பதம் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?

பதம் என்றால் என்ன வகைகள் யாவை
பதம் என்பதற்கு சொல் என்று பொருள். பதம் இருவகைப்படும்.
1.பகாப்பதம்
2.பகுபதம்

1.பகாப்பதம்

“பகுப்பாற் பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற                          
பெயர்வினை இடையுரி நான்கும் பகாப்பதம்”  (நன்னூல்.131)

பகாப்பதம் நான்கு வகைப்படும்

1.பெயர்ப் பகாப்பதம் : (எ.கா) தமிழ், அன்னை, நீர்
2. வினைப் பகாப்பதம் : (எ.கா) வாழ், வளர், படி, எழுது

3. இடைப் பகாப்பதம் : (எ-கா) போல, மற்று, ஆல்

4. உரிப் பகாப்பதம் : (எ.கா) நனி, தவ, சால

குறிப்பு: இடைச் சொல்லும் உரிச்சொல்லும் எப்போதும் பகாப்பதங்களாகவே இருக்கும்.


2.பகுபதம்

பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான பதம் பகுபதம் எனப்படும்.

(எ.கா) தலைவர் = தலை + வ்+ அர்
செய்தாள் = செய் +த் + ஆள்
பகுபதம் இருவகைப்படும்.
1.பெயர்ப்பகுபதம்
2 வினைப்பகுபதம்
1.பெயர்ப்பகுபதம்
பகுபதம் பெயர்ச்சொல்லாக இருப்பின் அது பெயர்ப்பகுபதம் எனப்படும்.
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்.

1. பொருட்பெயர்ப் பகுபதம்      : (எ.கா) பொன்னன், செல்வன்

2. இடப்பெயர்ப் பகுபதம்            : (எ.கா) ஊரன், மதுரையான்

3 காலப்பெயர்ப் பகுபதம்           : (எ.கா) கார்த்திகையான்

4. சினைப்பெயர்ப் பகுபதம்      : (எ.கா) கண்ணன், தலையன்

5. பண்புப்பெயர்ப் பகுபதம்      : (எ.கா) கரியன், இனியன்

6. தொழிற்பெயர்ப் பகுபதம்     : (எ.கா) இயக்குநர், ஒட்டுநர்

2.வினைப்பகுபதம்
பகுபதம் வினைசிசொல்லாக இருப்பின் அது வினைப் பகுபதம் எனப்படும். வினைப்பருபதம் இரண்டு வகைப்படும்.

1 தெரிநிலை வினைப்பகுபதம்            : (எ.கா) படித்தான். ஓடிவான்

2. குறிப்பு விளைப்பகுபதம்                    :  (எ.கா) நல்லன்.

பகுபத உறுப்புகள்

“பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்”  (நன்னூல்.133)

பகுபத உறுப்புகள் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

1.பகுதி
2 விகுதி
3.இடைநிலை
4.சாரியை
5 சந்தி
6 விகாரம்

பகுபத உறுப்புகள்

ஒரு பகுபதத்தில் ஆறு உறுப்புகளும் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பகுதி, விகுதி என்னும் இரண்டும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

1.பகுதி

“தத்தம் பகாப்பதங்களே பகுதியாகும்”  (நன்னூல்.134 )
ஒரு பகுபதத்தில் முதலில் நிற்கும் உறுப்பு பகுதி ஆகும்.
பகுதி கட்டளைச் சொல்லாக இருக்கும்.
பகுதி பகாப்பதமாக இருக்கும்.
வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி தொழிலை உணர்த்தும்.
பகுதி, ‘முதனிலை’ என்ற பெயராலும் அறியப்படும்.
பெயர்ப் பகுபசுத்தில் உள்ள பகுதி பெயரை உணர்த்தும்.
(எ.கா)
கண்ணன் – இதன் பகுதி – கண்
நாடன்- இதன் பகுதி – நாடு
வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி, முன்னிலையில் உள்ள ஒருவனை நோக்கி ஏவுதற்குரிய சொல்லின் வடிவில் அமைந்திருக்கும்.

