காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடல்கள் ஓர் ஆய்வு

காரிமங்கலம்-வட்டார-ஒப்பாரிப்-பாடல்கள்-ஓர்-ஆய்வு

ஆய்வுச்சுருக்கம்

            காரிமங்கலம்  வட்டார மக்களிடம் புதைந்து கிடக்கும் ஒப்பாரிப் பாடல்களை வெளிக்கொணரும் விதமாக இவ்வாய்வு நிகழ்த்தப்படுகின்றது.  அதோடு அம்மக்களிடம் உள்ள உறவு நிலையில் பிணைப்பும் அவர்களின் சுகதுக்கங்கள் என அனைத்தும் ஒப்பாரியின் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் காண்கின்றோம்.  மேலும், ஒப்பாரிப் பற்றிய அகராதி விளக்கம், இலக்கியங்களில் ஒப்பாரி, காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடலின் அமைப்பு முறைகள் ஆகியன இவ்வாய்வில் எடுத்தாளப்பட்டுள்ளன.

திறவுச்சொற்கள்

காரிமங்கலம் ஒப்பாரிப் பாடல்கள், ஒப்பாரி, ஒப்பாரி அகராதி விளக்கம், இலக்கியங்களில் ஒப்பாரி போன்றன.

முன்னுரை

மனிதன் இசையிலே பிறந்து  இசையிலே வளர்ந்து இசையிலே இறக்கின்றான். இக்கூற்றை நாட்டுப்புற இலக்கியம் நிருபிக்கின்றது. பிறக்கும் பருவத்தில் தாலாட்டு, வளரும் பொழுதில் காதல் பாடல்கள், இறக்கும் பொழுது ஒப்பாரி என மனித வாழ்வில் இடம்பெற்று இசையாகத் திகழ்கின்றது. இவ்வாறாக மனிதன் வாழ்வில் ஒரு அங்கமாக ஒப்பாரி பாடல் விளங்குகின்றது. இத்தகைய ஒப்பாரிப்பாடல்கள் மனிதனின் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. மனிதனின் வாழ்க்கைச் செயல்பாடுகள் உறவுநிலைகள் பெருமைகள் அவனுடைய சேவைகள் அனுபவித்த இன்பத்தின் நிகழ்வுகள்   ஆகியவற்றை நினைவு படுத்துவது ஒப்பாரியாகும். இத்தகைய ஒப்பாரிப்பாடல்கள் காரிமங்கல வட்டார மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. இப்பாடல்களை ஆய்ந்து அம்மக்களின் பண்பாட்டு நிலைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஒப்பாரி பொருள்

            இறந்தவர்களை நினைத்துப் பாடப்படும் பாடல்கள் ஒப்பாரிப்பாடல்கள் எனப்படும். வாழ்வின் முன்னுரை தாலாட்டு என்றால், முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டும் ஒப்பாரியும் பெண்குலத்தின் படைப்பாகும். ஒப்பாரியே ஒப்பு + ஆரி எனப் பிரித்துப் பொருள் கொள்வர்.  நாட்டுப்புறவியல் அறிஞர் சு. சக்திவேல் அவர்கள் “இறந்தவர்களை நினைத்துப் பாடும் பாடலே ஒப்பாரி என்பார். இறந்தவர்களின் இழப்பை எண்ணி இறந்தவர்களையும் தம்மையும் ஒப்பிட்டுப் பாடுவதும் ஒப்பாரியாகும்”1 என்கிறார்.

            “தமிழில் ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல் பாட்டு, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு எனப் பல வகையாகக் கூறுவர். பாதுகாப்பை இழந்தபோதும் பாதுகாக்கப்பட வேண்டியதை இழந்தபோதும் பெண்களின் ஒப்பாரியில் சோகம் வெளிப்பட்டு நிற்கின்றது”2  என்கிறார் சு.சக்திவேல். மேலும், இரத்த உறவினர்களையோ நட்பு அடிப்படையில் நெருக்கமானவர்களையோ மதிப்புமிக்க செல்வம் முதலிய உடைமைகளையோ இழக்கும்போது ஏற்படும் சோகத்தின் வெளிப்பாடாக ஒப்பாரி (இழப்புப் பாடல்கள்) அமைகின்றது.

