சங்க இலக்கியத்தில் வாழ்வியல் நோக்கில் பெண்கள்

          சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் படம் பிடித்துக் காட்டுவன. அதனால்தான் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன.  சங்ககாலத்திலே பெண்கள் வீரமிக்கவராகளாவும், புலமை பெற்று அரசர்களுக்குக் கூட அறிவுரை வழங்கியும், விருந்தோம்பல் என்ற தலையாயப் பண்பைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

கற்பு நெறியில் பெண்கள்

       பெண்கள் இல்லாத சமூகம் வெறுமையுற்றது.  இவ்வுலகில் பெண்மையைப் போற்ற வேண்டும் “சங்ககாலப் பெண்கள் ஆண்கள் அளவிற்குச் சமவுரிமை பெறவில்லை என்றாலும் அடிமைகளாய், வாழ முடியாதவர்களாய் இல்லை.  சமயம், கல்வி, காதல் ஆகியவற்றில் உரிமை மகளிராய்த் திகழ்ந்தனர்”1 என இறையரசன் கூறுவது உண்மையானது.  சங்க காலத்தில் நச்செள்ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், ஒளவையார் போன்ற பெண்பால் புலவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளனர்.  அவர்களின் செருக்குப் பற்றிக் கூறும்போது.

எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே” (புறம்.206:13)

          எனக்குறிப்பிட்டுள்ளனர். என்னிடம் புலமை இருக்கிறது.  நான் எந்த ஒரு மன்னனையாவது புகழ்ந்து பாடிப் பரிசிலைப் பெற்றுவிடுவேன்.  நீ இல்லையென்றால் என்ன? எனக்கு எந்தத் திசைச் சென்றாலும் சோறு கிடைக்கும் என ஒளவையார் அதியமானிடம் கேட்பதிலிருந்து பெண்களுடைய உயர்வை சங்ககாலத்தில் நலமாக உள்ளது என அறியலாம்.

                                             உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

                                             செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றென”  (தொல்.பொருள்.களவு.23)

          பெண்களுக்கு உயிரை விட நாணமே சிறந்தது என்றும், அந்நாணத்தை விட குற்றமில்லாத கற்புதான் சிறந்நது எனத் தொல்காப்பியரும் பெண்ணினுடைய கற்பின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.  “கற்பு என்பது தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதன் மேற்கோள் என்பர் நச்சினார்க்கினியர்”2 சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள பெண்கள் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் தன்னுடைய தலைவனைத் தானே தெரிவு செய்யும் மனப்பான்மையும் பெற்றிருந்தனர்.  தங்கள் தலைவர்களோடு திணைப்புனம், காடு, வயல், கடற்கரை மணல், சுனை போன்ற இடங்களில் காதலை வளர்த்துக்கொண்டார்கள்.

                                               நிலத்தினும் பெரியதே, வானினும் உயர்ந்தன்று

                                                   நீரினும் ஆர் அளவின்றே”          (குறும்.3:1-2)

          இங்கு தலைவனோடு தலைவி கொண்ட காதலானது நட்பு, மொழி, மனம், மெய் என்பதைக் கடந்து நிற்பது ஆகும்.  நிலம், வான், நீர் என மூன்றினையும் விட உயர்ந்தது என்கிறார் ஆசிரியர்.  ஊரில் ஏற்பட்ட அலரால் தலைவியுடைய காதல் பெற்றோர்க்கு தெரிய வருகிறது.  பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரத்தில், தலைவி தன் தலைவனோடு உடன்போக்கு செல்வதற்கும் தயங்க மாட்டாள் என்கிறது சங்க இலக்கியப்பாக்கள்.

துள்ளித் திரிந்த மகளிர்

          எப்போதும் மகிழ்ச்சியும் மனநிறைவுமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இல்லையென்றால் குறிஞ்சிப்பாட்டிலே தலைவி ஒருத்தி தன் தோழிகளுடன் சுனை நீராடுகையில் அங்கே இருக்கும் கற்பாறையில் தொண்ணூற்று ஒன்பது வகையான மலர்களைப் பறித்து வைத்து அழகு பார்த்திருக்க மாட்டாள்.

