருந்துறை மரங்கள், நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும் செந்நுதல் யானை பிணிப்ப, வருந்துதல் நேர்ந்திராது” (புறம் 348). “மடந்தை மான்பிணை அன்ன மகிழ்மட நோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ!” (புறம் 354)

            பிறபுலவர்கள் பாடியுள்ள மகட்பாற் காஞ்சிப் பாடல்களும் போரால் ஊர் அழியப் போவதற்கு ஒருபெண் காரணமாகி விட்டாளே என்ற கருத்தையே வற்புறுத்தி நம் உள்ளத்தை உருக்கும் தன்மையவை. அண்டவர்மகன் குறுவழுதியின் பாடல் “அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள்நலனே” (புறம் 346) என்றும் மருதனிளநாகனார் பாடல் “அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படுசிறு தீப்போல அணங்காயினள் தான் பிறந்த ஊர்;க்கே” (புறம் 349) என்றும் ஆயத்தனார் பாடல் “தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர் யாங்காவது கொல் தானே தாங்காது” (புறம் 350) என்றும் மதுரைப் படைமங்;க மன்னியார் பாடல் “என் ஆவது கொல் தானே – தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரிநாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின் இப்பணைநல்லூரே?” (புறம் 351) என்றும் ஒரு சில வரிகளிலே ஒரு துன்பியல் நாடகத்தைப் படைத்துவிடக் காணலாம். இவையெல்லாம் அப்புலவர்கள் பரிசிலுக்காகவன்றிப் போரின் கொடுமையை உலகுக்குணர்த்தவே பாடியவை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

            புறநானூற்றில் இடம்பெற்றுள்ள புலவர் பலர் புலமைத் தொழிலால் வறுமையில் வாட வேண்டியிருந்தும், முடியுடை வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் ஊர் ஊராகச் சென்று இரந்து வாழவேண்டியிருந்தும், எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தும், அத்தொழிலை உயர்வுடையதாகக் கருதித் தாம் பெற்றிருந்த அறிவு முதிர்ச்சியையும் எழுத்தாற்றலையும் சமுதாய நலனுக்காகப் பயன்படுத்தினார் என்பது பெரும்பாராட்டுக்குரியதாகும். கிரேக்கம் முதலான ஏனைய தொன்மைச் செம்மொழிகளில் இத்தகைய புலவர் குழுக்களைக் காண்டல் அரிது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. ப. மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here