ஆற்றுப்படை|சிறுகதை|பழ.பாலசுந்தரம்

ஆற்றுப்படை-சிறுகதை
அருவியில் திளைத்தது அலுக்கவே இல்லை அவர்களுக்கு. ஒரு வாளித் தண்ணீரில் உடம்பை நனைத்துக் கொள்ளும் அன்றாடக் கடமையிலிருந்து அருவிக் குளியல் முற்றிலும் வேறுபட்டிருந்தது. தடதட வென விழும் நீருக்கடியில் தங்களை மறந்து நின்று அனுபவித்துக் கொண்டிருந்தனர். திவ்யமான நீராடல் பசியைக் கிளப்பிற்று. அனைவரும் உணவை முடித்தபோது மணி பத்துதான் காலை ஆகியிருந்தது.

“ஆஃபீஸ் போற டைம் ஆயிடுச்சுப்பா… நேத்து இதே டைமுக்கு..” ஆரம்பித்த குமாரை அடக்கினர்.

”டேய் நிறுத்துடா…ஒரு நாளு ஜாலியா இருக்கலாமேன்னு ஒகேனக்கல் வந்திருக்கோம். இங்க வந்தும் ஆஃபீஸ் ஞாபகமா? அடுத்து என்ன பண்ணலாம்? சொல்லுங்கப்பா.”
           
“ரசூல்கானின் கேள்விக்கு விடைகள் பல வந்தன. மீன் வறுபடும் வாசனையில் மயங்கிய சிலர், வாங்கிக் கொடுத்து வறுக்கச் சொல்லும் ஏற்பாடுகளில் இறங்கினர். வேறு சிலர் தொங்கு பாலம் நோக்கி நடையைக் கட்டினர். மீண்டும் குளிக்க ஆசைப்பட்டவர்கள் நகர்ந்தனர். தண்ணீரைப் பார்த்ததும் வேறு திரவம் பற்றிய எண்ணம் எழப்பெற்றவர்கள் தனியே ஒதுங்கினர். எஞ்சிய மூவர் ராமன், சேகர், மற்றும் இளங்கோ.

“அப்படியே வேடிக்க பார்த்துக்கிட்டே நடப்போம்…” சேகரின் யோசனையை மற்ற இருவரும் மறுக்கவில்லை. வாகனங்கள் வர ஆரம்பித்தன. கர்நாடக மாநிலத்திலிருந்து நிறைய வந்திருந்தன. ஒரு கல்லூரியின் பேருந்து வந்ததும் களை கட்டியது. அந்தச் சூழ்நிலையே வண்ணமயமானது. மாணவிகள் குதூகலத்தோடு உலவினர். மேக மூட்டத்தால் சூரியன் காணாமல் போயிருந்தான். இளங்கோவிற்கு உடலும் மனதும் இலேசானது போல் இருந்தது. நடை தொடர்ந்தது.

மாதையன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கால் சட்டை மட்டும் உடம்பில். அரிவாளால் விறகு பிளந்து கொண்டிருந்த அம்மா தென்பட்டாள்.

“அம்பது ரூவா சேந்ததுமே வந்து குடுத்துட்டுப் போடா. இருந்த காசையெல்லாம் உங்கொப்பன் தூக்கிட்டுப் போயாச்சு. அரிசி எண்ணெயெல்லாம் வாங்கனும். சீக்கிரம் வந்துரு..”

”சரிம்மா…” ஆமோதிப்போடு ஆற்றங்கரை நோக்கி ஓடினான். ஐம்பது ரூபாய்க்கு மேல் எவ்வளவு சேர்க்க முடியும் என்ற எண்ணம் உள்ளே ஒடிக் கொண்டிருந்தது. நண்பர்களோடு தர்மபுரி சென்று சினிமா பார்த்துவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப எப்படியும் ஐம்பது ரூபாய் வேண்டும் என மனம் கணக்கிட்டது. இலக்கை எட்டிவிட வேண்டும் என்ற துடிப்பும் நாளைய சுகங்கள் பற்றிய நினைப்பும் அவனை வேகமாகச் செயல்பட வைத்தன.