ஒப்பாரி அகராதி விளக்கம்

            ஒப்பாரி என்ற சொல்லுக்குப் பல்வேறு அகராதிகள் பொருள் விளக்கத்தைத் தருகின்றன. அவ்வகையில் கதிர்வேற்பிள்ளையின் தமிழ் அகராதி “இறந்தவர் பொருட்டு பாடும் அழுகைப்பாட்டு”3 என்று பொருள் வைக்கின்றது. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி “இழவு வீட்டில் இறந்துபோனவரைக் குறித்த அழுகையும் புலம்பலும் பாட்டுவடிவில் வெளிப்படுவது”4 என்கிறது. சென்னைப் பல்கலைக்கழக பேராகராதி “அழுகைப்பாட்டு”5 என சுட்டுகின்றது. தமிழ் – ஆங்கில அகராதி “ஒப்பு சொல்லி அழுதல் என்று பொருள் கூறுகிறது அதோடு பெண்களால் பாடப்படுவது என்றும் இறந்தவர்களுக்கும் அடுத்துப் பிற பொருள்களுக்கும் ஒப்பு சொல்லி பாடுவது”6 என்று கூறுகிறது. இவ்வாறாகப் பல்வேறு அகராதிகள் பொருளுரைக்கிறது. ஆகவே ஒப்பாரி என்பது இறப்புக்காக மட்டுமே பாடப்படுவதாகும் என்பதை அறியமுடிகிறது.

இலக்கியங்களில் ஒப்பாரி

            ஒப்பாரி குறித்த செய்திகள் பிற்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் குறித்துக் கீழ்க்கண்ட இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சித்தர் பாடல்,

                        “அவரவர் அழும்போது ஒப்பாரி சொல்லி

                        அழுகின்ற வயணம் கண்டேன்”7

என்று குறிப்பிடபட்டுள்ளது. அதாவது இறப்பின்போது ஒவ்வொரு மனிதர்களும் அழுகின்ற நிலையினைக் கண்டேன் என்ற பொருள் அமைந்திருக்கின்றது. அதேபோல் அருணகிரிநாதர் பாடலில்,

                        “சமர்படுகளத்து ஒப்பாரி வைத்திருக்கும்

                        அஞ்ஞானம் விட்டனன்”8

என்று இடம்பெறுகிறது. போர்க்களத்தில் ஒப்பாரி வைக்கின்ற நிலையை குறிப்பிடுகின்றார். மேலும்,

                        “படுகளத்தி  லொப்பாரியாகிய

                        கருணை மொழியை கூறுவாருண்டோ”9

என்ற பாடலடி ஒப்பாரியைப்பற்றி குறிப்பிடுகின்றது. இவற்றின் அடிப்படையில் காணும்போது ஒப்பாரி என்பது ஆரம்பக்காலம் முதல் இன்று வரை மக்களிடையே வழங்கப்படுகின்றதை இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இறப்புச் சடங்கும் ஒப்பாரியும்

            பொதுவாக இறப்பு நிகழ்ந்த நாள் முழுவதும் ஒப்பாரி பாடப்படுகின்றது. நீத்தார்க்கடன் எனப்படும் கருமாதிச்சடங்கு நடைபெறக்கூடிய சமூகத்தைப் பொறுத்து 5, 7, 9, 11 நாள் வரை ஒவ்வொரு நாளும் ஒப்பாரி பாடுவர். காலையிலும் மாலையிலும் நெருங்கிய உறவினர்கள் புடைசூழ இறந்தவரின் வீட்டில் ஒப்பாரிப் பாடுவது மரபாகும். அதேபோல் இறந்து மூன்றாவது மாதம், பதினோராவது மாதம் இறந்தவருக்கென்று வீட்டில் படையல் வைத்து வழிபடுவர். அப்போதும்கூட ஒருசிலர் ஒப்பாரி பாடுவதைக் காணமுடிகிறது.

