மனப்பான்மையை உயர்த்துங்கள்
உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு எது தடையாக உள்ளது? என்பதைக் கவனிக்க வேண்டும். புறத்தடைகள் அல்ல. அகத்தடைகளை நன்றாகக் கவனிக்க வேண்டும். மனதில் உள்ள தடைகள் என்ன? எதற்கெடுத்தாலும் ஒரு தயக்கம். இதை நம்மால் செய்ய இயலுமா? இயலாதா? தோல்வியுற்றால் மற்றவர்கள் தம்மை கேலிசெய்வார்கள் கீழ்த்தரமாகப் பேசுவார்கள் என்ற எண்ணம். ஒரு செயல் தன்னால் செய்யப்பட வேண்டும் என்ற நிலையிலும் அதைச்செய்யாமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? என்று பார்ப்பது தன்கடமைகளைத் தட்டிக்கழிப்பது போன்ற எண்ணங்களே அகத்தடைகள் எனக் கூறலாம். இவ்வாறான மனோநிலை நிகழ்ந்தால் தனக்கு நன்றாகத்தெரிந்த செயலைக்கூட செய்வதற்குத் தயக்கம் ஏற்படும். தாழ்ந்த மனோபாவம் எவ்வாறு ஏற்படுகிறது என்று பார்த்தோமானால், சிறுவயதில் உடன் பிறந்தவர்களால், உறவினர்களால், நண்பர்களால், சுற்றியுள்ள சூழ்நிலையால் உண்டாகி இருக்கும். உதாரணமாகப் பெற்றோர்களில் பலர் தனது குழந்தைகளுக்கு எந்தவிதமான செயலையும் செய்ய விடுவதே இல்லை. பற்களைச் சுத்தம் செய்வதிலிருந்து குளிப்பது, பள்ளிக்குச் சென்றுவிட்டு வருவது சமைப்பதுவரை தானே எல்லாவற்றையும் செய்து விடுவார்கள். “இது உனக்கு ஒன்றும் செய்யத்தெரியாது. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிடுவார்கள். குழந்தைகளை ஒன்றும் அறியாதவர்களாக அனுபவம் அற்றவர்களாக வளர்த்து விடுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்ந்து பொது வாழ்க்கைக்கு செல்லும்போது, உறவினர்களால் நண்பர்களால் மிகவும் தாழ்வாகப் பேசப்பட்டு தனக்கு எதுவும் சரியாகச் செய்ய வரவில்லை. இனி நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தேவையற்ற விமர்சனங்களால் நாளடைவில் தானேதன்னை தாழ்வாக எண்ணும் நிலை ஏற்பட்டு விடும். இந்த எண்ணத்தால் மீள முடியாமலும், ஒருசெயலை செய்ய இயலாமலும் தள்ளாடும் நிலை உருவாகிவிடுகிறது.
அனுபவங்களைக் கற்றுக்கொடுங்கள்
ஒரு குழந்தையிடம், ஒரு செயலைச் செய்யுமாறு தூண்டவேண்டும். அச்செயலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். பலமுறை தவறிவிடும். ஒரு வேலையை செய்யும் போது உன்னால் முடியும் என்று ஊக்குவித்தலில் ஒரு குழந்தை வளர்ந்தால், அது வெற்றியாளனாக மாறும். ஒரு குழந்தைக்கு பென்சில் கூட பெற்றோர்கள் சீவிக்கொடுத்து, நீ சீவினால் முள் உடைந்துவிடும் என்று அதன் திறனை தாழ்மைப்படுத்தும் சூழலில் வளரும் குழந்தை தன்னம்பிக்கை அற்றதாக மாறி அது மற்றவரை நம்பும் தன்னை நம்பாது. தனக்கு ஒன்றுமே செய்ய வராது என்று தன் முயற்சியை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும். இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தை கையாலாகாதவன் என்று சமுதாயத்தால் பேசப்பட்டு மதிப்பில் கடைக்கோடிக்குத் தள்ளப்படுவான்.