அவர்கள் மூவரும் படகுத் துறையை அடைந்தபோது துடுப்போடு ஒருவர் அணுகினார்.
“சார்.. வாங்க சார்.. போட்ல போகலாம். ஐந்தருவியெல்லாம் பாத்துட்டு வரலாம்…”

”மூவருக்கும் உந்துதல் ஏற்பட ஒப்புதலோடு அவரைத் தொடர்ந்தார்கள். நதியின் ஓட்டத்தில் சீற்றம் இருந்தது. மாநில எல்லையாக மலை படுத்திருந்தது. மூவரையும் ஏற்றிக் கொண்டு பரிசல்காரரும் உள் அமர்ந்தார். துடுப்பை நீருக்குள் பாய்ச்சி, மணலை இளங்கோ, அவர் பெயரை விசாரிக்க, முகத்தில் சற்றே அழுத்த, படகு முன்னேறியது.  ஆச்சரியம் காட்டினார். அவனை நன்றாகப் பார்த்து உச்சரித்தார் ‘மாணிக்கம்’.
          
பரிசல் நீரின் போக்கிற்கு எதிராக முன்னேறிக் கொண்டிருந்தது. இருபுறமும் உயர்ந்த செங்குத்தான பாறைகள் புது அனுபவம். பிரிந்து விழுந்து கொண்டிருந்த அருவிகளின் மதில் போல நின்றிருக்க நடுவில் பயணித்தது இளங்கோவிற்குப் திவலைகள் காற்றில் பறந்து கொண்டிருந்த காட்சியில் சத்தம் அண்மையில் கேட்கத் தொடங்கியது. வெண்ணிறத் இளங்கோ லயித்துக் கொண்டிருந்தபோது வானிலிருந்து அசரீரியாய் ஒரு குரல் கேட்டது.

“அஞ்சு ரூவா குடுக்கறீங்களா, குதிக்கிறேன்…”
           
குரல் நோக்கித் தலை உயர்த்தினான் இளங்கோ. பக்கப் பாறையின் உச்சியில் ஒரு சிறுவன் உடம்பில் நீர் சொட்ட நின்று கொண்டிருந்தான். வயிறு ஒட்டிப் போய்த் தெரிந்தது. வயது பத்து கூடத் தாண்டியிருக்காது. கையை அவர்களை நோக்கித் தாழ்த்தி, விரல்களைக் குவித்து விரித்து மீண்டும் கேட்டான்.
“அஞ்சு ரூபா குடுக்கிறீங்களாண்ணா? குதிச்சுக் காட்டறேன்.”

திடுக்கிட்ட இளங்கோவிற்குள் சிந்தனை அலைகள் எழுப்ப நொடியில் சேகர் உரக்க கத்தினான்.

”குதிடா… பாக்கலாம்.”

அடுத்த வினாடி அந்தச் சிறுவன் பாறையிலிருந்து எம்பினான். சரேலென்று அந்தரத்தில் பறப்பது போல் உயர்ந்து, செங்குத்தாக இறங்கி, நீருக்குள் அமிழ்ந்தான். நீர்ப்பரப்பு பெரிதாகச் சலனப் பட்டு, அலைகள் உற்பத்தியாகி நெளிந்து பரவின. பரிசலில் மோதி ஆடவைத்தன. இளங்கோ பிரமிப்போடு எச்சில் விழுங்கினான். மாணிக்கம் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
          
“என்ன சார்… ஆச்சர்யமா இருக்கா? அந்தப் பையனுக்கு இதுதான் சார் தொழிலே. அவனோட தாத்தா சினிமா ஹீரோவுக்கெல்லாம் டூப்புப் போட்டுக் குதிச்சிருக்காரு… அருவிகிட்டயே குதிப்பாரு…”

வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். பரிசல் அருவிகளை நெருங்கத் தத்தளிப்பு அதிகமானது. ஒடுங்கி அமர்ந்திருந்த ராமனின் குரல் நடுங்கியது.
           
