தேன்கூடு | சிறுகதை |பழ.பாலசுந்தரம்

தேன்கூடு - சிறுகதை -பழ.பாலசுந்தரம்
         அலுவலகத்தில் எனக்கான கண்ணாடித் தடுப்பறையில் எனக்கெதிரே மூன்று இருக்கைகள் மட்டுமே உண்டு. ஒரு சமயத்தில் ஒருவரோ அல்லது இருவரோதான் வருவார்கள். அந்த சனிக்கிழமை மாலை வருகையாளர்கள் ஐந்து பேர். கையில்லாத நாற்காலிகள் இரண்டை என் உதவியாளன் விமல் போட்டுவிட்டுப் போனான். முன் வரிசையில் என்றும், அமர்ந்த ஒருவர் தன் பெயர் மதிவாணன் இரண்டு மாதங்களுக்கு முன் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றவர்களையும் எனக்கு அறிமுகம் செய்தார். அவருடைய சொந்த ஊர் செங்கம் என்பது தெரிந்தது.

ஒசூரிலிருந்து மத்திகிரி செல்லும் வழியில் நவதி உள்ளது. அங்கே அறுபத்தி இரண்டு மனைகளோடு வள்ளல் ஓரி நகர் வளர்ந்து வருவதாக அவர்கள் மூலம் அறிந்தேன். நாற்பத்தி மூன்று மனைகள் விற்கப்பட்டு, அவற்றுள் முப்பத்தோரு மனைகளில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதாகவும் தெரி வித்தனர். நகராட்சியை அணுக, சங்கம் ஒன்றைப் பதிவு செய்து தரவேண்டுமென்பதே அவர்களின் வேண்டுகோள். சாலை வசதி, குடிநீர் இணைப்பு போன்ற பல அடிப்படைத் தேவைகளுக்கும் பதிவு பெற்ற சங்கம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும். எங்கள் அலுவலகம் மூலமாக ஏராளமான பதிவுகள் நடந்திருக்கின்றன. வருமான வரி தொடர்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்தாலும், இது போன்ற பதிவு வேலைகளையும் தவிர்க்க முடியாது. கிருஷ்ணகிரியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் இயங்குவதால், பயணங்களையும் தவிர்க்க முடியாது.

அவர்களிடம் ஒரு பட்டியல் இருந்தது. பெயர், வீட்டு மனை எண் மட்டுமே அதிலிருந்தன. பதிவுக்கான ஆவணங்கள் என்னென்ன தேவையென நான் ஒரு பட்டியலைத் தந்தேன். (வாயால் சொல்லி மாளவில்லை, அச்சிட்ட தாள்தான் சுலபம்) முன் வரிசையிலிருந்த மூவரும் அதைப் படித்துவிட்டு மௌனம் காத்தனர். மதிவாணன் லேசாக செருமியபடி,

“நாளக்கி சண்டே… மேக்சிமம் கலெக்ட் பண்றோம்… கொஞ்சம் பேரு ஊருக்கும் போயிருக்காங்க.. அவங்ககிட்ட அடுத்த வாரந்தான் வாங்க முடியும் சார்… புதன் அல்லது வியாழன் கொண்டு வந்து தந்தர்றோம்..” என்றார்.

நான் ஆமோதித்தேன். மொத்தம் எவ்வளவு செலவாகுமென ஒருவர் கேட்க தொகையைச் சொன்னேன். உடனே ஆட்சேபித்தார். மிக அதிகமென்றும், அதில் பாதி செலவில் தனக்குத் தெரிந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பு ஒரு சங்கத்தைப் பதிவு செய்ததாகவும் வேகமாகச் சொன்னார். நானும் பதில் தந்தேன்.
           
