அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் சம்பத்திற்கு ஒரு உந்துதல் ஏற்படும். ‘வினோத விருப்பங்கள்’ என்ற தலைப்பில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. வாரந்தோறும் நடத்தும் நிகழ்ச்சி அது. நேயர்களின் வித்தியாசமான, நிறைவேறாத ஆசைகளை ஈடேற்றித் தருவதே அதன் நோக்கமாக இருந்தது. நேயர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. தன் ஆசையை, லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள சம்பத்திற்கு வேறு வழி தோன்றவில்லை. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எழுதி ஒப்புதலும் வந்துவிட்டது. நகரின் பெரிய துணிக்கடை ஒன்று செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. அவன் மிகுந்த எதிர்பார்ப்போடு அக்டோபர் ஏழாம் தேதிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
ராமநாதனுக்கு சம்பத் மட்டுமே வாரிசு. அவர் அரசு ஊழியத்திலிருந்தபோதே மகனுக்கு மணமுடித்து வைத்தார். பணியாற்றிக் கொண்டிருந்த வரை எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சங்களோடு ஓய்வு பெற்ற பிறகுதான் அவருக்கு மருமகளின் சுயரூபம் புரிய ஆரம்பித்தது. பணத்தை சம்பத் பெயரில் வங்கியில் இட்டு வைக்க வேண்டும் என்ற பரிணாமத்திற்கு வளர்த்துவிட்டாள். மனைவியின் என்பதை ஒரு வேண்டுகோளாக ஆரம்பித்து, கட்டளை செயல்கள் அனைத்தும் சரிதான் என்ற நிலைக்குப் போ யிருந்த சம்பத் தந்தையை வற்புறுத்த ஆரம்பித்தான். பணம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைக்குதான் தனக்குப் பாதுகாப்பு என்பது ராமநாதனின் அசைக்க முடியாத சித்தாந்தம். கடைசிவரை அவர் மசியாததால் மருமகள் அவரைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தாள். ஒரு தினம் கழிவதற்குள் அவர் பல ரூபங்களில் அவமதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.
பொறுக்க முடியாத கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதென முடிவு செய்தார். நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த முதியோர் காப்பகம், சரணாலயம் அவருக்கு அன்போடு அடைக்கலம் கொடுத்தது. மாதா மாதம் வங்கி பிலிருந்து கிடைத்த வட்டியை காப்பக நிர்வாகத்திற்கு அளித்து வந்தார். வாழ்க்கை நிம்மதியாய் நகர்ந்து கொண்டிருந்தது. சம்பத் அதை எதிர்பார்க்கவில்லை. எப்படியும் தன் வற்புறுத்தல்கள் தந்தையைப் பணியவைத்துவிடும் என்றிருந்தவனுக்கு அவரின் மாறுதலான முடிவு அதிர்ச்சிதான். அதுவும் சாகும்வரை அவன் கையால் ஒரு பருக்கை கூட உண்ணப் போவதில்லை என்றும், அவன் தனக்குக் கொள்ளி போடக் கூடாதெனவும் தெருவில் நின்று பிரகடனப்படுத்தி வெளியேறுவார் என்பது அவன் யூக எல்லைக்குள்ளேயே வராதது. ஒரு வேளையாவது அவருக்கு உணவிட வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக, வைராக்கியமாக மனதிற்குள் வளர்த்து வந்தவனுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு பெரிய வாய்ப்பாகிவிட்டது.
அன்று ஏழாம் தேதி, சரணாலயம் பரபரப்பாக இருந்தது.
“நம்ம நேரத்தப் பார்த்தியா.. ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் சாப்பிடப் போகிறோம். டீவில இன்னொரு நாள் அதப் பார்க்கப் போறோம்… நெனச்சிப் பாத்திருப்பமா?”
”ஏதோ ஒரு புண்ணியவான் மனசு வெச்சதால இது நடக்குது.. அவன் நல்லாயிருக்கட்டும்…”
இரு முதியவர்கள் புறப்பட்டவாறே பேசிக் கொண்டிருந்தனர். நகரின் பிரபலமான நட்சத்திர உணவு விடுதியின் வாகனம், இருபத்தி இரண்டு முதியவர்களையும், காப்பக மேலாளர் நடேசனையும் சுமந்து கொண்டு
விரைந்தது.
