சங்க இலக்கியத்தில் கலங்கள்

சங்க இலக்கியத்தில் கலங்கள்

சங்க இலக்கியத்தில் கலங்கள்

      உலக அளவில் வளரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத தொழில்களாகக் கருதப்படுபவை உழவும், வணிகமும் ஆகும். இதனை அடியொட்டியே அந்நாட்டின் பொருளாதார வலிமையும் அமைகிறது. செல்வம் பெருகுவதற்கும், அதனை வழங்கிக் கொடையில் மேம்படுவதற்கும் இவை துணை புரிவன, இதனையே

                        “மீக்கூறும்……………..

                        வியல் மேவல் விழுச் செல்வத்து

                        இருவகையான் இசை சான்ற

                        சிறுகுடிப் பெருந்தொழுவர்”

என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. உழவுத் தொழில் நாட்டு அளவிலும் வணிகம் உலக அளவிலும் அமைந்தது. மிகப் பழங்காலத் தொட்டே கடல்கடந்து சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதைத் தொல்காப்பியமே உறுதி செய்கிறது. தமிழ் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செலல் நிலவழி, நீர்வழி ஆகிய இரண்டு வழிகளைக் கொண்டிருந்தனர். ‘இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்’ என்னும் நூற்பாவிற்கு உரை எழுதியவர்கள் காலினும் கலத்தினும் எனச் சுட்டினர். உற்பத்தி செய்வதற்குரிய மூலப் பொருட்களைப் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து சேர்ப்பதும், உற்பத்தி செய்த பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் என வணிகர்கள் செயல்பட்டனர். இதற்கு நீர்வழியையும் நிலவழியையும் பயன்படுத்தினர். அக்காலத்தே மேலை நாட்டினராகிய கிரேக்கர், யவனர், பாபிலோனிய நாட்டுக் கோசியர்கள் தமிழகத்தோடு கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். கடல் வணிகத்தில் அதிகம் ஈடுபட்டுப் பெருஞ் செல்வத்தை ஈட்டி வந்ததே ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி உருவாகக் காரணமாகியிருக்கும். இத்தகைய வணிகத்திற்குத் தமிழகம் நீர்வழியைப் பயன்படுத்தியமையைச் சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாகவே சுட்டியுள்ளன. அதற்குப் பயன்பட்டன கலங்கள் எனச் சுட்டப்பட்டன. சங்க இலக்கியத்தில் கலங்கள்

கலங்களின் வகைகள்

            அம்பி, புணை (பிணை), திமில், நாவாய், வங்கம், கலம், ஒடம், மிதவை, பஃறி, நீரணிமாடம், தோணி என்பன சங்க இலக்கியங்களின் வழி அறியப்படுவன.

                        ‘நன்கலம் பரிசின் மாக்கட்கு நல்கி’

                        ‘கடன் மண்டு தோணி,

                        முந்நீர் வழங்கு நாவாய் – எனப் புறநானூறும்,

                        ‘கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால்’ எனச் சிலம்பும்,

                        ‘இரவெனம் ஏமாப்பில் தோணி’

                        ‘பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும்’-எனத் திருக்குறளும்,

                        ‘ஓடம் புனைகலம் பெய்த தோணி’

எனச் சீவகசிந்தாமணியும் இப்பெயர்களைக் குறித்துள்ளன. நீரில் மரங்கள் மிதப்பதைக் கண்டவன் அவற்றில் ஏறி நீரைக் கடக்க முயன்றுள்ளான். அதில் வெற்றிபெற்றதால் தனது திறமையினால் மரங்களை ஒழுங்குபடுத்தி பலவற்றை ஒன்றாக இணைத்துக் கட்டுமரம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளான். மனிதன் முதன் முதலில் நீரைக் கடக்கக் கண்டுபிடித்த சாதனம் மிதவை. இதுவே பிற்காலப் படகுகளின் தாய் எனலாம். சங்க இலக்கியங்களில் கட்டுமரத்தைப் புணை என்று குறித்துள்ளனர். மரங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டுவதால் பிணை எனக் குறிக்கப்பட்டதே புணையாகியிருக்கும். மிதவை என்பது உள்ளூரில் ஏரி குளங்களில் பயன்பட்டதாக இருக்கலாம். மிதவை என்பதற்குத் தெப்பம் என்றும் புணை என்பதற்குத் தெப்பம், கால்விலங்கு மூங்கில் என்றும் அகராதி பொருள் தருகிறது. மேலும் ஆற்றின் ஓரமாக வளர்ந்த மூங்கில்களைக் கொண்டு புணைகள் அமைக்கப்பட்ட காரணத்தாலும் மூங்கில் என்னும் பொருள் கொண்ட புணை என்ற சொல் மரக்கலத்தின் பெயராக ஆகியிருத்தல் கூடும். இவையே ஆறுகளில் புனல் விளையாட்டிற்குப் பயன்பட்டதாக அறிகிறோம்.