                                                     பொலம்செய் கழங்கின் தெற்றி ஆடும்” (புறம்.36:4)

          அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் வண்டல் மண்ணால் பாவை செய்வதும், மணல் மேட்டிலே கழற்சிக் காய்களை ஒருவருக்கொருவர் வீசி விளையாடுவதும், பொற்சிலம்பு ஒலிக்க மேல்நிலை மாடத்தில் பந்தாடுவதையும், சுனை நீராடல், சிற்றில் இழைத்தல், துணைங்கையாடல்  குரவை ஆடல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளனர்

நல்லறமே இல்லறம்

        ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் தவிர்க்க முடியாதது.  தன்னை திருமணப் பந்தத்திலே ஈடுபடுத்தி வாழ்க்கையை முழுமை ஆக்குகின்றான். ஒவ்வொரு பெண்ணும்  தனக்கு எவ்வாறு கணவன் அமைய வேண்டும் என கனவு காண்பாள்.  அக்கால மகளிரும் தனக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சா நெஞ்சம் உடையவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர்.  காளையை அடக்கும் வீரர்கள், வட்டக்கல் தூக்கும் வீரர்களுக்கே தங்கள் மனதினைப் பறிக்கொடுத்தனர்.  வீரம் இல்லாத ஆண்களை வேண்டாம் என ஒதுக்கினர் என்பதை,

                                         கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

                                             புலலாளே, ஆயமகள்” (கலித்.103)

          கலித்தொகை தலைவி மறுபிறப்பும் கூட அந்த வீரமற்றவனை திருமணம் செய்யமாட்டேன் என்கிறாள்.  சங்க இலக்கியத்தில் ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் காதல் கொண்டு திருமணம் செய்யலாம் என்கிறது.  தொல்காப்பியர் கூட, பத்து வகையான ஒழுகலாறுகளைக் (தொல்.பொருள்.மெய்.25) கூறிச் செல்கின்றார்.  தலைவியின் திருமணத்தின் போது, பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, மனை விளக்கு ஏற்றி மாலைகளை தொங்க விட்டனர் என்றும், புதல்வனைப் பெற்றெடுத்த மகளிர்கள் நெல்லும் மலரும் கலந்ததை அம் மணமக்கள் மேல் தூவி வாழ்த்துவதாக கூறுகிறது அகநானூற்றுப்பாடல் (அகம்.86). நல்லநேரம் பார்த்தல், சகுனம் பார்த்தல், திருமணத்தின் போது உணவு பரிமாறுதல், (அகம்.136) முரசு கொட்டுதல் போன்ற நிகழ்வுகள் சங்க காலத்தில் இருந்ததாக அறிகின்றோம்.  ஆனால் அக்காலத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்ததாக தெரிவில்லை.

       மலைப்பக்கத்தில் வாழும் குறவர்கள் தம் மனைவிமார்கள் தவறாது தங்கள் கணவர்களைத் தினம்தினம் தொழுதெழுவதால் அக்குறவர்கள் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம் என சங்கப்பாடல் கூறுகிறது.  சங்ககாலத்து மகளிர் தங்களுடைய கணவர்களையும் கண்ணுக்கு கண்ணாக போற்றி வந்தனர்.  திருமணத்திற்கு முன் துள்ளித் திரிந்த மகளிர் திருமணம் ஆனபிறகு தன் கணவனே உயிர் என்று அன்பிற்கு ஏங்கும் பாவைகளாகவும் திகழ்கின்றனர்.

