சங்கப் பாக்கள் காட்டும் ஓவிய நாகரிகமும் – பாறை ஓவிய நாகரிகமும் | பா.செல்வகுமரன்

சங்கப் பாக்கள் காட்டும் ஓவிய நாகரிகமும் - பாறை ஓவிய நாகரிகமும் -பா.செல்வகுமரன்

தமிழகத்தில் முதன்முதலாக 1980-இல் மல்லப்பாடியில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குதிரை மீது அமர்ந்திருக்கும் மனிதன் கையில் எறிவேல் ஒன்றை ஏந்தி எதிரே உள்ளவனைக் குறி வைப்பது போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை வேட்டைக்காட்சி என்றும் போர்க்காட்சி என்றும் கூறுவர். இப்பாறை ஓவியங்களுக்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் புதிய கற்காலக் கருவிகள் (Neolithic Stones)  கிடைத்துள்ளன. எனவே இத்தகைய ஓவியங்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.


ஓவியன்                       

வண்ணங்களின் துணை கொண்டு எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பவன் ஓவியன் என்றழைக்கப்படுகின்றான். இவனே கண்ணுள் வினைஞர், வித்தகர், சித்திரக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர். ஓவிய நூலில் புலமை பெற்றவன் “ஓவியப் புலவனென்றும்’, அக்கலைஞர் குழாம் ‘ஓவியமாக்கள்’ என்றும் சங்க இலக்கியங்களில் கூறக் காண்கிறோம். இத்தகைய கண்ணுள் வினைஞரை “நோக்கினார் கண்ணிடத்தேதம் தொழிலை நிறுத்துவோர்’ என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.


ஓவியம்
                       

பல வண்ணக் கலவையால் துகிலிகைக் கொண்டு படைக்கப்பட்ட கண்கவர் காட்சி, ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், பாடாம், வட்டிகைச் செய்தி என்றும் அழைக்கப்பட்டன.
                       

ஓவியத்தின் வாயிலாக சங்ககால மாந்தர்கள் கருத்துக்களைப் புலப்படுத்தினர். காலப் போக்கில் இவ்வோவியங்களே வரி வடிவானமையை வரலாறு காட்டும். இவற்றை ஓவிய எழுத்துகள் என்பர். இவ்வகையில் எழுத்து என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஓவியம் என்ற பொருளில் வழக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது.
                       

ஓவியங்கள் மாடத்திலும், கூடத்திலும் மணடபத்திலும், அம்பலத்திலும் தீட்டப் பெற்றிருந்தன என்பதைச் ‘சித்திரக் கூடம்’ , ‘சித்திரமாடம்’, ‘எழுத்துநிலை மண்டபம்’, எழுதெழில் அம்பலம் என்ற சொற்களால் அறிகிறோம். கலையுள்ளங் கொண்ட பாண்டிய மன்னனொருவன் சித்திர மாடத்தில் இறந்துபட்டான் என்பதைச் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூறு குறிக்கிறது. அது போன்று அரசர் தம் அரண்மனை அந்தப் புரங்களிலும் பலவண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதை நெடுநல்வாடை வரிகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் திருக்கோயில் சுவர்களில் பலவகைச் சித்திரங்கள் வரையபெற்றிருங்கின்றன என்பதை,


இருசுடர்நேமி

ஒன்றிய சுடர்நிலையுள் படுவோரும்

இரதிகாமன் இவனிவன் எனா அ

விரகியர் வினவ வினாவிறுப் போரும்

இந்திரன் பூசை இளவகலிகை யிவன்

சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு

ஒன்றிய படியிதென்றுரை செய்வோரும்

இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்

                    என்ற பாடல் வரிகளால் அறிகிறோம். மேலும் மணிமேகலையில்,

சுடுமண் ணோங்கிய நெடுநிலை மனைதொறும்

மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய

கண்கவ ரோவியங் கண்டு நிற்கு நரும்
 

என்று செல்வர் வாழும் வளமனைச் சுவர்கள் மீதும், மாடங்கள் மீதும் வானவர் முதல் எல்லா உயிர்களையும் குறிக்கத்தக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம். சுடுமண் சுவர்கள் மீது வெண்சுதை பூசினர். வெண்சுதை மீது செஞ்சாந்து கொண்டு பூசினர். இதன் மேல் அழகிய பூங்கொடிகளை ஓவியமாகத் தீட்டினர் இத்தகைய சுவர்கள் செம்பைப் போன்று உறுதி படைத்தும், கழையழகு கொண்டதுமாக அமைந்திருந்ததை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.
 

சுவர்களில் மட்டுமல்லாது திரைச் சீலைகளிலும் கிழிகளிலும் கவின் மிகுக் காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. நாடக அரங்குகளில் திரைச் சீலைகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதனை ‘ஓவிய எழினி’ என்று இலக்கியம் கூறும். மணிமேகலை ஆசிரியர்


செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்

எரிமல ரிலவனும் விரிமலர் பரப்பி

வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம்    (மணி. மலர் வனம் : 165-69)

என்கிறார்.           

