சங்ககால தச்சுக்கலையும் மட்பாண்டக் கலையும்

சங்ககால தச்சுக்கலையும் மட்பாண்டக் கலையும் - முனைவர் க. இராஜா
           மனிதன் நாகரிக வளர்ச்சிஅடைய புதிய புதிய உத்திமுறைகளை கண்டுபிடித்து அவற்றை உலகிற்கு கொடையாக வழங்கியுள்ளான். அவ்வகையில் தான் வாழும் வாழ்விடத்திற்குதகுந்ததுபோல இயற்கை தந்த கொடைகளைக் கொண்டு கலைநயம் மிக்க சூழலை உருவாக்கி அதனுடன் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் இணைத்துப் பழமையில் புதுமையை உருவாக்கத் தலைப்பட்டான். அங்கனம் கலைநயத்தோடு செய்யப்பட்ட தச்சுக்கலை குறித்தும் மட்பாண்டக் கலை குறித்தும் விவாதிக்கிறது இக்கட்டுரை.
               
     சங்க காலத்தில் பல கலைஞர்கள் இருந்தனர் மரத்தால் வாழ்க்கைக்கு தேவையான பலப்பொருள்களை செய்பவர்கள் தச்சர்கள் எனப்பட்டனர். மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் வண்டிகள் கடல் வாணிபத்திற்கு தேவையான படகுகள் வீட்டிற்குரிய அழகிய தூண்கள், வேலைப்பாடுடைய கதவுகள், அரசருக்கு தேவையான தேர்கள் போன்வெற்றை செய்துக் கொடுப்பவர்கள் தச்சர்கள் நால்வகைப் படைகளில் சிறந்தப்படை தேர்படை. தேர்செய்து கொடுப்பது தச்சரின் தலையான கடமையாக இருந்திருக்கிறது. தச்சர்கள் மன்னர்களுக்கு வலிமையான தேர்களை செய்துக் கொடுப்பதை தங்களது கடமைகளாகக் கருதினர்.
               
“வைகல் எண்டேர் செய்யும் தச்சன்
               
திங்கள் வலிந்த காலன் னோனே” புறம்.87
               
இதனால் தச்சர்கள் மரத்தால் பலப்பொருள்களை செய்துக் கொடுத்தனர் என்பது தெளிவாகிறது. உறுதியான தேர்களையும் செய்துக் கொடுத்தனர் என்பதை உணர முடிகிறது. மேலும் மக்களுக்குத் தேவையான தச்சுக் கருவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். சங்க காலம் முதல் இன்று வரை தச்சர்களின் செயல் மிகுந்து காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னர்களுக்கும் தேவையான அழகிய தூண்களும் வேலைப்பாடுடைய அழகிய கதவுகளும் அவர்களுக்குத் தேவையான தேர்களையும் அவற்றை உறுதியுடன் செய்துக் கொடுப்பது. தச்சர்களின் கடமையாக இருந்தது. தொழில்களில் சிறந்த தொழிலாக தச்சுத் தொழில் போற்றப்படுகிறன்றது.

தச்சுவேலையில் கலைநயம்
               
சங்ககால மக்களில் தலைமை வாய்ந்த மன்னர்களின் சமூகம் எதிரிகளின் தாக்குதலில் இருந்துத் தன்னைகாத்துக் கொள்ளமிகவும் வலிமையானபோர் கதவுகளை தனது கோபுரவாயிலில் அமைத்திருந்தான். அத்தகைய கோபுரவாயிலின் கதவுகள் பற்றி நெடுநல்வாடையில் ஆணிகள், பட்டங்கள் யாவும் பருத்த இரும்புகளால் பிணிக்கப் பெற்றவை. அதில் தாழ்ப்பாள்கள் மிகவும் வலிமையானதாக விளங்கினஎனச் சுட்டப்படுகின்றது. இவையாவும் “கைவல் கம்மியன்” என்று கூறப்படும் தச்சுவேலையில் நேர்த்தி உடையவர்களால் செய்யப்பட்டது.
          