            வணிகத்தின் பொருட்டுப் பெரிய மரக்கலங்களில் சென்றோன் அம்மரக்கலம் கடலில் பெரிய அலைகளால் உடைபட்டுப் போகப் புணையாகிய தெப்பத்தில் கரை சேர்ந்ததாகக் கூறுவதை மணிமேகலைக் காப்பியம் வழி அறியமுடிகிறது. எனவே கட்டுமரத்தைப் புணை எனச் சுட்டியமை உறுதியாகிறது.

பஃறி

உள்ளூர்களில் உப்பைவிற்று அதற்கு ஈடாக நெல்லைப் பெற்று வந்தனர் என்பதனை

            “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

            நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”

            எனப் பட்டினப்பாலை சுட்டுகிறது. இப்படகுகள் கட்டுத்தறியில் குதிரைகளைப் பிணிப்பது போல் உப்பங்கழியைச் சார்ந்த தறிகளில் கட்டியிருப்பர் எனவும் மொழிகிறது.

அம்பி

சிறிய மரக்கல வகையைச் சார்ந்த ஒன்று அம்பி. அம்பு என்ற சொல்லிலிருந்து திரிந்த ஒன்றாகக் கருதுவர். ஓற்றை மரத்தில் குடைந்து செய்யப்பட்ட கலமாகவும் அமையலாம். இக்கலத்தின் முன்பகுதி குதிரைமுகம் / யானை முகம் / சிங்க முகம் போன்று காணப்பட்டதாகச் சிலம்பின் (13:176) வழி அறியமுடிகிறது. இது ஆட்களை ஏற்றி அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டு செல்லும் வகையில் பயன்பட்டதை அறியமுடிகிறது. குகன் ஆயிரம் அம்பிக்கு நாயகன் எனச் சுட்டப்பட்டமை ஈண்டு குறிக்கத் தக்கதாகும். மீன் பிடித்தல் தொழிலிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய உதவாது ஒழிந்த அம்பி என நற்றிணைப் பாடல் சுட்டுவதால் இக்கலம் உள்நாட்டிலேயே அதிகம் (ஆறு) பயன்பட்டிருக்க வேண்டும் என உணரமுடிகிறது.

திமில்

கட்டுமரம், கலம், கப்பல் என்ற பொருள்களை அகராதி சுட்டுகிறது. இது பெரும்பான்மையும் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுறாமீன் வேட்டைக்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒருவகைக் கட்டுமரமே. இது திண்மையும் உறுதியும் உடையதாதலின் சுறாமீன் வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் கொடுந்திமில் எனக் குறுந்தொகையுள் சுட்டப்பட்டுள்ளது. திமில் என்னும் கலனில் விளக்கு பயன்படுத்தப்பட்டமையும், கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கைக் கொண்டு அடையாளம் கண்டு தம்மிடம் (கரையை அடைவர்) சேர்வர் என்றும் நற்றிணை, புறநானூறு, பட்டினப்பாலை, அகநானூறு ஆகிய இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

ஓடம்

தொன்மையான காலந்தொட்டுத் தமிழகத்தில் நீரைக்கடக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதுவும் சிறிய மரக்கல வகை. நீரில் வேகமாக ஓடுவதால் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கும். ஓடக்கோல் என்றழைக்கப்படும் நீண்டகோலினாலே ஆற்றில் செலுத்தப்பட்டது.

நீரணிமாடம்

சிறிய படகு வகை. உல்லாசப் படகுப் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்ட கலம்.

