சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

மக்கள் தங்களின் அறிவு நுட்பத்தினால் தேவைக்கு ஏற்ப பல வகையான தூய்மை செய்யும் பொருட்களைக் கண்டுபிடித்தனர். ஆவற்றைத் துடைப்பம், விளக்குமாறு, சீமாறு போன்ற பெயர்கள் வைத்தனர். இச்சீமாறு பல இன மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தனக்கென தனிப் பண்பாட்டைக் கொண்ட கொங்கு பகுதி மக்களிடையேயும் சீமாறு பயன்பாடு காணப்படுகிறது. கொங்கு மக்கள் தூய்மை செய்ய துடையப்பம், விளக்குமாறு, சீமாறு, நாகிரிஞ்சி மாறு, விராலிமாறு, பூந்துடைப்பம் போன்ற பல வகைகளைப் பயன்படுத்துகின்றனர். இச்சீமாறு தூய்மை செய்வதோடு அவர்களது பண்பாட்டில் பெறும் இடம் குறித்து இவ்வாய்வு எடுத்துரைக்க முற்படுகின்றது.

சீமாறு – விளக்கம்

சீவங்குச்சி + மாறு = சீமாறு என்பதாகும். சீவங்குச்சி என்பது தென்னை ஓலையிலிலருந்து எடுக்கப்படுவதாகும். மாறு என்பது அசுத்தத்தைத் தூய்மையாக மாற்றக் கூடியது. அதாவது சீவங்குச்சியால் அசுத்தத்தை மாற்றும் கருவி சிமாறு என்று பொருள் கொள்ளலாம். இச்சீமாறே விளக்குமாறு என்று கூறுகின்றனர்.இச்சீமாறைக் கொண்டு வீடு, வாசல், தானியம் போன்ற வற்றைத் தூய்மை செய்கின்றனர். தூய்மை செய்யும் துடைப்பதிற்கு ஊகந்தாள், தென்னை நரம்பு, ஈர்த்தோலை முதலியவற்றால் குப்பை, துசுமுதலிய விலக்கச் சேர்த்த பொருள்களின் கற்றை என்று அபிதானசிந்தாமணி கூறுகின்றது.

திருநெல்வேலி பகுதியில் இச்சீமாற்றை ‘வாரியல்’ என்று குறிப்பிடுகின்றனர். கொங்கு பகுதியில் வாழும் தெலுங்கு மொழிபேசும் மக்கள் தென்னம் பர்க்க என்றும், கன்னட மொழி பேசக்கூடியவர்கள் தென்னம் பர்கோ என்றும் கூறுகின்றனர்.

சீமாறின் அமைப்பும் தயாரிப்பு முறைகளும்

            கொங்கு பகுதியில் உள்ள சீமாறு குறைந்தது ஐம்பத்தைந்து செ.மீ நீளமும் நான்கு செ.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது. இந்த சீமாறை தென்னை ஓலையிலிருந்தே தயாரிக்கின்றனர். தென்னை மரத்தின் ஓலையை மட்டை என்கின்றனர். மட்டையின் இரண்டு பக்கமுள்ள நீளமாக உள்ள ஓலையை சோவை என்றும் அந்தச் சோவையின் மையப்பகுதியில் உள்ள நரம்பைச் சீவங்குச்சி, தென்னங்குச்சி, ஈக்குக் குச்சி என்றும் கூறுகின்றனர். இந்தச் சீவங்குச்சியைக் கொண்டே சீமாறு தயாரிக்கின்றனர்.

தென்னை மரத்திலிருந்து தானே பழுத்து விழும்மட்டைசீமாறு தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். விழும் மட்டையில் பழுது இல்லாத மட்டையைக் கூரிய ஊசி கொண்டு சோவையையும் சீவங்குச்சியையும் பிரித்தெடுக்கின்றனர். ஒரு மட்டையை முழுவதும் பிரித்தப் பிறகு ஒவ்வொரு சீவங்குச்சியையும் மட்டையிலிருந்து தனித்தனியாக பிடுங்கி ஒன்றாகச் சேர்க்கின்றனர். அவற்றை ஒன்றானகச் சேர்த்துத் தற்காலிகமாகத் தென்னை சோவையாலே கட்டுகின்றனர். இதே போன்று மற்றொரு மட்டையிலிருந்தும் சீவங்குச்சியைப் பிரித்தெடுக்கின்றனர். மட்டையின் தளவுப்பகுதி சோவை நீளம் குறைவாக இருப்பதினால் நற்பது செமீ. நீளத்திற்கு உள்ள தளவு மட்டையின் சீவங்குச்சியைப் பயன் படுத்துவதில்லை.

