முன்னுரை
சைவம் என்பது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்தது. சிவனோடு தொடர்புடையது சைவமாகும். இச்சொல்லானது செம்மை என்னும் அடிச்சொல்லில் இருந்து தோன்றியதாகும். மேலும் சிவப்பு, நன்மை, மங்கலம் என்னும் பொருள்களையும் குறிந்துவருகிறது. ‘சமையம்;’ என்ற சொல் காலப்போக்கில் ‘சமயம்’ என்று மருவியதுமன்றி சமயம் என்னும் சொல் நெறி என்னும் பொருண்மையிலும் வழங்கிவருதல் வழக்கு. எனவே, ‘சைவ சமயம்’ என்பது செம்மை + நெறி ஸ்ரீ செந்நெறி என்ற பொருளைத்தருகிறது. இச்சமயமே காலத்தாலும் முற்பட்டதாக இன்றளவிலும் வழக்கத்தில் காணப்படு; சமயமாகவும் காணப்படுகின்றது. கால வளர்ச்சியின் காரணத்தினாலும், பிறச் சமயத்தின் தோற்றத்தினாலும் சைவ சமயத்தில் பின்னடைவு ஏற்பட்டது மக்களின் வாழ்க்கையில் பக்தி, முக்தியும் இன்றி சைவ சமயம் பெருமளவில் குறைந்து காணப்பட்டது. சைவம் மீண்டும் மறுமலர்ச்சி அடையவும், உயிர்கள் சிவானந்தத்தை பெற்றவும் இறைவனால் அருளப் பெற்றவர்களே நாயன்மார்கள் ஆவார்கள்.
திருநாவுக்கரசர் சரியை நெறியிலும், திருஞானசம்பந்தர் கிரியை நெறியிலும், சுந்தரர் யோக நெறியிலும், மாணிக்கவாசகர் குருவின் அருள் பெற்று ஞான மார்க்கத்திலும் நின்று இறைவனை சென்று அடையும் வழியாகிய நான்கு மார்க்கத்தினை பின்பற்றி இறைத்தன்மையினை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டவே நால்வர் பெருமக்களின் திருஅவதாரம் இறைவனால் செய்தருளப்பட்டது. திருஞானசம்பந்தர் கிரியையாகிய பக்தி நெறியில் நின்று எவ்வாறு திருவடிப்பேற்றினை அடைந்த விதத்தையும், மேலும் உலக மக்களை நல்வழி படுத்தினார் என்பதையும், அவர் அருளிச்செய்த தேவார பதிகங்கள் வழி எடுத்துரைப்பதே இவ்வாய்குக் கட்டுரையின் நோக்கமாகும் அமைகின்றது.
இறை மார்க்கம்
சைவ சமயம் இறைவனுடைய திருவடிப்பேற்றினை அடைவதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்கங்கள் (வழி) வகுக்கப்பட்டுள்ளது. அந்நான்கு வழியில் நின்று சிவப்பேற்றினை அடைந்தவர்களே நால்வர் பெருமக்களாவார்கள். இவ்வவதாரத்தின் பெருமையினை பிற்காலத்து மக்கள் அறிந்து பயன் பெரும் பொருட்டே பெரிய புராணம் இறைவனின் அருளால் சேக்கிழார் வழி செய்தருளப்பட்டது. உலக மக்கள் அனைவரும்; எல்லா நிலையில் இருந்தும் இறைநிலையினை அடைவதார்கான வழியே சைவ நன்நெறிகளாகும். பிற எந்த சமயத்திலும் காணப்படாத தத்துவங்களை தன்னகத்தே கொண்டதாக சைவ சமயம் விளங்குகின்றது.
