உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் புலப்பாட்டு நெறி|முனைவர் சி. சிதம்பரம்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் புலப்பாட்டு நெறி - சி. சிதம்பரம்
      முடிகெழுவேந்தர் மூவர் ஆண்ட முத்தமிழ்நாட்டில் சோழ மன்னரின் பேராட்சிப் பெருதலைநகராய் விளங்கியது உறந்தை. உறந்தை என்பது உறையூரின் தொன்மை பெயர். பேராசிரியர் என்னும் உரையாசிரியர் உறையூர் என்பதனை பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி (புறம்.69) எனவும் மேலையார் திரித்த வகையானே இக்காலத்துந் திரித்துக் கொள்ளப்படுவன் உள  எனத் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார். அவர் கருத்துப்படி உறையூர் என்பது உறந்தை என்று திரிக்கப்பட்டது என்பது உணரப்படும். உறையூர் என்பது பழைய வழக்கு; மக்கள் வழக்கு. ஆனால் சங்கப் பாடல்களின் உறையூர் என்ற ஆட்சி இல்லை. மக்கள் வழக்கில் உறையூர் என்பது இருந்திருக்கவேண்டும். சங்க இலக்கியம் முழுமையும் உறந்தை என்ற வழக்கே பயின்று வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் மட்டும் உறையூர் என இளங்கோவடிகள் ஆண்டிருப்பதும் இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள் அனைவர் பெயர்களும் உறையூர் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இவைகளினால் பேச்சு வழக்கில் உறையூர் என்றும், இலக்கிய வழக்கில் உறந்தை என்றும், உறந்தை என்ற இலக்கிய வழக்கு பிற்கால வழக்கு என்பது புலனாகும் உறைப்பு என்ற சொல் செரிவு என்று பொருளைத் தொல்காப்பிய நூற்பா தருகிறது. எனவே மக்கள் நிறைந்து வாழ்ந்த இடமாக இவ்வூர்  அமைந்திருக்கவேண்டும் என்பது புலனாகும். உறையூரில் வாழ்ந்த புலவர்கள் எண்ணிக்கை ஒன்பது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் ஒருவர். இவர் பாடிய பாடல்களின் பொருண்மையையும், புலப்பாட்டு நெறிகளையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
       இப்பெரும் புலவர் உறுப்புக் குறையுடைமை பற்றி முடமோசியார் என்றும், உறையூரின் ஒரு பகுதியான ஏணிச்சேரி என்ற பகுதியில் வாழ்ந்தவராதலின் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்றும் வழங்கப்பட்டார். உறையூர் ஏணிச்சேரி என்ற அடை இவர் அங்குத் தொடர்புடையவர் என்பதைப் புலப்படுத்துகிறது. “இவர் பெயர் மோசியார் எனவும் மோசி எனவும் குறைத்தும் வழங்கப்பெறும். உறையூர் ஏணிச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு மோசியார் என்பதை இவரது இயற்பெயரென்னலாமோ? எனின் மோசி கொற்றனார், மோசி சாத்தனார், மோசி கீரனார், மோசி கண்ணனார் என்ற பல புலவர் பெயர்கள் வழக்கில் இப்பெயர் இயற்பெயரின் வேறாகக் கொண்டு வழங்கப்பெறுதலால், இதனை இயற்பெயரென்னாது இடப்பெயரென்பதே பொருந்துவதாகும்1 என்பார் கார்மேகம். மேலும் “மோசி என்பது மோசிகுடி என்ற பெயரின் சுருக்கம் ஆகும். “மோசியின் பெயரால் தமிழ்நாட்டில் பலவூர்களுண்டு. தொண்டை நாட்டில் மோசிப் பாக்கம் என்றும், நடுநாட்டில் மோசி குளத்தூரென்றும் பாண்டிய நாட்டில் மோசி குடி என்றும் காணப்படுகிறது” 2 என்பார் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை. மோசி குடி என்னும் ஊரில் பிறந்து உறையூரின் ஏணிச்சேரியில் தங்கியிருந்தமையால் உறையூர் ஏணிச்சேரி மோசியார் எனப் பெயர் பெற்றார் என்பது முடிவு. “யவனர் என்ற சொல் நாளடைவில் ஏணிச்சேரி எனத் திரிந்து அமைந்திருக்கலாம். தலைநகரமாகிய உறையூரையடுத்து யவனர்கள் தங்கியிருந்த பகுதியாகக் கருதலாம்” 3 என்பர் ஆர். ஆளவந்தார். யவனர் என்ற சொல் ஏணி என்று மருவியது என்ற கருத்துப் பொருத்தமற்றது. மதிற்போருக்கு மிக இன்றியமையாத கருவி ஏணி. இந்த ஏணி மதிலை அடைத்திருக்கும் போது மதிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்திக் கோட்டையைத் தாக்கவும், காக்கவும் பயன்படும். இதற்குப் பெரிதும் வேண்டற்பாலன ஏணிகள்.  பதிற்றுப்பத்தில் ‘ஏறாஏணி’ என்று நாற்காலிகள் குறிக்கப்படுவதும் இங்கு ஒப்பு நோக்கற்பாலது. போருக்குரிய ஏணிகளை வைத்துப் பேணிக் காத்து வந்த பகுதி ‘ஏணிச்சேரி’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். சங்க காலத்தில் கோட்டைப் போருக்கு இவை இன்றியமையாதவை. இத்தகைய போர்கள் பல உறந்தையில் நிகழ்ந்ததைச் சங்கப்பாக்களால் அறியமுடிகிறது. போர்க்காலங்களிலும் போரல்லாத காலங்களிலும் மதிற்போருக்குரிய ஏணிகளைப் பேணியும் காத்தும் இருந்த இடம் ஏணிச்சேரி. இவர் அந்தணர் என்பதை தொல்காப்பிய உரையில் பேராசிரியர் ”உறையூர் ஏணிச்சேரி முடமோசி ……… அந்தணர்க்குரியன்” 4 எனக்குறிப்பிடுவதால் அறியமுடிகிறது. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையால் ஆதரிக்கப்பெற்றவர். இவர் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியையும், ஆயையும், பாடியவர். பெருஞ்சித்திரனார், ‘திருந்துமொழி மோசி பாடிய ஆயும்’ (புறம். 158; 12-13) என்று இப்பெரும் புலவரைப் போற்றுவர். எனவே இவரைப் பெருஞ்சித்திரனாருக்கு முற்பட்டவர் என்பது பொருந்தும். இவர் பாடிய சங்கப்பாடல்கள் பதின்மூன்று. இவை அனைத்தும் புறப்பாடல்களே (புறம். 13,127,128,129, 130, 131, 132, 133, 134,135,241,374,375). ஆனால் “இவர் இயற்றிய புறநானூற்றுச் செய்யுட்கள் – 14″  5 என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பர். இக்குறிப்பு தவறானது.

