தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என முப்பெரும் பாகுபாடு கொண்டது. இந்நூலின் பொருளதிகாரத்தில் வரும் செய்யுளியல் பின்னாளில் யாப்பிலக்கணம் எனத் தனியாகவும், உவமவியல் அணியிலக்கணமாகவும் உருவெடுத்தன என்பர். இதனால் தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைத்தாயிற்று. ஐவகை இலக்கணமும் ஒரு சேரக் கொண்டு தோன்றிய நூல்கள் வீரசோழியம். தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், இலக்கண விளக்கம் என்பன. வீரசோழியத்திற்குப் பின்னர் கி.பி.12ஆம் நூற்றாண்டில் அணியிலக்கணத்தைத் தனியே கொண்டு விளக்க வந்த நூல்,தண்டியலங்காரம் ஆகும். இதற்குப்பின் தோன்றிய அணியிலக்கண நூல்கள் மாறனலங்காரமும், சந்திராலோகமும் குவலயானந்தமும் ஆகும். அணி இலக்கணம் – அணிகளின் வகைகள் (தண்டியலங்காரம் முன்வைத்து)
செய்யுளின் அழகையும் நயத்தையும் எடுத்து மொழிவது அணியிலக்கணம் “சிந்தை வைத்து இயம்புவன் செய்யுட்கு அணியே” எனத் தண்டியலங்கார முதல் நூற்பா சுட்டுகிறது. ஆடமைத் தோள் நல்லாராகிய நங்கையர்க்கு ஆபரணம் போலச் செய்யுளுக்கு அழகு செய்வன அணிகள் அணி என்பதை வடநூலார் அலங்காரம் என்பர். ‘அலங்காரம் சொல்லரசே உன்னுடைய தோழரோ என அலங்காரத்தைத் தமிழின் தோழனாகக் கூறுகிறது. தமிழ்விடுதூது. இதனால் அணியிலக்கணம் தமிழோடு நெருங்கிய தொடர்புடை யது என்பது போதரும்.
இந்த அணி நிலையை எல்லா மொழிகளிலும் காணலாம். இவ்வகையில் எழுந்த இலக்கண நூல்கள் வட மொழியில் பலவாம். அவற்றுள் ‘காவியாதரிசம்’ என்னும் வட மொழி இலக்கண நூலின் மொழி பெயர்ப்பாக அமைந்ததே தமிழத் தண்டியலங்காரம் என்பர் ஆயினும் இது தொல்காப்பியத்தையும் வடமொழி அணியிலக்கண நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு அமைந்தது.
காவியாதரிச ஆசிரியர் தண்டியின் பெயர் போலவே தமிழில் வந்த இந்நூலாசிரியர்க்கும் தண்டி என்னும் பெயரே காண்கிறது. இந்த நூலின் சிறப்புப் பாயிரத்தால் தெரியவரும் ஆசிரியர் பற்றிய செய்திகளாவன: நூலாசிரியர் பெயர் தண்டி, இவர் அம்பிகாபதியின் புதல்வர் எனவே கம்பரின் பேரராவார். இவர் வடமொழி தென்மொழி வல்லுநர், இவர்கள் சோழநாட்டினர். இந்நூல் சோழன் அவையில் அரங்கேற்றப் பெற்றது. இந்நூலில் உள்ள எடுத்துக் காட்டுச் செய்யுட்களில் சோழன் பெயரில் அமைந்த செய்யுட்கள் 45. அவற்றுள் அனபாயன் என்னும் பெயர் குறிப்பிடப்பெற்ற செய்யுட்கள் 6. இந்த அனபாயன் என்பது இரண்டாம் குலோத்துங்க சோழனைக் குறிப்பிடும் என்பர். இவனு டைய காலம் 12-ஆம் நூற்றாண்டு, எனவே தண்டியாசிரி யர் காலமும் இந்நூற்றாண்டே என்பது தெளிவு.
தண்டியலங்காரம் பொதுவணி இயல், பொருளE இயல், சொல்லணி இயல் என மூன்று இயல்கள் கொண்டது. பொதுவணி இயலில் செய்யுட்களின் வகைகள், . வைதருப்பர் கௌடர் ஆகியோரின் சொல்லமைப்பு நெறிகள் விவரிக்கப்பட்டுள்ளன. பொருளணி இயல், உவமையணி முதல் பாவிக அணி ஈறாக 35 அணிகளின் இலக்கணம் விரிவாய் அமைகிறது. சொல்லணி இயல், மடக்கின் வகைகளும் சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி மலைவுகள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.