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீர்காழிப் பதியில், அந்தணர் மரபில், கவுணியர் குலத்தில் பிறந்தார். இவர் தந்தை சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையாரின்; விண்ணப்பத்தின்படி சமணம், பௌத்தம் வீழ்ச்சிப்பெற்று சைவம் மீண்டும் இப்பூவுலகில் மேலோங்கும் பொருட்டு திருத்தோணிப்புரத்து இறைவனால் அருளப் பெற்றவரே திருஞானசம்பந்தராவார். இவர் அன்னை உமாதேவியின் திருமுலைப்பாலாகிய ஞானாமிர்தத்தை உண்டவர். ஆதலால் பெரியோர்கள் ஞானக்குழந்தையாரை முருகனின் திரு அவதாரமாகவே காண்கின்றார்கள். இப்பூவுலகில் திருஞானசம்பந்தர் அவதாரமானது,
“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சிதவன வயற்புகலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”
(பெரிய புராணம், பாடல்.1256)
“தொண்டர் மனம் களிசிறப்பத் தூய
மாதவத்தோர் செயல் வாய்ப்ப”
(பெரிய புராணம், பாடல்.1921)
“திசை அனைத்தின் பெரும எலாம்…
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நலை பெறுக”
(பெரிய புராணம்.பா.1922)
“தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற…..
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக”
(பெரிய புராணம்,பா.1923)
“அவம் பெருகும் புல அறிவின் அமண் முதலாம் பரசமயம்….
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரம் செய்தார்”
(பெரிய புராணம். பாடல்.1924)
என்னும் பாடல்களின் வழி, புறச்சமயங்களாகிய சமணம், பௌத்தம் செல்வாக்கு ஒழிந்து சைவம் தலைத்தோங்கவும், சிவனடியார்கள் உள்ளம் களிப்படையவும், திருநீற்றின் புகழ் எட்டுத்திக்கும் பரவுதல் பொருட்டும், ஏழுலகத்தவரும் களிப்படையவும், தமிழ் செய்த தவம் நிலைபெறவும், இசைத்தமிழ் நிலைபெறவும், தென்திசை பெருமை பெறவும், சராசரி உயிர்கள் எல்லாம் சிவமாம் தன்மைப் பெறவும், மேலும் மக்களின் நல்லொழுக்கம் நிலைபெறவும், சீர்காழிப் பதி வாழவும், நிகழ் காலத்தும், எதிர்வரும் காலத்தும் வரும் குற்றங்கள் நீங்கவும், திருத்தோணியப்பர் அருள் உலகம் முழுவதும் பரவவும் அவதாரம் செய்தவர் திருஞானசம்சந்தர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தின் மூலம் அறியலாம்.
பன்னிருதிருமுறையில் திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளை அருளியுள்ளார் அவை மொத்தம் 16,000 பதிகங்களாகும். ஒவ்வொரு பதிகத்திற்கும் 11 பாடல் வீதம் மொத்தம் 1,76,000 பாடல்களை எழுதியுள்ளதாக தகவல்கள் இருந்தாலும் நமக்கு கிடைக்கப்பெற்ற பாடல்கள் எண்ணிக்கை 4158 பாடல்கள் மட்டுமேயாகும். இப்பதிகங்கள் ஞானத்தன்மையில் இருந்து பாடப்பெற்றதால் இயல்பாகவே இப்பாடல்களுக்கு மந்திர ஆற்றல் கொண்டதாக அமைகின்றன. ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் பதிகத்திற்கான பயனை எடுத்துரைக்கின்றார். இப்பதிகங்களை இன்றனவும் பண்ணொடு பாடினால் அப்பதிகத்தின் பயனை இன்றும் பெறலாம்.
திருஞானசம்பந்தர் கிரியையாகிய பக்தி நெறியினை பின்பற்றி இறைநிலையினை அடையும் வழியினை வகுத்து, அவற்றுக்கான ஆற்றலையும், அவர்தம் பண்முறையில் அமைந்த பதிகத்தின் வழி உலகத்தவருக்கும் சென்று சேறும் வண்ணம் அருளியுள்ளார். இறைவனை அடையும் பெரு விருப்பத்துடன் அன்பு கொண்டு ஓதுவார்க்கு திருவடிப்பேறு நிச்சயம் கிட்டும் என்பது பதிகத்தின் உயர்ந்த பயனாகும்.
கிரியை என்பது மந்திர தந்திரங்களை குருவின் மூலமாக அறிந்து சமய, விஷேட, நீர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் இறைவழிபாட்டு முறை கிரியையாகும். தம்பொருட்டு இறைவனிடத்து செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யும் பாராத்த பூசையும் இந்நெறியில் அடங்கும்.