உணவு விடுதியில் நுழைந்த நொடியிலிருந்தே அவர்களால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை. திரைப்படங்களில் மட்டுமே காணக் கிடைத்தவை, நேரில் அனுபவிக்கவும் கிடைத்த விந்தையை அவர்களால் நம்ப முடியவில்லை. அலங்காரமான உணவுக் கூடத்தில் விருந்து துவங்கியது. பெயர் தெரியாத பதார்த்தங்களையெல்லாம் ருசித்து முடித்தனர். அனைவருக்கும் சமமான விதத்தில் பண்டங்கள் பரிமாறப்பட்டன. யாருக்கும் கூடுதலோ, குறைவோ இன்றி சீரான முறையில் கவனிப்பு இருந்தது.
ஒரு வழியாய் விருந்து முடிந்ததும், அவர்களுக்கு ஆவல் மேலிட்டது. தங்கள் பொருட்டு அத்தனை கருணை சிந்திய அந்த மனிதன் யாரென் அறிந்து கொள்ளத் துடித்தனர்.
சம்பத் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபோது, ஆரவாரம் எழுந்தது. பலரும் அவனைப் பாராட்ட, மனம் குளிர்ந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு தந்தையை நோக்க, அவர் சலனமின்றி நின்று கொண்டிருந்தார். தொலைக்காட்சி நிறுவனத்தினர், துணிக்கடை அதிபரையும் அறிமுகப்படுத்த அவரும் பாராட்டு மழையில் நனைந்தார். உணவுக் கூடத்தின் மேலாளர், பளபளத்த புத்தக அட்டைக்குள் கட்டணச் சீட்டை வைத்து துணிக்கடை அதிபரிடம் நீட்டினார். முன்பே செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின்பேரில், மொத்த தொகை இருபத்து மூன்றால் வகுக்கப்பட்டது. ஒருவருக்கான கட்டணத்தை மட்டும் சம்பத் செலுத்த, மீதிக் கட்டணம் துணிக்கடை அதிபரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வினோதமான அந்த நடவடிக்கைப் பற்றி அனைவரும் வியப்போடு உரையாட ஆரம்பித்தனர். தன் லட்சியம் நிறைவேறியதாக சம்பத் சொன்னதை, புகைப்படக் கருவி நெருக்கத்தில் பதிவு செய்ய படப்பிடிப்பும் முடிந்தது. முதியவர்கள் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் வாகனத்தை நிரப்பினர்.
அடுத்த நாள் காப்பக மேலாளர் அறைக்கு வந்தார் ராமநாதன்.
சார்… உங்க உதவிய எப்பவும் மறக்க முடியாது.. கடைசிவரைக்கும்… நம்ம பேசி வெச்சுகிட்ட மாதிரி நடந்து சம்பத்த நம்ப வெச்சிட்டிங்க.. தான் ஜெயிச்சட்டதா இன்னும் நெனச்சிக்கிட்டிருப்பான்… அவனப் பொறுத்தவரை நா தோத்தவனாகவே இருந்துட்டுப் போறேன்…”
“அட நீங்க வேற… உங்களுக்குப் பரிமாறுன எல்லா அயிட்டத்தையும் நானும் பீட்டரும் சாப்பிட முடியாம சாப்பிட்டு வயிறு ஒரு வழியாயிடுச்சு… பீட்டர் இன்னும் எழுந்திருச்சே வராம படுக்கையிலேயே கெடக்கறாரு..”
சாரி சார்… எனக்கு வேற வழி தெரியர… அவனோட குறுக்கு வழி திட்டத்த நீங்க முன்னாடியே தெரிஞ்சுகிட்டு எங்கிட்ட சொன்னதுக்கப்பறம்.. மொதல்ல ஹோட்டலுக்கே வராம அவாய்ட் பண்ணிடலாம்னுதான் நெனச்சேன் அப்படி செஞ்சிருந்தா அவன் ஏமாந்து போயிருப்பான்… ஆனா இப்ப… அவனோட எண்ணம் ஈடேறினதா ஒரு திருப்தி வந்திருக்கும்… அது போதும்… என்னோட வைராக்கியத்துக்கும் எந்த பங்கமும் ஏற்படாம காப்பாத்திட்டிங்க… ரொம்ப நன்றி…”
“பரவால்ல சார்… ஆனா… எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு… என்னிக்காவது உங்க பையன் இங்க வந்து உங்கள கூட்டிக்கிட்டுப் போவான் பாருங்க…“
சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
ஓசூர்
பழ.பாலசுந்தரம் அவர்களின் சிறுகதைகளைப் படிக்க..