“போதுங்க மாணிக்கம்… ரொம்ப கிட்ட போவேணாம்…”
    
லேசான சிரிப்போடு பரிசலை ஒரு சுற்றுச் சுற்றி லாவகமாகத் திருப்பினார். நீரின் திசையில் வேகமெடுத்தது. பாறை ஓரமாக ஒதுக்கி சற்றே குழிவான இடுக்கில் நிறுத்திக் கொண்டார். அவர் பீடியைப் பற்ற வைத்தபோது, பாறை மறைவிலிருந்து அந்தச் சிறுவன் வெளிவந்தான்.

இளங்கோ ஐந்து ரூபாய் நோட்டை அவன் ஈரக்கையில் வைத்தான்.

“ஆமா காசெல்லாம் எங்க வெச்சுக்குவே? நனையாதா?”

“நனையாதுண்ணா.. மேல பாறை சந்துல வெச்சுக்குவேன். அம்பதுரூவா சேந்ததும் எங்கம்மாகிட்டக் குடுத்துட்டு வந்துடுவேன்.
“
 ஐம்பது ரூபாய்க்குப் பத்து முறை குதித்து மேலே ஏற வேண்டுமே என இளங்கோவின் மனம் கணக்கிட்டது.

“உங்கம்மா என்ன பண்றாங்க?”

”வீட்டுலயே மீன் வறுத்து விக்கிறாங்கண்ணா, அவங்களுக்கு ஒரு கால் இல்லங்கண்ணா… சரியா நடக்க முடியாது…”
”உங்கப்பா இருக்காரா? என்ன பண்றாரு?” “பரிசல் வருதுங்கண்ணா… நான் போறேன்.”
            இளங்கோவின் தொடர்ந்த அழைப்புகளைப் பொருட்படுத்தாமல் விறுவிறுவெனப் பாறையில் தொற்றி ஏறி உச்சிக்குப் போய்விட்டான். மறுபடியும் அவன் குரல் ஒலித்தது. புதிதாக வந்த பரிசலில் இருந்தவர்கள் அவனைக் குதிக்கச் சொல்ல மீண்டும் அந்தக் காட்சி காணக் கிடைத்தது. இம்முறை இளங்கோவின் மன ஆழத்தில் குதித்து அங்கேயே துளைக்கத் தொடங்கியிருந்தான். அதிர்ச்சி நீங்காமல் கேட்டான்.

“இங்க ஆழம் எவ்வளவு இருக்குங்க மாணிக்கம்?”

“அது இருக்கும் சார்… ஒரு எம்பதடி..

“அப்படியா? பாறையோட உச்சி எவ்வளவு ஒயரம் இருக்கும்?”
    
 “ம்… நாப்பது அம்பதடி இருக்கலாம். மேலே நின்னு கீழ தண்ணியப் பாத்தா ஈரக்குலையெல்லாம் நடுங்கும் சார். அந்தப் பையனுக்குத் தெகிரியம் ஜாஸ்தி. சலிக்காத குதிப்பான். என்ன சார் பண்றது? அவங்கப்பனுக்குச் சதா சர்வ காலமும் சாராயந்தான் கதி. இவந்தான் சம்பாரிக்கணும். இவனுக்கு ஒரு தம்பி இருக்கான் சார்…”
மாணிக்கத்தின் விவரிப்பு இளங்கோவின் மனத்தைப் பிசைந்தது. சுரந்த கண்ணீரை, முகம் திருப்பிச் சுண்டிவிட்டான். இறங்க வேண்டிய இடம் சமீபித்துக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தபோது பாறை உச்சியில் சிறுவன் தெரிந்தான். குவிந்து விரிந்த வலக்கையும், அசைந்த வாயும் அப்படியே மனத்துள் பதிவாயின.
           