காரிமங்கல வட்டார ஒப்பாரி

            மேற்கண்ட நிலைகளில் ஒப்பாரிப் பாடல்கள் அமைகின்றன. இவற்றின் வரிசையில் காரிமங்கல வட்டார ஒப்பாரிப் பாடல்களைக் காணலாம். அந்தவகையில், தந்தையை இழந்த மகள் பாடும் பாடல்,

                        “தலைமயிரை விரிச்சுவிட்டு

                        தருமபுரிபோய் நின்னா – என்னைத்

                        தருமபுரி வைத்தியரு

                        தங்கிப்போ இன்னாரு – நான்

                        தங்க முடியாது – எங்கப்பா வீட்டு

                        தங்ககரதம் சிக்காது ……”10

என்று தந்தை இறந்த செய்திகேட்டு வேகமாகப் பிறந்த வீட்டிற்கு வரும் மகளை வழியில் தந்தையின் நண்பர்கள் தங்கிப்போகச் சொல்கிறார்கள். ஆனால் இவள் முடியாது என்று சொல்லி தந்தையின் முகம் பார்க்க ஓடி வருகிறாள் என்ற செய்தியை இப்பாடலைப் பாடியவரின் விளக்கத்திலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும்,

                        “சேலத்தான் பட்டெடுத்தால்

                        சீருக் குறையுமின்னு

                        மொரப்பூரான் பட்டெடுத்தால்

                        மோப்புக் குறையுமின்னு

                        காரிமங்கலம் பட்டெடுத்தா

                        கலையழகு குறையுமுன்னு

                        அல்லி தரிமூட்டி

                        செல்லிக்குப் பட்டுடுத்தி ……”11

என்ற பாடலின் மூலம் தன் தங்கையின் விதவைக் கோலத்தைக் கண்டு அண்ணன் அழுகின்ற நிலையை அறியமுடிகிறது. கணவன் இறந்தபின் மனைவிக்கு அவளுடைய சகோதரர்கள் கோடிப்புடவை எடுத்துக் கொடுப்பார்கள். இப்புடவையைக் கோடித்துணி என்றும் அழைப்பர். நல்ல காரியங்களுக்குப் பட்டெடுத்துத் தங்கைக்கு அளிக்கும் அண்ணன் கையாலே கோடித்துணி வாங்கும் நிலை ஏற்பட்டதைக் குறித்து தங்கை வருந்துகின்றாள். நல்ல காரியங்களுக்கு கடைகளைத்தேடி நல்ல பட்டெடுத்த அண்ணன் இக்காரியத்துக்கும் ஊர்ஊராக அலைந்து நல்ல பட்டெடுத்தாரோ என்று சொல்லி அழுகின்றாள். தங்கையின் சொல்கேட்டு அண்ணன் அழுகின்றான் என்ற செய்தியை இவ்வட்டார ஒப்பாரிப் பாடல்கள் மூலம் அறியலாம். மேலும்,

            தங்கிப்போ, சேலத்தான், மொரப்பூரான், காரிமங்கலத்தான் என்பது வட்டார வழக்கைச் சுட்டிநிற்கின்றது. தங்கிப்போ என்பது அமரு, உட்காரு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. உறவு நிலைகளில் முதன்மை இடத்தைப் பெறுவது தாயாவாள். அத்தகைய தாய் இறந்தபோது இவ்வட்டார மக்களின் இறப்புப்பாடல் இத்தகைய அமைப்பில் அமைகிறது.

                        “நடுபட்ட வடுகெடுத்து என்ன பெத்தவளே

                        நெத்தியிலே பொட்டு வச்சி

                        இனிக்கபேசி அனுப்புனியே எம்மா

                        இன்னிக்கி இப்புடி விட்டுட்டியே”12

என்று பாடுகின்றனர். பெரும்பாலும் தாய் இறந்துவிட்டால் தலைமாட்டில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதரிகதரி அழுபவள் அவளுடைய பெண் பிள்ளையே ஆவாள். ஆண்பிள்ளை அவ்வாறு அழுவதில்லை. அத்தகைய பெண் பிள்ளையானவள் நடுபட்ட வடுகெடுத்து தலைவாரி அழகு செய்தவளே நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்தோடு என்னை அனுப்பி வைத்தவளே என்று தன்தாயின் இழப்பை எண்ணிப் பாடுகின்றாள்.