            சீவங்குச்சியை மட்டையிலிருந்து பிடுங்கியப் பகுதியை அடிப்பகுதி என்றும், சோவையின் விளிம்புப் பகுதியைத் தளவு(நுனி)ப் பகுதி என்றும் கூறுகின்றனர். இரண்டு மட்டையிலிருந்து சேகரித்தச் சீவங்குச்சிகளை அடிப்பகுதியில் அரையடி(பதினைந்து செ.மீ) இடைடிவெளி விட்டு இறுக்கி கட்டுகின்றனர். கட்டுவதற்காக வலுவான கட்டுக்கொடி(மெல்லியதான கொடி), பனை மட்மையின் நரம்பாகிய அகினி, சரடு, பிளாஷ்டிக் கயிறுகள் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒர் சீமாறு தயாரிக்க இரண்டு மணிநேரம் தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.

ஒருசிலர் சீவங்குச்சியை மட்டையிலிருந்து பிரித்தெடுக்க அரிவாள்மணை, கத்தி போன்ற கருவிகளையும் பயன்படுத்துவதுண்டு. பழுத்த மட்டை மட்டுமின்றி பச்சை (இளம்) மட்டையிலும் சீமாறு தயாரிக்கின்றனர். பச்சை மட்டையால் தயாரிக்கப்படும் சீமாற்றை வீடு கூட்டமட்டும் பயன்படுத்துகின்றனர். சீவங்குச்சிகளைப் பிரித்தெடுத்த மட்டையையும், சோவையையும் அடுப்பெரிக்கப் பயன் படுத்துகின்றனர். பச்சைமட்டையாக இருந்தால் காய்ந்தபிறகு பயன்படுத்துகின்றனர்.

சீமாறு தயாரிப்பவர்கள்

சீமாறுதயாரிக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். வீட்டுவேலை, விளைநிலத்து வேலை இல்லாத பொழுதும் ஆடு மாடு மேய்கின்ற பொழுதும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் சீமாறு தயாரிக்கின்றனர்.

ஒரு முறை சீமாறு தயாரிக்கத் தொடங்கினால் குறைந்தது ஒரு வருடத்திற்குத் தேவையான நான்கு ஐந்து (தேவையைப் பொருத்து)சீமாறுகளைத் தயாரித்து வைத்துக்கொள்கின்றனர். தயாரித்தச் சீமாறுகளை மழையில் நனைந்து விடாமலும், வெயிலில் படாமலும் வீட்டினுள்(எளிதில் மற்றவர் கண்ணில் படாததது போன்று)மறைவாகப் பாதுகாக்கின்றனர். சீமாறின் தேவை ஏற்படும் பொழுது மட்டும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்துகின்றனர்.

தென்னைமரம் இல்லாதவர்கள் தென்னை மரம் வைத்திருப்பவர்களிடம் சென்று மட்டையை வாங்கிக்கொள்கின்றனர். கொடுக்கும் மட்டைக்கு உரிமையாளர் தொகை ஏதும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு சீமாறு தயாரிக்கம் அளவே கொடுப்பர். ஆதிக மட்டைகள் கேட்பின் தொகைக்காகக் கொடுக்கின்றனர்.தற்போது கடைகளில் விலைக்கு விற்கின்றனர். ஒரு சீமாறின் விலை பதினைந்து முதல் இருபது வரை விற்பனை செய்கின்றனர்.