“சார் மொதல்லருந்தே அக்கறையா விசாரிச்சுகிட்டே வர்றீங்க….. இந்த ஏழைங்களைப் பத்தியெல்லாம் யாருமே கவலப்பட மாட்டாங்க சார்… நெறையப் பேரு ரெண்டு ரூவாதான் குடுப்பாங்க… சில பேரு அவனக் குதிக்கச் சொல்லிட்டுக் காசு தராமலே போயிருவாங்க… என்ன பண்ண முடியும் சொல்லுங்க… பொருளா, காசு தர்லேன்னா திரும்ப எடுத்துக்க?”

இளங்கோ கதறிவிடுவான் போலிருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டான். காவிரியின் ஆழத்தில் வாழ்க்கையைத் தேடித் தேடித் திரும்பும் அவனின் தொழில் நடவடிக்கைகள் இளங்கோவை அடியோடு புரட்டிப் போட இயல்பிழந்தான். மாணிக்கத்திடம் பணம் தந்து விடை பெற்றான்.
           
மீண்டும் அவர்கள் குழுவானார்கள். அவரவர் தங்கள் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அனுபவப் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருக்க இளங்கோ மட்டும் தீவானான். சுற்றுலா மையத்தில் நிற்கும் பிரக்ஞையே அற்றுப் போனான். நீர் தளும்பும் செப்புக் குடத்தை நெஞ்சின் மேல் வைத்து ஒரு சேரப் பலர் அழுத்துவது போல் ஒரு வலி உணர்ந்தான். மறுபடியும் அந்தச் சிறுவன் எத்தனை முறை குதித்தானோ என்று மனம் பதைத்தது. கால் இல்லாத அம்மா குடிசை முன் அமர்ந்து மீன் வறுக்கும் காட்சியும் அவ்வப்போது தோன்றி வதைத்தது.
        
மாலையில் குளிர் ஆரம்பித்தபோது சிறுவனின் நடுக்கத்தை இளங்கோவால் உணரமுடிந்தது. மனவெளியில் நீர் நிறைந்து அதில் அந்தச் சிறுவன் மூழ்கி எழுந்து கொண்டிருந்தான். அவர்கள் சேலம் செல்லும் பேருந்தை நிறைத்தனர். ஓகேனக்கல் விலகத் தொடங்கிற்று. சமவெளியில் நதியாய் நடந்த காவிரி அருவியாய்க் குதிக்கும் உருமாற்றத்தால் எத்தனை பேரின் பிழைப்பு நடக்கிறது என்ற எண்ணம் பயணம் முழுவதும் அவனுள் ஊறிக்கொண்டேயிருந்தது.
           
அடுத்த நாள் முதல் தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் அதில் அந்தச் சிறுவன் குதித்து எழுவதான பிம்பம் தெரிந்து மறைய ஆரம்பித்தது இளங்கோவிற்கு. அவன் நெஞ்சிற்குள் சிறுவனின் கைகள் துழாவிக் கொண்டேயிருந்தன. ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்ற நினைப்பு பரிணாமுற்று குறிக்கோளாயிருந்தது. பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு ஞாயிறன்று புறப்பட்டுவிட்டான்.
           
விடுமுறையாதலால் அன்று கூட்டம் அதிகம்தான். எண்ணெய்ப் புட்டியோடு சூழ்ந்தவர்களையும், மீன் துண்டங்களோடு மறித்தவர்களையும் புறக்கணித்துப் பரிசல் துறையை எட்டினான் இளங்கோ கண்கள் மாணிக்கத்தைத் தேடின. சில நிமிடங்களில் பின்னாலிருந்து குரல் வந்தது.

“வாங்க சார்… வந்து ரொம்ப நேரமாச்சா?”