கிரியை மார்கத்துடன் ஒவ்வொரு மார்க்கமும் பக்தனின் பக்குவத்திற்கு ஏற்றாறர் போல,
கிரியையில் சரியை – பூசைப் பொருட்களை சேகரித்தல்
கிரியையில் கிரியை – இறைவனை புறத்தில் பூசித்தல்
கிரியையில் யோகம் – இறைவனை அகத்தில் வைத்து பூசித்தில்
கிரியையில் ஞானம் – மேற்சொன்ன மார்க்கங்களின் தத்துவத்தினை அறிதல்.
ஆனைந்து, திருமலர்கள், திருமஞ்சனம், பால், தயிர், நெய், விபூதி, கரும்புச்சாறு, எலுமிச்சம் சாறு, இளநீர், பஞ்சாமிருதம், தேன் போன்றவற்றை இறைவனின் திருமேனிக்கு அமிசேகம் செய்து, அலங்கரித்தல், புகைக்காட்டுதல், தீபம் காட்டுதல், அவிபடைத்தல், உபசாரம் செய்தல், மந்திரம் ஓதுதல், பதிகம் பாடுதல், ஆடுதல் போன்றரவை கிரியையின் அங்கங்களாகும்.
மனிதனின் உடலுக்கு எது நன்மை பயக்குமோ, எதை அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றார்களோ, அதை இறைவனுக்கு படைத்து மகிழ்கின்றான். ஒவ்வொரு பொருட்களுக்கும் உருவ நிலை, உருவங்களை கடந்த சுக்கும நிலை என இரண்டு உருவ அமைப்புகள் உண்டு. பக்தி நிலையில் இருந்து புறமாக கொடுக்கப்படும் பூசைப்பொருட்கள், இறைவனுக்கு சுக்குமமாக சென்று சேர்கின்றது என்பது முன்னோர்களின் நம்பிக்கை. கோயில்கள் உலகில் சக்தியின் சேமிப்புக் கலமாக காணப்படுகின்றது. அபிசேகப் பொருட்கள் கோயிலில் பயன்படுத்தப் படுவதால் அங்கு பிரபஞ்சத்தில் இருந்து கலசத்தின் மூலம் வரும் காஸ்மிக் கதிர்கள் கருவரையில் வைக்கப்பட்டிருக்கும் இறைவனின் உருவத்திருமேனியின் மிது பட்டு அலையாக கோயில் முழுவதும் பரவுகின்றன. அவ்வாறு பரவும் இறை சக்தியானது அங்கு பூசைக்கு பணப்படுத்தப்படும் பொருட்களின் தன்மைகளை தன்னகத்தே ஈர்த்து அங்கு வரும் பத்தர்களுக்கு நேரட்டியாக உணவாகவும், தீர்த்தமாகவும், காற்றின் துணைக்கொண்டு அங்கு நுகரப்படும் பொருட்களான வாசனை திரவியங்கள், காதில் கேட்கும் மந்திரங்கள், கண்ணுக்கு நன்மையளிக்கக் கூடியதாக தீபாராதனை வழியாகவும், மலர் தூவியும், அலங்காரம் செய்வதின் மூலம் இறைவனின் திருஉருவம் மனதில் நீங்காமல் இருந்து மனம் ஒன்றையே தியானிக்கும் பயிற்றி முறையினையும், தருவதாக அமைகின்றன. மேலும், நேர்த்திகடன் என்று செய்யப்படும் உடல் பயிற்சிகள் எல்லாம் பஞ்ச பூதத்தின் வழியாக மனிதனையும், மனித மனங்களையும் வழுப்படுத்தி இறைநிலையினை பெறச்செய்வதே இவ்வழிபாட்டின் நோக்கமாக காணப்படுகின்றது.
அவ்வாறு திருஞானசம்பந்தர் காலத்தில் பல தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து இறைவனின் புகழ் பாடி பல பதிகங்களை பாடியுள்ளார். இவ்வாறு பாடப்பெற்ற பாதிகத்தின் வாயிலாக பக்தி நிலையில் இறைவனுக்கு செய்யப்பட்ட கிரியை அங்கங்களாக செய்யப்பட்டி பொருள்களை சிறப்பித்து பாடும் இடத்து இறைவழிபாட்டு முறையினையும், இறைவழிபாட்டின் மேன்மையினை அறிய முடிகின்றது.
