கள ஆய்வு என்றால் என்ன? கள ஆய்வின் படிமுறைகள் யாவை?

கள ஆய்வு என்றால் என்ன கள ஆய்வின் படிமுறைகள் யாவை
      ஆய்வுக்குரிய களத்துக்கே நேரடியாகச் சென்று தகவல்களைத் திரட்டி நிகழ்த்தப்படுகின்ற ஆய்வைக் கள ஆய்வு என்று குறிப்பிடுகிறோம்.

கள ஆய்வு ஏற்பாடுகள்
           
      கள ஆய்வுக்குப் புறப்படும் முன்பு ஆய்வுக்குரிய ஏற்பாடுகளைச் செம்மையாகச் செய்து கொள்ள வேண்டும். அந்த ஏற்பாடுகளில் குறைவு ஏற்பட்டால் ஆய்வுக்கு அது இடையூறாக அமையும். ஆய்வுப் பொருளுக்கும் ஆய்வுத் தன்மைக்கும் ஏற்றபடி கள் ஆய்வுக்குரிய கருவிகள் வேறுபடலாம். பொதுவாகச் சொல்லப் போனால் ஆய்வுக்குரிய கருவிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1.சுவடிகள்

2. எழுதுகோல்கள்

3. தகவல் திரட்டுவதற்கு ஏற்ற வகையில் ஒலி இழைப்பதிப்பான்

4.இன்றியமையாத படங்களை எடுப்பதற்கு நிழற் படக் கருவி.

5. தலைவலி போன்ற பொது இடையூறுகளைத் தவிர்க்கத் தக்க மருந்துகள்.

6. நேரச் செலவில்லாமல் எளிய வகையில் பயன்படுத்தத் தக்க உணவு வகைகள்,

7.அன்றாட வாழ்வில் பொதுவாக நாம் பயன்படுத்த வேண்டிய பொருள்கள்.

நாம் இவற்றையெல்லாம் முறையாக ஏற்பாடு செய்து கொண்டு கள ஆய்வுக்குப் புறப்பட வேண்டும்.


தகவலாளர் தெரிவு அல்லது தேர்ந்தெடுப்பு
           
       நமது ஆய்வுக்குப் பயன்படத்தக்க வகையில் நாம் பொருத்தமான தகவலாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தகவலாளர்கள் பொருத்தமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வில்லையானால் சரியாகவும் முறையாகவும் தகவல்களைத் திரட்ட முடியாது. எடுத்துக்காட்டாகச் சொன்னால் நாம் மொழியியல் ஆய்வு செய்வதாகக் கொள்வோம். மொழியியல் ஆய்வு செய்யும் பொழுது பேச்சுக் குறைபாடு இல்லாதவராகப் பார்த்து நாம் தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சுக் குறைபாடு உள்ளவரைத் தேர்ந்தெடுத்தால் நம்முடைய தகவல் பதிவு தவறாக முடிந்துவிடும்.

            இன்னொரு எடுத்துக்காட்டு சொன்னால் நாட்டுப்புறத் தரவுகளைப் பதிவு செய்ய விரும்புகிற ஒருவர் நாட்டுப்புறத் தரவுகளில் நன்கு பழக்கமுள்ள வயது முதிர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு பழமொழிகளைப் பற்றி ஆய்வு செய்கின்ற ஒருவர் வயது முதிர்ந்த ஒருவரைப் பழமொழிகளைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இக்காலச் சூழலில் இளைஞர்கள் பொதுவாகப் பழமொழியைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பயன்படுத்துவதில்லை. இளைஞர்களுக்குப் பழமொழிகளும் சரியாகத் தெரியும் என்று சொல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வயது முதிர்ந்தவர்கள் தான் பழமொழிகளை நமக்குச் சரியான முறையில் வழங்கத் தக்கவர்களாக இருப்பார்கள். இப்படித் தகவலாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது சரியான முறையில் சரியான அடிப்படையில் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்துக்  கொள்ள வேண்டும்.
            தகவலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இரண்டு மூன்று பேரையாவது நமக்குப் பயன்படத் தக்கவர்களை மனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டால் அல்லது நமது ஆய்வு நமக்கு ஆய்வு நிகழும்போது இடையில் உதவமுடியாத உதவ முடியாமல் போனால் நாம் இன்னொருவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஆகவே தகலாளர்களை முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கும் பொழுது இரண்டு மூன்று பேரையாவது மனத்தில் கொள்ள வேண்டும்.

தகவல் களச் சூழலும் பழகு முறையும்
           
      தகவல் களத்துக்கு ஆய்வாளர் ஓரிரு முறை சென்று வந்து அந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தச் சூழலில் வாழும் வாழ்க்கை முறை பற்றியும் அவர்களது பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றபடி தகவல் களச் சூழலில் ஆய்வுத் தகவல்களைச் சிறப்பாகத் தொகுக்கின்ற ஆற்றல் பெற்றவராக ஆய்வாளர் தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தகவல் களச் சூழலை உணர்ந்து கொண்டால்தான் அந்தக் களத்தில் உள்ள மற்ற மக்களோடு முறையாகவும். எளிதாகவும் பழகித் தகவல்களைத் தொகுத்துக் கொள்ள முடியும். தகவல் களச் சூழலைப் புரிந்து கொள்வதும் அந்தச் சூழலில் வாழும் மக்களைப் புரிந்து கொள்வதும் கள ஆய்வுக்கு மிக இன்றியமையாதவை என்றே குறிப்பிட வேண்டும்.