சீவக்கட்டை

கூட்டிக் கூட்டித் தேய்ந்து போன சீமாறைச் ‘சீவக்கட்டை’ என்று கூறுகின்றனர். அதாவது ஐம்பது, அறுபது செ.மீ நீளமுள்ள சீமாறு தேய்ந்து முப்பது,முப்பத்தைந்து செ.மீட்டற்கும் குறைவானதைக் குறிக்கும். இச்சீவக்கடைடையை ஆடு அடைக்கும் இடமாகிய பட்டியைக் கூட்டவும், மாடுகட்டும் கட்டுதாரியைக் கூட்டவும் பயன்படுத்துகின்றனர். தற்போது ஒரு சிலர் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.

கட்டுத்தாரியைக் கூட்டும் பொழுது பாதி சீவகட்டை தரையில் படும்படி பிடித்து அழுத்திக் கூட்டுகின்றனர்.  அவ்வாறு அழுத்திக் கூட்டும்;பொழுதே கட்டுத்தாரி தூய்மை அடைகிறது. சாய்வாக அழுத்திக் கூட்டுவதைப் ‘படுக்குப்போட்டு கூட்டுதல்’ என்று கூறுகின்றனர். அதே மாற்றை நேராக பிடித்தும் கூட்டுவதும் உண்டு. இவ்வாறு செய்தால் மாடுகள் தின்றது போக மீதித் தீனியை அரித்து எடுக்க எளிதாக அமைகிறது என்கின்றனர்.

ஆடுகள் அல்லது மாடுகளை அடைக்கும் இடத்தில் குப்பைகள் மிகுந்து இருக்கும். அவ்விடத்தைப் புதுசீமாறில் அகற்றும் பொழுது தூய்மையாக்அகற்ற முடிவதில்லை. தேய்ந்த சீமாறாக இருப்பின் எளிதில் அதிகமானக் குப்பைகளைக் கூட்டமுடிகிறது.

வீடு கூட்டுதல்

வீடு கூட்டுவதற்கும் ஒருசிலர் சீமாறையே பயன்படுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது. வீடு கூட்டுவதற்குப் பச்சை மட்டையில் தயாரித்தச் சீமாறையே பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். இளம் மட்டையால் தயாரிக்கும் சீமாறு என்பதினால் வீடு கூட்டுவதற்கு ஏதுவாக உள்ளது. ஆனால் இச்சீமாறைக் கொண்டு களம், கட்டுதாரி முதலியவற்றைக் கூட்ட பயன்படுத்த முடிவதில்லை. கூட்டினாலும் பழுத்த மட்டையில் கூட்டுவது போல் இருப்பதில்லை என்கின்றனர்.

பொதுவாக வாசல், களம், கட்டுத்தாரிவீடு போன்றவற்றை கூட்டும் பொழுது சீமாறை ஒரு கையாலே பிடித்து கூட்டுகின்றனர். அதிகப் பரப்பளவுஎன்றால் இரு கைகளாலும் கூட்டுகின்றனர். ஒருசிலர் இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி கூட்டுவதுண்டு.

உணவகங்களில் சீமாறு

உணவகங்களில் சீமாறு பயன்படுத்துகின்றனர். உணவகங்களில் தோசை, புரோட்டா போன்ற உணவு தயாரிக்கும் போது சீமாறு பயன்படுகிறது.  தோசை கல்லில் எண்ணெய் துடவுவதற்கும் அக்கல்லில் நீர் தெளித்துக் கூட்டவும் சீமாறு பயன்படுத்துகின்றனர். சிறிய தோசைக் கல்லாக இருந்தால் அதில் துணி கொண்டு எண்ணெய் தேய்க்க எளிதாக இருக்கின்றது. பெரிய கல்லாக இருப்பதனால் சீமாறு தான் எளிதாக இருக்கின்றது என்கின்றனர். இதில் வீடு வாசல் கூட்டும் மாறு அளவிற்கு அதிக சீவங்குச்சிகளைப் பயன்படுத்துவதில்லை. சீமாறில் கால்பங்கு அளவு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தச் சீமாறைக் குப்பைகளைக் கூட்ட பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர்.

