காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

காரைக்கால் அம்மையார்

 காரைக்கால் அம்மையார்


காரைக்காலில் வணிகர் குலத்தில் பிறந்தவர் புனிதவதியார் ஆவார். இவர் குழந்தைப் பருவத்திலேயே சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் அரும்பக்தி கொண்டிருந்தார்.

புனிதவதியைப் பெற்றோர் நாகப்பட்டினத்திலே இருந்த பரமதத்தன் என்பவருக்கு மணம் செய்து வைத்தனர். தன் அருமை மகளைப் பிரிய மனம் இல்லாத புனிதவதியின் தந்தை இருவரும் காரைக்காலியே இல்லறம் நடத்தும்படிக் கூறினார். இருவரும் மிக்க மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஒருநாள் பரமதத்தன், நண்பர் தந்ததாகக் கூறி இரண்டு மாம்பழங்களை வீட்டிற்குக் கொண்டு வந்தான். மதிய உணவிற்கு அவற்றைப் பரிமாறும்படிக் கூறிவிட்டு சென்றான்.

அடியவர் வேடம் 

ற்று நேரத்தில் புனிதவதியின் வீட்டு வாசலில் ஒரு அடியவர் வந்து நின்றார். அடியவருக்கு உணவு அளிக்க சமையல் முடிந்தபாடில்லை. எனவே, புனிதவதியார் கணவன் தந்த இரண்டு மாம்பழங்களிலே ஒன்றை அடியவருக்குத் தந்தார்.மதிய உணவு உண்ண வந்த பரமதத்தன் மாம்பழத்தைக் கேட்டான். புனிதவதியார் ஒரு மாம்பழத்தை அரிந்து தந்தார். அதை உண்ட பரமதத்தன், மாம்பழத்தின் சுவையில் மகிழ்ந்து மற்றொரு மாம்பழத்தையும் கொண்டு வரும்படிக் கேட்டான். புனிதவதியார் நெஞ்சம் பதைத்தார். கணவருக்கு என்ன பதில் சொல்வேன் என்று நடுங்கினார். தான் அன்றாடம் வணங்கும் இறைவனின் முன் சென்று, அழுது தொழுதார். அக்கணமே சிவனருளால் அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. அதை அரிந்து தன் கணவருக்குத் தந்தார் புனிதவதியார்.

மாம்பழம்

அதை உண்ட பரமதத்தன், “முதலில் உண்ட மாம்பழத்தில் இத்தனை சுவையில்லை. சுவை மிகுந்த இப்பழம் யார் தந்தது?” என்று கேட்டான். புனிதவதியாரும் வேறு வழியின்றி நடந்த உண்மைகளைக் கூறினார். இரண்டாவதாகக் கணவர் உண்டது சிவனருளால் பெற்ற மாம்பழம் என்றார்.

சைவநெறியில் அத்துணை பக்தியில்லாத பரமதத்தன் அதனை நம்பவில்லை. அவன் புனிதவதியாரிடம், “நீ அத்துணை பக்தி நிரம்பியவள் என்றால் சிவபெருமானிடம் இன்னுமொரு மாம்பழம் பெற்றுக் காட்டு!” என்று கூறினான்.புனிதவதியாரும் இறைவனிடம் வேண்டினார். இன்னொரு மாம்பழம் வந்தது. பரமதத்தன் பேரதிர்ச்சி அடைந்தான்.

தெய்வீக சக்தி கொண்ட புனிதவதியாரோடு இனிதான் இல்லறம் நடத்த முடியாது என்று கருதினான். அதை வெளியில் கூறாமல் புனிதவதியாரைத் தொடாமலேயே வாழ்ந்தான். சிறிதுநாள் கழித்து, வாணிபம் செய்யும் பொருட்டு பாண்டி நாடு சென்ற பரமதத்தன், அங்கு வேறொரு பெண்ணை மணம் செய்து கொண்டான். இதைப் புனிதவதியார் அறியவில்லை.

பேய் உருவம்

ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு புனிதவதியாரின் சுற்றத்தார் இதை அறிந்து, புனிதவதியாரை பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்தனர். பரமதத்தனிடம் சேர்ப்பித்தனர். ஆனால் பரமதத்தனோ, “இவள் தெய்வசக்தி கொண்டவள். இவளோடு என்னால் குடும்பம் நடத்த முடியாது!” என்று கூறினான். அதைக்கேட்டு மனம் வருந்திய புனிதவதியார் சிவபெருமானிடம், “என் கணவர் விரும்பாத இந்த உடல் பேய் வடிவமாக மாற அருள வேண்டும்!” என்று வேண்டினார். மறுகணமே புனிதவதியார் பேய் உருவை அடைந்தார். அவ்வுருவிலேயே சிவனைத் தொழுதார். பதிகங்கள் பாடினார்.

இவ்வாறிருக்கையில் புனிதவதியாருக்கு திருக் கயிலையைக் காணும் ஆசை உண்டானது. அவர் தலையாலேயே நடந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றார். அவ்வாறு செல்கையில் வழியிலேயே சிவபெருமான் உமையன்னையுடன் புனிதவதியாருக்கு திருக்காட்சி தந்தார். புனிதவதியார் தலையால் நடந்து வரும் காரணத்தை இறைவன் கேட்டார். திருக்கயிலையிலே தனக்கு இடம் தரவேண்டும் என்று பதிலுரைத்தார் புனிதவதியார்.

திருக்கயிலை அடைதல்

சிவபெருமானும், ‘அம்மையே! யாம் ஊர்த்துவ தாண்டவம் புரிகின்ற திருவலங்காட்டில் வீற்றிருந்து பதிகங்கள் பாடிக் களிப்பாயாக. உற்ற நேரத்தில் கயிலை வந்தடைவாய்!” என்று அருளினார். புனிதவதியாரும் தலையால் நடந்து சென்றே திருவாலங்காட்டை அடைந்தார். அங்கே இறைவனின் அருகில் அமர்ந்தார். பதிகங்கள் பாடிக் கொண்டிருந்தார். இறுதியில் சிவலோகம் சென்றடைந்தார். காரைக்கால் அம்மையார் என்ற பெயருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இணைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here