                                                 இம்மை மாறி மறுமை ஆயீனும்,

                                                    நீ ஆகியர் எம் கணவனே” (குறும்.49:3-4)

      இந்தப்பிறப்பு மட்டுமின்றி இனி வருகின்ற ஏழ்எழு பிறப்புகளிலும் நீயே என் கணவனாக வர வேண்டும் எனச் சங்ககால மகளிர் ஆசைப்பட்டனர்.  மேலும், பொருள் தேடத் தன் தலைவன் பிரிந்து சென்றால் அவன் இல்லாத நாட்களை ஒவ்வொரு நாளும் யுகமாக கழித்தும், முள் படுக்கையில் இருப்பது போன்று எண்ணியும், பிரிந்து சென்ற தலைவனின் காட்டு வழிக் கொடுமையினை எண்ணி வருந்தியும், கார்காலத்தை எதிர் நோக்கியும், சுவரிலே கோடிட்டு தலைவன் வரவை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தனர் என நற்றிணைப்பாடல் (நற்.324) மூலம் அறியலாம்.  அதுபோல் ஐங்குறுநூற்றில் ஒரு தலைவி திருமணமாகித் தலைவனுடன் தன் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள்.  புகுந்த வீட்டிற்குச் சென்ற ஓரிரு மாதம் கழித்து முதன் முதலில் தன் பிறந்த வீட்டிற்கு வரும் தலைவியிடம் நலம் விசாரிக்கிறார்கள் உறவினர்கள் என்பதனை,

                                                        மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே” (ஐங்,203:4)

          என்னும் பாடல் வரியில், குளத்திலே கலங்கிய தண்ணீரை வெப்பம் மிகுதியால் அந்த பக்கம் சென்ற மானானது உண்டது.  அந்த எச்சில் தண்ணீர் கூட எனக்கு இனிய தேனோடு கலந்த பசுவின் பாலை விட இனிமையானது என்கிறாள் தலைவி.  தன் புகுந்த வீடும், நாடும், ஏழ்மை வறட்சி உடையது என்பதை அறிந்திருந்தும், உறவினர்களிடம் தன் கணவனின் நலன் கெடாதவாறு தலைவி கூறுகிறாள்.  இதை விட ஒரு பெண் தன்னுடைய புகுந்த வீட்டிற்கு வேறென்ன பெருமை சேர்க்க முடியும்.

விருந்தோம்பல்

          நம் தமிழ் பண்பாட்டில் பகைவர்களாக இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அவர்களை வா என்று அழைக்கும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.  மகிழ்ச்சியிலும் பெரும்மகிழ்ச்சி மற்றவர்களுக்கு உணவு அளித்து ஆனந்தப்படுவதே ஆகும்.     அப்படிப்பட்ட   உயர்வான பண்பினை  எப்போதும்  குறையாத     அளவிற்கு பெற்றிருந்தனர் சங்ககாலப் பெண்கள். தொல்காப்பியர் கூட,

                                            விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஒம்பலும்

                                               பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்” (தொல்.பொருள்.கற்பு.11)

          எனக் கூறுகிறார். ஒழுக்கமும், பொறுமை குணத்தையும், அடக்கமான உடைமையினையும் கொண்ட பெண்கள் விருந்தினரை நன்றாகக் கவனிப்பார்கள்.  “விருந்தினரை வரவேற்று அவர்கள் விடைபெறும் போது அவர்கட்கு வெற்றிலைப் பாக்குக் கொடுக்கும் வழக்கம் உள்ளது”3 “விருந்தினரை வழி அனுப்பும் போது ஏழடி உடன் பின் சென்று அனுப்புதல் வழக்கம்”4 போன்றவை தமிழரின் பண்பாட்டைக் கூறுகிறது.

                                          செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்” (புறம்.168:13)

          பன்றி தோண்டிய வயலில் திணை விதைத்து, அவற்றை அறுவடையும் செய்த உழவுப் பெண்கள் திணைச் சோற்றோடு பாலை உலை நீரோடு வார்த்த மானிறைச்சியைத் தன்னுடைய விருந்தினர்க்குப் படைத்தனர்.  மேலும் தங்கள் கணவன் இல்லாத நேரங்களில் விருந்தோம்பல் செய்வதில்லை என்ற செய்தி அவர்களின் கற்புத்திறத்தைக் காட்டுவதாக அமைகிறது.