கிரியை அங்கங்களும், பயனும்
தூய நீர்
இறைவனுக்கு தூயநீர் கொண்டு அபிசேகம் செய்தல் என்பது மனிதன் உடலை தூய்மை செய்தல் போன்றதாகும். இது உருவத்திருமேயில் இருக்கும் இறைவனை சுத்திகரித்தல் நிலையாகும். மேலும் இறைவன் கங்கையினை தலையில் அணிந்துக் கொண்டு நித்தியமாக தூயநீர் அபிசேகம் செய்தபடியாக இருக்கின்றார் அதன் விழைவாக கங்கையாகிய தூயநீரை அபிசேகமாக செய்யப்படுகின்றன.
கங்கையினை தன் சடாமுடியில் தாங்கியுள்ளதை திருஞானசம்பந்தர்,
“…… …… மாசறு திங்கள் கங்கை முடிமேல்…”
(திருமுறை 2:85:1:3)
“நீர்கரந்த நீமிர்புன் சடைமேலோர்…….”
(திருமுறை 1:1:2:1)
பெரும்பான்மையாக அனைத்து பாடல்களிலும் சிவபெருமான் தன்னுடைய வலப்பக்கத்தில் கங்கையை வைத்துள்ளதையும், அவற்றின் சிறப்பினையும் திருஞானசம்பந்தர் பல இடங்களில் பாடியுள்ளார்.
வெண்ணெய்
வெண்ணெய் கொண்டு இறைவனுக்கு அபிசேகம் செய்வதினால் உடல் ஆராக்கியம் பெறும். வெண்ணெய் பயன்படுத்தியதை திருஞானசம்பந்தர்,
“நல்வெண்ணெய் விழுதுபெய்து ஆடுதிர் நான்தொறும்
நெல்வெண்ணைய் மேவிய நிரே…”
(திமுறை 3:96:1:1)
என்னும் பதிகம் மூலம், வெண்யெண் அபிசேகத்திற்குத் தினந்தோறும் பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.
நெய்
இறைவனுக்கு பொதுவாக அபிசேகத்தின் போது நெய் அபிசேகமாகவும், காப்பாகவும் செய்வது வழக்கம். இச்செய்தியினை,
‘ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்’
(திருமுறை 3:1:1:1)
‘நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே’ (திருமுறை 1:15:1:1)
என்னும் பாடல் வரியின் மூலம் அறியலாம். நெய் கொண்டு அபிசேகம் செய்வதினால் செல்வ கடாச்சம் பெற்று, எதிர்வினைகளில் இருந்து விடுதலை பெற்று புத்துணர்ச்சியுடன் வாழலாம்.
பசும் பால், தயிர்
இறைவனுக்கு பால், தயிர் கொண்டு அபிசேகம் செய்தல் வழக்கமாக இருந்துள்ளதை திருஞானசம்பந்தர்,
“நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தில் பூசை செய்யல் உற்றார்”
(திருமுறை 7:5:1:1)
‘ஆடினாய் நறுநெய்யோடு பால்தயிர்’
(திருமுறை 3:1:1:1)
‘பாலோடு நெய் தயிர்பலவும் ஆடுவர்’
(திருமுறை 3:15:3:1)
என்னும் பதிகம் வழி பாலும், தயிரும் அபிசேகத்திற்கு பயன்படுத்தியுள்ளதை காணலாம். இவை சகல நன்மைகளை தருவனவாகவும், உடலுக்கு பூரண ஆராக்கியம் தருவதாகவும், நீண்ட ஆயுளையும் தருவதாக அமைகின்றது.
தேன், இளநீர், கருப்பஞ்சாறு
திருஞானசம்பந்தர் பதிகத்தில் தேன், இளநீர், கருப்பஞ்சாறு போன்றவை பூசைக்கு பயன்படுத்தியுள்ளதை,
“தேன்நெய்பால் தயிர் தெங்கிளநீர் கரும்பிண்தெளி”
“தேன்நெய் பால் தயிர் ஆட்டுகந் தானே”
(திருஞானசம்பந்தர் தேவாரம்)
என்னும் பதிகம் மூலம் அறியலாம்.