தோணி

ஒரே மரத்தில் குடைந்து செய்யப்பட்ட கலம். தொள் என்னும் வினையடியிலிருந்து தோன்றியிருக்கக் கூடும். தொள் என்பது குழித்து எடுப்பது என்னும் பொருள் தரும் சொல்லாகும். தோள் – தொடு – தோடு – தோண்டு. பெரிய மரக்கலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுக் கரைக்கு கொண்டு வந்ததனை

                        “கலம் தந்த பொற்பரிசம்

                        கழித் தோணியான் கரை சேர்க்குந்து”

எனப் புறநானூறு சுட்டுகிறது. குதிரைகள் கடல்நீரைப் பிளந்து செல்லும் தோணிகள் போலப் பகைவருடைய படைமுகத்தைப் பிளந்து செல்லும். கடல் மண்டு தோணியின் படை முகம் போல’ எனவும் புறநானூறு சுட்டுகிறது. இதனால் விரைந்து செல்லக் கூடியது என்பதும் தெளிவாகிறது. பயணத்திற்கும், புனல் விளையாட்டிற்கும், மீன் பிடித்தலுக்கும் தோணி பயன்பட்டதனை பின்னர் வந்த இலக்கியங்களும் சுட்டுகின்றன.

நாவாய்

கடலில் செலுத்தப்படும் பெரிய கலத்துக்கு ‘நாவாய்’ என்று பெயர். புகார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகளால் தாக்குண்டு தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவது போல் அசைந்தன. அவற்றின் மீது காணப்பட்ட பாய்மரத்தின் கொடிகள் பறந்தன என்பதனை

                        “வெளில் இளிக்கும் களிறுபோல

                        தீம் புகார்த் திரை முன் துறை

                        தூங்கு நாவாய் துவன்று இருக்கை

                        மிசைக் கூம்பின் நசைக் கொடியும்’

என்ற அடிகளால் பட்டினப்பாலை சுட்டுகிறது. நாவாய் என்னும் கலம் பண்டைத் தமிழர்களால் வணிகக் காற்றின் வரவு செலவு அறிந்து ஓட்டிச் செல்லப்பட்டது.

                        “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

                        வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”

என்கிறது புறநானூறு.

            நாவாய்கள் குதிரைகளை மேற்றிசையிலிருந்து வடதிசைக் கண்ணிலிருந்தும் கொண்டுவந்தன. மேலும் வடதிசைக்கண் விளையும் நுகர் பொருள்களான மணியும் பொன்னும் பிறவும் கப்பலில் வந்து இறங்கின எனப் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது. இச்சான்றுகளின் மூலம் நாவாய் என்னும் கலம் பண்டைக் காலங்களில் காற்றின் துணையினால் செலுத்தப்பட்ட ஒரு பாய்மரக்கப்பல் என்றே கருதமுடிகிறது. முற்காலத்தில் காணப்பட்ட நாவாய்கள் யானை போன்ற அமைப்பில் முன் பின் பகுதிகள் சுருங்கியும் நடுப்பகுதி விரிந்தும் பரந்துபட்டுச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

கலம்

பாத்திரம், அணிகள், கப்பல் முதலியவற்றைக் குறிக்கப்பயன்படும் சொல். பெரிய பாய்மரக் கப்பல்கள் மரப் பலகையால் செய்யப்பட்டிருத்தலால் அவை மரக்கலம் என்ற பெயரில் அழைக்கப்படலாயினர். கலத்திலுள்ளவை பாயும், கயிறும், பாய்மரமும், சிதையும் நிலையிலுள்ள மரக்கலத்தைப் ‘பயின்’ என்ற ஒரு வகைப் பசையினால் சீர்செய்துள்ளனர்.

இதனை,

                        சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்

                        இதையும் கயிறும் பிணையும் இரியச்

                        சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்

                        திசை அறி நீ கானும் போன்ம்”         (பரிபாடல்.10:53-55)

என்ற அடிகளால் அறியலாம்    கடற்கரையில் அமைந்துள்ள பெரிய வீடுகளின் மேலே ஏற்றப்பட்டிருக்கும் விளக்கு கலங்கள் கரையை வந்தடைவதற்கு உதவின என்கிறது பெரும்பாணாற்றுப்படை. இச்சான்றின்வழி கடற்கரையை அடுத்து உயர்ந்த இடங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தமையும் இரவில் அவ்வீடுகளில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்கின் ஒலி கடலிலே காணப்படும் கலங்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்து கலங்கள் கரையை வந்தடைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளன என்றும் தெரியவருகிறது.

