பண்டைய மனிதன் தன்னுடைய நிலத்தில் விளைந்தப் பொருட்களை தான் மட்டும் பயன்படுத்தியது அல்லாமல் பிற நிலத்து மக்களுக்கும் கொடுத்து வந்தான். பிற நிலங்களில் விளைகின்ற பொருட்களையும் வாங்கி உபயோகிக்கவும் செய்தான். அப்படிப்பட்ட மனிதன் காலப்போக்கில் ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்கி பண்டமாற்றுக்கு வழிவகுத்தான். அந்த நிலையே கொஞ்ச கொஞ்சமாக மாறி உள்நாட்டு வாணிபத்துக்கு வழிவகுத்தது எனலாம். அவ்வகையில் நெய்தல் நிலத்தைச் சார்ந்த மக்கள் உப்பை விளைவித்து பிற நிலங்களில் வாழக்கூடிய மக்களுக்கு விற்று வாழ்ந்து வந்தனர். உப்பு விற்கும் மக்களின் உணர்ச்சி போராட்டங்களையும், வாழ்வியல் சிக்கல்களையும் இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைக்கிறது.
உப்பு விளைவித்தல்
நிலத்தில் எவ்வாறு உழவு மேற்கொண்டு வேலைச் செய்தார்களோ அவ்வாறே பரதவர்கள் கடல் என்ற நிலத்திலே உப்பை விளைவித்தனர் என சங்கப் பாக்கள் கூறியிருக்கின்றன. நற்றிணையில்,
“நேர் கண் சிறுதடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவின் எம்” (நற்.254:10-11)
என்னும் அடிகளில், பரதவர்கள் ஒரு நேரிய இடத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். மழை நீரை எதிர்பாராது கடல் நீரைக் கொண்டு உப்பை விளைவிப்பார்கள். அப்படிப்பட்ட வேளாண்மையை உடையது இந்த கடற்கரைச் சோலை என்கிறார் ஆசிரியர். மீனையும், விளைவித்த உப்பையும் ஊர்ஊராகச் சென்று விற்றதை அகநானூறு (140) குறிப்பிடுகிறது. தந்தையுடன் சேர்ந்த இளமகள் ஒருத்தியின் செயல் பின்வருமாறு சுட்டப்படுகிறது.
“இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உளுந்தும்” (அகம்.280:8)
“கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேன் இமிர் அதன்கரைப் பகுக்கும்” (அகம்.280:12-13)
என்னும் அடிகளில், தன் தந்தை கடலில் இருந்து கொண்டு வந்த முத்தையும் மீனையும் விற்றுப் பொருள் சேர்த்தாள் என்று அகநானூற்று ஆசிரியர் கூறுகின்றார். உப்பங்கழியில் உழாமலே கல் உப்பினை விளைவித்த (நற்:140) செய்தியையும் காணமுடிகிறது.
உப்பு வணிகர்கள்
கடலில் விளைந்த உப்பினை வண்டி வண்டியாக ஊர்ஊராக சென்று விற்று வருகின்ற தொழிலைச் செய்பவர்களை உமணர்கள் என அழைத்தனர். இவர்களுடைய தொழில் மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். சங்கப்பாடல்களில் இவர்களைப் பற்றியக் குறிப்புகள் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன.
உமணரும் உப்பு வண்டியும்
கடலில் உப்பு வணிகர்கள் வரும் வரை பரதவர்கள் செய்வித்த உப்பினை குவியலாக கூட்டி வைப்பர். உப்பு வணிகர்கள் வந்தப் பின்பு பரதவர்கள் விலைக் கூறி விற்று விடுவார்கள் என நற்றிணை (331) கூறுகிறது. உப்பினை ஏற்றிக் கொண்ட உமணர்கள்,
“உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன” (குறும்.388:4)
என்னும் அடியில் ‘வண்டியினை வரிசையாக நிறுத்திக் கொண்டார்களாம். உப்பினை ஏற்றிக் கொண்டு வரிசையில் நிறுத்தினர்’ என்னும் செய்தி சுட்டப்படுகிறது. நற்றிணையும் (354) இச்செய்தியினைக் குறிப்பிடுகிறது. கள்வர்களின் பயத்தால் உப்பு வணிகர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து செல்வது வழக்கமாயிருந்தது. அவர்கள் ஒன்றாகச் சென்றனர் எனும் செய்தியை குறுந்தொகை (124) தருகிறது. எருதுகளை ஒன்றாகக் கட்டி செல்வதற்குத் தயாராகும் செய்தி அகநானூற்றில் (30) கூறப்பட்டுள்ளது. நற்றிணையில் உமணர்கள் உப்பின் விலையைக் கூறி விற்பதை,
“……………………….. உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்” (நற்.4:7-10)
என்னும் அடிகளில், ‘உப்பு வணிகர்கள் வெண்மையான கல்லுப்பின் விலையைக் கூறிக் கூட்டமாகிய ஆநிரைகளை ஒலியெடுப்பியப் படியே செல்வார்கள். அப்படி செல்லும் போது வண்டியின் சக்கரத்தில் கட்டியிருக்கும் மணியின் சத்தம் கேட்டு வயலில் உள்ள கருங்கால் வெண்குருகுகள் அஞ்சும்’ என ஆசிரியர் கூறுகின்றார்.