பாடுதிறன்
     படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்குவதில் புலமைத்திறனையும் சிந்தனைத் திறனையும் பயன்படுத்தி உருவாக்குகின்றனர். ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும்  அவரது படைப்புத்திறன் செய்யுள்களில் பாடுதிறனாக வெளிப்படுகிறது. தாம் எண்ணுகிறவற்றை, எவ்வெவ்வாறு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர் என்று காணலே பாடுதிறனாகும். புலவர்களின் பாடுதிறனில் உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற பல வெளிப்பாட்டுக் கூறுகளைக் கண்டு, தொல்காப்பியர் வகுத்திருக்கிறார். உள்ளுறையும் இறைச்சியும் அகப்பொருள் பாடுதிறனுக்கு உரியன. உவமை இருபாற்பொருளுக்கும் உரியது.

பாடுதிறனை உருவாக்கிய சூழல்
          சங்க காலத்தில் உறையூரில் விளங்கிய சோழர் குடும்பத்திற்கிடையேயான அரசு, போர் அரசாகவும், ஆட்சி விரும்பிகளின் அரசாகவும் திகழ்ந்தது. அமைதியான சூழ்நிலை இல்லை. உறையூர் தொடர்பான பாடல்கள் போர் நிகழ்ச்சிச் சூழலையே பெரிதும் வெளிப்படுத்துகின்றன. ஒரு சோழன் கோட்டையை அடைத்துக் கொள்ள மற்றொரு சோழன் கோட்டைக் கதவைத் திறக்கப் போரிடுகிறான் சோழ மன்னன் யானை மீது ஏறியிருக்க யானை பாகற்குக் கட்டுப்படாது பகைப்புலத்தே மதங்கொண்டு நுழைகிறது (புறம்.13). இளஞ்சிறாரை யானைக் காலில் இடச் சோழமன்னன் ஆணை பிறப்பிக்கக் கோவூர்க்கிழார் குழந்தைகளைக் காக்கிறார் தந்தையும், தனயனும் முரண்பட்டிருக்கவும், பின் தந்தை வடக்கிருந்து உயிர் துறக்கவும் சோழ மன்னர்களின் நிலை சீர்கெட்டு அமைந்தே காணப்படுகிறது. இவையெல்லாம் அந்நாட்டில் மக்களின் வாழ்க்கைச் சூழல் அமைதியற்றுப் பரபரப்பாக இருந்தமையைக் காட்டுகின்றன. ஆதலால் தான் உறையூர், கோவூர், காவிரிப்பூம்பட்டினம் போன்ற ஊரில் வாழ்ந்த அக்காலச் சோழ நாட்டுப் புலவர்கள் புறப்பாடலைப் பாடிச் சோழ வேந்தருக்கு அறமுணர்த்தினர். போர்ச் சூழல் மிக்க அம்மண்ணில் போர் வெறி மிக்கிருந்ததால் காதற்காமமாகிய அக  உணர்வுப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றில. ஆதலால் தான் உறையூர்ப் புலவர்கள் பாடல்களில் அகத்தினும் புறப்பாடல்கள் மிகுதியாகத் தோன்றின. காலம், இடம், சூழல் இந்தப் பாடுதிறனை உருவாக்கியிருக்கின்றது.