நம்பிம்பிக்கைகள்

சீமாறு தொடர்பான நம்பிக்கைகள் மக்களிடையே காணமுடிகிறது. அதாவது சீமாறின் மீது தவறுதலாகக் கூட கால் படக்கூடாது. கால்பட்டால் உடனே அதை தொட்டு வணங்க வேண்டும். சீமாறைத் தாண்டிச் செல்வது கூடாது. தவறுதலாகத் தாண்டிச் சென்றுவிட்டால் மீண்டும் ஒரு முறை கடந்து சந்த பக்கமிருந்து சீமாறைத் தாண்டவேண்டும். அவ்வாறு செய்தால் செய்த குற்றம் விலகும். சீமாறைக் கூட்டிய பிறகு அடிப்பகுதியோ, தளவுப் பகுதியோ தரையில் இருப்பது போன்று நிற்கவைக்கக் கூடாது. உறவினர்கள் வரும்பொழுது அவர்களின் பார்வையில் சீமாறு படுவது போன்று வைக்கக் கூடாது. இதுபோன்ற தவறுகளைச் செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்குத் துன்பம் நேரிடும் எனக் கருதுகின்றனர்.

மேலும் வீட்டின் வாசற்படியின் குறுக்கே சீமாறை வைத்தால் வீட்டிற்கு வரும் செல்வம் திரும்பிச் சென்றுவிடும் என்றும், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வீடு வாசல் போன்றவற்றைக் கூட்டினால் வீட்டில் உள்ள செல்வம் சிறிது சிறிதாகக் குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர். சீமாறை லட்சுமியாகக் கருதுகின்றனர்.

சீர் வரிசைகளில் சீமாறு இடம்பெறுவதில்லை. திருமணமான பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களில் சீமாறு கொடுப்பதில்லை என்கின்றனர். இதுபோன்ற நம்பிக்கைகள் மக்களிடையே காணமுடிகிறது.

தீய ஆவிகளை விரட்டுதல்

உறங்கிக் கொண்டிருக்கும் குழுந்தையின் தொட்டிலுக்கு அடியிலும், பேய் ஓட்டவும் சீமாறு பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் ஒருசில நேரங்களில் இடைவிடாது அழுது கொண்டே இருப்பர். சிறிது நேரத்திற்கு ஒருமுறை அழத்தொடங்கும் சரியாக உறங்காது. இதற்குத் தீய ஆவிகளே காரணம் எனக் கருதுகின்றனர். அது போன்ற சமயங்களில் குழந்தை உறங்கும் தொட்டிலுக்கு அருகிலோ, குழந்தைப் படுத்திருக்கும் இடத்தின் தலைப் பகுதிக்கு அருகிலோ சீமாறை வைப்பதுண்டு. அவ்வாறு செய்தால் குழந்தை அழுவதில்லை எனக் கூறுகின்றனர். அதாவது தீய ஆவிகளை விரட்டும் ஆற்றல் சீமாறுக்கு உண்டு என நம்புகின்றனர்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் உறங்கும் போது ஒருசில நாட்களில் தீயகனவு தோன்றும். அதுபோன் சமயங்களில் சீமாறைத் தலைக்கருகில் வைத்து உறங்குகின்றனர். ஓரிரு நாட்களுக்குப் பிறகு தீயகனவு நின்ற சீமாறைப் பயன்படுத்துவதில்லை. வாசல் கூட்டும் கூட்டும் சீமாறே தொட்டில், கட்டில் இவற்றின் அடியில் பயன்படுத்துகின்றனர்.

தீய ஆவிகள் யாரேனும் ஒருவரைப் பற்றிக் கொள்வதுண்டு. அவ்வாறு பற்றிக் கொள்ளும் ஆவிகளைப் பேய் என்கின்றனர். அந்தப் பேயை அவர் உடலிலிருந்து அகற்ற சீமாறாலே அவரை அடிக்கின்றனர். அவரை அடித்தால் பேய் பயந்து ஓடிவிடும் என்கின்றனர். இவ்வாறு ஒருவரை சீமாற்றால் அடிக்கும் போது பேய்க்குத்தான் வலிஏற்படும் பேய்பிடித்தவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.