வங்கம்

        வங்கம் என்ற கலமும் ஒரு பெரிய மரக்கல வகையே. அகராதியில் வங்கத்திற்குப் பெரியகப்பல், அலை, கடல் எனப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கு அல்லது வங்கு கால் என அழைக்கப்படும் சட்டங்கள் கலங்கள் கட்டுவதற்கு மூலக் கருவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வங்குக் கால்களால் கட்டப்பட்ட முதல் பெரிய மரக்கலத்துக்கு வங்கம் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் என்றும் வங்காள விரிகுடாக் கடலின் வழியாகவே இக்கலம் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் வங்கம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.

            தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று பட்டினப்பாலை மிக விரிவாக உணர்த்துகிறது. வெளியே அனுப்புவதற்குக் குவிந்திருக்கும் பண்ட மூட்டைகளின் மீது சோழனுடைய புலிவடிவம் முத்திரையிடப்பட்டது. முத்திரையிடப்படாத பண்டங்கள் வெளியேற முடியாது என்றும் கூறுகிறது. இவ்வளவு கட்டுக்காவலுடன் ஏற்றுமதியும் இறக்குமதியும் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. குதிரை, மிளகு, பொன், மணி, அகில், முத்து, ஆரம், துகில், ஈழ உணவு போன்ற பொருட்கள், விளைபொருட்கள், கருப்பூரம், பன்னீர், குங்குமம் போன்ற பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களாக விளங்கின.

            கடற்படையில் சிறந்திருந்தமைக்கும் தமிழிலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. கடல்பிறக்கோட்டிய குட்டுவன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன், பெரும்பாணாற்றுப்படை நீர்வழியே நிலைநாட்டி வென்றமை.

            திமில், அம்பி, தோணி ஆகியனவே பெரும்பான்மையும் மீன்பிடிக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. திமில் என்னும் கலத்தில் வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடித்தமையினை நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல் ஆகிய நூல்கள் குறித்துள்ளன. திமில் என்னும் கலம் இரண்டு பக்கங்களிலும் பிறைபோன்று மேல்நோக்கி வளைந்து உள்ளிடம் அகன்று முனைகள் குறுகிக் காணப்படும் கலமாகும். மேலும் இதனைக் கொடுந்திமில், நெடுந்திமில், திண்திமில், நிரைதிமில் என அடைகொடுத்தும் சுட்டியுள்ளனர்.

            நீரில் உல்லாசப் பயணம் செல்லப் படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். பரிபாடலில் நீரணிமாடம் என்னும் ஒரு உல்லாசப்படகு சுட்டப்பட்டுள்ளது. இது நடுவே அகன்றும் முன் பின் சுருங்கியும் காணப்படுவது. இதன் நடுவே உட்காருவதற்கு ஏற்பச் சிறு மண்டபம்போல் ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கும் எனப் பாடல் சுட்டுகிறது. சிலப்பதிகார நாடுகாண் காதையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் நீரணிமாடத்தில் தென்கரையை அடைந்ததாகச் சுட்டப்பட்டுள்ளது.

            பண்டைத்தமிழ் மக்கள் கப்பற்கலையில் சிறந்து விளங்கினர் என்பதை, அவர்கள் கடல் வணிகத்தில் புகழ்பெற்று விளங்கியிருந்ததன் மூலமும் கடற்போர், கடற்கொள்ளை, மீன் பிடித்தல், உல்லாசப் பயணம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு அவர்கள் பயன்படுத்திய கலங்கள் வாயிலாகவும் உறுதி செய்யமுடிகிறது. மேலும் பல்வேறு வகையான கலங்களைச் சமைத்து அவற்றைச் செலுத்தியமை அவற்றில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்தமையும் இதனை உறுதிசெய்வனவாகும். கப்பற்கலைக்கு உதவிக் கூறுகளாகத் திகழும் துறைமுகங்கள், கலங்கரை விளக்கங்கள், சுங்கச் சாவடிகள் திறம்படக் கையாளப்பட்டமை கலங்களின் உறுப்புகளாகிய நங்கூரம், ஓடக்கோல், குடுப்பு, பாய்மரம் பயன்படுத்தியமை இவற்றின் அங்கமாகிய காற்று, அலை, ஓதம், விண்மீன்கள் போன்ற இயற்கை உதவிக் கூறுகளை அறிந்து செயல்பட்டமை முதலியன தமிழனின் அறிவுத்திறத்தினை வெளிச்சமிட்டுக் காட்டுவனவாகும்.