இந்நூலுக்கு உரிய பழைய உரை சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பெற்றது. இவர் உரை பழைய உரைகாரர்களின் அமைப்பிலும் நடைப்போக்கிலும் உள்ளமை காணத்தகும். இவர் ஆற்றொழுக்காக உரை எழுதிச் செல்கிறார். சிற்சில இடங்களில் பொழிப்புரை யின்றி அருஞ்சொற் பொருள் மட்டும் தந்தும் செல்கிறார். சிற்சில இடங்களில் இலக்கணக் குறிப்புக்களும் சுட்டுகிறார். ஒரு சில இடங்களில் அணிக்கும், மேற்கோள் பாடலுக்கும் உள்ள பொருத்தம் குறிப்பாய்ச் சுட்டிச் செல்கிறார். இந்நூலுக்குச் சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் புத்துரை 1903-இல் வெளியானது. இதில் மேற்கோள் செய்யுட்கள் இராமாயணம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களிலிருந்தும் எடுத்துத் தந்துள்ளார். இது எளிய தமிழில் அமைந்த விளக்கமான உரையாகும்.
சுப்பிரமணிய தேசிகரின் பழைய உரையை முதன் முதல் கி.பி1857-இல் பதிப்பித்தவர் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், இதன் பின்னர் 1901-இல் திருவை.மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் தாம் எழுதிய குறிப்புரையுடன் பதிப்பித்தார். இதனை அடுத்து 1903-இல் சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் புத்துரை வெளி வந்தது இதன் பின்னர் இந்நூலைப் பழைய உரையுடன் மதுரை மாவட்டம் செம்பூர் வித்துவான் திரு.வீ ஆறுமுகம் சேர்வை பதிப்பித்தார். இதனை அப்படியே பின்பற்றிச் சிவத்திரு இராமலிங்கத் தம்பிரான் எழுதிய குறிப்புரையுடன் 1938-இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்டனர். இதன் பின்னர் சொல்லணி இயலை மட்டும் பேராசிரியர் திரு சி. ஜெகந்நாதாச் சாரியார் குறிப்புரையுடன் வை.மு. நரசிம்மன் 1962-இல் வெளியிட்டார். 1967-இல் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் புலவர். கு சுந்தரமூர்த்தி அவர்களின் முதற்பதிப்பு வெளிவந்தது. இப்பதிப்பில் பாடபேதங்கள் சுட்டிக காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் எடுத்துக் காட்டுச் செய்யுட்கள் உரிய அணி இயல்புடன் பொருந்தி வரும்பான்மை நன்கு விளக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும்.
மேற்கண்ட விளக்கங்கள் பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை அவர்களின் பதிப்புரை
அணி வகைகள்
1.பொதுவணி இயல்
2.பொருளணி இயல்
3.சொல்லணி இயல்
2.பொருளணி இயல்
வ.எண் | அணிகள் | வகைகள் |
---|---|---|
1 | தன்மையணி | 01) பொருட்தன்மை 02) குணத் தன்மை 03) சாதித் தன்மை 04) தொழில் தன்மை |
2 | உவமையணி | 01) விரி உவமை 02) தொகை உவமை 03) இதரவிதர உவமை 04) சமுச்சய உவமை 05) உண்மை உவமை 06) மறுபொருள் உவமை 07) புகழ் உவமை 08) நிந்தை உவமை 09) நியம உவமை 10) அநியம உவமை 11) ஐய உவமை 12) தெரிதரு தேற்ற உவமை 13) இன்சொல் உவமை 14) விபரீத உவமை 15) இயம்புதல் வேட்கை உவமை 16) பலபொருள் உவமை 17) விகார உவமை 18) மோக உவமை 19) அபூத உவமை 20) பலவயிற்போலி உவமை 21) ஒருவயிற்போலி உவமை 22) கூடா உவமை 23) பொது நீங்கு உவமை 24) மாலை உவமை |
3 | உருவக அணி | 01)தொகை உருவகம் 02) விரி உருவகம் 03) தொகை விசி உருவகம் 04) இயைபு உருவகம் 05)இயைபிலி உருவகம் 06) வியநிலை உருவகம் 07) சிறப்பு உருவகம் 08) விரூபக உருவகம் 09) சமாதான உருவகம் 10) உருவக உருவகம் 11) ஏகாங்க உருவகம் 12) அநேகாங்க உருவகம் 13) முற்று உருவகம் 14) அவயது உருவகம் 15) அவயவி உருவகம் |