வினைப்பகுபதம்

2.விகுதி

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்
அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓமொடு உம் ஊர்
கடதற ஐ ஆய் இம்மின் இர்ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே (நன்னூல்.140)
ஒரு பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி எனப்படும்.
விகுதிக்கு வேறு பெயர் ‘இறுதிநிலை’ என்பதாகும்.
வினைமுற்றுப் பகுபதத்தில் வரும் விகுதி, திணை, பால், எண், இடம், எச்சம், முற்று, வியங்கோள்             ஆகியவற்றை உணர்த்தும்.
♣  விகுதிகளாக வரும் சிலவற்றைக் கீழ்க்காணலாம்.
விகுதிகள்
       

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் அமைந்துள்ள விகுதிகள் இருதிணை, ஐம்பால், மூவிடம், ஈரெண், ஈரெச்சம், வியங்கோள் ஆகியவற்றை உணர்த்துவதையும் புரிந்து கொள்ளுங்கள்.

3.இடைநிலை

ஒரு பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
இடைநிலை இருவகைப்படும்.
1.பெயர் இடைநிலை
2.வினை இடைநிலை
1.பெயர் இடைநிலை
பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை பெயர் இடைநிலை எனப்படும்.
பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை காலம் காட்டாது.
(எ.கா)               தலைவர் = தலை + வ் + அர்
இச்சொல்லின் இடையிலுள்ள ‘வ்’ என்பது இடைநிலை. இது காலம் காட்டாது.
2.வினை இடைநிலை
வினைப்பகுபதத்தில் உள்ள இடைநிலை வினை இடைநிலை எனப்படும்.
வினை இடைநிலை காலம் காட்டும்.
அதன் அடிப்படையில் வினை இடைநிலையை மூன்று வகைகளாகப் பிரிப்பர்.
1.நிகழ்கால இடைநிலை   
2.இறந்தகால இடைநிலை
3.எதிர்கால இடைநிலை
“இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனவே” (நன்னூல்.141)
1.நிகழ்கால இடைநிலைகள் :  (கிறு, கின்று, ஆநின்று)
“ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழு தறைவினை இடைநிலை”  (நன்னூல்.143)
(எ.கா)
ஓடுகிறான் = ஓடு + கிறு + ஆன்   (இடைநிலை – கிறு)
பேசுகின்றாள் = பேசு + கின்று + ஆள்  (இடைநிலை –கின்று)
பேசாநின்றாள் = பேசு + ஆநின்று + ஆன்  (இடைநிலைஆநின்று)
மேற்கண்ட வினைச் சொற்கள் ‘கிறு’ ‘கின்று’ ஆநின்று’ என்னும் இடைநிலைகளைப் பெற்று நிகழ்காலம் காட்டுகின்றன.
2.இறந்தகால இடைநிலைகள் : (த், ட்,ற், இன்)
“தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தருந்தொழில் இடைநிலை”  (நன்னூல்.142)
(எ.கா)
செய்தான் = செய் + த் + ஆன் (இடைநிலை – த்)
உண்டான்  =உண் + ட் + ஆன் (இடைநிலை – ட்)
தின்றான்  = தின் + ற் + ஆன்  (இடைநிலை – ற்)
உறங்கினான் = உறங்கி + இன் + ஆன் (இடைநிலை – இன்)
மேற்கண்ட வினைச் சொற்கள் த், ட், ற், இன் என்னும் இடைநிலைகளைப் பெற்று இறந்தகாலம் காட்டுகின்றன.
3.எதிர்கால இடைநிலைகள் : ( ப், வ்)
“பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை ஆமிவை சிலஇல” (நன்னூல்.144)
(எ.கா)
காண்பான் = காண் + ப் + ஆன் (இடைநிலை – ப்)
கூறுவாள் = கூறு + வ் + ஆள் (இடைநிலை – வ்)
மேற்கண்ட வினைச் சொற்களில் உள்ள ப், வ் என்னும் இடைநிலைகள் எதிர்காலம் உணர்த்துகின்றன.  இவை மூன்றும் அல்லாத எதிர்மறையை உணர்த்துகின்ற இடைநிலைகளும் உள்ளன.
எதிர் மறை இடைநிலைகள் : (இல், அல், அ)
கண்டிலன் = காண் + ட் + இல் + அன் (இடைநிலை – இல்)
செல்லன்மின் = செல் + அல் + மின்  (இடைநிலை – அல்)
கூறான் =  கூறு + ஆ + அவ்  ( இடைநிலை ஆ)
மேற்கண்ட சொற்கள் இல், அல், ஆ என்னும் இடைநிலைகளைப் பெற்று எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றன.

