திரிகடுகம் கூறும் இல்லறம்|ஆய்வுக்கட்டுரை| க.சதீஷ்குமார்

திரிகடுகம் கூறும் இல்லறம் - க.சதீஷ்குமார்
முன்னுரை
          
இல்+வாழ்க்கை – இல்வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் இல்லாலோடு கூடி வாழ்தலே சிறப்புடையதாகும். இல்லால் இல்லாத வாழ்க்கை இலையற்ற மரம், வாசனையில்லா பூ போன்றதாகும். அவ்வகையில் கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை என்றும் கெட்டுப்போவதில்லை. அவ்வகையில் இல்வாழ்க்கை பயனில் மனையாளின் பங்கு மிக முக்கியமாகும். அத்தகைய இல்வாழ்க்கையைப் பற்றி பதினெண்கீழ்க்கணக்கு நூலான திரிகடுகத்தில் நல்லாதனார் கூறும் விதத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

இல்லறம் – இனிய அறம்
               
‘அறம்’ என்பது ஒழுக்கத்திலிருந்து விலகாமல் இருப்பதாகும். அவ்வகையில் மனைவி என்பாள் அருந்ததி (ஏழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி) போன்று கற்புடையவராக  இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் இம்மை மட்டுமின்றி மறுமையிலும் துன்பங்களைத் தீர்த்து இன்பத்துடன் வாழ்வாள் என்பதை,
            
“அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய             
தொல்கொடியின் மாண்டார் தொடர்ச்சியும்”              ( திரிகடுகம்.பாடல் எண். 1)
               
என்னும்  பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது. இதன்மூலம் கணவன் என்பான் மனைவியை ஐயப்படாமலும், மனைவி என்பாள் கணவனை  ஐயப்படாமலுல்  வாழவேண்டும் என்பதை அறிய முடிகிறது.

விருந்தோம்பலின் அறம்              
               
பிறருக்கு விருந்து வைப்பவனுக்கு அவன் பொருள் குறையாது, பொருள் மேன்மேலும் பெருகும். கடன்பட்டாவது செய்வதைச் செய்தே ஆக வேண்டும் என்பது விருந்தோம்பல் பண்புகளில் ஒன்றாகும். இதனை திருவள்ளுவர்,
            
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை             
பருவந்து பாழ்படுதல் இன்று”    (திருக்குறள். விருந்தோம்பல் கூறல்; குறள். எண் -83 )

எனக் குறிப்பிட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அந்த வகையில் வீட்டுக்கு வந்த உறவினரை வரவேற்று, உபசரித்து அனுப்புதலே தமிழரின் தலையாய செய்கையாகும். வறுமையால் வருந்துவோருக்கு ஈதலும், வறுமையற்ற இடத்து தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வானவற்றைச் செய்யாமலிருத்தலும் சிறந்த இல்வாழ்க்கைக்கான அறமாக கருதப்படுகிறது. இதனை,

 “அலர்ந்தார்கொன்  றீந்த புகழும் துளங்கினுந்            
 தன்குடிமை குன்றாத் தகைமையும் … ”        (திரிகடுகம்.பாடல் எண்.41)

என்ற செய்யுள் அடிகள் தெளிவுப்படுத்துகின்றன. மேலும், விருந்தோம்பல் பண்பு இல்லாத மனைவி, நற்குணமில்லாதவரின் வீட்டின் அருகே குடியிருப்பது போன்றதாகும். கணவனுக்கும், மனைவிக்கும் ஊடல் வரும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து  வாழ்தல் வேண்டும். விருந்தினர்கள் வீடு வரும்போது, தங்களின் ஊடலை மறந்து அவர்களுக்கு விருந்து உபசரிப்பதே சிறந்த விருந்தோம்பல் அறமென்பதை ஆசிரியர் உணர்த்துகின்றார். 

இம்மையில் அறம்
               
மனிதன் என்பவன்; பிறருக்கு உதவி செய்யவேண்டும். செய்யாதவர்கள் இப்பிறவியில் மட்டுமன்றி அடுத்த பிறவியிலும் அறத்துடன் வாழப்பயனற்றவர்கள் என்பதனை,
            
“ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது             
வைதள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தள்ளி             
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்             
இம்மைக்கு உறுதி இல்லார்”       (திரிகடுகம்.பாடல் எண்.49)
               
என்ற பாடல் அடிகள் சுட்டுகின்றன. அதாவது பெற்றோர் சொல்லை கேளாத பிள்ளையும், குடும்பததை பாதுகாக்காத தலைவனும், தேவையற்ற பொய்களைப்பேசி குடும்பத்தை நடத்தும் பெண்ணும் ஆகிய மூவரும் இம்மையில் அறமற்றவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டுகின்றார்.
பிள்ளைகள் பெற்றோர் சொல்கேட்டு வாழவேண்டும், கணவன் மனைவி இடையே மறைவுத்தன்மை இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்பதை அறியமுடிகின்றது.