            தாய் இறந்து போனதால் மகளுக்கு உண்டான சோகத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஒப்பாரிப்பாடல் அமைகிறது. அதாவது, தாய் ஒரு ஊரிலும் மகள் வேரொரு ஊரிலும் வாக்கப்பட்டு வாழ்கின்றாள். மகளானவள் எழுதப்படிக்கத் தெரியாதவள். தாய் வீட்டிலிந்து கடிதம் வருகின்றது அக்கடிதத்தைத் தபால்காரனையே படிக்கச்சொல்லி மகளானவள் தாய் இறந்த செய்தியை அறிந்துகொள்கிறாள். பிறகு பெற்ற பிள்ளையைவிட்டு கட்டிய கணவனையும் விட்டு ஓடோடி வருகிறாள் அவ்வேளையில் தாய்க்காகப் பட்டுப்புடைவை வாங்க நினைத்து பல ஊர்களுக்குச் செல்கின்றாள். அவ்வூர்களில் தாய்க்கேற்ற பட்டுப்புடவை கிடைக்காததால் தரியிலே நெய்து தாம்புலத்தட்டில் ஏந்தி கண்ணீர் கரைபுரண்டோட தாய் வீட்டிற்கு வந்து சேர்கின்றாள். இச்செய்தியானது,

                        “எழுதி படிச்சவரே இங்கிலீசு கத்தவரே எடுத்துப் படிச்சுப்பாரே

                          இது வாழ்வோலையோ சாவோலையோ

                         சாவோலை என்றதுமே அவுரேவும் கேக்காம

                         கைப்புள்ளையும் எடுக்காம பொட்டியில பணமெடுத்தா

                        எனக்கு பொழுதேறி போகுமுன்னு சட்டியில பணமெடுத்தா

                        சாய்ங்காலம் ஆகுமுன்னு உரியில பணமெடுத்து ஓடிவந்தேன்

                       டேசனுக்கு – திருட்டு இரயில் ஏறி திருப்பத்தூர் போயிரங்கி

                        திருப்பத்தூர் செட்டியாரே என்ன பெத்த சீதாவும் செத்துவிட்டா

                        செகப்பு கலருல சிறுகலரு தாருமண்ணா?”13

          என்ற ஒப்பாரிப்பாடலில் அமைகின்றது. மனதை உருக வைக்கும் பாடல் ஏட்டில் எழுதப்பெறவில்லை என்றாலும் காரிமங்கல வட்டார மக்களின் மனதில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலில் ‘அவுரேவும்’ என்ற சொல் கணவனைக் குறிப்பதாகும். கணவனைக் கடவுளுக்கு மேலாக இப்பகுதி பெண்கள் நினைப்பதால் அவரிகளின் பெயர்களை எந்தக் காரணத்திற்கும் சுட்டி சொல்லமாட்டார்கள். ஆகவே இச்சொல்லானது இவ்வட்டார மக்களின் வழக்குச்சொல்லாகும்.

     தாயின் இறப்பில் அழுவதைக்காட்டிலும் தந்தையின் இழப்பில் பெண்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாவற்றையும் சொல்லி கண்ணீரே வற்றுகின்ற அளவிற்கு மகளானவள் அழுவாள் என்பதை,     

                       “கால் சிலம்பு ரோசாவே பூவே

                        காலஞ்சென்ற மல்லி மொக்கே

                        காலஞ்சென்ற நாளையிலே எப்பா

                        கட்டிலில சாஞ்சிருந்தா

                        கட்டிலுக்கு அழகு உண்டு எப்பா

                        இந்த நாட்ல எனக்கும் காவல் உண்டு

                        கட்டிலிட்டு கால் வாங்குனா

                        கட்டிலுக்கும் அழகில்ல

                        காவலுக்கும் ஆலில்ல”14

           எனும் மகளின் ஒப்பாரியை வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் கால் வாங்குனா என்ற சொல்லுக்கு எழுந்து போதல், அவ்விடத்தை விட்டு நீங்குதல் என்ற பொருளில் வருகிறது.