4 | தீவிகம் அணி | 01) முதல்நிலை குணம் 02) முதல்நிலை தொழில் 03) முதல்நிலை சாதி 04) முதல்நிலை பொருள் 05) இடைநிலை குணம் 06) இடைநிலை தொழில் 07) இடைநிலை சாதி 08) இடைநிலை பொருள் 09) கடைநிலை குணம் 10) கடைநிலை தொழில் 11) கடைநிலை சாதி 12) கடைநிலை பொருள் |
5 | பின்வருநிலை அணி | 01)சொல் பின்வருநிலையணி 02)பொருள் பின்வருநிலையணி 03) சொற்பொருள் பின்வரு நிலையணி |
6 | முன்ன விலக்கு அணி | 01)பொருள் முன்ன விலக்கு 02) குண முன்ன விலக்கு 03) காரண முன்ன விலக்கு 04) காரண முன்ன விலக்கு |
7 | வேற்றுப்பொருள் வைப்பு அணி | 01)முழுவதும் சேறல் 02) ஒரு வழிச்சேறல் 03) முரணித் தேன்றல் 04) சிலேடையில் முடித்தல் 05) கூடா இயற்கை 06) கூடும் இயற்கை 07) இருமை இயற்கை 08) விபரீதப்படுத்தல் |
8 | வேற்றுமை அணி | 01)உயர்ச்சி வேற்றுமை 02)குண வேற்றுமை 03)பொருள் வேற்றுமை 04)தொழில் வேற்றுமை 05)சாதி வேற்றுமை |
9 | விபாவனை அணி | 01) அயற்காரண விபாவனை 02)இயல்பு விபாவனை 03)குறிப்பு விபாவன |
10 | ஒட்டணி | |
11 | அதிசயம் அணி | 01)பொருள் அதிசயம் 02) குண அதிசயம் 03) தொழில் அதிசயம் 04) ஐயஅதிசயம் 05) துணிவு அதிசயம் 06) திரிபு அதிசயம் |
12 | தற்குறிப்பேற்றம் அணி | 01) பெயர் பொருள் தற்குறிப்பேற்றம் 02) பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம் |
13 | ஏது அணி | அ) காரக ஏது 01)கருத்தா காரக ஏது 02)பொருள் காரக ஏது 03)கரும காரக ஏது 04) கருவி காரக ஏது ஆ)ஞாபக ஏது இ)அபாவ ஏது 01)என்றும் அபாவ ஏது 02)இன்மையது அபாவ ஏது 03)ஒன்றின் ஒன்று அபாவ ஏது 04)உள்ளதன் அபாவ ஏது 05)அழிவு பாட்டு அபாவ ஏது ஈ) சித்திர ஏது 01)தூரக்காரிய சித்திர ஏது 02)ஒருங்குடன் தோற்ற சித்திர ஏது 03)காரணம் முந்துதலும் காரியநிலை சித்திர ஏது 04)யுத்த சித்திர ஏது 05)அயுத்த சித்திர ஏது |
14 | நுட்பம் அணி | 01) குறிப்பு நுட்பம் 02) தொழில் நுட்பம் |
15 | இலேசம் அணி | 01)புகழ்வது போலப் பழித்தல் இலேசம் 02)பழித்தல் போலப் புகழ்தல் இலேசம் |
16 | நிரல்நிறை அணி | 01) நிரல்நிறுத்தி நேரே பொருள் கொள்ளும்அணி 02) நிரல் நிறுத்தி மொழிமாற்றிப் பொருள்கொள்ளும் அணி. |
17 | ஆர்வமொழி அணி | |
18 | சுவையணி | 01) வீரச்சுவை 02) அச்சச்சுவை 03) வியப்புச் சுவை 04) காமச்சுவை 05) அவலச்சுவை 06) இழிப்புச் சுவை 07) உருத்திரச்சுவை 08) நகைச்சுவை |
19 | தன்மேம்பாட்டு உரையணி | |
20 | பரியாயம் அணி | |
21 | சமாகிதம் அணி | |
22 | உதாத்தம் அணி | 01)செல்வ மிகுதி உதாத்தம் 02) உள்ள மிகுதி உதாத்தம் |
23 | நிரல்அவநுதி அணி | 01)சிறப்பு அவநுதி 02) பொருள் அவநுதி 03)குண அவநுதி 04) சிலேடை அவநுதி |
24 | சிலேடை அணி | 01)செம்மொழிச் சிலேடை 02) பிறிமொழிச் சிலேடை |
25 | விசேடம் அணி | 01)பொருள்குறை விசேடம் 02) குணக்குறை விசேடம் 03) சாதிக்குறை விசேடம் 04) தொழில்குறை விசேடம் 05) உறுப்புக்குறை விசேடம். |
26 | ஒப்புமைக் கூட்டம் அணி | 01)புகழ் ஒப்புமைக் கூட்டம் 02)பழிப்பு ஒப்புமைக் கூட்டம் |
27 | விரோதம் அணி | 01)சொல் விரோதம் 02)பொருள் விரோதம் |
28 | மாறுபாடு புகழ்நிலை அணி | |
29 | புகழாப் புகழ்ச்சி அணி | |
30 | நிதரிசனம் அணி | |
31 | புணர்நிலை அணி | 01)வினைப் புணர்நிலை 02)பண்புப் புணர்நிலை |
32 | பரிவருத்தனை அணி | |
33 | வாழ்த்து அணி | |
34 | சங்கீரணம் அணி | |
35 | பாவிக அணி |