ஆனைந்து (பஞ்ச கவ்வியம்)
பசுவிடமிருந்து பெறப்படுகின்ற பால், தயிர், நெய், கோமயம், கோசலம் இவை ஐந்தையும் மந்திரப்பூர்வமாகப் பூசித்து ஒன்று சேர்க்கப்பட்ட கலவை ‘ஆனைந்து’ (பஞ்ச கவ்வியம்) ஆகும். ஆனைந்து இறைவனுக்கு அபிசேகம் செய்யப்படுவதும், அவற்றை பக்தர்களுக்கு கொடுப்பதால் உடல்சார்ந்த ஆராக்கியத்தினையும், மனதுக்கு சாந்திக்காவும் கொடுப்பதாக அமைகின்றது. இவை உடலுக்கு சென்று அசுத்த கழிவுகளை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியினை மிகச்செய்து உடலுக்கு எந்தவிதமான நோயும் அனுகாமல் காத்து இறைவழிபாட்டுக்கு ஏற்ற உடல் தகுதியினை தந்துதவுகின்றது. இவ்வானைந்து திருஞானசம்பந்தர் காலத்தில் அபிசேகத்திற்க்கு பயன்பாட்டில் இருந்துள்ளதை,
“ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கடமர சிலியே”
(திருமுறை2:122:5:4)
“ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்”
(திருமுறை 5:100:4:1)
என வரும் ஞானசம்பந்தர் பாடல் வழி அறியலாம்.
மலர் தூவுதல்
சிவனுக்கு உகந்த மலர்களாகிய கொன்றை பூ, ஆத்தி பூ, செவ்வரளி பூ, ஊமத்தம் பூ, பாரிசாதம் பூ, எருக்கம் பூ, வில்வம் மற்றும் வெள்ளை நிறமுடைய பூக்கள் மாலைகளாகவோ, உதிரிப் பூக்களாகவோ இறை வழிபாட்டிற்க்கு பயன்படுத்துதல் நன்மை பயக்கும். ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணாதிசம் உண்டு. சில பூக்கம் மனதுக்கு அமைதி கொடுப்பதாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும், கண்களுக்கு நல்ல காட்சியினையும் (மங்கலம்) தருவதாகவும் காணப்படுகின்றன. முக்கியமாக சைவ வழிபாட்டில் வில்வம் உயிர் சக்தியாகிய வித்துவை கெட்டிப்படுத்தும் தன்மையுடையதாகவும், வைணவத்தில் துளசிக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
“தொட ஆர் மாமலர் கொண்டு”
“மாசில் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட”
(திருமுறை 3:488:6:1)
“கைகாள் கூப்பித்’ தொழீர் கடிமாமலர் தூவிநின்று
பூக்கையால் அடிப் போற்றி
என்னாத இவ்வாக்கையால் பயனென்”
(திருமுறை 4:9:7:1-2)
“யாவருககுமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை”
(திருமந்திரம் 252:1)
தீப வழிபாடு
இறைவனுக்கான அபிசேகங்கள் முடிவுற்ற நிலையில் தீபாராதனை செய்வது வழக்கம். தீபாராதனை மூலம் மங்களமான தோற்றத்துடன் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனின் திருமேனி அழகு மனதுக்கு மகிழ்வை தருவதாகவும், மேலும் யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இறைவனை தியானிப்பதற்கான ஒற்றை பொருளாகவும் தீபாராதனை மூலம் நமக்கு கிடைக்கின்றது. நெருப்பு பொதுவாக இறைச்சக்தியினை கடத்துபவையாக காணப்படுகின்றது. இதனால் கண்களில் வழியாகவும் மற்றும் வெற்று உடலுடன் கோயிலுக்கு செல்லும் போது இறைசக்தியை நன்மை அனைவரும் எளிமையாக பெரும் பொருட்டே இவ்வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கின்றன. மேலும் வீடுகளில் பயன்படுத்துவதனால் வீட்டில் உள்ள தீவினைகள் விலகி இறைநிலை பரவி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்கின்றது.
“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே”
(திருமுறை 4:113:8:1-4)
என்னும் திருநாவுக்கரசர் பாடலில் மூலம் விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் நன்மையினை அறியலாம்.