நங்கூரம்

கடலிலோ, ஆற்றிலோ செலுத்தப்படும் கலங்களை நிறுத்தி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் பெயரே நங்கூரம் எனப்படும். இது முற்காலங்களில் கல்லினால் ஆன ஒரு கருவியாகவே இருந்துள்ளது. கலங்களின் உருவத்திற்கு ஏற்ப நங்கூரத்தின் எடையும் காணப்படும். கல்லை நங்கூரமாகப் பயன்படுத்திவந்த மக்கள் பிற்காலத்தே மரத்தினால் நங்கூரம் செய்து அதில் ஒரு கல்லைக் கட்டி நீரில் இறக்கிக் கலங்களை நிறுத்தி வந்தனர். பின்னர் நங்கூரம் இரும்பினால் செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது. மதுரைக்காஞ்சி வாயிலாகப் பழந்தமிழகத்தில் கல் நங்கூரம் பயன்படுத்தப்பட்ட உண்மை தெரியவருகிறது.

            கடலில் காலவரையறைக்குட்பட்டு ஏற்படும் கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு ஓதங்கள் என்று பெயர். இதனைக் கடல் ஏற்றம், கடல் இறக்கம் என இன்று குறிப்பிடுகிறோம். ஓதம் என்பதற்குள்ள பல்வேறு பொருள்களுள் நீர்ப் பெருக்கு என்பது ஒன்றாகும் (வுனைநள). வேலி ஏற்றம் அல்லது கடல் ஏற்றம் என்பது கடலில் நீர் மிகுந்து கரையை நோக்கி வருவதாகும் (ர்iபா வுனைநள). வேலி இறக்கம் என்பது கடலில் நீர் உள்வாங்குவதாகும் (டுழற வுனைநள). கடற்கரைப் பரப்பிலிருக்கும் தாழை, கழியில் நீர் குறையுங்கால் தாழ்ந்தும், கழியில் ஓதம் மிகும்போது உயர்ந்தும் அலைதலைப் போலத் தலைவியின் நெஞ்சம் வருந்தியதாகக் குறுந்தொகைப் பாடல் (340) சுட்டுகிறது.

            ஓதங்களுக்கு மூல காரணங்களாக அமைவன சூரியனும் சந்திரனும். பூமி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒன்றையொன்று ஈர்க்கும் திறன் கொண்டவை. ஈர்ப்புவிசை கோள்களின் பொருண்மைக்கு நேர் விகிதத்திலும் அவற்றின் இடையேயுள்ள தொலைவிற்கு எதிர் விகிதத்திலும் அமைந்துள்ளது. சூரியனின் பொருண்மை அதிகமாயினும் அது வெகு தொலைவில் இருப்பதால் அதனின் பொருண்மை மிகவும் குறைந்து காணப்பட்டாலும் மிக அருகாமையில் இருக்கும் சந்திரனே பூமியிலுள்ள பொருள்களை ஈர்ப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடலில் ஓதங்கள் அளவில் மிகுந்து காணப்படுகின்றன. இதனைத் தங்களது வாழ்நாளில் கண்டு உணர்ந்த பண்டைத் தமிழர்கள் சந்திரனுக்கும் ஓதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நம்பினர். சந்திரன் பௌர்ணமி நாளில் மிகத் தெளிவாக விளங்கியதால் கடலும் பொங்கும் அலைகளை உடையதாயிருந்தது. ஓதமும் கரையை மோதிப் பெயர்த்;து சென்றது என்கிறது நற்றிணைப் (335) பாடல்.

            மேலும் அகநானூறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, ஐங்குநூறு ஆகிய நூல்களிலும் இத்தகு சான்றுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதனைப்போன்றே வானநூல் அறிவுமிக்கோர் தமிழர் என்பதனையும் இவ்விலக்கியங்கள் சுட்டிச் சென்றுள்ளன.