எனவே ஒரு குழந்தையைப் பல விமர்சனங்களுக்கு இடையிலோ, அதிகாரத்தைக் காட்டியோ, வெறுத்து ஒதுக்கும் நிலையிலோ வளர்க்காமல், பல அனுபவங்களைக் கொடுத்து அவற்றின் மூலம் அவர்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டு சமுதாயத்தில் தன்னை முழுமனிதனாக மதிப்புமிக்கவனாக வாழச்செய்ய வேண்டும்.
2.2 உங்களுக்கு உரியதைக் கண்டறியுங்கள்
காட்டில் வாழும் மிருகங்களில் வீரம்மிக்கது சிங்கமும் சிறுத்தையுமாகும். இந்த மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள பல மிருகங்கள் தம்மை தயார்நிலையில் வைத்துக்கொள்ளும். எந்த நிலையிலும் எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற உண்மையை அறிந்தனவோ என்னவோ அந்த மிருகங்கள் தாக்கவரும் மிருகங்களைக் காட்டிலும் வேகமாக ஓடும். அப்போதுதான் அதுபிழைக்கும் இல்லையென்றால் தாக்கப்பட்டுவிடும். சிங்கத்தைவிட மான் வேகமாக ஓடும்; ஓட வேண்டும். இந்தக் காட்டுசூழலில் மிருகங்களில் மிக உயரமான நீண்ட கழுத்தைக் கொண்டது ஒட்டகச்சிவிங்கி. அது கருவுற்றுக் குட்டி ஈனும்போது நின்றுகொண்டே ஈனும். அப்போது அதன் குட்டிக்கு உயரத்திலிருந்து விழுவதால் உடல் அடிபட்டு அந்த வலியால் அது எழந்திருக்காமல் அப்படியே படுத்திருக்கும். அதன் உடல் முழுவதும் குருதி சிவப்பாகக் காணப்படும். இவ்வாறு சிறிதுநேரம் கடந்ததும் தாய் ஒட்டகச்சிவிங்கி தன்காலால் எட்டி உதைக்கும். குட்டி எழும்வரை உதைத்துக் கொண்டே இருக்கும். அந்த அடியின் வலி தாங்கமுடியாமல் குட்டி எழுந்து ஓட ஆரம்பிக்கும். தாய் தன்குட்டியை அழைத்துக்கொண்டு வேறுஇடம் சென்றுவிடும். தாய் அவ்வாறு குட்டியை உதைப்பதற்குக் காரணம், குருதியின் வாசனை சிங்கம் போன்ற வேட்டையாடும் மிருகங்களுக்குத் தெரிந்துவிட்டால் அது குட்டியைத் தின்றுவிடும். குட்டி அந்த ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தாய் வலியை தானே தருகிறது. இவ்வாறு பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குப் பல கடினமான அனுபவங்களைக் கொடுத்திருந்தால், அவர்கள் சமுதாயத்தில் எப்படி நிலைநாட்டி கொள்வது என்பதை கற்றுத் தெளிந்திருப்பார்கள். பெற்றோர்களில் சிலர் தம்குழந்தைகளுடன் மற்றவரை ஒப்பிட்டுப் பேசி இவரை தாழ்த்திப்பேசுவது உன்னால் ஒன்றும் ஆகாது என்று பேசிப்பேசி நம்பவைப்பது. இவையெல்லாம் தாழ்மையான மனோபாவத்திற்கு இட்டுச்செல்கின்றன.
2.3 மனநிலையை மாற்றுங்கள்
தவறு செய்தால் சரியாகr செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாகக் கவனித்தோமென்றால் தவறு செய்வதும் ஒரு அனுபவமே. நடந்தவை நடந்ததுவிட்டன. சென்ற காலம் திரும்பாது. இனி அந்த தாழ்மையான எண்ணத்திலிருந்து தன்னை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை சிந்தனை செய்யலாம்.
