நன்னெறி உணர்த்தும் உவமைகள்

மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அனுபவத்தை முன்னிறுத்தியே நடைபெறும். ஒவ்வொரு காலச்சூழ்நிலையிலும் மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்தே அனுபவிக்கின்றான். தன்னுடைய வாழ்நாளில் இன்பத்தை மட்டும் நுகரும் மனிதன் சில நேரங்களில் தீயவைக்கும் அடிமையாகிறான். அப்பொழுது அவனை திருத்த வேண்டியுள்ளது. அதற்காக எழுதப்பட்டதுதான் அறநூல்கள். அறநூல்கள் அறத்தை வலியுறுத்தி மனிதனை நல்வழிப்பாதையில் கொண்டு செல்ல உதவுகின்றன. மனித சமுதாயம் நல்லன்புடன் வாழ வேண்டுமாயின் அங்கு சான்றோர்களும் அறநூல்களும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி நூலினை இவ்வாய்வுக்கட்டுரைக்கு எடுத்தாளப்பட்டுள்ளது.

            நன்னெறி வெண்பா நாற்பதும் அரிய நீதிக்கருத்துக்களைச் சொல்லியுள்ளன. அப்பாடல்களில் பொதிந்து கிடக்கின்ற உவமைநலனை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிவப்பிரகாச சுவாமிகள்

            காஞ்சிபுரம் வேளாளர் மரபினருக்குக் குருக்களாக இருந்த குமாரசாமி தேசிகர்க்கு மூத்த மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசர். இவருக்கு வேலையர், கருணையர் என்னும் இளைய சகோதரர்கள் இருவரும், ஞானாம்பிகை என்னும் தங்கையும் இருந்தனர். சிவப்பிரகாசர் இளம் வயதிலேயே தமிழ்ப்புலமையில் சிறந்து விளங்கியதோடு கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றிருந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு நிலையை மேற்கொண்டிருந்தார். தாமிரபரணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் தமிழ் இலக்கணம் கற்றுக்கொண்டார்.

            அண்ணாமலை ரெட்டியார் சிவப்பிரகாசருக்கு அளித்த முன்னூறு பவுனையும் ஆசிரியர் தம்பிரான் அவர்களுக்குக் காணிக்கையாக வைத்து உபசரித்தார். ஆனால் ஆசிரியரோ அவற்றை ஏற்காமல், ‘இது எனக்கு வேண்டியதில்லை. புலவர்களை இகழும் செருக்குடைய புலவர் ஒருவர் திருச்செந்தூரில் உள்ளார். அவரது செருக்கை அடக்கி, என்னை வந்து வணங்கச் செய்வதே நீ எனக்கு தரும் காணிக்கையாகும்’ என்றார் தம்பிரான். சுpவப்பிரகாசரும் அதற்கு இணங்க உடனே திருச்செந்தூர் சென்று முருகபெருமானைத் தரிசித்தார். கோவிலில் வலம் வருகையில் செருக்குடைய புலவர் எதிர்ப்பட்டார். அவரிடம், நாம் இருவரும் நீரோட்ட யமகம் (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒரு வகை பாவகை) பாடுவோம். வுpரைவாகப் பாடி முடித்தவர்க்கு இயலாதவர் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாடத்தொடங்கினார் சிவப்பிரகாசர். நீரோட்ட யமக அந்தாதியாக முருகக்கடவுள் மீது முப்பது  கட்டளைக் கலித்துறை பாடி முடித்துவிட்டார். அதுவரை ஒரு செய்யுள் கூட பாடாமல் விழித்துக்கொண்டிருந்த செருக்குடைய புலவர், நான் அடிமையானேன் எனக் கூறி சிவப்பிரகாசரை வணங்கினார். அவரை அழைத்து வந்து தம் ஆசிரியர் தம்பிரானிடம் அடிமை ஆக்கினார். ஆசிரியரும் சிவப்பிரகாசரைப் போற்றி வாழ்த்தினார்.