அண்ணன் தங்கை உறவில் வெளிப்படும் ஒப்பாரி

            அண்ணன் தங்கை உறவு நிலைகளைப் பற்றி பல திரைப்படங்களில் காணமுடிகிறது. அவ்வாறு அண்ணன்களும் தங்கைமார்களும் மிகுந்த பாசம் கொண்டவர்கள். அத்தகைய சூழலில் அண்ணன் இறந்தபோது,

            “குங்கும எண்ணெய் எடுத்து என்ன பெத்த குயிலா குளிக்கும் தண்ணி

                        கொல்லையில போய்பாயும் கொல்லபுரம் தண்ணியில

                        கொண்டலறி பூ பூக்கும் கொண்டலறி பூ அறுத்து

                        என்ன பெத்த குயிலாலுக்கு கோபுரம் போல் தேருகட்டி

                        என்ன பெத்த குயிலால எடுத்துவச்சி………”15

       எனத் தங்கையை இழந்த அண்ணன் தன்தங்கை வளரும் பருவத்தில் அவள் பூந்தோட்டம் வைத்து வளர்த்த நிலையையும் அப்பூவே அவளுடைய தேர்ப்பாடைக்கு வந்ததை எண்ணி அண்ணன் புலம்புவதைக் காணமுடிகிறது. அதேபோல்,

                        “ஆத்துக்கு அந்தாண்ட ஆடு மேய்க்கும் அண்ணாவே

                        நா ஆட்டுமணி சத்தம் கேட்டு அல்லி மொளகா அரைப்பேன்

                        அவரைக்காய் நாருரிப்பேன்……… ………”16

          என்று அண்ணன் மீது பாசம்கொண்ட தங்கை அவன் தன்னோடு இருந்த காலத்தில் அவர் வரும் சத்தம் கேட்டே அவருக்கு பிடித்தமான அவரைக்காய் குழம்பு செய்து வைத்துக் காத்திருந்த தங்கையின் புலம்பலில் தெரிகிறது. அதோடு தங்கையை அண்ணன் வளர்த்த விதத்தையும் தங்கை அண்ணன்மீது கொண்ட பாசத்தையும் நினைத்து மனமுருகிப் பாடுவதை இவ்வட்டார மக்களிடம் காணமுடிகிறது.

புகுந்த வீட்டில் பெண்படும் துன்பம்

            ஒப்பாரி பாடும்போது பெண்கள் தாங்கள் முதலில் வாழ்ந்த வீடான தந்தை வீட்டிற்கு வந்ததும் அவர்களுடைய பழைய நினைவு வருகிறது. அதை இப்போது வாழும் வீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒப்பாரி வைக்கும் பாடல்,