உங்களை மீட்பதற்கு எந்தக் காரணத்தையும் முன்வைக்காமல் ஆர்வத்துடன் தொடங்குங்கள். முதலில் ஒரு தாளை எடுத்துக்கொண்டு உங்கள் முயற்சிக்கு எவையெல்லாம் தடையாக உள்ளன; எவையெல்லாம் சரியாக உள்ளன என்பதை தனித்தனியாக எழுதுங்கள். தடையாக உள்ள செயல்படுகளை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒன்று மாற்ற முடியாதவை. அடுத்து மாற்றக்கூடியவை. மாற்ற முடியாதவைகளான முகம் கறுப்பாக இருப்பது. காது நீளமாக இருப்பது ஆகும். ஆனால் சிலர் கறுப்பாக இருந்தாலும் கலையான முகத்தைப் பெற்றிருப்பார்கள். சிலர் காதுகள் நீளமாக இருந்தாலும் அழகான கண்களைப் பெற்றிருப்பார்கள். எனவே அழகானவற்றை இறைவன் கொடுத்துள்ளார் என்று உயர்வாகத் தன்மனதில் எடுத்துக்கொள்வதும் கறுப்பாக இருக்கிறோம் என்று தாழ்வாக நினைப்பதும் உங்கள் மனோநிலையில்தான் உள்ளது. இறைவன் படைத்த உங்கள் உறுப்புகளில் இல்லை. இவற்றை உங்களால் மாற்ற இயலாது.
2.4 முடிந்தவற்றை மாற்றுங்கள்
மாற்றமுடிந்த தடைகள், குணங்கள், செயல்கள், பழக்கங்கள் உங்களிடம் இருக்கும். இவற்றை நீங்கள் முயற்சி செய்தால் மாற்ற முடியும். உதாரணமாக உங்களால் காலையில் ஐந்து மணியளவில் எழுந்திருக்க முடியாது. ஆனால் எழுந்துவிட்டால் அன்று முழுவதுமே உங்கள் செயல்களை ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்வீர்கள். எனவே உங்கள் முன்னேற்றத்திற்கு இந்தத் தூக்கம் தடையாக உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் இதுவரை ஏழுமணிவரை உறங்கும் நீங்கள் ஒருநாளில் அரைமணி நேரம் முன்னதாக எழுந்து ஒவ்வொரு நாளும் உறங்கும் நேரத்தைக் குறைத்துத் தினமும் அதிகாலை ஐந்துமணிக்கு எழுந்துவிடும் பழக்கத்தைக் கொண்டுவாருங்கள். இது உங்களால் மாற்ற முடிந்த தடை.
ஒவ்வொன்றும் இவ்வாறு உங்களின் முயற்சியால் நீங்கள் செய்யும் செயல்கள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களிடம் எவை குறையாக உள்ளன என்பதைக் காட்டிலும் எவை நிறைவாக உள்ளன என்பதை உணருங்கள்.
2.5 உங்களின் கைவந்த கலை
நிறைவானவற்றைக் கொண்டு உங்களை எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை சிந்தனை செய்யுங்கள். அழகான மார்க்கம் ஒன்று புலப்படும். ஒரு காட்டில் பலவகையான மிருகங்கள் வாழ்ந்தன. அந்த மிருகங்களில் உருவத்தில் பெரிதாக இருப்பவை ஒன்றுசேர்ந்து கூட்டம் நடத்தின. யானைகள், சிங்கம், புலி போன்றவை சேர்ந்து பேசி தமது மிருகஇனத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தலாம் என்று முடிவு செய்தன. மற்ற மிருகங்களும் இதற்கு ஒப்புதல் அளித்தன. பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு, கல்வி கற்கப்பட்டு திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அவைகளுக்கு இடையே போட்டிகளும் நடத்தப்பட்டன. அவை நீச்சல் போட்டி, நீளம் தாண்டுதல், மரமேறுதல், குழியை பறித்தல், பறத்தல், கூடு கட்டுதல், உயரம் தாண்டுதல், கூவுதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. இவை அனைத்தும் ஏற்கனவே எல்லா மிருகங்களுக்கும் கற்றுத் தரப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
போட்டிகளில் முதலாவதாக மரம்ஏறும் போட்டி. குரங்குகள் மிக வேகமாக மரம் ஏறிவிட்டன. மற்ற மிருகங்கள் முடியாமல் தோல்வியைத் தழுவின. நீச்சலடிக்கும் போட்டியில் முதலைகளிடம் மற்றவை தோற்றன. குழித்தோண்டும் போட்டியில் பன்றிகள் வெற்றி பெற்றன. குழி தோண்டிய பறவைகளுக்கு இறக்கைகள் முறிந்து விட்டன. பறக்கும் போட்டியில் பருந்துகள் பரிசை வென்றன. மற்றவை தோல்வி அடைந்தன. இவ்வாறு உங்களுக்கு எந்த துறையில் வல்லமை அதிகம் என்று கவனியுங்கள். அதனை எவ்வாறு செய்தால் மற்றவரை விட சிறப்பாகச் செய்ய இயலும் என்பதை உணருங்கள். இல்லை என்றால் பறவைகள் குழிதோண்டி இறக்கைகளை உடைத்துக் கொண்டதைப் போல ஆகிவிடும்.