திருஷ்டி கழித்தல்

கண்திருஷ்டி தொடர்பான நம்பிக்கைகளும் கொங்கு பகுதி மக்களிடையே காணப்படுகின்றன. அதாவது குழந்தைகளுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய்களினால் உடல் நலகுறைவு ஏற்படுவதுண்டு. அப்போது மருத்துவச்செலவு செய்தும் உடல் குணமடையவில்லையெனில் அதை கண்திஷ்டி என்கின்றனர். இதனை ‘கல்லடிப்பட்டாலும் கண்ணடிப்படக் கூடாது என்று கூறுகின்றனர். கண்திருஷ்டியல் உடல் நலம் குறைவு ஏற்படுவதுண்டு. அக்குழந்தையை மாலை நேரத்தில் கிழக்கு நோக்கி அமரச்செய்கின்றனர். பிறகு சீமாறைத் தொட்டு வணங்கி சீமாறின் மையப்பகுதியைப்பிடித்து வலது கையால் எடுத்துக் கொள்கின்றனர். சீமாறின் அடிப்பகுதி திருஷ்டி பட்டவர்களின் முகத்திற்கு முன்பாக முப்பது செ.மீ இடைவெளியில் பிடித்துச் சுழற்றுகின்றனர். சுழற்றும் போது வலபுறமும், இடபுறமும் மாற்றி மாற்றி மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப் படை எண்ணிக்கையில் சுழுற்றுகின்றனர். இவ்வாறு செய்தாய் கண்திருஷ்டி விலகும் எனக்கூறுகின்றனர்.

இரண்டுவயது குழந்தை முதல் நாற்பது, ஐம்பது வயது வரை உள்ளவர்களுக்கும் இது போன்று திருஷ்டி சுழற்றும் வழக்கம் உள்ளது.இத்திருஷ்டியைத் திருமணமான, வயதான பெண்களே சுழற்றிக் கழிக்கின்றனர். ஒருசில பெண்கள் தங்களுக்குள் திருஷ்டி ஏற்பட்டிருந்தாலும் அவர்களே சீமாறை தங்கள் முகத்திற்கு முன்பு சுழற்றிக்கொள்கின்றனர்.

குழந்தைகளுக்குத் திருஷ்டி கழித்தவுடன் அச்சீமாற்றிலிருந்து நான்கு, ஐந்து குச்சிகளை பிடுங்கிக் கொள்கின்றனர். அக்குச்சிகளை வீட்டிற்கு வெளியே ஏதேனும் ஒரு ஓரமாகத் தீமூட்டி அதில் குச்சிகளை ஒன்று சேர்த்து நான்கு ஐந்து துண்டுகளாக்கிப் போடுகின்றனர். இவ்வாறு செய்தால் கண்திருஷ்டி விலகும் என்கின்றனர்.

வாக்குக்கேட்டல்

            சகுனம் பார்ப்பதை வாக்குக் கேட்டல் என்று கூறுகின்றனர். அதில் சீமாறு மூலம் வாக்குக் கேட்கும் மரபும் காணப்படுகின்றது. வாக்குக் கேட்கும் பொழுது சீமாறைத் தொட்டு வணங்கி எடுத்துக் கொள்கின்றனர். சீமாறின் அடிப்பகுதி தரையை நோக்கியபடியும் தளவுப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு பிடித்துக் கொள்கின்றனர். பிடித்துக் கொண்ட சீமாறினுள் குத்துமதிப்பாக அதாவது பத்தில் ஒருபங்கு இருக்குமளவு  கைவிரல்களினால் பிரித்துக்கொள்கின்றனர். பிரித்தப் பகுதியில் ஒரு விகிதம் இருக்கும் சீமாறின் குச்சிகளை இரண்டு இரண்டாகச் சேர்த்து எண்ணுகின்றனர். அவ்வாறு பிரிக்கும் பொழுது ஒற்றைக் குச்சித் தனியாகவோ அல்லது இரண்டு குச்சிகள் சேர்ந்தோ வரும். ஒற்றைக்குச்சி வந்தால் ‘வாக்கு’க் கொடுத்துள்ளது என்கின்றனர். அதே இரண்டுக்குச்சிகள் சேர்ந்து வந்தால் ‘கட்டிடுச்சி’ எனக் கூறுகின்றனர். அதாவது வாக்கு கொடுத்தல் என்பது எண்ணிய நிகழ்வு தடையின்றி நடைபெறும் என்றும் கட்டிடுச்சி என்பது திட்டமிட்ட நிகழ்வு தடைபடும் என்பதையும் உணர்த்துகின்றது.