புலப்பாட்டு நறி

     கருத்தை வெளிப்படுத்த அறிவுடையார் வெவ்வேறு வகையான நெறிகளைப் பின்பற்றுவர். ஒருவர் வினாக்  கேட்குமாறும் அதற்கு விடை கூறுமாறும் கருத்துகளை வெளிப்படுத்துவது மிகப் பழைய புலப்பாட்டு நெறியாகும். இதனை வினாவிடை நெறி என்பது சாலும். உரையாசிரியர்கள் தங்கள் உரையில் தாங்களே வினாவை எழுப்பித் தாங்களே அதற்கு விடையளிப்பதைக் காண முடிகிறது. பிளாட்டோ, சாக்ரடிசு போன்றவர்கள் தங்களுடைய நூல்களை வினா விடையாகவும் உரையாடலாகவும் அமைத்தது கருத்தை வெளிப்படுத்தும் ஓர் இலக்கியக் கொள்கையாகும். அந்த நெறியைப் போன்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், சேரன் வினாவுவது போலவும் அதற்கு இவர் விடையளிப்பது போலவும் ஒரு புறப்படலை (புறம்.13) வெளிப்படுத்தியுருப்பது நோக்கத்தக்கது.

தாழ்வு மனப்பான்மை

       உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ‘ஆய் அண்டிரனை முதற்கண் நினைக்க வேண்டியவனைப் பின்னே நினைத்தேன்; அதனால் என் உள்ளம் அழிந்து போகட்டும்! முதலாவதாகப் பாடவேண்டியவனைப் பின்னால் பாடியதால் என் நா பிளந்து போகட்டும்; அவனையன்றிப் பிறர் புகழைக் கேட்ட என் காது, பழைய ஊரின்கண்னே உள்ள கிணறுபோலத் தூர்ந்து போகட்டும்; வடதிசையின்கண்ணே உள்ள வானளாவிய இமயமலையின் அருகில் குளிர்ந்த நிழல் தரும் தெளிந்த நீரோடைகளும், சுனைகளும் உண்டு. அங்கு ‘நரந்தம்’ என்னும் மணற்புல்லை மேய்ந்து சுனை நீரைக்குடித்துவிட்டுத் தன் பிணைமானுடன் தங்கும் சிறப்புடைய இமயமலைக்கு ஈடாகத் தென்திசையில் ஆய்குடி அமைந்துள்ளது. ஆய்குடி இல்லையென்றால் இந்த நிலவுலகம் தலைகீழாய்க் கவிழ்ந்துவிடும்’ என ஆயைப் புவிச்சமன்பாட்டுக் கொள்கையுடன் எடுத்துக்காட்டுகிறார்.  இப்பாடலில் தம் உறுப்பு குறையுடைமை குறித்து தனது ஆழ்மனதில் உள்ள தாழ்வுமனப்பான்மையை முன்னிலைப்படுத்தியே இப்பாடலை (புறம்.132) புலபபடுத்தியிருப்பது நோக்கற்பாலது.

உவமைத் திறன்
      உவமை என்பது பொருளை விளக்குவதற்குப் படைப்பாளிகள் பயன்படுத்தும் பொருள் விளக்கக் கருவியாகும். கருத்துகளை அடுக்கிக் கொண்டு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை  உருவாக்கும் போது அந்தக் கருத்துகளைப் புலப்படுத்த உவமைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆதலின் உவமை என்பது புலப்பாட்டு நெறியில் முதன்மையானதும் தலைமையானதும் குறிப்பிடத்தக்கதுமாகும். “ஒரு பொருளை வேறொன்றினொடு ஒரு வகையில் ஒப்பிட்டுக் கூறுவதுதான் உவமை”6 என விளக்கம் தருகிறார். எஸ். வையாபுரிப்பிள்ளை . “உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருளாகும். பொருள் என்பது அவன் காணும் புதிய பொருளாகும். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்தி வைத்து அப்பொருளின் உயர்வு தாழ்வை அளந்து அறிவிக்கின்றது7 என்பார் அ. சீனிவாசன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்பை பலவாறு உவமைகள் வழி வெளிப்படுத்துகிறார்.

