தமிழ்த்தாய் வாழ்த்து
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளையின் பிறப்பு
கி.பி.1886ஆம் மார்கழித் திங்கள் ஆண்டு ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்றார். பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகளுக்குமேல் தமிழாசிரியராயிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் இதழாசிரியராயிருந்து சீரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார்.
தமிழ்ப்பற்று
1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப் பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும், வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார். அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான் ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
கரந்தைக் கவியரசு எனும் பட்டம்
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய கல்வி நிலையத்தில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1922 ஆம் ஆண்டு முதல் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணியாற்றினார். தொல்காப்பியத்திற்கு தெய்வசிலையார் எழுதிய ஏட்டுச்சுவடி உரையை தமிழ்த்தாத்தா உ.வே.சா.விடம் பெற்று, பதிப்பித்துக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டு வந்தார்.
‘ஆசானாற்றுப் படை’, ‘சிலப்பதிகார நாடகம்’, ‘மணிமேகலை நாடகம்’, ‘அகநானூறு உரை’ முதலிய நூல்களைப் படைத்து கவியரசு வேங்கடாசலம் தமிழுக்குத் தந்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், கவியரசு வேங்கடாசலத்தின் தமிழ்த் தொண்டினைப் போற்றிப், பாராட்டி, ‘கரந்தைக் கவியரசு’ எனப் பட்டமளித்துச் சிறப்பித்தது. டாக்டர் மா.இராசமாணிக்கம், முத்தானந்த அடிகள் முதலிய புகழ்மிகு தமிழ் அறிஞர்களை உருவாக்கிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம், தமது அறுபத்து ஏழாவது வயதில் 1955 ஆம் ஆண்டு மறைந்தார். அன்று அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் நிலைத்திருக்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை பல பாடல்களைப் படைத்துள்ளார். இவர், இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து
“வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !
மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !
தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்
தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !
கான் ஆர்ந்த தேனே! கற்கண்டே ! நற்கனியே !
கண்ணே! கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி !
ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !
அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !”
அருஞ்சொற் பொருள்
வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை
மன்னிய = பெருமை மிக்க
தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த
திருமாலின் குன்றம் = வேங்கட மலை
ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்)
செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற
கானார்ந்த தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற தமிழே !
கட்புலம் = பார்வை
ஆனாத = குறையாத
சீர் = பெருமை
அறைதல் = சொல்லுதல்
யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.