                        “தங்க மலைமேலே தாலறுக்க போனேனே

                        தாளறுத்தா பாவமில்ல எம்மா என்னை

                        தட்டிஅடிச்சா கேட்பாறு இல்ல

                         ——————————————————————–

                        மாங்கா மரத்தடியில் மயில்போல குந்தியிருந்த எம்மா

                        என்ன மயிலுன்னு பாக்காம மருந்துபோட்டு கொன்னாங்க

                        பச்ச இலப்பமரம் பலசாதி வேப்பமரம்

                        படிக்காத ராஜனுக்கு எம்மா உம் பார்வதியும் மாலையிட்டா

                         நாள்முதலா எம்மா தேங்காய் இளநீரோ தீராத கண்ணீரோ …..”17

       என்ற பாடலின் மூலம், பெண் புகுந்த வீட்டிற்கு போனபின் கணவன் சொல்லைக் கேட்டு நடந்தாலும் கூட அங்கு இருக்கும் பிறரையும் மதித்து நடக்க வேண்டும். அதில் சிறுதவறு ஏற்பட்டாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து இப்பெண்ணை சாடுகின்றனர் என்பது புலனாகிறது. அதனாலே ‘தடடி அடிச்சா கேட்பாரில்ல’ எனும் அடி மாமியார் வீட்டில் அடிக்கின்ற கொடுமையை அப்பெண் பதிவு செய்கின்றாள். மேலும், ‘குண்டு போட்டு சுட்டாங்க’ ‘மருந்து போட்டு கொன்னாங்க’ என்ற சொல்லானது தன்னை கொன்று விடுவார்கள் என்பதை மிகுந்த அச்சத்தோடு கூறுகின்றாள். ‘தேங்கா இளநீரோ எம்மா தீராத கண்ணீரே’ என்னும் அடி மாமியார் வீட்டில் அழது அழுது கண்ணீரே வற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது.

            விதவைப் பெண்ணொருத்தி திருமணமான தம்பதியர்களைக்கண்டு,

                        “வடக்கே மதுரையில வடமதுர வீதியில

                        எஞ்சோட்டு பொண்ணுங்கெல்லாம்

                        செம்மையா பொலக்கிறாங்க

                        ஒரு செல்வெடுத்து கொஞ்சராங்க ……”18

      என்று மனம் வெதும்பி பாடுகிறாள். காரணம், சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் அவளால் அவள் தோழிகளைப்போல் பிள்ளைக் குட்டிகளோடு வாழாது தன்வாழ்வே பாலைநிலமாய் போனதாக எண்ணி வருத்தப்படுவதை இப்பாடலில் காணமுடிகிறது.

தொகுப்புரை

                        இவ்வாறாகக் காரிமங்கல வட்டார மக்களிடம் தாய், தந்தை, அண்ணன், கணவன் ஆகிய உறவு நிலைகளில் பிண்ணிப்பினைந்தவர்கள். இறந்தபோது அவர்களின் உள்ளத்தில் தங்கியிருந்த சோகமானது ஒப்பாரிப் பாடலாக வெளிப்படுகின்றது. அப்பாடலின் மூலம் அம்மக்கள் பேசுகின்ற வழக்குச் சொற்களும் புலப்படுகின்றன. இவ்வட்டார மக்கள் தாலாட்டுப் பாடலையும்கூட  ஒப்பாரிப் போலவே  பாடுவதைக் காணமுடிகிறது.உறவுகள் என்பது மனிதனோடும் மனிதனின் இரத்தத்தோடும் இரண்டறக் கலந்தவையாகும். இவ்வகையான இரத்த உறவுகள் நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்ற போது உள்ளத்திலிருந்து சோகம் உருவெடுக்கும் இவ்வார்த்தைகளே காரி மங்கல வட்டார மக்களின் ஒப்பாரிப்பாடலாகும் என்பதை ஆய்வில் அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.          சு.சக்திவேல், நாட்டுப்பறவியல் ஆய்வு, ப. 182

2.          மேலது, ப. 59

3.          எஸ்.கௌமாரீஸ்வரி, நா.கதிர்வேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, ப. 322

4.          பாராசுப்ரமணியன், கிரியாவின் தமிழகராதி, ப. 201

5.          சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பக். 451 – 453

6.          தமிழ் ஆங்கில அகராதி, ப. 567

7.          சித்தர் பாடல்கள், பா. 2

8.          அருணகிரியார் பாடல், ப. 6: 25

9.          சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பக். 451 – 453

10.        10 முதல் 18 வரையுள்ள பாடல்கள் அனைத்தும் காரிமங்கல வட்டார மக்களிடம் சேகரித்தது.

ஆய்வாளர் பெயர்                                                                                   நெறியாளர் பெயர்

திரு.இல.பெரியசாமி                                                                               முனைவர் க.லெனின்

முனைவர் பட்ட ஆய்வாளர்,                                                                    உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,                                                     தமிழாய்வுத்துறை,

பெரியார் பல்கலைக்கழகம்.                                                                   எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,        

தொலைபேசி எண் : 97861 80599                                                            தொலைபேசி எண் : 70102 70575

மின்னஞ்சல் முகவரி pc.samy86@gmail.com                                           மின்னஞ்சல் முகவரி leninkesavan@outlook.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here