“ரெண்டு வருஷத்துக்கு முந்தி அவ்வளவுதான். ஃபீஸ் ஐநூத்தி ஐம்பத்தஞ்சு ரூபாதான் பத்து வருஷத்துக்கு முந்தி… அப்புறம் அது ரெண்டாயிரத்து ஐநூத்து ஐம்பதாகி, இப் ஐயாயிரத்து நூறு ரூபா ஆயிடுச்சுங்க… அதனாலதான் நாங்களும் அதிகம் வாங்க வேண்டியிருக்கு…”

அவர்களுக்குள்ளாக சளசளவென உரையாடி கொண்டிருந்தனர். நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோதே எதிரே இருந்தவர்கள் விவாதித்து முடித்திருந்தனர். செயலாளர் பதவிக்கு தொகையை எல்லோரும் ஒப்புக் கொள்வதாகவும், அடுத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சம்பத், நான் சொன்ன கட்டணத் வாரம் ஆவணங்களோடு வருவதாகவும் சொல்லி எழ, மீதி நால்வரும் எழுந்து கொண்டனர். அனைவரும் அகன்றதும், சோர்வாய் உணர்ந்தேன். தேநீர் மூலம் புத்துணர்வு பெற வெளியே வந்தேன்.

அடுத்த புதனன்று மதிவாணனும், தனசேகரும் வந்தனர். சேகரித்திருந்த ஆதார் அட்டை நகல்களையும், கேட்டிருந்த விபரங்களையும் சமர்ப்பித்தனர். நிர்வாகிகள் பட்டியலை மீண்டும் சரிபார்த்துத் தரச்சொன்னேன். ஒரு மாற்றமுமில்லை என்றார்கள். உபவிதிகளையும், படிவங்களையும் அடுத்த நாள் தயாரித்துத் தருவதாகச் சொல்லி அனுப்பி வைத்தேன். வெள்ளியன்று காலை மதிவாணன் மட்டும் வந்தார். பழைய உற்சாகம் தென்படவில்லை அவரிடம்,

“ரொம்ப அலைய வெக்றாங்க சார்… பொருளாளர்னு ஒருத்தனுக்குப் பொறுப்பு குடுத்துருக்கோம்… பணம் தராதவங்ககிட்ட போய் வசூல் பண்ணனுமில்ல… செய்ய மாட்டேங்கிறான் சார்… ஷிப்ட்டுக்குப் போகணும்.. போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கணும்… வீட்ல வேல இருக்கு… இப்படி ஏதாவது ஒரு காரணம்… அட நானும் வர்றேன்… ரெண்டு பேரும் போலான்னாலும் வர மாட்டேங்கறான் சார்… மீறி கேட்டா… நீங்கதான் தலைவர்… நீங்கதான் பாத்துக்கணும்கறான்…” நேத்து மட்டும் நானே போய் பதினாலு வீட்ல பணம் வசூல் பண்ணேன். எங்க வீட்ல திட்டறாங்க… ரிட்டையரானதக்கப்புறம் ரொம்ப அலையறீங்கன்னு ஒரே புகாரு… கஷ்டமா இருக்கு…”

புலம்பி முடித்ததும் அவருக்கு அருந்த நீர் கொடுத்தேன். கொஞ்சம் அமைதியானார். இதுபோனற் ஆதங்கப் பதில்கள் எனக்குப் புதிதல்ல. பல சங்கங்களில் இதே நிலைதான். முன்னின்று வேலைகளைச் செய்ய சிலரே இருப்பார்கள். கேள்வி கேட்கவும் குறை சொல்லவும் ஆட்களுக்குப் பஞ்சமே
இருக்காது.

கணினியிலிருந்து அச்சிடும் கருவிக்கு ஆணை கொடுத்தேன். பதினாறு பக்கங்களை அது வெப்பத்தோடு வெளியேற்றியது. அவற்றைத் தொகுத்து அவரிடம் தந்தேன்.
           
“இதுல ஏதாவது மாத்தனம்னா சொல்லுங்க… மாடல்தான் இது… அப்பறம்… ரொம்ப… ஃபீல் பண்ணாதிங்க… எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க.. நானும் சம்பத்கிட்ட பேசறேன் சார்…”

சற்றே சமாதானமாகிப் புறப்பட்டார். அன்று மாலையே சம்பத்திடம் பேசினேன். அவனும் ஆமோதித்தான் எல்லா வேலைகளையும் ஒருவர் மீதே சுமத்துவது நியாயமாகுமா என்ற கேள்வியோடு நிறுத்தினேன்.

திங்களன்று தனசேகர் வந்தார். உபதலைவர் பதவி அவருக்கு. அச்சிட்ட தாள் தொகுப்பிலிந்து இரண்டை மட்டும் வெளியே எடுத்தார்.