உப்பு வணிகர்கள் பல புரிகளையுடைய நீண்ட கயிற்றினால் வண்டியை எருதுகளின் கழுத்தில் பூட்டுவார்கள். ஏற்றமான இடங்களில் வண்டியை ஓட்டும்போது உமணர்கள் எருதுகளை அதட்டி ஓட்டுவார்கள். அப்போது ஒரு வித ஓசையை எழுப்பி அதன் மூலம் வண்டியை விரைவாகச் செலுத்துவார்கள் என்னும் குறிப்பு காணப்படுகிறது.
“பகடு துறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ
உழைமான் அம்பிணை இனன் இரிந்து ஓட” (அகம்.173:10-11)
என்று அகநானூற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இன்றும் மாட்டு வண்டிகளை ஓட்டுவோர் இது போன்ற சத்தத்தை எழுப்பி வண்டியை ஓட்டுதலைக் காணலாம்.
உப்பை விற்றல்
உவர் நிலத்திலே விளையும் குன்று போல் குவிந்து இருக்கக் கூடிய உப்பின் குவியலை உப்பு வணிகர்கள் மலை நாட்டு ஊர்களுக்குக் கொண்டு போய் விலைக் கூறி விற்பார்கள் என்பதனை,
“உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த” (நற்.138:1-3)
என்று நற்றிணை கூறுகிறது. உப்பு வணிகருடைய வாழ்க்கை நிலையில்லா வாழ்க்கை என்றும், உப்பினை விலைக் சுறி விற்ற உமணர்கள்,
“தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடுபல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்” (அகம்.159:1-4)
என்ற பாடலில் சுட்டப்படுகின்றனர். இப்பாடலில் எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்து விட்டு, வரகினைச் சமைத்து உண்டார்கள் என்றும், இளைப்பாறினார்கள் உமணர்கள் என்றும் அந்த அடுப்பினை அவ்விடத்தே விட்டுச் சென்றனர் என்றும் அகநானூறு கூறுகிறது. ஆக உப்பு விற்கின்ற உமணர்களின் வாழ்க்கை நாடோடி வாழ்க்கையை ஒத்திருந்துள்ளது. அவர்கள் ஓரிடத்தில் தங்கி இருந்தாலும், உப்பு வாங்கி மலையோரப் பகுதிகளான (குறிஞ்சி) முல்லை மருத நிலமக்களுக்கு விற்கும் நோக்கில் செல்வதால் தங்கள் குடும்பத்தை விட்டு அதிக நாள் பிரியும் வாய்ப்பும் உண்டு.
மேலும் உப்பு வணிகரின் வண்டியினுடைய அச்சு முறிந்து போனால் அதை வீசி எறிந்து விடுவர் என நற்றிணை (138) கூறுகின்றது. இதே போல் புறநானூற்றிலே,
“எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே” (புறம்.102:1-2)
என்னும் அடியிலும் மேற்கண்ட செய்தி இடம்பெறுவதைக் காணமுடிகிறது. வண்டியில் உப்பாகிய பண்டம் அதிகம் ஏற்றப்பட்டது. இளம் வயதுடைய எருதுகள் வண்டியை இழுத்தலை அறியாமல் நிற்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வண்டியானது பள்ளத்தே சென்றாலும், மேட்டிலே ஏறினாலும் அவ்விடத்து வரும் இடையூற்றை நினைத்து முன்னெச்சரிக்கையாக அச்சு மரத்தின் கண்ணே காவலாகிய மோச்சையை சேர்த்துக் கட்டியிருப்பர் என ஆசிரியர் கூறுவதிலிருந்து தெளிவாகிறது. “உப்பளங்களிலிருந்து தலைச் சுமையாகக் கொண்டு சென்றும் நாட்டின் பலப்பகுதிகளிலும் விற்றனர்”1 என்று டாக்டர் ந.சுப்பிரமண்யன் குறிப்பிடுகிறார். இதனால் மாட்டு வண்டிகள் மட்டுமல்லாது முதுகிலும், தலையிலும் சுமந்து வந்து உப்பை விற்று வந்தனர் என்பதை அறியமுடிகிறது.
