‘நோக்கு’ என்னும் சிந்தனை செய்யுள் பற்றியது. செய்யுளியலின் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புக்கள் பற்றிக் கூறும் தொல்காப்பியர் ‘நோக்கு’ என்பதைப் பத்தாம் உறுப்பாக வைத்துள்ளார். நோக்கு வடிவம் சார்ந்த உறுப்புக்களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. நோக்கு என்பது ஒரு கருத்தைச் சொல்லுங்கால் வரிசையாக இயையுமாறு தொடர்ந்து செல்வது எனக் கூறப்படுகிறது. இடையில் முறிவு இன்றி ஒரு போக்காகக் கருத்துச் செல்லுமாறு ‘நோக்கு’ ஆகும். யாதானும் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காமல் அதனையே நோக்கி நின்ற நிலை நோக்கு’ என்பது இளம்பூரணர் கருத்து.” இது செய்யுளின் ஓரடியிலும் அல்லது பா முழுதும் அமையலாம். இந்நோக்கு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி என்ற ஐவகைக் கூறுகளும் இணைந்துருவாகும் ஓர் இலக்கியச் சிறப்பு என்று ச.வே.சுப்பிரமணியன் ‘இலக்கிய வகையும் வடிவும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
‘மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கு எனப்படுமே‘
என்று நோக்கு என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்குகின்றார். இதன்கண் ‘அடிநிலை காறும்` என்றதனான் ஓர் அடிக்கண்ணும் பல அடிக்கண்ணும் இந்நோக்கு அமையும் என்பது இளம்பூரணர் கருத்து. இது ஒரு நோக்காக ஓடுதலும், பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு ஓடுதலும் என மூவகைப்படும்.
ஒரு செய்யுள் முழுவதும் ஆற்றொழுக்காகப் பொருள் அமைந்து நிற்றல் என்பது ஒரு நோக்காக ஓடுதலாகும். பல நோக்காக ஓடுதல் என்பது செய்யுள் ஆங்காங்கு நின்று பொருள் முடிவதாகும். இடையீட்டு நோக்குதல் என்பது செய்யுளில் ஓரிடத்து நின்ற சொல் பிறிதோரிடத்துச் சென்று இயைந்த பொருள் தருதலாகும். செய்யுளில் எத்தனை அடிகள் இருப்பினும் அவற்றில் அமைந்துள்ள மாத்திரையும் எழுத்தும், அசையும் சீரும் ஆகிய எல்லாம் மீண்டும் நோக்கி நோக்கிப் பயன் கொள்ளும் வகையில் வற்றாத அறிவின் ஊற்றாய்ப் புதியபுதிய கருத்துக்களைத் தருவனவாய் இருத்தல் வேண்டும். அதுவே நோக்கு என்னும் உறுப்பாகும்.
மாத்திரை முதல் அடிநிலை வரை சொல்லப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் இந்நோக்கு நிலைக்கு உதவுவனவாய் அமைதல் வேண்டும். ‘படைப்போன் படைப்பு வன்மையால் நோக்கு அமையப் படைப்பானெனினும், அது துலங்குவது, வெளிப்படுவது, பாராட்டப்படுவது, நிறைகுறை அறியப்படுவது நோக்குவோன் இடத்திலேயாம். எனவே இக்கோட்பாட்டிற்கு ‘நோக்கு’ எனப் தமிழண்ணல் குறிப்பிடுகின்றார்.” நோக்கு என்ற சொல் தமிழ் பெயரிட்டது. இன்று நோக்கினும் புதுமையாக உள்ளது’ என்று பல இலக்கியத்தில் பயிற்சியுடைய சொல்லாகும். திருக்குறளில் இடங்களில் வந்துள்ளது. காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதலை ‘நோக்கு’ என்னும் சொல்லால் அவர் குறிக்கிறார்.
முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பின்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மான்பினைத் தேரன்
உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறஞ்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அகன்ற காந்தள்
போதவிழ் அலரின் நாணும்
ஆய்தொடி அரிவைநின் மாண்நலம் படர்ந்தே”
என்ற செயயுள் ஒரு நோக்காக ஓடிப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது ஒரு நோக்காக அமைந்த நோக்குச் செய்யுளாகும். இச்செய்யுளில் முல்லை என்ற சொல் தொடங்கிப் ‘படர்ந்தே’ என்னும் சொல் முடிய ஒரே வரிசையாக நின்று பொருள் இயைவதைக் காண முடிகிறது.
முல்லை வைந்நுனை தோன்ற; மென்பிணி அவிழ; இரலை தெறிப்ப; புலம்பு புறக் கொடுப்பக் கழுதறை சிதறிக் கானம் கார் செய்தன்று; காந்தள் நாறும் அரிவை; நின் நலம் படர்ந்து வள்பரிய, வதிந்த பறவை பேதுறல் அஞ்சி, ஆர்த்ததேரனாய் நாடன் தோன்றும்! இதுவே இதன் வாக்கிய முடிபு. மேலும் இச்செய்யுளின்கண் அமைந்துள்ள சொற்களும் சொற்றொடரும் சிறந்த கருத்துக்களையும் குறிப்பால் உணர்த்துவதையும் நோக்க முடிகிறது. அதனாலும் இஃது நோக்கு என்பதன் பாற்படும்.
நன்றி
இலக்கியத்திறனாய்வு இசங்கள் – கொள்கைகள் – அரங்க.சுப்பையா