இவ்வாறு வாக்குக் கேட்பது இரவு நேரங்கிளல் பார்ப்பதில்லை. இரவு நேரங்களில் பார்ப்பின் தவறாந வாக்கைக் கொடுத்துவிடுவதாகக் கருதுகின்றனர். இச்சீமாறினால் வாக்குக் கேட்கும் மரபு வயதானப் பெண்களிடம் மிகுதியாகக் காணப்படுகின்றது.

சடங்குகளில் சீமாறு

சீமாறு தூய்மை செய்யும் கருவியாக மட்டுமின்றி மக்கள் நிகழ்த்தும் சடங்குகளிலும் இடம் பெறுகின்றது. பூப்பெய்தியப் பெண்ணுக்கு அருகாமையிலும், மழைவேண்டி மழைக்கஞ்சி எடுக்கும் போதும் இறப்புச் சடங்கின்போதும் சீமாறைப் பயன்படுத்துகின்றர்.

பூப்பெய்தியப் பெண்ணை பூப்பெய்திய நாளிரிருந்து ஐந்து நாட்களோ, ஏழுநாடகளுக்குப் பிறகோ வீட்டினுள் அனுமதிப்பர். அதுவரை அப்பெண் அவளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீட்டின் வெளியிலேயே இருக்கின்றாள்.(ஒருசிலர் வீட்டின் ஒரு மூலையிலோ தங்கவைக்கின்றனர்) அந்த இடத்தில் அப்பொண்ணின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் சீமாறை வைக்கின்றனர். பூப்புச்சடங்கு முடிந்ததும் சீமாற்றை எப்போதும் போலப் பயன்படுத்துகின்றனர்.

பூப்பெய்தியப் பெண்ணை தீய ஆவிகள் எளிதில் பற்றிக்கொள்ளும். ஆதை தடுக்குச் சீமாறை வைப்பதாக் கூறுகின்றனர். சீமாறை வைத்தால் பெண்ணிடம் வராமல் விலகிச்சென்றுவிடும் என்கின்றனர்.

மழை இல்லாத காலங்களில் மழைவேண்டி மழைக்கஞ்சி எடுக்கும் வழக்கம் உள்ளது. மழைக்கஞ்சி எடுத்து முடித்தபிறகு சீமாறு, முறம் போன்றவற்றைச் சுடுகாட்டில் எறிந்துவிடுகின்றனர். இவ்வாறு செய்தால் மழைவரும் என நம்புகின்றனர்.

இறப்புச் சடங்கின்போது சீமாறு தாண்டுதல் நிகழ்வு உள்ளது. ஒருவர் உடலுக்குக் கொல்லிவைத்தவர் வீட்டிற்குள் நுழையும் போது சீமாறைத் தாண்டிச் செல்லவேண்டும் என்கின்றனர். அதற்காகக் கொல்லி வைத்தவர் வீட்டிற்கு வரும் முன்பே சடங்க நிகழ்த்துபவர்கலில் ஒருவர் வீட்டு வாசலில் சீமாறின் அடிப்பகுதி இடப்பக்கமும் தளவுப்பகுதி வலது பக்கமும் இருக்கும்படி வைத்திருக்கின்றனர். கொல்லிவைத்தவர் அந்தச் சீமாறைத் தாண்டியபிறகே வீட்டினுள் நுழைகின்றனர். அவ்வாறு தாண்டிச் சென்றால் துன்பம் விலகும் இல்லையெனில் வீட்டில் உள்ள அனைவருக்கும் துன்பம் ஏற்படும் எனக்கருதுகின்றனர்.

விளையாட்டில் சீவங்குச்சி

விளையாட்டில் சீவங்குச்சிகளைப் பயன்படுத்தி விளையாடும் மரபு கிராமபுற குழந்தைகளிடம் காணப்படுகின்றது. இவ்வாறு விளையாடும் விளையாட்டை நூறாங்குச்சி, அலுங்காங்குச்சி என்றும் கூறுகின்றனர். இவ்விளையாட்டை இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் விளையாடுவர்.