பாலை வழியில் உமணர்கள் செல்லும் போது கள்வர்கள் பயம் இல்லாமல் செல்வதற்காக சத்தம் எழுப்பியும் மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியும் கேட்கும் என அகநானூறு (17) கூறுகிறது. உமணர்கள் செருப்பை அணிந்து இருந்தார்கள் என்றும், கோலினைக் கையில் உடையவர்கள் என்றும்,
“தோல்புரை சிரற்றுஅடி கோலுடை உமணர்” (அகம்.191:4)
என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது. கல்வி அறிவில்லா உப்பு வணிகர்கள் என அகநானூறு (257) கூறுகின்றது. ஊர்ஊராக சுற்றும் உமணர்கள் ஏதாவது ஒரு மர நிழலில் நின்று இளைப்பாறுதலும் உண்டு என அகநானூற்றில் (295) பாடல் ஒன்று கூறுகின்றது. அதைப்போல,
“………………………. உமணர்
கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்” (அகம்.329:5-6)
என்று உப்பு வணிகர்கள் வளைந்த நுகத்தடியில் சிவந்த கயிறுக் கொண்டு பூட்டியபடி வைத்திருப்பார்கள். இவ்வண்டியானது துன்பம் தரக்கூடிய புழுதியுடன் காற்று சுழன்றடிக்கும் வகையில் வேகமாகச் செல்லுமாம். காட்டு வழியிலேச் செல்லும் உப்பு வணிகர்கள் (புறம்:313:5) சீறூர் சிறுவர்கள் குப்பைகளின் மீதேறி நின்று எத்தனை என எண்ணுவார்களாம் (புறம்:116:7-8). ஆனால் அவர்களுக்குள் சண்டை, சச்சரவு போன்ற பாகுப்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. வண்டிகளை எண்ணிய சிறுவர்கள் அந்த உமணச் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவார்கள் என சிறுபாணாற்றுப்படை (55) கூறுகிறது.
வண்டிகளில் பூட்டப்பட்ட எருதுகள் சோர்ந்து போகும் இடத்து வேறு எருதுகளையும் உடன் கூட்டிப் போகும் வழக்கம் இருந்து வந்தது என்பதை,
“பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி” (பெருபாண்.66-67)
என்னும் அடியினால் அறியமுடிகிறது. மேலும், உமணர்கள் கல்லென்னும் ஆராவாரத்தையுடைய எருதுகளை உசுப்பியும், ஒருவரோடு ஒருவர் சொல்லாடியும் கூட்டமாக செல்வார்களாம். அப்படி செல்வதால் கள்வர் பயம் அற்றுப் போகும் என்பதை,
“எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்” (பெரும்பாண்.பா.66-67)
என்னும் அடிகளில், பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகின்றார்.
கழுதையில் ஏற்றி உப்பை விற்றல்
எருது வண்டிகள் இல்லாதோர் கழுதைகளின் முதுகில் வைத்து உப்பை விற்று வந்தனர் என்பதை,
“நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு உதைத்து கல்விறழ் இயவின்” (அகம்.207:5-6)
என்னும் அடிகளில், நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை உமணர்கள் மூட்டைகளாகக் கட்டி, வெண்ணிற கழுத்தினைக் கொண்ட கழுதைகளின் முதுகிலே வைப்பர். மேற்கு திசையில் உள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று விலைக் கூறி விற்பார்களாம் என அகநானூறு பாடல் தெரிவிக்கின்றது. நெல்லுக்கு உப்பு நேர் என்று கூறி உமணர்கள் உப்பை விற்றனர் என்ற செய்தி (அகம்.390, நற்.254) ஆவது பாடலிலும்இடம்பெறுகின்றது. “உமட்டியர் எனப்படும் உமண மகளிரும் உப்பு விற்கும் தொழிலில் ஈடுபடுவார்கள். உப்பு கடற்கரைப் பகுதியில் மட்டுமே கிடைத்தாலும், எல்லோருக்கும் உணவில் இன்றியமையாது தேவைப்படும் பொருளாதலாலும், நாட்டின் பிற பகுதிகளுக்கு அதிக அளவில் எடுத்துச் சென்று விற்கப்பட்டது”2 உமணப் பெண்களும் உமணர்களோடு சேர்ந்து உப்பை விற்றனர் என முனைவர் அ.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
உப்பை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் உமணர்களின் வாழ்க்கை பல சிக்கல்களை உடைத்தாயினும், தான் மேற்கொண்ட தொழிலில் சிறந்து விளங்கினார்கள்.
சான்றெண் விளக்கம்
1.சங்ககால வாழ்வியல், டாக்டர் ந.சுப்பிரமண்யன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,
இரண்டாம் பதிப்பு – 2010, ப.307.
2. அகநானூற்றில் பெண்கள், முனைவர் அ.ஜெயக்குமார், பல்லவி பதிப்பகம்-ஈரோடு, முதல் பதிப்பு – 2008, ப.87
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.