            சிவப்பிரகாச சுவாமிகள் நன்னெறி, நால்வர் நால்மணிமாலை, திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்கப்பரிபாஷை, சதமணிமாலை, வேதாந்த சூடாமணி, சிந்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணி மாலை, கொச்சகக் கலிப்பா, சிவநாம மகிமை, இஷ்டலிங்க அபிஷேக மாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சோணசைல மாலை முதலான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் பதினோறாம் நூற்றாண்டு ஆகும். இவர் தம் முப்பத்திரண்டாம் வயதில் சிவபாதம் அடைந்தார்.

உவமை – விளக்கம்

            தண்டி உரையாசிரியர் உவமை என்ற சொல்லிற்கு உவமானம் என்றும் உவமேயம் என்றும் கூறுகிறார். ஆங்கிலத்தில் சிமிலி என்பர். தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை ஏதேனும் ஒரு வகையில் ஒப்பிட்டு காண்பது உவமை எனப்படும். “உவமை என்பது ஒரு கருத்தை விளக்குதல் இது ஒரு சிறந்த முறை”1 என கோதண்டபாணி பிள்ளை அவர்கள் கூறுகிறார். உவமைகள் இரு சொற்களைக் கொண்ட தொகைச்சொல்லாக அமையும். முதலில் நிற்கும் சொல் உவமையாகவும் அடுத்து நிற்கும் சொல் உவமிக்கப்படும் பொருளாகவும் கொள்ளப்படும். உவம உருபுகள் இன்றியும் உவமைப்பொருளை உணர்த்தும். கவிஞன் தான் காணும் பொருளுக்கு உவமையை வெளிப்படுத்த எண்ணுகிறான். அப்பொருளின் உயர்வைக் காட்டிட அதனினும் உயர்ந்த பொருளையே உவமையாகவும் சொல்லுகின்றான். உவமையானது பொருளை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். “தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரையில் உவமை என்றால் உருவகம், உள்ளுறை, இறைச்சி என்பனவும் அடங்குகிறது”2 என்கிறார் ரா.சீனிவாசன். தொகை உவமம், விரி உவமம் என இருவகைப்படுத்தலாம். தொகை உவமம் என்பது மறைந்து வருவன. விரி உவமம் என்பது உவமை உருபில் உள்ள  பொதுத்தன்மையும் விரித்துக் கூறப்படுவது ஆகும்.

தொல்காப்பியத்தில் உவமைகள்

            தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் உவமை இயல் என்னும் பகுதியில் உவமையின் இலக்கணத்தைச் சுட்டியுள்ளார். உவமை என்பது பொருளின் தன்மையை விளக்கிச்செல்வது என்கிறார் தொல்காப்பியர்.

                                    வினைபயன் மெய்உரு என்ற நான்கே

                                    வகைபெற வந்த உவமைத் தோற்றம்” (தொல்.உவமயியல்.நூ.1)

            வினை, பயன், மெய், உரு ஆகியவைகள் பொருளின் தன்மையை எடுத்துக்கூறுகின்றன என்கிறார். வினை உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை தொழில் அடிப்படையில் அமைய வேண்டும். பயன் உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை நன்மை, தீமை போன்ற பயன்களின் அடிப்படையில் அமைய வேண்டும். மெய் உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை அளவு, வடிவு போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். உரு உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை நிறம், பண்பு போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். தண்டியலங்காரத்தில் உவமையைப் பற்றி,

                                    பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

                                    ஒன்றும் பலவும் பொருளோடு பொருள்புணர்ந்து

            ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டி.பொருளணியியல்.நூ.30)

            பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகாவும் பலவாகவும் வரும் பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமை ஆகும். தொல்காப்பியர் கூறிய வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கையும் தண்டியலங்கார ஆசிரியர் பண்பு, தொழில், பயன் என மூன்றில் அடக்கிக் கொண்டார். “உவம உருபுகள் பெயர், வினை, இடைச்சொற்கள் ஆகிய அனைத்துமாக வருகின்றன”3 என்கிறார் ரா.சீனிவாசன். தொல்காப்பியரின் கூற்றிக்கிணங்க நன்னெறியில் உவமை ஆராயப்படுகின்றன.