“ஒருங்கு உடன் வளைஇ ஓங்குகலை வரைப்பின்
          
பருஇரும்பு பிணித்து செல்வரக்கு உரீஇ
          
துணைமான் கதவம் பொருத்தி இணைமாண்டு” (நெடுநல்:78-80)

என்ற வரிகளில் சங்ககால மக்களின் கைத்திறனுடன் சேர்ந்த கலை நயத்தை அரண்மனைக்கு பொருத்தப்பட்;ட கதவுகள் உணர்த்துகின்றன. மேலும் இன்று பெரும்பாலான வீடுகளின் நிலைக்களுக்கு மேலே காணலாகும் ‘கஜலெட்சுமி’ வடிவம் இழைத்த உத்தரம் நெடுநல்வாடையிலே இடம் பெற்றுவிட்டது. உத்திரத்தின் மேலே அதாவது நிலைக்கு மேலே கற்பலகையில் குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளால் ஏந்திய பிடிகளின் உருவங்களும் அதன் நடுவில் திருமகள் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தொழில் நுட்பங்கள் யாவும் சங்ககாலமக்கள் வழங்கிய கொடை எனில் அது மிகையாககாது. நெடுநல்வாடைக்கு உரை வகுத்த நச்சினார்கினியர் கஜலெட்சுமி உருவம் பொறித்த கற்பலகைக்கு விளக்கம் தரும் போது, “நடுவில் திருமகளும், இருபுறத்தும் இரண்டு செழுங்கழுநீர்ப் பூவும், இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக் கற்கலி” என்று அழகுபட உரைக்கின்றார். இத்தகைய காட்சி கலித்தொகையிலும் காணமுடிகின்றது.
          
“வரிநுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்
          
புரிநெகிழ் தாமரைமலரங்கண் வீறுஎய்தித்
          
திருநயந்து இருந்தன்ன”       (கலி:44)

என்று கூறப்பட்டுள்ளது. பழங்கால கலைகளுள் நிலைத்த தன்மை உடையன என்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும்.

கட்டிலின் தொழில்நுட்ப கூறுகள்
               
பாண்டிமாதேவி உறங்குவதற்காகச் செய்யப்பட்ட கட்டிலின் கலை வேலைப்பாடுகள் நெடுநல்வாடையில் சுட்டப்பட்டுள்ளதை நோக்கும் போது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளில் எத்தகைய அருமையான கலைக் கொடை இன்றைய கலை விரும்பிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கிடைத்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. பாண்டில் என்றுசொல்லப்படும் கட்டில் எப்படி செய்யப்பட்டது என்பதை நெடுநல்வாடை விளக்கும்போது நாற்பது வயது நிரம்பிய முரசு போன்ற கால்களை உடைய போரில் இறந்த யானையின் தானே விழுந்த தந்தங்களால் செய்யப்பட்டது. தச்சன் தனது கூர்மையான சிறிய உளியால் நுட்பாகச் செதுக்கிவட்டக் கட்டிலை உருவாக்கினான். மேலும் அதன் இடையில் இலைவடிவங்கள் விளங்குமாறு செய்யப்பட்டது என்று கூறும் போது நுண்ணிய வேலைப்பாடு உடைய கட்டில் (அ) பாண்டில் செய்ய சிற்றுளி பயன்பாடு மாறவில்லை. காலங்கள் மாறினாலும், கலையும், தொழிலும் மாறாது என்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும். கட்டிலின் மேல் சிங்கம் வேட்டையாடுவது போன்ற காட்சி தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தூரிகை கொண்டு வண்ணங்களால் சித்திரம் தீட்டுவதைக் காட்டிலும் தகடுகளில் உருவங்கள் பொறிப்பது என்பது கடினமானதாக்கும் என்றும் கலை தன்மை கொண்ட கலைஞர்களுக்கு அது எளிதாகிப் போகின்றது.
 
 “தசநான்குஎய்தியபணைமருள் நோன்தாள்
          
இகல் மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதல்
          
பொழுதுஒழி,நாகம் ஒழிஎயிறுஅருகுஎறிந்து
          
சீரும் செம்மையும் ஒப்பவல்லோன்
          
கூர் உளிக் குயின்றஈர் இலை இடை இடுபு”        (நெடுநல்:115-119)

என்ற செய்யுள் வரிகளில் கட்டிலை தச்சன் செய்தமுறையைக் கூறியுள்ளது. மேலும் பாண்டில் பற்றி மலைப்படுகடாமில் “நுண் உருக்குற்றவிளங்கு அடர்ப் பாண்டில்” என்று கூறப்பட்டுள்ளது.

மட்பாண்டத் தொழில்
               
பண்டை நாளில் பெரும்பான்மையான மக்கள் மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர். மட்கலம் செய்யும் மக்கள் குயவர்கள் எனப்படுகின்றனர். பச்சை மண்ணால் செய்த கலத்தைச் சூளையில் இட்டு எரித்து புனைவது மட்கலம் எனப்பட்டது.
               