சீமாற்றிலிருந்து தேவைக்கேற்ப இரண்டு குச்சிகளைத் தனியாக எடுத்துக்கொள்கின்றனர். அக்;குச்சிகளை மூன்று செ.மீ அளவில் பத்துக் குச்சிகளை உடைத்துக்கொள்கின்றனர். ஏழு செ.மீ அளவில் ஒரு குச்சியை உடைத்து விளையாடுகின்றனர். சீவங்குச்சியின் நீளம் விளையாடுபவர்களைப் பொருத்தே அமைகின்றது. இந்த விளையாட்டில் ஒரு குச்சியை எடுக்கும் பொழுது மற்ற குச்சிகள் நகராமல் இருக்கவேண்டும். நகர்ந்தால் தோற்றதாகக் கணக்கில் கொள்ளப்படும். இந்த விளையாட்டு சிறுவர்களிடம் பொறுமையையும் கூர்மையான சிந்தனையையும் உருவாக்கும் விதமாக அமைத்திருக்கிறது எனலாம்.

சீமாறு பிஞ்சிடும்

 சீமாறு தொடர்பான வாய்மொழி வழக்காறுகள் பெண்களிடையே காணமுடிகிறது. அதாவது ஏதேனும் ஒரு சூழலில் ஒர் ஆண் ஒரு பெண்ணிடம் அவள் விருப்பம் இன்றி தவறான வார்ததைப் பேசியோ, தவறுதலாக நடக்க முற்படுவதுண்டு. அதுபோன்ற சமயத்தில் அந்நப் பெண் ‘சீமாறு பிஞ்சிடும்’ என்று கூறுகின்றனர். சீமாறு பிஞ்சிடும் என்ற சொல் சீமாற்றாலே அடித்துவிடுவேன் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வழக்காறைப் பெண்களே பயன்படுத்துகின்றனர். பெரும்பாண்மையும் இவ்வாறு சொல்வதுண்டு ஆனால் செய்வதில்லை என்கின்றனர்.

சீமாறின் செயல் அசுத்தத்தைப் போக்குவதாகும். தீய எண்ணம் கொண்டவனைச் சீமாறால் அடித்தால் அசுத்தம் விலகுவதைப் போல் அவன் மனதில் உள்ள அசுத்தமும் விலகும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. அதுமட்டுமின்றி தீய எண்ணம் கொண்டவனை ஒரு அருத்தமாகவே கருதுவதையும் குறிக்கிறது.

தொகுப்புரை

கொங்கு பகுதி வாழ்மக்கள் தங்களிடம் உள்ள தென்னை மட்டையும், தங்களிடம் உள்ள சிறு பொருட்களின் உதவியாலும் சீமாறு தயாரிக்கின்றனர். சீமாறு தயாரித்தச் சூழல் மாற்றம் பெற்றுக்கடைகளில் பணத்திற்கு வாங்கும் நிலையுள்ளது. தற்போது செயற்கையாகப் பிளாஷ்டிக் மூலம் சீமாறு தயாரிக்கின்றனர். நம்பிக்கைகள்யாவும் அவர்களின் வாழ்க்கைச் செழுமையடைய கடைபிடிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. பூப்புச்சடங்கு, மழைக்கஞ்சி எடுத்தல், இறப்புச்சடங்குகளில் சீமாறைப்பயன்படுத்துகின்றனர். பெண்களிடம் அதைசார்ந்த வழக்காறுகளும் காணமுடிகிறது.

தகவளாலர் பட்டியல்

1.          ப. சுப்பரமணியம் 63 பியூசி நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், நாமக்கல்

2.          பார்வதி 37 பி.காம் வடவள்ளி கோவை

3.          கை.மகேஷ்வரி 33 பி.காம் வடவள்ளி கோவை

4.          கை.பாப்பாத்தி 50 இல்லை ஆத்தூர் சேலம்

5.          வா.கலையரசி 26 பி.எஸ்சி. பிஎட் ஆத்தூர் சேலம்

6.          வெ.புவனேஷ்வரி 33 எம்.ஏ. எம்.ஃபில், கிருஷ்ணகிரி

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

k.shivatamil@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here