“சார்… ரெண்டே ரெண்டு கரெக்ஷன், பூபதி, கிருஷ்ணமூர்த்தி. ஸ்பெல்லிங்க மாத்தனும்… மத்தபடி எல்லாம் சரியா இருக்கு”

உடனேயே பூர்ணிமாவை அழைத்து, மாற்றங்களைச் சுட்டினேன். கணினியில் சரி செய்து சேமித்தாள். இளம்பச்சை நிறத்தாள்களில் அச்சிட்டு, நிர்வாகிகள் கையெழுத்திட வேண்டிய இடங்களைக் குறித்துத் தந்தேன். கட்டணத் தொகையோடு தானோ வேறு யாராவதோ வருவதாகச் சொல்லிச் சென்றார்.

செவ்வாய் காலை பதினோரு மணியளவில் என் கைபேசி ஒலித்தது. பெயரற்ற புதிய எண் ஒளிர்ந்தது.

 “ஹலோ யாருங்க…?”

“ஆடிட்டர்தான பேசறது?”

“ஆமாங்க… நீங்க யாருன்ன சொல்லலியே…”

“சார்… எம் பேரு மார்டின்… ஓரி நகர் அசோசியேசன் ஜாயிண்ட் செக்ரட்ரி”

“ஓ..ஓகே… சொல்லுங்க..”

“சார்… டாக்குமெண்ட்ல ஒரு சேஞ்ச் பண்ணனும்…”

”அப்படியா… ஏதாவது  சேத்தணுமா…?”

”இல்ல… சம்பத் செக்ரட்ரி போஸ்ட் வேண்டாம்னு சொல்றாரு சார்… அவருக்கு பதிலா கமிட்டி மெம்பரா  இருக்க சின்னசாமியை செக்ரட்டரியா போடனும் சார்…”
           
“ஏன்? போன வெள்ளிக்கிழமை அவரோட பேசறப்ப கூட ஒண்ணும் சொல்லலியே…”

“ஆமாங்க சார்…” நேத்து அவர்கிட்ட கையெழுத்து வாங்கப் போனப்பதான் சொன்னாராம். வீட்ல வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன் சார்…

“ஓகோ… அப்ப நீங்க மொத்த பேப்பரையும் எடுத்துட்டு வாங்க… ரெண்டு மூணு எடத்துல கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கும்…”

“சரிங்க சார்… இன்னும் கால் மணி நேரத்துல வர்றேன்… ஆபீஸ்லயே இருங்க…”


கைப்பேசியைக் கிடத்திவிட்டு, தேநீர்க் கடையை நாடினேன். துவக்க நிலையிலேயே ஏன் தடுமாற்றங்கள் என்ற நினைப்பு எனக்குள் ஒடியது.

மார்டின் கொண்டு வந்திருந்த தாள்கள் கசங்கியிருந்தன. மாற்றம் செய்ய வேண்டிய மூன்று பக்கங்களைப் பிரித்தெடுத்து, முதலில் பேனாவால் அடித்து எழுதினேன். பூர்ணிமாவை அழைத்து, வேறு தாள்களில் அச்சிட்டு தரச் சொன்னேன்.

“கையெழுத்து போட வேண்டிய பேபர்ஸ் மட்டும் தர்றேன், மறக்காம சாட்சி கையெழுத்து ரெண்டு பேர்கிட்ட வாங்கிடுங்க… அவங்களோட ஆதார் காப்பியும் வேணும்…”

 ‘அதுல அவங்க கையெழுத்து வேணுமா சார்?”