இறைநாமம் கேட்டலும், திருக்கூத்தும்
உலகியலில் கிடைக்கும் மேற்சொல்லப்பட்ட பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிசேகத்தை விடவும் குருவிடம் இருந்தும், சிவ அருளாளர்களிடமிருந்தும் சிவ நாமத்தினையும், இறைவனுடைய அற்புதங்களையும் கோட்பது சிறந்த வழிபாடாகும். அவ்வாறு சிறப்பிற்குரிய மந்திரமாகிய ‘நமச்சிவாய’ என்னும் மந்திரத்தின் பெருமையினையும், பயனையும்,
“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நர்கினும் மெய்கொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே..
நந்தி நாமம்ம நமச்சிவாய என்னும்
சந்தையால் தமிழ் ஞானச்சம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.”
(திருமுறை 3:49:520-530)
“துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
அற்றமிழ் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லார் உம்பராவரே”
(திருமுறை 3:22:231-241)
“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
ஏத்துவார் தமக்கு இடுக்கண் இல்லையே”
(திருமுறை 4:113:170-179)
நமச்சிவாய என்னும் மந்திரமானது சாதரன கீழ்நிலை மனிதர்களையும் நல்வழி படுத்தி வாழ்வில் ஏற்படும் நரகம் புகும் தீமைகளையே கொண்டிருந்தாலும் நமச்சிவாய என்னுமு; திருமந்திரத்தினை ஓதுவார்கள் என்றால் அவர்களின் மனதினை பக்குவப்படுத்தியும், முன்வினைகளை போக்கியும், பின் வினைகளை தடுத்தும், என்றும் அழியா பொருளாகிய தன்னுடைய சுய சோதியினை காட்டி பிறவா இன்பமாகிய திருவடிப்பேற்றினை வாழ்வில் தந்தருளும் மந்திரம் ஐந்தொழுத்து மந்திரமாகும்.
மேலும் மந்திரங்களையும், பதிகங்களையும், பாடி ஆடி மகிழ்தல் அடியார்களின் மரபாக இருந்துள்ளதை,
“தொண்டர்கள் பாடியாடிக் தொழுகழல் பரமனார்”
(திருமுறை 4:36:3:2)
“தலையாரக் கும்மிட்டுச் கூத்துமாடி”
(திருநாவுகரசர்)
என வரும் பதிக வரிகளின் மூலம் பக்தர்களின் களி (ஆனந்தம்) நடனத்தினை அறியலாம்.
கூட்டு விழிபாடு
தனி நபராக நீன்று வழிபாட்டினை செய்து பலன் பெறுவதைக் காட்டிலும் பலர் ஒன்று கூடி இறைவன் மீது அன்புடன் பூசை செய்தால் அதிக பயனை அடையலாம். பொதுவாக மந்திரங்கள் செய்யும் செயல்கள் எண்ண அலைகள் மூலமாகவே பரவுகின்றன. அவ்வாறு மந்திர ஆற்றல் கொண்ட சப்தத்தினை கோயில்களில் ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இறையாற்றல் எப்போதும் நிலையுடையதாக இருக்கின்றது. தமிழில் அவ்வாறு அருளாளர்களின் மூலம் பாடப்பெற்றவையே தேவாரமாகும். இப்பதிகங்களை கூட்டு வழிபாட்டில் பண்ணொடு பாடி வழிபட்டால் அதிக பயனை பெறலாம்.
“கூடிக்கூடித் தொண்டர்தங்கள் கொண்டபணி குறைபதாமே
ஆடிப்பாடிஅழுது நெக்கங்கு அன்டை யவர்க்குஇன்பம்”
என்னும் திருநாவுக்கரசர் பதிக வரிகளின் மூலம் கூட்டு வழிபாட்டினை அறியலாம். பொதுவாக பக்தி என்பது தனிநபர் சார்ந்ததாக அல்லாமல், சமுதாயத்துடன் இணைந்தால் அனைவரும் நற்சிந்தனை பெற்று வாழ்வில் உயர்நிலைய அடைய வழிவகுக்கும்.