பசுவின் பாலை கறப்பது போல

            தனக்கு உதவி புரியாதவரிடம் ஒரு உதவி பெற விரும்பினால் கன்றைக்கொண்டு பசுவின் பாலை கறப்பது போல அவருக்கு வேண்டியவரை அவரிடம் அனுப்பி அந்த உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது நன்னெறிப்பாடல்.

                                    கன்றினால் கொள்ப கறந்து” (நன்னெறி.3)

            இங்கு கறந்து என்பது தொழிலைக் குறித்து வந்தமையால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலில் ஒருவருடைய மனதை அறிதல் பற்றியக் குறிப்பு வருவதால் குணம் தன்மையையுடைய உரு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மழையாகப் பொழிவது போல

            கடல்நீரை மேகம் கொண்டு சென்று மழையாகப் பொழிவது போல, பிறருக்கு உதாவாதவர்களுடைய பெருஞ்செல்வத்தை யார் எடுத்து அனுபவிக்pறாரோ அவர் தம்முடையதாகவே பாவிப்பார்.

                                    பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு” (நன்னெறி.4)

            கடல்நீர் ஆவியாகி மேகமாய் பரவி மழையாகப் பொழிந்து மக்களுக்குப் பயனை அளிக்கிறது. யாருக்கும் பயன்படாத செல்வமும் மக்களுக்குப் பயன்பட்டு இன்பத்தை அளிக்கிறது. இப்பாட்டில் பயன் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உமிநீங்கிப் பழமை போல்

            நெல்லின் உமி சிறிது நீங்கி, மறுபடியும் இணைந்தாலும் முளைக்கும் வலிமையை இழந்து விடும். அதுபோல, நெருங்கிய நண்பர்கள் இருவர் வேற்றுமையால் பிரிந்து மீண்டும் கூடிய போதிலும் அந்த நட்பானது முன்புபோல் நெருக்கமாக இருக்காது.

                                    நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்” (நன்னெறி.5)

            நெல்லில் இருந்து உமி நீங்கி இருப்பது தொழில் நிமித்தமாக அமைந்தது. தொழிலைச் சொல்லுவதனால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நண்பர்களின் பிரிவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களின் குண நலன்களைக் கூறிச்சென்றதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளது.

கண் இரண்டும் ஒன்றையே காண்பது போல

            இரண்டு கண்களும் சேர்ந்து ஒரு பொருளினைப் பார்ப்பது போல, அன்புள்ள கணவனும் மனைவியும் வேற்றுமை இன்றி நல்ல காரியத்தையே செய்வார்கள்.

                                    கண்இரண்டும் ஒன்றையே காண்” (நன்னெறி.6)

             உடலில் உள்ள பாகமான கண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மெய் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளும் குணம் போல

            வெள்ளத்தைக் கரைபோட்டுத் தடுப்பது அரியதா? அல்லது கரையை உடைத்து விடுவது அரியதா? சீறி எழுகின்ற கோபத்தை அடக்கிக்கொள்ளும் குணமே அரியதாகும்.

                                    கொள்ளும் குணமே குணம் என்க –வெள்ளம்” (நன்னெறி.8)

            மனிதர்கள் கோபத்தைக் குறைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கோபமானது சில சூழ்நிலைகளில் மனிதனை அழித்துவிடக்கூடியது. அலைகடலில் எழுகின்ற வெள்ளத்தை விட கோபம் கொடியது என்கிறார் ஆசிரியர் சிவப்பிரகாசர். கோபம் என்கிற குணத்தை சொல்லுவதால் உரு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் இருளைப் போக்குவது போல்

            சந்திரன் தன்னுடைய களங்கத்தை நீக்கிக் கொள்ள நினையாமல் வானத்திலே நின்று உலகின் இருளைப் போக்குவது போல், மேன்மை மிக்கவர் தன் துன்பத்தைப் பெரியதாகக் கருதாமல் பிறருக்கு நேரிட்ட துன்பத்தை நீக்குவார்.