வரலாற்றுச் செய்தி
      அறியப்படாத செய்தியை அறிவிக்கும் மனங்கொண்டு சொல்ல நினைத்ததை எளிதாகச் சொல்லி வரலாற்று நிகழ்ச்சியினை உவமையாகக் காட்டுதலைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனது கொடைச் சிறப்பைக் கூறுமிடத்து, கொங்கர்களோடு ஆய் அண்டிரன் போர் புரிந்த போது கொங்கர்கள் மீது பட்ட வேலின் எண்ணிக்கையைவிட ஆயின் யானைக் கொடை மிகுதியானது. இதனை,

’இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே’ (புறம்.130;4-7)
   என்ற பாடலடிகள் மெய்ப்பிக்கும். ஆய் அண்டிரன் முன்பு கொங்கருடன் போர் புரிந்த வரலாற்றுச் செய்தியை உவமையும் வாயிலாக அறியமுடிகிறது

நிறைவாக…
     சங்க காலத்தில் சோழ நாட்டில் சோழ வேந்தர் குடும்பத்திடையே குடும்பப்போர் கடுமையாக இருந்தது என்பதைப் புறநானூறு காட்டுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே போர், அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே போர் போன்ற நிகழ்ச்சிகள் இந்த உண்மையை உணர்த்துகின்றன. சங்க இலக்கியத்திற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் இதனைச் சுட்டுகிறது. இதனால் சோழ நாடு அமைதியின்றி இருந்தது என்பது விளங்கும். இச்சூழலில் தமிழ் வளர்ந்தது. புலவர்கள் மன்னர்க்கு அறிவுறுத்தி நெறிப்படுத்திப் புலவர்களையும் கலைஞர்களையும் புரக்கத் தம் பாடல்களில் எடுத்துரைக்கின்றனர்.. உறையூர்ப் புலவர்கள் முடிகெழு வேந்தர்களுள் ஒருவராகய சாலச்சிறந்த சோழ வேந்தர்தம் தலைநகர்ச் சார்புடைய புலவர்களாக விளங்குகின்றனர். எனினும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களில் ஏணிச்சேரி முடமோசியார் ஒருவரே பதின்மூன்று பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த புலவராகவும், படைப்பாளியாகவும் திகழும் இவர் தம் திறம் காட்ட இன்னும் பல படைப்புகளைப் படைத்திருக்கவேண்டும். பறம்பு மலையில் வாழ்ந்து பாரியைப் பாடியவர் கபிலர். இவர் குறுநிலத் தலைவனிடத்திலே இருந்தவர். இப்பெரும்புலவர் மிகுதியான பாடல்களைப் (235) பாடியிருக்கிறார். இயற்கை வளமும், சூழ்நிலையும், புரவலனும் அவர்க்கு நற்றுணையாய் விளங்கினமையான் தமிழுக்கு மிகுதியான பாடல்களைக் கபிலர் தந்திருக்கிறார். முடமோசியாரையும் கபிலரையும் மேலோட்டமாக ஒப்பிட்டு நோக்கின் கபிலர் அகத்தையும் புறத்தையும் பாடியிருக்கிறார். ஆனால் முடமோசியார் புறத்தை மட்டுமே பாடியிருக்கிறார். படைப்பாளியின் வாழ்க்கைச் சூழலே படைப்புகளின் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் அடிப்படையானது. கபிலருக்கு இருந்த நல்வாழ்க்கை, வாழ்க்கை  அனுபவங்கள்  மோசியாருக்கு இல்லை. மோசியார் வாழ்க்கைச் சூழல் பரபரப்புடையதாய் இருந்தமையும் அவர் முடமோசியாராக இருந்தமையும் அவர் படைப்புகளை உருவாக்குவதற்குத் தடைக்கல்லாக விளங்கியிருக்கின்றன. என்பதை அவர்தம் பாடல்கள் வழி அறியமுடிகிறது.
சான்றெண்விளக்கம்
1. A. Karmegam Kone, Ansient  Famous Tamil Poet’s, Part -1, Pp.51-52.

2. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை (உ.ஆ), புறநானூறு, இரண்டாம் பகுதி, ப. 91

3. ஆர். ஆளவந்தார், இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி -1, பக். 87-88

4. …………………………………….. தொல்காப்பியம் – பொருளதிகாரம், பேராசிரியர் உரை, ப.467.

5. உ.வே. சாமிநாதையர் (உ.ஆ) புறநானூறு மூலமும் உரையும், ப. 27.

6. எஸ். வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனை, ப.85.

7. இரா. சீனிவாசன், சங்க இலக்கியத்தில் உவமை, ப.2.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி. சிதம்பரம்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்ககழகம்,
காந்திகிராமம் – 624 302.
மின்னஞ்சல்: mudalvaa@gmail.com
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here