“இல்லல்ல… இப்பதான் வந்தேன். போலாமா?”
”போலாம் சார், தனியாத்தான் வந்தீங்களா?”

“ஆமாமா… அதுக்காக யோசிக்காதீங்க. சேத்து ரூவா குடுத்தர்றேன்.”

”அடடா… அதுக்காக கேக்கல சார்.. போன தடவையே பேசுனதவிடப் பத்து ரூவா அதிகமாத்தான் தந்துட்டுப் போனீங்க… உக்காருங்க.”

படகு நகர்ந்தது. இருவர் மட்டுமே என்பதால் இலகுவாக முன்னேறியது.

ஆமா, அந்தப் பையன் எப்படி இருக்கான்? மேலயிருந்து குதிச்சு சம்பாரிப்பானே…”
“மாதையனா… அவன் போய்ச் சேந்துட்டான் சார். தண்ணீலேயே பொழப்பு நடத்துனான் கடைசில அதுலயே உசிரும் போயிருச்சு…”

“பகீரென்றது அவனுக்கு. அதிர்ச்சியில் நெஞ்சடைத்தது.

“ஐயய்யோ… என்ன சொல்றீங்க மாணிக்கம்?”
          
“என்னத்த சார் சொல்றது? கொடும சார். ஒரு நா வேற ஸ்டேட் பசங்க கும்பலா வந்திருந்தானுங்க. வழக்கம் போல இவன் குதிச்சுக் காமிச்சு அஞ்சு ரூவா வாங்கினான். கும்பல்ல யாரோ பாவி நூறு ரூவா தர்றதா ஆச காட்டி அருவிகிட்டக் குதிக்கச் சொல்லியிருக்கான். இவனும் பணத்துக்கு ஆசப்பட்டு நெப்பு தெரியாமக் குதிச்சுட்டான். பாறையில் அடிபட்டு மண்ட பொளந்து போச்சு. ரொம்ப தூரம் தள்ளிப்போய்த்தான் பாடி கெடச்சுது. வயித்துப் பொழப்புக்காக ஏதோ பண்ணப் போயி… ப்ச் பாவம் சார்…”
           
துக்கத்தால் கனத்துப்போன மனத்தோடு செய்வதறியாது உறைந்து போனான் இளங்கோ. படகு ஐந்தருவியை நெருங்க. அவன் பார்வை மேலே போனது. வெட வெடத்தபடி ஒரு சிறுவன் தெரிந்தான்.

“இது யாருங்க மாணிக்கம்?”

”மாதய்யனோட தம்பி சார். இஸ்கூல் போறத நிறுத்திட்டு இங்க வந்துட்டான். என்ன சார் பண்றது. பொழப்பு நடக்கணுமே.

பரிசல் முன்னேற… மேலிருந்து கீச்சுக் குரல் கேட்டது.
“அம்பது ரூபா குடுக்கறேன் குதிடா…” கட்டுப்பாட்டை இழந்து கத்திய இளங்கோ, பொங்கிய கண்ணீரையும் துடைக்காமல் மாணிக்கத்தின் தோளில் விழுந்து கேவ ஆரம்பித்தான். அவர் உடலும் குலுங்க துவங்க, இருவரின் கண்ணீரும் படகுக்குள் சொட்ட ஆரம்பித்தது. சில நொடிகளில் நீர்ப்பரப்பு அதிர்ந்து படகு ஆட ஆரம்பித்தது. சிதறித் தெளித்த நீர்த்துளிகளுள் ஒன்று இளங்கோவின் வாயில் பட உப்புக் கரித்தது

சிறுகதையின் ஆசிரியர்

பழ.பாலசுந்தரம்

எழுத்தாளர்

ஓசூர் – 635 109

 

1 COMMENT

  1. இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் இன்றளவும் பல மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

    ஆசிரியர் படம் பார்ப்பது போல் சிறுகதையைச் செதுக்கி இருக்கிறார்.சிறப்பு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here