“கண்டிப்பா வேணும். இதெல்லாம் கொண்டு வர்றப்ப மதி சார வரச் சொல்லுங்க. அவரு எல்லாப் பக்கத்துலயும் கையெழுத்து போடணும்…
           
”அடுத்த நாள் மதிவாணன் வந்தார். என்னிடமிருந்த தாள்களிலும் அவரிடம் கையெழுத்து பெற்று, ஒருமுறை சரி பார்த்தேன். விமலை அழைத்து எல்லாத் தாள்களையும் கொடுத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“என்ன சார்… சம்பத் திடீர்னு ஜகா வாங்கிட்டாரு…”
           
“அவரு என்ன சார் பண்ணுவாரு… மிஸஸ் வேலைக்கு போறாங்க… இவரு சாயந்தரத்துல வீட்டோட இருக்கனும்னு எதிர்பார்க்கறாங்க… என்னமோ தெனமும் அசோசியேஷன் வேல இருக்கற மாதிரி…”

“ஆமாமா… வீட்ல அப்போஸ் பண்ணா ஒண்ணும் பண்ண முடியாது. நீங்க மனசு விடாம எல்லாத்தையும் கோஆடினேட் பண்ணுங்க சார்…”
அவர் ஆமோதித்து விடை பெற்றார். அன்றே கிருஷ்ணகிரி அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒரு வாரம் சென்ற பின் தினமும் ஒருவராவது கைப்பேசியில் அழைத்து பதிவுச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்று கேட்கத் துவங்கினார்கள். பதிவு அலுவலகத்தை அவ்வப்போது தொடர்பு கொண்டு கேம்டடபோது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். வேலை மட்டும் நடக்கவில்லை.
இடையில் ஒரு நாள் மதிவாணன் வந்து, பதிவுக்குப் பின் என்னென்ன நடைமுறைகள், எப்படிக் கணக்குகளைப் பராமரிப்பது போன்ற விவரங்களைப் பூர்ணிமாவிடம் கேட்டு எழுதிக் கொண்டு போனார். ஒரு வழியாக அம்மாத இறுதியில் சான்றிதழை ஒப்படைத்தேன். பிறகு, மற்ற வேலைகளில் மூழ்கி, என் கவனத்திலிருந்து அந்த சங்கம் மறைந்து போனது.
 
நாலைந்து மாதங்களுக்குப் பின்னால் திடீரென ஒரு நாள் மதிவாணன் அலுவலகத்திற்கு வந்தார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு,

“சார்… தலைவர் பதவியிலிருந்து வெலகச் சொல்றாங்க சார்”… என்றார் வருத்தம் மிகுந்த குரலில். நான் அதிர்ந்தேன்… என்னால் நம்ப முடியவில்லை. “என்ன சார் சொல்றீங்க? உங்கள எதுக்கு ரிசைன் பண்ண சொல்றாங்க… மொதல்ல இருந்து நீங்கதான ஆக்டிவா இருக்கீங்க… அப்புறம் எதுக்கு?”
           
“ப்ச்… என்னென்னவோ நடந்து போச்சுங்க சார்” என்று தொடங்கி ஒவ்வொன்றாய் சொன்னார். பதிவுக்கு பின் நகராட்சி ஆணையாளரைப் பலமுறை சந்தித்து, சாலை, தெருவிளக்கு, குப்பை சேகரிப்பு, வரி விதிப்பு போன்ற பல அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். பெரும்பாலும் தனியாகவே செயலாற்றியிருக்கிறார். சில சமயம் மார்டின் உடன் சென்றிருக்கிறார். ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பதினாறு பேர் சங்கத்தில் இருந்திருக்கிறார்கள். சுதந்திர தின விழாவிற்கு, சட்டமன்ற உறுப்பினரை அழைத்து மிகச் சிறப்பாக எல்லா நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறார். வள்ளல் ஓரி நகர் பல விதங்களில் முன்மாதிரியாக விளங்குவதாக சட்டமன்ற உறுப்பினரும் பாராட்டியிருக்கிறார். குடியிருப்போர் மத்தியிலும் செல்வாக்கு இவருக்கு உயர்ந்ததும், அந்த நிறுவன ஊழியர்களுக்குப் பொறுக்கவில்லை. இவர் செங்கத்திற்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, தலைவரை மாற்ற வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள். தானாக முன்வந்து விலகல் கடிதம் கொடுத்துவிட்டால் மரியாதை என்று எச்சரித்திருக்கிறார்கள். பதிவாளர் அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும், கட்டணம் எவ்வளவு என விசாரித்த அவரை நான் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்,
எழுத்தாளர் மற்றும் ஆடிட்டர்,
ஓசூர்.

பழ.பாலசுந்தரம் அவர்களின் சிறுகதைகளைப் படிக்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here