2.6 உங்களுக்கானதை முயற்சி செய்யுங்கள்
உங்களுக்கான இடம் எது? துறை எது? என்பதை அறிந்து அதில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். விடாமல் உழையுங்கள். யாருக்கு எது தகுந்தது? தகுதியானது? என்று ஒன்று உள்ளது. அதைவிடுத்து எல்லாவற்றையும் முயன்று, தோல்வி அடைந்து தன்னை தாழ்த்திக்கொண்டு துன்பப்பட வேண்டாம். இவையெல்லாம் சிந்தனை செய்து தவிர்க்கப்பட வேண்டியவை.
நீங்கள் சிந்தனைகளை உங்கள் மீது கொண்ட எண்ணங்களை உயர்த்துங்கள். தாழ்மைப்படுத்தும் எண்ணம் மறைந்தோடிவிடும். மனதில் மற்றவர்களைப் பற்றிய எண்ணம் உயர்வானதாக இருக்கலாம். ஆனால், உங்களைத் தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டாம். தன்னை உயர்வாக நினைத்தால் மட்டுமே தன்னம்பிக்கை ஏற்படும். இவனை வெல்ல நான் பிறந்துள்ளேன் என்ற உயர்வான எண்ணம் உருவாகும். எந்த நிலையிலும் இந்த எண்ணம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எண்ணங்களை மேன்மைப்படுத்துங்கள். “இந்தச் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்ற நான் பிறந்துள்ளேன். இந்த நாட்டிற்கு நானே அரசன் நானே சேவகன். இங்கு ஒவ்வொரு மாற்றத்தையும் என்னால் செய்ய முடியும்” என்ற எழுச்சியான எண்ணங்களைக் கொண்டு செயல்களாக மாற்றி பழக்கமாக்கிக் குணமாக மாறினால் நீங்கள் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.
எனவே மனதின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க உள்ளத்தில் உங்களைப் பற்றிய எண்ணங்களை உயர்த்துங்கள். மற்றவர் மீது நீங்கள் கொண்ட எண்ணத்தை அல்ல.
வீரத்தின் சிறப்புப் போர் செய்வதில் உள்ளது. உங்களின் உயர்வு மனப்பானமையில் உள்ளது.
ஆசிரியர் : முனைவர் நா.சாரதாமணி
மிக அருமை. மனதை தொட்ட பதிவு. வாழ்த்துக்கள் சாரு
சார் நான் படித்து உணர்ந்த பின்பு எனது பிள்ளைகளிடம் இதனை படிக்கச் சொன்னேன். இது அருமை சூப்பர் என்றெல்லாம் சொல்லி சம்பிரதாயத்தை பேணுவதை விட பிள்ளைகளும் பெற்றோரும் அவ்வப்போது படித்து கொள்ளகுறிப்பாக அவர்களிடையே பிணக்குகள் வரும்போது வாசிக்க வேண்டிய பாடமாகவே இதை அறிகிறேன். எளிமையான நடை தான் என்னை படிக்க ஆர்வமூட்டியது. வாழ்க வளமுடன்..