மண்பாண்டங்கள் மக்களுக்குப் பல வகையில் பயன்பட்டது. இதற்கு பலப்பெயர்கள் உள்ளன. உணவு சமைத்தற்குரிய கலம், அடுகலம் என்றும் நீர் நிறைத்து வைப்பதற்குரிய கலம் மட்கலம் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர் உடலை பெரிய மட்கலத்தில் வைத்துப் புதைப்பர் இதனை தாழிகள் என்று அழைத்தனர். மண்பாண்டம் செய்ய கருவிகள் தேவைப்பட்டன.
               
“அச்சுடைக் சாகாட்டு ஆரம்”              (புறம்:256)

என்ற வரிகள் மூலம் மண்பாண்டம் செய்ய சக்கரம் என்ற கருவி பயன்பட்டன என்பது தெளிவாகிறது. மண்பானையை சுடாமல் அப்படியே பயன்படுத்தினால் அது பயனற்று போகும். அதனால் அதனைச் சுட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை,
               
“இருள் திணித்தன்ன குரூஉத்திரன் பரூஉப்புகை
               
அகலிக விசும்பின் உளன்றும் சூளை”

என்பது தெளிவாகிறது. சங்க காலத்தில் மக்கள் இறந்த பிறகு அவ்வுடலைத் தாழியைக் கொண்டு புதைத்தனர். இதனை,
               
“கவி செந்தாழிக் குவிபுறத் திருந்த
               
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவர்”             (புறம்.238)

என்பதால் மக்கள் தாழிகளைப் பயனப்டுத்தினர் என்றும் அத்தாழி செந்நிறமாக உள்ளது என்றும் தெளிவாகிறது. மண்பாண்டங்களை மக்கள் சங்ககாலம் முதல் இன்று வரை பயன்படுத்தி வருகிறார்கள். இத்தொழில் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது என்பது புறநானூற்றின் மூலம் அறிய  முடிகிறது.
               
சங்க காலத்தில் மட்பாண்டத் தொழில் பரவலாக்கம் பெற்று இருந்தது. மட்பாண்டங்களைச் செய்வோர் அதனைத் தனித்த தொழிலாகச் செய்துள்ளனர். எனவே அவர்களைக் கலம்செய்கோ, எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். இதனை, “கலம் செய் கோவே! கலம் செய் கோவே!”(புறம்: 228) என்னும் புறநானூற்றுப் பாடல் வழி அறிய முடிகின்றது. மேலும் அவர்கள் வேட்கோ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், சிறுவயது முதலே இத்தொழிலை மேற்கொள்கின்றனர் எனவும்,
               
“வேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த
               
பசுமண் குரு உத்திரன் போல”              (புறம். 32)

புறப்பாடல் குறிக்கின்றது. இதை நோக்க மட்பாண்டத் தொழில் குடும்பத்தொழிலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. மட்பாண்டங்கள் பெரும்பாலும் கொள்கலனாகவே காட்டப்படுகின்றன. பானை, நீர்க்கன்னல், இறந்தோரைப் புதைக்க பயன்படுத்திய தாழிகள் முதலியவை சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றன.
               
பானைகள் பானை, குழிசி, தசும்பு, மண்டை, உறி, கரகம் எனப்பல பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
               
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270)

என்னும் பாடலடி பானை எனக் குறிக்கப்பட்டமையையும்,
               
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி” (பெரும்: 96)

என்னும் பாடலடி குழிசி எனச் சுட்டப்பட்டமையையும்,
               
“தயிர் கொடு வந்த தசும்பு” (புறம்: 33)

என்பது தசும்பு எனக் குறித்ததையும்,
               
“பாணர் பசுமீன் சொரிந்த மண்டை” (குறு: 169)

என்னும் அடி மண்டை என அழைக்கப்பட்டதையும்,
               
“உறித் தாழ்ந்த கரகம்” (கலி: 9)

என்னும் பாடல்வரி கரகம் என்றதையும் குறிக்கின்றன. இவ்வாறு வேறு வேறு பெயர்களால் அழைக்கப் பெற அவற்றின் வடிவம் அல்லது அளவு மாறுபாடு காரணமாக இருக்கலாம் எனினும் அவற்றை உறுதி செய்ய சங்கப் பாடல்களில் இடமில்லை.
               
பானைகளில் ஓவியங்கள் வரையப்பட்டமையோடு பானைகளில் பெயர் எழுதும் பழக்கமும் சங்க காலத்தில் இருந்துள்ளது.
               