                                    நிறை இருளை நீக்கும் மேல் நின்று” (நன்னெறி.10)

                                    “கலையளவு நின்ற கதிர்” (நன்னெறி.13)

            சான்றோர்கள் தன்னுடைய துன்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிறருக்காகவே வாழ்வர். நிலவைப் போல, தான் எவ்வளவுதான் தேய்ந்து போய் மீண்டும் புதியதாய் பிறந்தாலும் மக்களுக்கு வெளிச்சத்தைத் தருவதை நிறுத்துவதில்லை. நிலவின் வடிவத்தை சொன்னதால் மெய் உவமையும், சான்றோர்களின் குணத்தோடு மக்களுக்கு ஆற்றும் பயனைச் சொல்லியுள்ளதால் பயன் உவமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடல்நீர் உப்பங்கழியிலும் பாய்வது போல

            கடலானது தன்னை அடுத்துள்ள உப்பங்கழியிலும் சென்று பாய்வது போல, மென்மையானவர்கள் தம்மைச் சார்ந்தவர்கள் தாழ்ந்து இருப்பினும் தங்களைப் பெரிதாகக் கருதாமல் அவர்கள் இருக்குமிடம் சென்று அவர்களுடைய துன்பத்தை நீக்குவார்கள்.

                                    கழியினும் செல்லாதோ கடல்” (நன்னெறி.16)

            கடல் நீரானது உப்பங்கழிலும் சென்று பாய்ந்தது தொழிலைக் குறித்தது. அதனால் வினை உவமையும், மேன்மையானவர்கள் தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வதால் பயன் உவமையும் வந்துள்ளது.

நெருப்பில் இட்ட நெய் போல

            முற்றிய நோயினால் வேதனையுறும் பிற அங்கங்களைப் பார்த்துக் கண்ணானது கலங்குவது போல, உயர் குணம் உடையோர் மற்றவர்களின் நோயைக் கண்டு தமக்கு வந்த நோய் எனக் கருதி நெருப்பில் இட்ட நெய் போல உருகுவர்.

            பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்” (நன்னெறி.20)

            மனிதனின் அங்கங்கள் மற்றும் கண் பற்றி கூறுவதால் மெய் உவமையும் சான்றோரின் பண்பை உணர்த்துவதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளன.

ஆகாயகங்கையின் பெருக்கு அடங்கி விடுவது போல

            சிவபெருமானின் சடாமுடியைக் கண்டதும் ஆகாய கங்கையின் பெருக்கு அடங்கிவிடுவது போல, எழுத்தின் உண்மைப்பொருளை உணராதவர்களின் கல்வி அறிவானது உண்மைப் பொருளை அறிந்தவர் முன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

                        ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்” (நன்னெறி.21)

            ஆகாயகங்கையின் பெருக்கு, கல்வியின் அறிவு என்கிற தொழில் சம்பந்தமான கருத்துக்களைச் சொல்லி செல்வதால் வினை உவமை வந்துள்ளது.

எறும்பு ஊற கல் தேய்வது போல

            எறும்புகள் ஊர்வதனால் கல் தேய்வது போல பெண்களுடன் ஆண்கள் பேசிப்பழகி வந்தாலும்கூட தவத்தினால் பெற்ற மன உறுதியானது நாளடைவில் தளர்ந்து விடும்.

                                    எறும்பு ஊரக் கல் குழியுமே” (நன்னெறி.23)

            தவத்தினால் பெற்ற மனஉறுதி என்னும் செயலை வலியுறுத்திச் சொல்லுவதனால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேப்பம் பழம் போல

            சேழிப்பான சோலையில் வண்டுகள் மலர்ப்படுக்கையை விரும்பிச் செல்லும். காக்கைகளோ வேப்பம் பழத்தைத் தேடி ஓடுவது போல், ஒருவரிடம் நற்குணங்கள் இருந்த போதிலும் அற்பர்கள் குற்றங்களையே எடுத்துக் கூறிக்கொண்டிருப்பார்கள்.

            சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றே” (நன்னெறி.24)

            காக்கையின் தொழில் வேப்பம் பழத்தை நாடிச்செல்வது. அதனால் வினை உவமையும் குணங்கள், குற்றங்கள் பற்றி உரைப்பதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளன.

நன்னெறியில் பிற உவமைகள்

            நன்னெறியில் இன்னும் சில உவமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவைகள்,

  • தெப்பத்தில் வைக்கப்பட்ட கடினமான பொருளும் எளிதாவது போல – கடினம், எளிமை என்கிற அளவினைச் சுட்டியுள்ளதால் மெய் உவமை பயின்று வந்துள்ளது. (நன்னெறி.25)
  • கடினமான தின்பண்டங்களை பற்கள் மென்று நாவுக்கு சுவை அளிப்பது போல – சுவை என்கிற பண்பை உணர்த்துவதால் உரு உவமை வந்துள்ளது. (நன்னெறி.27)
  • வானத்தில் உள்ள மான், பூமியில் உள்ள புலியைக் கண்ட பயப்படாதது போல – மான், புலி என்கிற வடிவத்தைச் சொல்வதால் மெய் உவமையும், பயம்கொள்ளாமை என்பது தொழிலைக் குறித்து நின்றதால் வினை உவமையும் பெற்று வந்துள்ளன.  (நன்னெறி.29)
  • கொம்பின் அடியை கை தடுத்து ஏற்றுக்கொள்வது போல – உடல் உறுப்பின் கை என வந்துள்ளதால் மெய் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. (நன்னெறி.31)
  • கதவுக்கு தாழ்ப்பாள் இல்லாதது போல – கதவு என்கிற வடிவத்தைப் பற்றிக் கூறுவதால் மெய் உவமை வந்துள்ளது. (நன்னெறி.32)
  • பூவானது மலர்ந்த அன்றே மணம் தந்து பின் கெடுவது போல – பூ, மணம், எனப் பண்பை உணர்த்துவதால் உரு உவமையும், கெடுதல் என்பதைக் கொண்டு தொழில் உவமையும் பயின்று வந்துள்ளன. (நன்னெறி.39)
  • ஆபரணங்கள் அணிந்த மன்னர், அணியாத அறிஞரைப் போல – மன்னர், அறிஞர் ஆகிய இருவரை ஒப்புமைப் படுத்தியதால் மெய் உவமை சொல்லப்பட்டுள்ளது. (நன்னெறி.40)

முடிவுரை

            சுவப்பிரகாச சுவாமிகள் அருளிய வெண்பாக்கள் அனைத்தும் இனிமையானவைகள். படிக்கத் தூண்டும் அமுதசுரபி. ஓவ்வொரு பாடலிலும் அழகான கருத்துக்களைப் பதித்து எடுத்தியம்பியுள்ளார். அவர்தம் பாடல்களின் அதிகப்படியான உவமைகள் கையாண்டிருக்கிறார். உவமைகள் கூறாத கவிஞன் நல்லதொரு இலக்கியத்தை படைக்க முடியாது என்பார்கள். தொல்காப்பியரின் வழிநின்று வினை, பயன், மெய், உரு என்கிற நான்கின் அடிப்படையில் உவமைகள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளேன். ஒருசிலப்பாடல்களில் இரண்டு வகையான உவமைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான உவமைப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும்.

சான்றெண் விளக்கம்

1.முதற்குறள் உவமை, கு.கோதண்டபாணி பிள்ளை, பாரி நிலையம், சென்னை- 1, முதற்பதிப்பு-1956,ப.5

2.சங்க இலக்கியத்தில் உவமைகள், டாக்டர் ரா.சீனிவாசன், அணியகம், சென்னை -30, ப.9

3.மேலது.ப.55

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here