கெட்டுபோகும் செல்வம்
               
செல்வம் மிகுதிப் படின் அது நம்மை அழிக்கும். பிறரிடம் நாம் கொடுக்கும் செல்வம் அதிகப்படின் அது நம்மைக் காக்கும்.
            
“அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்             
புல்லார் புரள விடல்”       (திரிகடுகம்.பொருள் செயல்வகை.குறள்; எண் – 5)

தன்னுடைய உறவினர்களைக் காக்காத செல்வம், விளையும் காலத்தில்  காக்காத பயிர் போன்றது. உறவினர் எனும் நற்பயிருக்கு செல்வம் எனும் உரமூட்டுதலே நல் இல்லறத்திற்கு எடுத்துகாட்;டாகும். இது, உயிரோடு இருக்கும்போது ஒருவர்க்கு நீர் கொடுக்காமல் விட்டு, அவர் இறக்கும் போது பால் ஊற்றுவதற்கு சமமாகும்.
           
“கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்            
விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாயக்;” (திரிகடுகம்.பாடல் எண். 59)

மேலும். செல்வம் என்பது இறைக்க இறைக்க ஊறும் கிணற்று நீர் போன்றது. நீர் இறைத்தால் பயிர் பயன் பெறும். செல்வம் அளித்தால் பிறர் வாழ்க்கை மேம்படும் என்பதைக் காணலாகிறது.

தவறாது பெய்யும் மழை
               
 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண இயலாது என்பதனை,
        
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே         
பசும்புல்  தலைகாண்பு அரிது”   (திருக்குறள்.வான்சிறப்பு  குறள் எண் – 6)
               
மழையானது விளைநிலம், களர்நிலம் எனப் பாராது அனைத்து இடங்களிலும் பெய்கிறது. அதுபோல் நாம் செய்யும் உதவியானது உறவினர், நண்பர் என்றிலாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை அறிய வேண்டும்.
குறிப்பறிந்து நடக்கும் மனையாள், நோன்புகளை முறைதவறாது நடத்தும் தவசி, குடிமக்களுக்கு தீமையை விளக்கி நன்மைகளையே செய்கின்ற அரசன் அம்மூவரும் ஒரு நாட்டின் கண் அமைந்தால் அந்நாட்டின்கண் மாதம் மும்மாரி மழையானது தவறாது பொழியும் என நல்லாதனார் குறிப்பிடுகிறார்.
           
“கொண்டான் குறிப்பறிவாள்  பெண்டாட்டி கொண்டன           
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ”        (திரிகடுகம்.பாடல் எண்.96)

முடிவுரை
               
இல்லறமாவது நல்லறமாகும். இல்லற வாழ்க்கை என்பது ஒரே வண்டியில் பூட்டிய  இருமாடுகள் போன்றது. மாடுகள் ஒன்றாக சென்றால் பயணம் சிறக்கும். இல்லற வாழ்வைப் பற்றி சங்க இலக்கியங்கள் கூறியிருந்தாலும், உடல் நோயைத் தீர்க்கும் மும்மருந்துப் போல நல்லாதனார் கூறும் ஒவ்வொரு வெண்பாவின் மூன்று கருத்துக்களும் மிகுபயனுடைவையாகும். மேற்கண்ட இக்கருத்துக்களை எடுத்தாளும் ஒவ்வொரு கணவனும், மனைவியும் இல்லறம் சிறக்க பயனுடையவராவர் என்பதே நிதர்சனமாகும்.

பார்வை நூல்கள்
1.திரிகடுகம்,
ந.மு.வேங்கடசாமி நாட்டார் (ஆசிரியர்),
இரண்டாம் பதிப்பு (சனவரி – 2019),
பாரி நிலையம்,
சென்னை – 600001.

2.திருக்குறள்
பரிமேலழகர் உரை,
சாரதா பதிப்பகம்,
ராயப்பேட்டை,
சென்னை – 600014,
 ISBN – 978-93-80217-37-6.

3.நீதிக்களஞ்சியம் (மூலமும், உரையும்)
டாக்டர் கதிர் முருகு,
முதல்  பதிப்பு ( ஜீன் 2007),
சீதைப் பதிப்பகம் ,
10 /14 தோப்பு வெங்கடாசலம்,
திருவல்லிகேணி, சென்னை – 5.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
க.சதீஷ்குமார்
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

இராசிபுரம் (வ), நாமக்கல் (மா) 637408.

 

Leave a Reply