4.சாரியை

சாரியை என்பது பகுபதத்தில் பெரும்பாலும் இடைநிலை, விகுதி ஆகியவற்றிற்கு இடையிலும், சிறுபான்மை பிற இடங்களிலும் வரும் உறுப்பாகும்.
இது தனியாகப் பொருள் தராது.
பகுபதங்கள் எல்லாவற்றிலும் சாரியை வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
(எ.கா)
உண்டனன் =  உண் + ட் + அன் + அன்
இதில் ‘ட்’ என்னும் இடைநிலைக்கும், ஈற்றிலுள்ள ‘அன்’ என்னும் விகுதிக்கும் இடையில் வரும் ‘அன்’ என்பது சாரியையாகும்.
அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அந்து, அம், தம், நம், நும், ஏ. அ,உ.ஐ.கு. ள என்பன சாரிவைகளாக வரும்.
(எ.கா)
அறிகுவாம் =அறி+ கு + வ் + ஆம்  (சாரியை – கு)
புளியங்காய் = புளி + அம் + காய் (சாரியை  – அம்)
மரத்தை = மரம் + அத்து + ஐ   (சாரியை – ஐ)

5.சந்தி

ஒரு பகுபதத்தில் அமைந்துள்ள பகுதியையும், இடைநிலை, விகுதி முதலியவற்றையும் இணைக்கும் உறுப்பு சந்தி ஆகும்.
சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும்.
சிறுபான்மை வேறு இடங்களிலும் வரலாம்.
பகுபதங்கள் எல்லாவற்றிலும் சந்தி வர வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை.
(எ.கா)
படித்தான் -படி+த்+த்+ தேன்
இச்சொல்லில் ‘படி’ என்னும் பகுதியை அடுத்து ‘த்’ என்னும் எழுத்து வந்துள்ளது. இது சந்தியாகும் இச்சந்தி அடுத்து வந்துள்ள உறுப்புகளை பகுதியோடு இணைத்து நிற்பதைக் கவனிக்கவும்.

6.விகாரம்

விகாரம் என்பது தனி உறுப்பு இல்லை.
பகுதி, சந்தி ஆகிய உறுப்புகளில் உண்டாகும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா)
கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்
காண் என்னும் பகுதி கண் என விகாரப்பட்டது. பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாக இருக்கும். மூன்று காலங்களுக்கும் ஒன்றே ஆகையால் ‘காண்’ என்பதே பகுதியாக இருக்க வேண்டும்.
நடந்தான் = நட + த் (ந்) + த் + ஆன்
இதில் ‘நட’ என்னும் பகுதியை அடுத்துள்ள சந்தி ‘த்’ ஆகும் இச்சந்தியைத் திரிக்காமல் எடுத்துக் கொண்டால் ‘நடத்தான்’ என்று கூற வேண்டும். ஆனால் நடந்தான் என்பது சொல்லாகையால் ‘த்’ என்னும் சந்தி ‘ந்’ எனத் திரிந்து வந்துள்ளது.
வந்தாள் = வா (வ) + த் (ந்) + த் + ஆள்
வா என்னும் பகுதி ‘வ’ என விகாரப்பட்டது. த் என்னும் சந்தி ‘ந்’ என விகாரப்பட்டது.

விகாரம் மூன்று வகைப்படும்

1.தோன்றல் விகாரம்
2.திரிதல் விகாரம்
3.கெடுதல் விகாரம்
1.தோன்றல் விகாரம் : எழுத்துக்களில் புதியதாக ஓர் எழுத்துத் தோன்றுதல்.
(எ.கா)             பூ+ கொடி = பூங்கொடி ( ங் – தோன்றல்)
2.திரிதல் விகாரம்  : எழுத்துக்களில் ஓரெழுத்து இன்னொரு எழுத்தாக மாற்றம் பெறுதல்
(எ.கா)           பல்+ பொடி = பற்பொடி ( ல் – ற் மாக திரிதல்)
3.கெடுதல் விகாரம்  : எழுத்துக்களில் உள்ளது ஒன்று கெட்டுப்போதல் ஆகும்.
(எ.கா)           மரம்+ வேர் = மரவேர் ( ம் – கெட்டுப்போதல்)

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here