ஓவிய நாகரிகமும் - பாறை ஓவிய நாகரிகமும்
குகை ஓவியங்கள்

               

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலைப் பகுதியில் பல ஓவியங்கள வரையப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்களில் வேட்டையாடுதல், விலங்குகளின் சண்டை, மனிதர்களின் சமய சடங்குகளில் ஈடுபட்டிருத்தல், காட்டுப் பூனை ஒன்றைப் பலியிடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள மானின் உருவ அமைப்பு பிற குகை ஓவிய அமைப்பினை ஒத்துள்ளது.  இக்கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிடாரிப்பட்டி, அழகர் மலை, திருமலை, கருங்காலக்குடி, திருவாதவூர், நாகமலை, திருமயம் கோட்டை போன்ற பகுதிகளில் குகை ஓவியங்களும், பாறை ஓவியங்களும், குகைத்தள ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குறிய செய்தியாகும்.

புனையா ஓவியம்
                       

வண்ணங் கலவாமல் வடிவம் மட்டும் கரித்துண்டுகளால் கோடுகளாகக் காட்டப்படுதலைப் புனையா ஓவியம் என்பர். கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்ட இம்முறை (கரித்துண்டு ஓவியம்) இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் ‘மென் கோட்டு ஓவியம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருத்தல் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஓவியன் தான் எண்ணிய படத்தை வண்ணம் புனைந்து தீட்டுவதற்கு முன் கற்பனை ஓவியத்தைப் புனையா ஓவியமாகத் தீட்டுதல் பண்டைய வழக்கமாக இருந்தது. இத்தகைய புனையா ஓவியத்தைப் ‘புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்’  என நக்கீரரும், புனையா ஓவியம் போல நிற்றலும்’ எனச் சாத்தனாரும் கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
                       

சங்ககால மக்கள் வீட்டையும் ஓவியங் கொண்டு அலங்கரித்தனர். ‘ஓவத்து அன்ன வினைபுனை நல் இல்’ (அகம் 98:11) என்று செல்வர் தம் இல்லம் என்று சிறப்பிக்கப்பட்டிப்பதைக் காணலாம். ‘ஓவத்தன்ன இடனுடைவரைப்பிற் புறம்’ என்று புறநானூறும் புகழ்ந்து கூறும். மேலும் சங்ககால ஓவியர்கள் இயற்கைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை என்றிவற்றை மட்டுமின்றி, சோதிட, வான சாஸ்த்திர நூல் மற்றும் புராண இதிகாசங்களையும் கற்றறிந்து அழகுறத் தீட்டினர். ஆடு முதலான பன்னிரண்டு ராசிகளையும், விண் மீன்களையும் வரைந்ததை,


புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்ணிலை மருப்பி னாடு தலையாக

விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து

முரண்மிகு சிறப்பின் செலவனோடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுயிரா

என்று நெடுநெல்வாடை கூறுகிறது.
  சங்க காலச் சாதாரண நிலையில் இருந்த மகளிரும், பெருங்குடிப் பெண்டிரும், ஆடல் அணங்குகளும் ஓவியம் தீட்டினர். நாட்டிய மகள் மாதவி ஓவியக் கலையை நன்கு அறிந்திருந்தாள் எனச் சிலம்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.


முடிவுரை
 

சங்க காலத்தில் தொல் மாந்தர்கள் தங்களது பண்பாட்டு வரலாற்றை இத்தகைய ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்பாட்டுப் பாதையில் அடியெடுத்துவைத்த நம் முன்னோர் ஓவியத்தின் வழியேதான் முதன் முதலில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதும் அதன் வெளிப்பாடே பண்டைய மாந்தர்களையும் அவர்களின் நாகரிகப் பின்புலத்தையும் அறிந்துகொள்ள சிறந்ததோர் சான்றாக அமைந்துள்ளது என்பது சிறப்பிற்குரியது.

துணை நின்ற நூல்கள்

1.சாமி.சிதம்பரனார் (2011) : தமிழர் வாழ்வும் பண்பாடும், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014


2.முனைவர் அ. பாண்டுரங்கன் (2016) : சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-டீ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098


3.முனைவர். அ.தட்சிணாமூர்த்தி (2019) : தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மேற்கு அண்ணாநகர், சென்னை – 600 040


4.இரா.பவுந்துரை : தமிழகப் பாறை ஓவியங்கள் பக் – 79.


5.நா.சுலைமான் : பாண்டி மண்டலத்தில் குகை ஓவியங்கள் – நுண் கலை, மலர் 7 – இதழ் 2 பக் 26,32.


 

                          ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here