பரத்தை மகளிர்

          கணவன் பரத்தையர் பால் பிரிந்து சென்றாலும் அவன் மேல் கோபம் கொள்ளாமல் ஊடலை மட்டும் காட்டும் மகளிரையும் சங்ககாலத்தில் காணமுடிகிறது.  விலை மதிக்க முடியா வைரம் போல நல்ல மகளிர் இருந்தாலும் பரத்தை போன்ற விலை மகளிரும் இருக்கவே செய்கிறார்கள்.  மேலும் காதல் பரத்தை,  காமகிளத்தி போன்றோரும் எதிர் காலத்தை அறியும் கட்டுவிச்சி, வெறியாட்டு நடத்தும் குறமகள், தேவராட்டி, தோழி, செவிலி, நற்றாய் என சங்ககாலத்திலே இருந்து வந்தனர்.

குழந்தைச்செல்வம்

          செல்வம் எவ்வளவு இருப்பினும் அது குழந்தைச் செல்வத்திற்கு ஈடாகாது.  ஒரு பெண் பிறந்த விட்டால் அவள் தாய்மையை எய்தாவிடில் அவளுடைய உடல் தீயிலே வேகாது.

                                         இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,

                                            நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,” (புறம்.188:4-5)

          குழந்தையானது குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி இட்டும், பிசைந்தும், வாயால் கவ்வியும், கையில் துழாவியும், சோற்றை தன் உடம்பிலே கொட்டியும் உண்ணுகின்ற அழகைப் பார்ப்பதற்கு அந்தத் தாய்க்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.  இப்படிப் பாசம் மிகுந்த தாயாக மட்டும் அல்லாமல் வீரம் மிகுந்த தாயாகவும் இருக்கின்றாள்.  புறநானூற்றிலே ஒரு தாய் முதல் நாள் தந்தை, அடுத்த நாள் கணவன், அடுத்த நாள் தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு வளர்த்த பிள்ளையைப் போருக்கு அனுப்புகிறாள்.  அப்போரிலே தன்மகன் மார்பிலே புண் பட்டு வீரமரணம் அடைந்ததை எண்ணி மார்பிலே பால் சுரந்ததாம் அந்தத் தாய்க்கு என்கிறார் ஆசிரியர்.

கைம்பெண்ணும் கலக்கமும்

          பெண்ணாகப் பிறந்து பல தருணங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவளுடைய கணவன் இறந்துபட்டால் அப்பெண்ணின் நிலை என்ன? இழிவு, துன்பம், போராட்டம் தான் வாழ்க்கையாக அமைகிறது.  கைம்மை பற்றி பா.இறையரசன் கூறும் போது, “கணவன் இறந்த பிறகு வாழும் மகளிர் கைம்பெண்கள், ஆளில் பெண்டிர்,  கழிகல பெண்டிர், படிவ மகளிர், உயவர் பெண்டிர், பருத்திப் பெண்டிர் எனப்பட்டனர்,  மேலும் அவர்கள் அணிகலன்கள் அணியாமலும், உப்பில்லாத உணவை மட்டுமே உண்டனர்”5 என்கிறார். இப்படிப் பெண்கள் சிறுவயதில் மகிழ்ச்சியும் இன்பமும், பெற்றவர்கள், திருமணம் ஆகி கைம்பெண் ஆனால் அவர்கள் உடன்கட்டை (புறம்.247) ஏறுவது என்பது  வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது.

சான்றெண் விளக்கம்

  1. தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு . 1993, பக்.296-297.
  2. சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், டாக்டர்.மு.பொன்னுசாமி, இந்து பதிப்பகம், கோவை, முதற்பதிப்பு: டிசம்பர்-1990, பக்.203.
  3. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர்.கே.கே.பிள்ளை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.  மறுபதிப்பு: 2000, பக்.65
  4. தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு: 1993, பக்.266.
  5. தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு: 1993, பக்.257.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

www.iniyavaikatral.in

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here