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
               
கண்ணெழுத்துப் படுத்த என்னும்
               
பல்பொதிக் கடைமுக வாயில்.”       (சிலம்பு. இந்திர.111-113)

என்னும் அடிகள் பானையில் பெயர் பொறித்தமையைக் காட்டுகின்றது.
  மட்பாண்டங்கள் செய்த முறையினையும் சங்கப்பாடல்கள் வழியாக அறிய முடிகின்றது. மட்பாண்டங்கள் செய்ய ஈர மண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். ஈரமான பதப்படுத்திய மண்ணை சக்கரத்தில் இட்டு பானை செய்துள்ளனர்.
  
“வனை கலதிகிரியின் குழிசி சுழலும்
               
துணை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்” (மலை:475)

என்னும் பாடலடிகள் இதனை உணர்த்துகின்றது. இவ்வாறு சக்கரத்தைச் சுழலவிட்டு கைகளால் செய்யப்பட்ட பானைகள் பின்னர் நெருப்பில் இட்டு சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பானை தனித்தனியாக சுடப்படாமல் மொத்தமாக சுடப்பட்டிருக்க வேண்டும். இப்படி பானைகளைச் சுடுவதால் ஏற்படும் புகை மலையையே மறைப்பதாக,
               
“இலங்குமலை புதைய வெண்மழை கவைஇ
               
கலம்சுடு புகையின் தோன்றும் நாட” (அகம்: 308)

என்னும் அகநானூற்றுப் பாடல்வரிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சுடப்படாத பானைகள் ஈரத்தைத் தாங்காதவையாக, பயனற்றவையாக இருந்தன. இந்த பயனற்ற கலத்தை பசுங்கலம் என்று குறிக்கப்பட்டமையை,
               
“பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
               
ஊள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி” (குறு: 29)
             
“ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
               
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு” (நற்: 308)

முதலான பாடல் வரிகள் குறிக்கின்றன. சுடப்படாத பானைகள் பயனற்று கரையும் நிலையில் இருக்க, சுடப்பட்ட பயனுள்ள பானைகள் உணவுசார் தேவைகளுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளன.
               
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
               
வாராது அட்ட வாடுஊண் புழக்கல்” (பெரும்: 96)
               
“சோறு அடு குழிசி இளக
               
மான்தடி புழக்கிய புலவுநாறு குழிசி
               
நகைமுதிர் சாடி நறுவின் வாழ்த்தி” (பேரும்:40)

போன்ற பாடல் வரிகள் பானைகள் உணவு சமைக்க பயன்பட்டமையைப் புலப்படுத்துகின்றன. மேலும்,
               
“பாணர் பசுமீண் சொரிந்த மண்டை”         (குறுந்.169)

என்னும் பாடலடி மீனைச் சேகரிக்க மண்பானையைப் பயன்படுத்தியதைக் காட்டுகின்றது. மேலும், மண்பானைகள் தயிரை வைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
               
“தயிர் கொடு வந்த தசும்பு” ((புறம்: 33)

எனும் புறநானூற்றுப் பாடலடி இதனைப் புலப்படுத்துகின்றது.
              
  “உறி தாழ்ந்த கரகம்” (பெரும்: 56)
              
  “இமிழ் இசை மண்டை உறியொடு” (கலி: 106)
               
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270)

போன்ற பாடல் பானைகளை வீட்டில் தொங்கவிட உறிகளைப் பயன்படுத்தியமையைக் காட்டுகின்றது
.
முடிவுகள்
📍 சங்க காலத்தில் வேளாண்மைத் தொழிலைத் தவிர பிற தொழில்களும் சிறந்தவையாக இருந்துள்ளன.

📍 சங்ககால மக்கள் எத்தொழிலைச் செய்யினும் அவற்றைக் கலைநயத்தோடும், தொழில்நுட்பத்தோடும் செய்தனர்
.
📍பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட முறைகள் இன்று பின்பற்றப்படும்போது தொழில்நுட்பங்கள் மாறவில்லை.  தொழில்நுட்பக் கருவிகளே மாறி உள்ளன.
📍சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுவது போன்று சாமானியரின் புழங்கு பொருளாக பலவகைப் பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சங்கப் பாடல் குறிப்பது போல தங்கள் பானைகளில் பெயர் எழுதி பயன்படுத்தியுள்ளனர்.
உலோகங்கள் பயன்படுத்தப்பட்ட காலமாயினும் சங்க காலத்தில் மட்பாண்டங்களே சாமானியர் பயன்பாட்டில் பெரும் இடம் பிடிக்கின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க. இராஜா
இணைப்பேராசிரியர், 
தமிழ்த்துறைஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி
பொள்ளாச்சி – 642107
Email: rajavmctamil@gmail.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here