தகவல் திரட்டும் முறை
           
         கள ஆய்வில் தகவல்களைத் திரட்டும் பொழுது செய்திகளை முறையாகச் சுவடிகளில் அல்லது தனித் தாள்களில் குறித்துக் கொள்ளலாம். தகவலாளர்களை இயல்பாகப் பேசவிட்டு அந்தப் பேச்சை ஒலிப்பதிவுக் கருவியில் முறையாகப் பதிவு செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் அந்த ஒலிப்பதிவுக் கருவியின் துணைகொண்டு தகவல்களை முறையாகச் சுவடியில் அல்லது தனித்தாளில் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட சூழல் களில் நிழற்படக் கருவியைப் பயன்படுத்திப் படங்களை எடுத்துப் படங்களையும் தகவல் தொகுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாகப் பேசவிட்டுச் செய்திகளைத் தொகுப்பது ஒரு பக்கம் இருக்க, நேர்காணல் மூலமும் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும். வினா நிரல் மூலமும் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும். நேர்காணல் மூலம் தகவல்களைத் திரட்டும் போது திட்டமிட்டு நேர்காணலாம், அல்லது தன்னிச்சையாகவும் நேர்காணலாம்.
சரிபார்ப்பும் சீர் அமைப்பும்
           
      தொகுக்கப்பட்ட தகவல்கள் எல்லாவற்றையும் சரி என்று நம்பிவிட முடியாது. சில இடங்களில் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்பட்டவையாக அமையக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் அந்தத் தகவல்களைச் சரியாக நாம் சீரமைத்துக் கொள்ள வேண்டும். சரிபார்த்த தகவல்களை முறைப்படி மீண்டும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சரிபார்க்கவும் சீரமைக்கவும் ஆய்வாளன் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். சூழலுக்கு ஏற்றபடி ஆய்வாளனே அத்தகைய உத்திகளை அமைத்துக் கொண்டு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். சீரமைத்துச் செம்மைப் படுத்த வேண்டும்.


கள ஆய்வில் எதிர்பார்க்கும் சிக்கல்களும் தீர்வுகளும்           
     பொதுவாகக் கள ஆய்வில் ஈடுபடுகின்ற ஒருவர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட பிறகு எப்படிப் பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும், அவற்றுக்கு எப்படிப்பட்ட தீர்வுகள் அமைய வேண்டும் என்பன பற்றிக் கருத்து வகையில் தெரிந்திருக்க வேண்டும். ஆய்வாளர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட நிலையில் அவரால் ஓரளவுக்கு அங்கே தோன்றுகின்ற சிக்கல்களை உணர முடியும். அவற்றைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளையும் கண்டு கொள்ள முடியும். இவை ஒருபுறம் இருக்கத் தான் தெரிந்து வைத்துக் கொண்ட தகவலாளர் தனக்குச் சரியாக முழுமையாக உதவாமல் போனால் அதற்கு அவர் மாற்று வேண்டும். அதனால்தான் ஏற்பாடு செய்து கொள்ள தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போதே இரண்டு மூன்று பேரை அவர் மனத்தில் கொள்ள வேண்டும் என்று முதலிலேயே குறிப்பிட்டுள்ளோம். தான் தொகுத்த தகவல்களைக் கொண்ட தாள்கள் ஒருகால் காணாமல் போய்விட்டால் அவர் ஆய்வு தடைப்படக் கூடாது. ஆகவே ஆய்வுத் தகவல்களை முதலில் ஒரு சுவடியில் குறித்துக் கொண்டால் அதன் பிறகு தகவல் அட்டையில் எழுதி முறைப்படுத்திக் கொள்ளலாம்.
        
    சில நேரங்களில் கள ஆய்வின்போது நாம் சேகரித்த தகவல்களில் நமக்கே ஐயம் இருக்குமானால் ஒவ்வொரு நாளும் அவற்றைப் பரிசோதித்து ஐயத்தை மறுநாளில் தீர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இப்படி ஐயப்பாட்டிற்குரிய செய்திகள் எல்லாவற்றையும் தொகுத்து அதற்காகவே ஒரு தனிக் கள ஆய்வை அமைத்துக் கொண்டு அந்த ஐயங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஆய்வில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கெல்லாம் ஆய்வாளனே தீர்வு கண்டாக வேண்டும். கள ஆய்வு என்பது ஆய்வாளன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆய்வுக்கு ஏற்றபடி எளிதாகவும் அமையலாம்: மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் அமையலாம். எப்படி இருப்பினும் களஆய்வைச் சிறப்பாக நிறைவேற்றுவது ஆய்வாளனுக் குரிய தனிப் பொறுப்பு.

நூல் : ஆராய்ச்சி நெறிமுறைகள்

ஆசிரியர் : டாக்டர் பொற்கோ

பதிப்பகம் : ஐந்திணைப் பதிப்பகம், சென்னை – 600 005.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here