            தமிழர்கள் மிகத் தொன்மைக் காலந்தொட்டே நீரியல் மற்றும் வானியல் அறிவைப் பெற்றிருந்தனர். கடலில் நீரோட்டங்களைக் குறித்த அறிவு அவர்களுக்கு மிகுதியாகவே இருந்திருக்கிறது. நீரின் ஓட்டம், கடலின் ஆழம் ஆகியன அறிவதற்குத் தாவுக்கயிறு என்ற ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு நீண்ட கயிற்றின் நுனியில் ஒரு கல் கட்டப்பட்டிருக்கும். ஒரு கலத்தில் செல்லும் மீனவர்கள் எதிரேவரும் கலத்தில் இருக்கும் மீனவரிடம் நீரோட்டம் எந்தத் திசையிலிருந்து எந்தத்திசைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொள்வர். நீரோட்டத்தைக் கொண்டு கடலில் எந்த இடத்தில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதனை உணர்ந்திருந்தனர். கடல் நீரின் நிறத்தைக் கொண்டும் மீன்கள் கிடைப்பதனைத் தீர்மானிப்பர். எவ்வகை மீன்கள் கிடைக்கும் என்பதனை இதன்வழி அறிவர். இன்னின்ன காலங்களில் கலங்கள் செல்வதற்கேற்ற பருவக்காற்றுகள் வீசும் என்றும் அந்தக் காலங்களில் கடல் கொந்தளிப்பு இருக்காது என்றும் மழையும் குறைவாக இருக்கும் என்றும் அறிந்து செயல்பட்டனர்.

            நடுக்கடலில் இருக்கும் போது கரையை அறிந்துகொள்வதற்குப் படகோட்டிகள் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

1.          தாவுக்கயிறு என்பதன் மூலம் ஆழந்தை அறிந்து கொள்ளுதல்

2.          நீண்டதூரப் பயணம் மேற்கொள்ளும் மாலுமிகள் கரையைக் கண்டு அடைவதற்குப் பறவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பறவை வெளியே பறந்து வட்டமடித்து மீண்டும் அந்தக் கலனுக்கே திரும்பிவிட்டால் கலன் கரையை அடையவில்லை என்பது பொருளாம்.

      பழந்தமிழகத்தில் கப்பற்கலை குறித்த செய்திகளைக் காணும்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் ஒரு வணிகக் கேந்திரமாக விளங்கியது. பல்வேறு நாடுகளிலிருந்து பண்டங்கள் தமிழகக் கடற்கரைக்கு வந்தமை, தமிழகத்தில் கிடைத்த பொருட்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமை, தமிழகத் துறைமுகங்களில் சுங்கச் சாவடிகள் இருந்தமை, சுங்கச் சாவடிகள் திறம்படச் செயல்பட்டமை ஆகியன இதனை உறுதிசெய்வனவாகும். பல்வேறு வகையான கலங்களைப் பயன்படுத்தியிருத்தலின் தங்கள் அறிவு நுட்பத்தால் ஆக்கவும் பழுதுபார்க்கவும் முடியும் என்பதைப் புலப்படுத்தியுள்ளனர். வணிகத்தின் பொருட்டும், மீன்பிடிப்பதற்கும், கடல் பயணத்திற்கும், புனல் விளையாட்டிற்கும், கடற்போருக்கும் பயன்படும் விதத்தில் ஆக்கப்பட்ட கலங்கள் அவர்களது தொழில் திறத்தை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன.

            காற்றின் உதவியினால் கலங்களில் பாய்கட்டிச் செலுத்த முடியும் என்பதை அறிந்து கலங்களைச் செலுத்தியுள்ளனர். கலங்களைச் செலுத்திச் செல்வதற்கேற்ற உதவிக் கூறுகளையும் கொண்டிருந்தனர். படகு உறுப்புக்களின் உதவிக்கூறுகள் மட்டுமின்றி இயற்கை உதவிக் கூறுகளையும் கொண்டிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. மேலும் இவை அனைத்திற்கும் அடிப்படைத் தேவையான வானியல் அறிவைப் பெற்றிருந்தமையும் வியக்கத்தக்கதாகும். இவ்வாறு கப்பற்கலையை வளர்த்து வந்ததன் மூலம் தமிழர்கள் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் மேம்பட்டுத் திகழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.சபாபதி (ஓய்வு)

இணைப்பேராசிரியர்,

தேசியக்கல்லூரி,

திருச்சிராப்பள்ளி -620 001.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here