முடிவுரை
ஒற்றைச் சொல் ஒரு பொருளை மட்டும் குறிக்கப்பட்டால் அதன் மகத்துவம் சாதாரண சொல்லாகவே காலம் முழுவதும் இருந்துவிடுகின்றது. அதே சொல் குருவின் மூலமாகவோ அல்லது அருளாளர்களின் மூலமாக பெறப்படும் பொது அவ்வாக்கியத்திற்கான பொருளின் தன்மையிலும் அவற்றில் செய்படும் ஆற்றல் நிலையிலும் மாற்றங்கள் நிகழும். அவற்றின் பயன் பயன்படுத்தும் தன்மையினை பொறுத்ததாக அமையும். அவ்வாறாக அம்மை உமாதேவியின் ஞானப்பாலை உண்ட திருஞானசம்பந்தர் வாக்கும் உயர்ந்த வாக்காகவே காணப்படுகின்றன. அவ்வாக்கில் இருந்து பிறந்தவையே முதல் மூன்று திருமுறைகளாகும். திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கு தலயாத்திரை செய்து இறைவனை தரிசித்து தமிழிசையால் பல பாடல்களை பாடி சைவ தழைத்தோங்கும் படியாகவும், மக்கள் இறைத்தன்மையினை பெறுதல் பொறுட்டாகவும் பல பதிகங்களை பாடி அருளியுள்ளார். அப்பதிகங்கள் ஒவ்வொன்றும் பயன்தரும் பதிகங்களாக அமைந்துள்ளது திருஞானசம்பந்தர் பதிகத்தின் சிறப்பாகும். அவ்வாறு பதிகத்தினை மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். திருமுறைகளை அன்புக் கொண்டு பாடி பக்தி செலுத்துபவர்களுக்கு இறைவன் அருள் கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தி மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றினை ஓடுக்கி பேரின்பமாகிய திருவடிப்பேற்றினை தந்தருளுவார்.
உலக மக்கள் அனைவரும் இறைவனின் திருவடிப்பேற்றினை அடைவதற்காக இறைவன் கருணைக்கொண்டு நிகழ்திய திருவிளையாடலே திருஞானசம்பந்தர் அவதாரமாகும். மேலும் கூட்டு வழிபாட்டினை உபதேசித்த திருஞானசம்பந்தரே தன் வாக்கின் படி நின்று தன்னுடைன திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இறைவனின் அருளால் முக்தியினை பெற்றுத்தந்தார் என்பது உலகறிந்த உண்மை. மேலும் திருஞானசம்பந்தர் பதிகங்களை துணைக்கொண்டும், கள்ளமில்லா அன்பு கொண்டும், பக்தி நெறியில் நின்று இறைவனை தியானிப்பவருக்கு இறைவனின் கருணையால் எளிய முறையில் சிவத்தன்மையினை அடையலாம் என்பதை திருஞானசம்பந்தர் பதிகங்கள் கொண்டு அறியமுடிகின்றது.
துணைநுற் பட்டியல்
1.சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை
கருமுதல் திரு வரை, பவாணி – 638 301.
2.திருவாவடுதுறை ஆதினம் -சைவ அநுட்டான
விதி, திருவாவடுதுறை ஆதினம் – 609 803.
3.பக்தவச்சலம்.ஆ-திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிச் செய்த முதல் மூன்று திருமுறைகள்,
குடியாத்தம் – 632 602.
4.பக்தவச்சலம்.ஆ-திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிச் செய்த நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள், குடியாத்தம் – 632 602.
5.பக்தவச்சலம்.ஆ-சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம், குடியாத்தம் – 632 602.
6.மாணிக்கவாசகன்.ஞா.திருமூலர் – திருமந்திரம்,
உமா பதிப்பகம், சென்னை – 600 001.
7.வைத்தியநாதன் -சைவ சமய வரலாறும்,
பன்னிரு திருமுறை வரலாறும்,
திருவாவடுதுறை ஆதினம் – 609 803.
8.வெள்ளைவாரணார்.க -சைவ சிந்தாந்த சாத்திர வரலாறு, ராமையா பதிப்பகம்,
சென்னை – 600 014.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ர. அரவிந்த்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர். கல்லூரி,
ஓசூர் – 635 001.
மேலும் பார்க்க…